Language Selection

குருத்து
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 //“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது// - புதிய கலாச்சாரம் – அக். 08.



அமெரிக்காவில் 20 வங்கிகள் ஏற்கனவே மஞ்சள் கடிதாசி கொடுத்து திவலாகிவிட்டன. திவாலாவது அமெரிக்காவில் இப்பொழுது தொடர்கதையாகி வருகிறது. நேற்று புதிதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த “டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேசன்” மற்றும் “பி.எப்.எப். பேங்க் அன்ட் டிரஸ்ட்” இரண்டு வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டன. இவைகள் இரண்டும் வீட்டுவசதி மற்றும் நுகர்வு கடன்கள் வழங்கி வந்தவை.

உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான“ஜெனரல் மோட்டார்ஸ்” நிறுவனம் திவால் அறிவிப்பை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்களாம். இந்த திவால் அறிவிப்பைத் தவிர்க்க அந்த நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியைப் சந்தித்து 25 பில்லியன் டாலர்கள் (மக்களின் வரிப்பணத்தை) கேட்டிருக்கிறார்களாம்.


அமெரிக்காவின் “சிட்டி வங்கி” யின் பங்குகள் ஒரே நிதியாண்டில் 83% வீழ்ச்சியாகி, அதள பாதாளத்தில் கிடக்கிறது. ஏற்கனவே, உலகம் முழுவதும் 23000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது. இந்தியாவில் 37 முக்கிய உயர்நிலை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மேலும், 52000 ஊழியர்களை நீக்க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே திவாலை தவிர்க்க இந்த வங்கி அமெரிக்க அரசிடம் 25 பில்லியன் டாலர்களை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டது முக்கிய செய்தி.

இப்படி நாளொரு வங்கி திவாலாவது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத மிகை (அராஜக) உற்பத்தியும், அதன் விளைவாய் எழுந்த நிதி மூலதனத்தின் தோற்றமும், நிதி மூலதனத்தைக் கொண்டு ஊக வாணிகத்தில் நிதி மூலதன கும்பல்கள் சூதாடி, ஊதிப் பெருக்கியதுதான் காரணம்.

கொள்ளையடித்தது நிதி மூலதன கும்பல்கள், ஏகாதிபத்திய வல்லரசுகள், மிகப்பெரிய வங்கிகள். ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்படுவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான். அமெரிக்காவில் ஏப்ரலில் வந்த தகவல்படி, மார்ச் மாதம் மட்டும் 80 ஆயிரம் தொழிலாளர்களும், ஜனவரி முதல் மார்ச் வரை 2.5 லட்சம் பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு காய்ச்சல் என்றால், நாமும் இங்கு மருந்து சாப்பிடுகிறோம். ஆம். தகவல் தொழில்நுட்பம், உருக்கு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சிமெண்ட், கட்டுமானம் துறைகளில் 30% வேலை இழப்பார்கள் என அசோசியேட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் (அசோசெம்) கணித்துள்ளது.

வருகிற தகவல்கள் இந்த கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.

“டாடா மோட்டார்ஸ்” நிறுவனம் தனது வாகன உற்பத்தி பிரிவை 25.11.2008 லிருந்து 5 நாட்கள் மூடுகிறது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. 3000 தற்காலிக ஊழியர்களை நீக்கிவிட்டது. 3 ஷிப்டிலிருந்து 1 ஷிப்டாக குறைத்துவிட்டது. 

அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுகிறதாம். ஷிப்டுகளை குறைத்துவிட்டதாம். இதனால், இதனை நம்பியிருக்கும் பல சிறு நிறுவனங்கள் இயங்க முடியாமல் மூடிவிட்டன.

கார் விற்பனை சரிந்ததால், டன்லப் டயர் நிறுவனம் தனது உற்பத்தியை காலவரையின்றி நிறுத்திவிட்டது. சென்னையில் 1000 ஊழியர்களையும், கொல்கத்தாவில் 1171 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மாதந்திர உதவித் தொகை ரூ. 1500 ரூபாயாம். இருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கமுடியாது.

அமெரிக்காவை காப்பியடித்து இந்தியாவிலும் செயற்கையாக காலியிடம் மற்றும் வீட்டின் விலையை செயற்கையாக ஏற்றிவிட்ட கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் பிசினெஸ் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

டி.எல்.எப்., யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட்ட 4000 கட்டுமான நிறுவங்களின் கூட்டமைப்பு 15% குறைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கின்றன. இப்பொழுது பரிசு – கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி, படுக்கையறை இலவசம் என அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இப்படி கட்டுமான தொழிலும் படுத்துவிட்டது.

இந்தியாவில் இப்படி கடந்த சில மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள். 

இலாபம் கொழித்த பொழுதெல்லாம் அள்ளிய முதலாளிகள் இப்பொழுது நெருக்கடி என்றதும் வேறு எதிலும் கை வைக்க முடியாத இவர்கள் தொழிலாளர்களின் தலையில் கை வைக்கிறார்கள். சம்பளத்தை பாதியாக குறைக்கிறார்கள். சிக்கன நடவடிக்கை (Cost Cutting) என்ற பெயரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து துரத்துகிறார்கள். 


நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவில் 30% பேர் வேலை இழப்பார்கள் என்று தனது கணிப்பைச் சொன்ன அசோசெம்-ஐ மத்திய அரசு (8,நவம். 2008) கண்டித்து இருக்கிறது. பொருளாதார மந்தத்தால் இனி வருங்காலத்தில் உருவாகப் போகும் வேலை வாய்ப்பு தான் குறையுமே ஒழிய இப்பொழுது வேலை வாய்ப்பு எப்படி குறையும் என சிதம்பரம் வேலை இழந்த தொழிலாளர்களைப் பார்த்து சிதம்பரம் (1,நவம்.2008) எதிர் கேள்வி கேட்கிறார்.

மூலதனத்தின் மீதும், பொருட்கள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் நீக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் அன்னிய மூலதனத்திற்குத் தாராளமாக திறந்து விடப்பட்டது தான் இத்தனை நெருக்கடிக்கும் காரணம்.

இவ்வளவு நடந்த பிறகும், தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக சோனியா அறிவித்துள்ளார். 

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இனி போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில்லை! 

http://socratesjr2007.blogspot.com/2008/11/blog-post_24.html