02092023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

அதிகாரத்தைக் கோரும் பிள்ளையானும் அது அவசியமில்லை என்று கூறும் கருணாவும்

இதன் அரசியல் சாரம் என்ன? ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளுவது தான். இதை விட வேறு இதில் ஒன்றுமில்லை.

 

பிள்ளையான் கோரும் பொலிஸ் அதிகாரம், தன் எதிரிகளை இதைக் கொண்டு ஒடுக்குவதற்குத் தான். கருணா உட்பட யாரையும் இவரின் 'ஜனநாயகம்" கிழக்கில் அனுமதிக்காது. இதற்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றார். 

பிள்ளையானின் பொலிஸ் அதிகாரத்தில் இருந்து தப்பிப் பிழைக்கவும், பிள்ளையானை போட்டுத்தள்ளவும் இது அவசியமில்லை என்கின்றார் கருணா. சிங்களப் பேரினவாதத்தின் பொதுவான உரிமை மறுப்பு விருப்பைப் பயன்படுத்தி, பிள்ளையானை ஒழித்துக்கட்ட கருணா விரும்புகின்றார்.

 

இது தான் கிழக்கில் அதிகாரம் பற்றிய அரசியல் தர்க்கத்;தின் சாரம். ரவுடி பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சராகி விடிவெள்ளியானதும், கொலைகாரன் கருணா பாராளுமன்ற ஜனநாயகவாதியானதும் இப்படித்தான்.

 

அதிகாரத்துக்காக நக்குவதே இவர்களின் அரசியல் பண்பு. அதற்கு கொலைகளே இவர்களின் அரசியல் வழியாகும். இந்தக் கொலைகார லும்பன்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. புலிகளை ஒழித்தல் என்ற பேரினவாத திட்டத்துக்கு, கைக்கூலிகளாக இருப்பதால், இவர்கள் கிழக்கின் விடிவெள்ளிகளானர்கள். இது தான் இந்த கிழக்குப் பொறுக்கிகளின் ஒரே தகுதி. இது கோஸ்டி கட்டி, ஆளையாள் போட்டுத்தள்ளி கிழக்கின் விடிவிற்காக "விடிவெள்ளி"களாக உழைக்கின்றனர்.

 

இதற்கு மேளமடிக்கும் புலம் பெயர் பினாமிகள், ஜனநாயகத்தின் பெயரில் கோவணத்தைக் கட்டிக்கொண்டு, இந்த கொலைக்காரக் கும்பலின் பின்னால் குதிக்காலில் ஓடுகின்றனர்.

 

கிழக்கு மக்களை கொன்றே கிழக்கின் விடிவைக் காண்பது என்பது, இவர்களின் ஜனநாயக இலட்சியமாக உள்ளது. புலியின் பெயரில் கருணாவின் கொலைக்கரங்கள் கிழக்கு முழுக்க போட்டுத்தள்ளுகின்றது. இது தேசியத்துக்காகவல்ல ஜனநாயகத்துக்கான கொலைகள். அதே புலி, ஆனால் கிழக்கு புலி. வித்தியாசம் அது தேசியம், இது ஜனநாயகம்.

 

பி.இரயாகரன்
24.11.2008      


பி.இரயாகரன் - சமர்