Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எல்லாத் துறைகளும் வர்த்தகமாக மாறி வருகிறது. அதுவும் முதலீடு செய்யாமலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பது என்கிற நோக்கில் வர்த்தகம் இன்றைக்கு நேரடியான ஏமாற்றாக மாறிஇருக்கிறது.

 

 

வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வாங்கி திருப்பிக் கட்டாதவன், முறையான வருமானவரி கட்டாதவன், தொழிலாளர்களை ஏமாற்றுகிறவன், மின்சாரவாரியத்திற்கே கோடிக்கணக்கில் பாக்கி வைத்து ஷாக் அடிக்கவைத்தவன, சிறிய அளவில் தொழில் செய்கிறவர்களை நசுக்கி, தன்னை பெரிய வர்த்தகனாக காட்டிக் கொள்கிறவன், சூதாட்ட விடுதி நடத்துகிறவன், வியாபாரத்தையே சூதாட்டமாக நடத்துகிறவன் இவர்களெல்லாம்  ‘முறையான’ செயல்களில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவருகிறார்கள்.

mother

 

அடுத்தவன் பணத்தில், அடுத்தவன் உழைப்பில் கோடிக்கணக்காக சம்பாதிப்பவர்கள் தொழில் அதிபர்களாகி இருக்கிறார்கள்.

 

அடுத்தவர் உறுப்பில், அடுத்தவர் உடம்பில் கோடிக்கணக்காக சம்பாதிப்பர்கள் இன்றைக்கு புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள்.

 

மக்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகத் திருட்டில் ஈடுபடும் மருத்துவர்கள், அதே வறுமையை பயன்படுத்தி பெண்களை வாடகைத் தாய்களாக மாற்றி கோடிக்கணக்கல் சம்பாதிக்கிறார்கள். மருத்துவம் இன்று அச்சுறுத்துகிற மனிதர்களின் கசாப்புக்கடை வர்த்தகமாக மாறி இருக்கிறது.

 

அதிலும் வாடகைத் தாய்முறை இந்திய பெண்களை உணர்வுள்ள மனுஷியாகவே மதிப்பதில்லை. ஒரு இயந்திரத்தில் மூலப்பொருட்களை உள்ளே தள்ளினால், அது ஒரு முழுப் பொருளை வெளியே தள்ளுவதுபோல், ஒரு பெண்ணின் உடலில் செயற்கையான முறையில் கருமுட்டையை செலுத்தியப் பிறகு, அந்தப் பெண் குழந்தையை வெளியே தள்ளிவிட்டு போய்கொண்டே இருக்க வேண்டும் என்கிறது மோசடியான மருத்தவ வர்த்தகம்.

ஏழைப் பெண்களுக்கான இந்தக் கொடுமையை பெண் மருத்துவர்களே தீவிரமாக செய்கிறார்கள். (வர்க்க வேறுபாட்டில் ஆண் என்ன? பெண் என்ன?)


இந்தப் பெண் மருத்துவர்கள் சொல்லுகிற காரணம்,”இது ஒரு புண்ணியக் காரியம். வாடகைத்தாய் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுகிறாள். அதற்காக பணமும் பெறுகிறாள்” என்கிறனர்.


சரி. அது புண்ணியக் காரியம் என்றால் வாடகைத் தாயாகவும் இருந்து அந்தப் புண்ணியத்தை முழுவதும் இந்த மருத்துவர்களே பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? உண்மையில் வாடகைத் தாய் முறையில் அதிகமான பணம் அடிப்பவர்கள் இந்த மருத்துவர்கள்தான்.

 

***

குழந்தை இல்லாதது மிகப் பெரிய சமூக குற்றம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஆணாதிக்க சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த மூடத்தனத்தையே முதலீடாக வைத்துக் கொண்டு பலமருத்துவர்கள் பணம்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.


‘சொத்துக்கு ஒரு வாரிசு’ என்று பணக்காரர்களுக்கு குழந்தைத் தயாரித்துத் தரும் இந்த முறையை ஆரம்பித்து வைத்த டாக்டர் கமலா செல்வராஜ் போன்றவர்கள், இன்று இந்த மருத்துவ முறையால் பலகோடி சொத்துக்கு வாரிசாக ஆகியிருக்கிறார்கள்.

 

வசதிப்படைத்தவர்களை சுரண்டுகிறார்கள் என்பதல்ல நமது குற்றச்சாட்டு. வசதி படைத்தவர்களுக்கும் வெளிநாட்டுக் காரர்களுக்கும் ஒரு இயந்திரமாக இந்திய ஏழைப் பெண்களை, வாடகைத் தாயாக மாற்றுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குறியது.

 

சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த ஓரினசேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள் இந்தியாவில் வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியப் பெண் எவ்வளவு மலிவானவளாக மாற்றப்பட்டிருக்கிறாள் என்பதையே இது காட்டுகிறது. மருத்துவம் முழுமையான மோசடி வர்த்தகமாக மாறியிருப்பதை பார்க்கும்போது,

 

இந்த நவீன உலகில் கையில கத்தியுடன் வருவபர்கள் வழிபறிக்காறர்கள் மட்டுமல்ல. அவர்கள் மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள், என்றே தோன்றுகிறது.

 

இந்த வாடகைத்தாய் முறையை முன்அறிவிப்பு போல் எச்சரித்து ‘குங்குமம்’ வார இதழில் , 13.8.2006 அன்று எழுதியிருந்தேன். அதன் தீவிரம் உணர்ந்து அதை மீண்டும் மறுபிரசுரம் செய்கிறேன்.

 

விரிவாகப் படிக்க இங்கே அழுத்தவும்;

http://mathimaran.wordpress.com/2007/10/30/mathi/