Language Selection

சமர் - 7 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1990-10-30- இல் பாசிசப் புலிகளினால் சகல உடைமைகளும் பட்டப்பகலில் நிரயுதபாணிகளான வடபகுதி முஸ்லீம் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும், விரட்டியடிக்கப்பட்டதற்கும் அராஜகப் புலிகளின் செயலை நினைவு கூறும் இரண்டாவது ஆண்டு.

 

துரோகிகளின் கறை படிந்த ஈனச் செயல்

 

வடமாகாணத்தில் தமிழ்மக்களுடன் பல நூற்றாண்டு காலமாக சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வந்த சுமார் 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் தமது பாரம்பரிய மண்னை விட்டு, மண்ணாசை பிடித்த பாசிச புலிகளினால் துரத்தியடிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இம் முஸ்லீம் மக்கள் இவர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவும் சாவகச்சேரி முஸ்லீம் ஒருவரிடம் ஆயுதம் இருந்ததாகவும் பொய் வதந்திகளைப் பரப்பி அப்பாவி தமிழ் மக்களை நம்பவைத்து அத்துடன் இனக்குரோதத்தை உருவாக்கி அவர்கள் முன்னிலையிலேயே குழந்தை பிள்ளைகளின் பால் மாவு முதற்கொண்டு முஸ்லீம்களின் சகல உடமைகளும் பட்டப்பகலில் 2மணி நேர அவகாசத்தில் ஈவிரக்கமின்றி ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

பெரும்பான்மையினம் தங்களை நசுக்குவதாக கூறிக்கொண்ட, ஆயுதம் ஏந்திய பாசிசப் புலிகள், அதே பாணியில் சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லீம்களை தமது அற்ப அதிகாரத்திற்காக பலிக்கடாவாக ஆக்குவது அதிகார நப்பாசையிலா?.

இலங்கை முஸ்லீம்களின் சரித்திரத்திலேயே துரோகக் கும்பல் என்று மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திய அக்கிரமக்காரர்கள் இனியும் முஸ்லீம் மக்களின் உரிமை பற்றியோ தலைவிதி பற்றியோ முதலைக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. ஏனெனில் எமது மக்கள் பற்றி அக்கறை கொள்ள போதிய முஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள்.

அநியாயக்கார புலிகளினால் கொள்ளையிட்டு விரட்டியடிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் தமது பாரம்பரிய பிறப்பு இடங்களில் வாழும் உரிமையை மறுத்து விரட்டிய அக்கிரமக்கார புலிகளினால் உங்களுக்கு விடுதலையும், விடிவும் கிடைக்குமென எண்ணி ஏமாந்து அவர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் செய்துள்ள அநியாயங்களைக் கண்டு மௌனியாக வாய் மூடி இருப்பது நியாயமாகுமா? அப்பாவி தமிழ் மககளே இப் பாசிச புலிகளின் துப்பாக்கிகளுக்கும், கொடுமைக்கும் அஞ்சி இன்னும் எவ்வளவு காலத்திற்க்கு மௌனமாக இருக்கப் போகிறீர்கள்.

அன்று கொள்ளையடித்து விரட்டினார்கள். ஆனால் ஏக வல்ல இறைவன் நின்று நிரந்திரமாக அநியாயக்காரர்களை அழிப்பான். புலிகளின் தொடர்ச்சியான ஈனச் செயல்களினால் அவர்களுக்கு உலகம் சுருங்கத் தொடங்கி விட்டது.

புலிகளினால் அகதியாக ஆகியுள்ள முஸ்லீம் விடும் கண்ணீர் புலிகளின் துப்பாக்கி ரவைகளை விட வல்லமை மிக்கவை.

அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு செல்லவேண்டுமென்பதை வெகுவிரைவில் அறிந்து கொள்வார்கள்.

இறைவனிடமேயே எமக்கு புலிகள் இழைத்த, இழைக்கின்ற கொடுமைகளை பொறுப்பு சாட்டி அக்கிரமக்காரர்களின் அழிவை பொறுமையுடன் எதிர்பார்த்திருக்கும்.

30-10-1992-- --------- பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லீம்கள்-----

 

 

பிரான்ஸ் வாழ் முஸ்லீம்கள் மக்கள் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தை நாம் பிரசுரிக்கின்ற அதே நேரம் அது தொடர்பான ஒரு விமர்சனத்தை முன் வைக்கின்றோம்.

