"அதிகம் படித்தல் = அதிகம் சம்பாதித்தல்" மத்தியதர வர்க்க குடும்ப பெற்றோர்களால், தம் பிள்ளைகளை சமூகப்-பொருளாதார ஓட்டப்போட்டியில் முன்னுக்கு வர பயிற்றுவிக்கும் மந்திரம் அது. அரசியல் பொருளாதார கற்பிதங்கள் பலருக்கு இரத்தத்தோடு ஊறி விட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக என்பதுகளுக்கு பின்னர் பிள்ளை வளர்ப்பென்பது,

 "தட்சரிசம்" (அல்லது "றீகனிசம்") என்ற பொருளாதார கொள்கைகளுக்குள் உட்பட்டதென்பது அவர்களுக்கே தெரியாது. 1979 ல் பிரித்தானிய பிரதமராகிய மார்கிரட் தட்சர், 1980 ல் அமெரிக்க ஜனாதிபதியாகிய ரொனால்ட் றீகன், ஆகியோர் எமது காலத்து உலகப் பொருளாதார கட்டமைப்பை அடியோடு மாற்றி விட்டு, அல்லது நாசமாக்கி விட்டு, மறைந்து விட்டனர்.

அது என்ன "தட்சரிசம்"? சுருக்கமாக சொன்னால், பணக்காரர்கள் குறைந்த வரி கட்ட வேண்டும்.(ஏழைகள் அதிக வரி கட்ட வேண்டும்). பட்டப் படிப்புகளை முடித்து விட்டு உத்தியோகம் பார்ப்பவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். (படிப்பறிவு குறைந்த தொழிலாளர்கள் குறைந்தளவு சம்பளம் எடுக்க வேண்டும்.) இவ்வாறு சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு, மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாக இருந்தால் தான், சமூகப் படிநிலையில் கீழ்நிலையில் இருக்கும் மக்கள், வசதியாக வாழ்வதற்காக போட்டி போட்டு, உயர்ந்த இடத்திற்கு வர முயற்சிப்பார்கள். (போட்டியில் தோற்பவர்கள் இழக்கும் தொகை முதலாளிகளின் கையில் லாபமாகப் போய்ச் சேருவது வேறு கதை.) அது சரி, அதிகம் சம்பாதிக்கும், குறைவாக வரி கட்டும், பணக்காரர்கள் எப்படி பொருளாதாரத்தை பெருக்குவார்கள்? அதிகம் சம்பாதிப்பதால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடித்து அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள்(அப்படி செய்யாதவர்களையும் செய்ய வைக்க ஊக்குவிக்கப்படும்). இந்த வசதிபடைத்த மத்தியதர வர்க்கம் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்பு பணத்தையும், வங்கிகள் பின்னர் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும். ஆமாம், இது தானே நமது நாட்டிலும் நடக்கிறது? தட்சரிசம் அவ்வளவு தூரத்திற்கு சர்வதேச சித்தாந்தமாகி விட்டது.

அப்போது சேமிப்பது நல்ல காரியமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது காலம் மாறிவிட்டது. அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை, பொருளாதாரக் குதிரை இதற்கு மேல் இழுக்க முடியாது, என்று படுத்து விட்டது. தேசம் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை காண என்ன செய்யலாம்? என்று சர்வதேச அரசியல் தலைவர்கள் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களுக்கு தெரியும் ஒரே வழி, மக்கள் பணத்தை சேமிக்காமல், தாராளமாக செலவு பண்ண வைப்பது. அவர்களது ஒரே நோக்கம், பொது மக்களை, அதாவது ஏழை மக்களை, அதாவது உங்களையும் என்னையும் போன்றவர்களை, செலவு பண்ண வைப்பது எப்படி? பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை விட கடினமான வேலையா இது?

புதிய பொருளாதார கொள்கை காரணமாக, சமூகத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி சிறிது குறையலாம். அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அதனை வீட்டுக் கடனை கட்ட முடியாதவர்களுக்கு உதவும் வகையில், பணக்காரர்கள் அதிக வரி கட்ட வைக்க வேண்டுமென்கிறார். பிரிட்டன் பிரதமர் உபரி மதிப்பு வரியை(VAT) குறைக்க வேண்டும், அதனை பணக்காரரிடம் இருந்து அறவிடும் வரி ஈடுகட்ட வேண்டும் என்கிறார். நெதர்லாந்து நிதி அமைச்சர் அதிகம் சம்பாதிப்பவர்களும், குறைவாக சம்பாதிப்பவர்களும் ஒரே அளவு வரி கட்ட வேண்டும் என்று, வரி அமைப்பையே மாற்றுகின்றார்.

அப்பாடா, இப்போதாவது (பொது மக்கள் நினைப்பதற்கு மாறாக) அதிகம் சம்பாதிப்பவர்கள், அதிக வரி கட்டுவதில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்களே! அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இருபதாம் நூற்றாண்டு வரையில் பணக்காரர்கள் அரசாங்கத்திற்கு வரியே கட்டவில்லை. அப்பாவி உழைக்கும் மக்கள் தான் வரி கட்டுவதை தமது கடமை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.


உசாத்துணை:
UK PM taxes rich to help fund economic recovery
Darling Aka Robin Hood

இப்போது கூட நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. உபரி மதிப்பு வரி(VAT) கட்டுவது, நுகர்வோரான நீங்களும், நானும் தான். பொருட்களை அல்லது சேவைகளை உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் வர்த்தக ஸ்தாபனங்கள் இந்த வரியை கட்டுவதில்லை. அதிலும் எம்மிடம் அறவிடும் வரியை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக சொல்லி, சிலர் தாமே பதுக்குகிறார்கள். தொழில் புரிபவர்கள் மட்டுமல்ல, சிறு வணிகர்கள் கூட வருமான வரி கட்டுகிறார்கள். அதேபோல, அதிக லாபம் சம்பாதிக்கும் பெரிய கம்பனிகள், அதிகளவு வருமான வரி கட்டுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட(LTD) அல்லது மட்டுப்படுத்தப்படாத (Unlimited) பெரிய கம்பெனிகளுக்கு வருமான வரி கிடையாது. (கார்பரேட் வரி மட்டும் உண்டு) .

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், உலகம் முழுக்க பாதிக்கப்பட்ட போது, பெரிய நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகள் வருடாவருடம் பெற்றுக்கொள்ளும், மில்லியன் டாலர்கள் போனஸ் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. திவாலான கம்பெனி நிர்வாகிகள் கூட லட்சக்கணக்கில் சம்பளம், கோடிக்கணக்கில் போனஸ், என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தமை, ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை நினைவூட்டவில்லையா? நெருக்கடிக்கு பிறகு தேசிய பொருளாதாரத்தை தமது கைகளில் எடுத்த அரசியல் தலைவர்கள் "இனிமேல் கை நீட்டி போனஸ் வாங்கினால், கையை வெட்டி விடுவேன்..." என்று சொல்லாத குறை மட்டும் தான். ஒரு காலத்தில், "அவன் கஷ்டப்பட்டு அதிகம் உழைக்கிறான், அதனால் அதிகம் சம்பாதிக்கிறான்." என்று இந்த கோடி டாலர் பரிசுகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்த அதே மக்கள், இன்று அப்படி சம்பாதிப்பது பாவகாரியம் என்று தூற்றுகிறார்கள். அரசியல் தலைவர்களும் இது தான் தருணம் என்று, கோடிக்கணக்கான லாபப்பணத்தை போனஸ் என்று அள்ளிக் கொடுத்து ஒரு சிலரிடம் மட்டும் பணத்தை குவிக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டு, அந்தப் பணத்தை கம்பெனி வளர்ச்சியில் முதலீடு செய்யலாமே என்று கறாராக சொல்லி விட்டார்கள்.

தட்சரிசம் தோன்றிய பிரித்தானியாவில், அவரது பழமைவாத கட்சியே புதிய பொருளாதார கொள்கை பற்றி கடும் விமரிசனங்களை முன்வைக்க முடியாமல் திண்டாடுகின்றது. பணக்காரர் நலன்களை மட்டுமே கவனிப்பதாக கருதி (உண்மையும் அது தான்), பெரும்பான்மை மக்கள் தமது கட்சிக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்ற ஐயம் அதற்கு காரணம். இருப்பினும் பிரபல வலதுசாரி பத்திரிகைகள் சும்மா இருக்கவில்லை. "ராபின் ஹூட் பட்ஜெட்" என்று ஏளனம் செய்கின்றன. ஒரு நாளிதழ் பிரதமர் பிரௌன் செங்கொடி ஏந்தி இருப்பதாக கார்ட்டூன் போட்டது.

தற்போது "அதிகம் சம்பாதிப்பவர்களிடம் அதிக வரி வசூலித்து, குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு வரிச் சலுகை கொடுப்பதன்" நோக்கத்தை, அவர்கள் சோஷலிசத்தை கொண்டு வரப் போவதாக, யாரும் பிழையாக புரிந்து கொள்ளக் கூடாது. இல்லை, ஏழை ஆடுகள் நனைவதற்காக முதலாளித்துவ ஓநாய்கள் அழுகின்றன. ஏழை மக்கள், அல்லது குறைவாக சம்பாதிப்பவர்கள் தான், அதிகமாக செலவழிக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்கள் தமக்கு கிடைக்கும் சொற்ப தொகையை, எதையாவது வாங்குவதற்கு செலவழிக்கிறார்கள், அல்லது அப்படி செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஓரளவு நல்ல சம்பளம் எடுப்பவர்கள் கூட, தமது ஆடம்பர தேவைகளுக்காக வாகனம், வீடு, வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்று வாங்கிக் குவிக்கிறார்கள் இல்லையா? அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து, இன்னும் அதிகம் செலவழிக்க வைப்பது தான், இப்போது வரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கம்.


அனைவரது கவனமும் நிதி நெருக்கடி மீது இருந்த நாட்களில், ஒரு ஐரோப்பிய நாளிதழ் இவ்வாறு எழுதியது, "பொருளாதாரப் நெருக்கடியால் வேலை இழந்தவர்கள், வியாபாரத்தில் நட்டமடைந்தவர்கள், ஆகியோர் தமது கவலையை தீர்க்க மதுவை தஞ்சமடைந்து வருவதால், மது பான விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு." ஆகவே பெருங் குடிமக்களே, புகைப்பிரியர்களே, போதைக்கு அடிமையானவர்களே, நீங்கள் தேசிய பொருளாதாரத்தை வளர்க்கும் நாட்டுப்பற்றாளர்கள், என்று இனிமேல் பெருமையாக கூறிக் கொள்ளலாம்.