 

புலிகள் முஸ்லீம் தொடர்பான உரிமை பற்றியோ, தலைவிதி பற்றியோ முதலைக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டவர்கள் முஸ்லீம் மக்கள் பற்றி அக்கறை கொள்ள போதிய முஸ்லீம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எனத் துண்டுபிரசுரம் மூலம் கூறியுள்ளனர். புலிகள் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. புலிகள் தமது சுரண்டலை தமிழ் மக்கள் மீது முழுமையாக பெற்றுக் கொள்ளப் போராடும் அதேகணம் சிறுபான்மை தேசிய இனமாக முஸ்லீம் மக்களையும் சுரண்ட முயன்றதும், அதில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாட்டுடன் தான் முஸ்லீம்களை வெளியேற்றியதும், இன்று அவர்களைத் தாக்கி அழிப்பதும். அத்துடன் அரசுடன் நடக்கும் யுத்தம் அதில் ஏற்படும் பேரங்களில் தனது இராணுப்பலத்தை காட்ட முஸ்லீம் மக்களை (சிங்கள மக்களையல்ல)கொன்று குவிக்கின்றனர். பெற்றுக்கொள்ளும் சன்மானங்களுக்காகவும் முஸ்லீம்மக்களைப் படுகொலை செய்கின்றனர். புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் நீங்கள் முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்களை காப்பாற்ற உள்ளதாக கூறுவதனூடாக அஸ்ரப் முதல் ஜீகாத் போன்ற முஸ்லீம் இயக்கங்களையே சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இவர்கள் ஒருக்காலும் முஸ்லீம் மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை. அஸ்ரப் போன்றோர் அமிர்தலிங்கம் வகையறாக்களே. ஜீகாத் போன்ற ஆயுதக் குழுக்கள் புலிகள் போன்ற அதிகாரக்குழுக்களே. அஸ்ரப் அரசுடன் பேரம் பேசுவதுடன், சிங்கள மக்களை அரசு படுகொலை செய்யவும், தமிழ்மக்களை அரசு படுகொலை செய்யவும், முஸ்லீம் மக்களின் நிலங்களை பறிக்கவும் பச்சைக்கொடி காட்டி, முஸ்லீம் மக்களைச் சொல்லி வாழும் சுரண்டும் பேர்வழிகளே. ஜீகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் அரசின் கைக்கூலிகள் மட்டுமின்றி தமிழ்மக்களை படுகொலை செய்யவும்(புலிகள் முஸ்லீம் மக்களை கொல்வதற்க்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) உருவானவர்கள், இன்று தமிழ்துரோக குழுக்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை. நீங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் தமிழ் மக்களை ஜீகாத் போன்றோர் செய்யும் கொலைளைக் கண்டிக்க தவறியதென்பது உங்கள் துண்டுப்பிரசுரம் தமிழ்மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தத் தவறியது.

 

மற்றும் பாசிச புலிகளின் அட்டுழியங்களை இறைவனிடம் சொல்வது இறைவன் அவர்களை அழிப்பார் என்று பொறுமையுடன் காத்திருப்பதனூடாக ஒருக்காலும் புலிகள் அழியமாட்டார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள். எப்போதும் போராடுவதற்கு ஊடாக மட்டுமே புலிகளை அழிக்க முடியும். நீங்கள் மக்களிடம் தமிழ்மக்களிடம் வாய்மூடி மௌனியாக இருப்பது நியாயமாகுமா? எனக் கேட்டீர்கள். அவர்களும் இறைவனிடம் முறையிட்டு அழிவைப் பொறுமையுடன் காத்துள்ளானரென கூறலாம் தானே. எப்போதும் போராடுவதே ஓரே மார்க்கம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம் மக்களும் இதுவே தீர்வை பெற்றுத்தரும். அதிலிருந்து வெளிவந்ததே உங்கள் துண்டுபிரசுரம். நீங்கள் போராடவேண்டும். முஸ்லீம் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்குப் போராடவேண்டும். அத்துடன் தமிழ்மக்களின் ஆதரவைக் கோர வேண்டும். முஸ்லீம் மக்களுக்கு நடந்த அநியாயங்களைக் கண்டித்து இன்று வெளிநாடுகள் எல்லாவற்றிலும் தமிழ் மக்கள் குரல் கொடுப்பதுடன் கொழும்பிலிருந்தும் தமிழ்மக்கள் குரல் கொடுக்கின்றனர். உங்கள் கரங்களை அவர்களுடன் இணைத்து முஸ்லீம் மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தர போராடுங்கள். உங்கள் முஸ்லீம் தலைவர்களை நம்புவதை விடுத்து முஸ்லீம் மக்களின் உண்மையான அக்கறையுள்ள முஸ்லீம் தலைமையை உருவாக்கப் போராடுங்கள். தமிழ்மக்களின் பக்கத்திலிருந்து உங்கள் விடுதலைக்கு உரத்து குரல்கொடுப்பதுடன் உங்களுடன் போராட தயாராகவுள்ளேம். எம் கரங்களை இணைத்து அடக்குமுறைக்கு எதிராக போராட வாருங்கள்.