வழமைபோல கடந்த இதழுக்கும், இந்த இதழுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. இதற்கிடையில் எத்தனையோ நிகழ்வுகள், இந் நிகழ்வுகளுக்கு வெளியில் சமர் இயங்குவதாக ஒரு சாராரின் விமர்சனம். இது ஒரளவு உண்மையாக இருந்தாலும் முழுமையானதல்ல. சமர் மூன்றாம் பாதையை அமைத்திடும் போக்கில் செயற்பட முனைகிறது. அந்த வகையில் கடந்த கால, நிகழ்கால அரசியல் போக்குகளையொட்டி விமர்சனத்தை முன் வைக்கின்றது. கடந்த கால, நிகழ்காலத்தின் மீதான அரசியல் விமர்சனம் எதிர்காலத்தில் எழும் போராட்டத்தை வழிநடத்தும்.

நாம் கடந்த காலத்தின் மீது விமர்சனம் செய்யும் அதே நேரத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வி;டுகிறார்கள். நாம் இக் கொலைகளுக்கு வெறும் எதிர்ப்பைக் காட்டுவதாலோ அல்லது கண்டிப்பதாலோ மட்டும் இக் கொலைகள் தடுக்கப்பட்டு விடாது. இக் கொலைகளை நிறுத்தும் வகையில் மூன்றாவது பாதைக்கான அமைப்பை உருவாக்க வேண்டும். எப்போழுது மூன்றாவது பாதை உருவாகிறதோ அப்போதிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக மாற்றப்பட்டு விடும்.

இந்த வகையில் மூன்றாவது பாதை அமைத்திடும் நோக்கில் நாம் கொண்டிருந்த நிலைப்பாடு, சில சஞ்சிகைகளில் கதை, கவிதை மட்டும் கவனத்தில் எடுத்து செயற்படுவதை கண்டித்தோம். ஆனால் அதற்காக அவை சமூகத்திற்கு அவசியமற்றது என்று அர்த்தமல்ல. இவை இச் சமூகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த மூன்றாவது பாதையை உருவாக்கியிருக்க வேண்டும். மூன்றாவது பாதை உருவாகாமல் தடுப்பதில் இரு பிரதான விடயங்கள் பங்காற்றுகின்றன. இவை இரண்டிற்கும் எதிராக சமர் முழுமையாக போராட முற்படுகின்றது. இலங்கையரசு, புலிகள் என்ற தரகு முதலாளித்துவம் முதல் தடையாகும். திரிபுவாதமும், பிழைப்பு வாதமும் இரண்டாவது தடையாகும். இரண்டாவது தடை முற்போக்கு அலைகளுடன் வெளி வருகிறது. முதல் தடை எப்போதும் நேருக்கு நேராகவும், இரண்டாவது தடை முதுகுக்குப் பின்னாலும் செயற்படுகிறது.

இவ்விரண்டையும் உடைப்பது மூன்றாவது பாதையின் மிக அடிப்படையான விடையமாகும்.

இவ்விரண்டு விடயமும் மூன்றாவது பாதையை உருவாக விடாமல் தடுக்கும் இன்றைய நிலையில். தொடர்ந்து ஆயிரகணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்த நபர்களும், குழுக்களும் செயற்படுகின்றனர். இவர்கள் பேச்சுவார்த்தையை நடத்தவென புறப்பட்ட நோங்களில் புதிய புதிய இராணுவ நடவடிக்கைகளை முழுத்தமிழ் மக்கள் மீதும் நடத்தி முடித்து விடுகின்றனர். இந்தியா விடுதலைப்புலிகள் மீது தடையென்ற பெயரில் தமிழீழப் போராட்டத்தையே தடை செய்து, தமிழ் மக்களை கொன்று குவிக்க பச்சைக் கொடியும் காட்டியுள்ளது. இன்று தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக பாரிய தாக்குதல்களை ஸ்ரீலங்கா அரசு தனது இனவெறி இராணுவத்தை காட்டுமிராண்டித்தனமாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. தெரிவுக்குழு நீண்டகாலத்தை கடத்தி எந்த உருப்படியான தீர்வையும் முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் தெரிவுக்குழு தீர்வு எனச் சொல்லி இராணுவ நடவடிக்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றனர். இலங்கையரசுடன் கைகோர்த்த தமிழ் துரோகக் குழுக்கள் தெரிவுக்குழுவை கூறியே காலத்தை கடத்துகின்றனர். அதே நேரம் புலிகள் மீதான இந்தியாவின் தடையை தமிழீழ போராட்டத்தில் புரட்சிகரமான நடவடிக்கையென, துரோக வாய்களால் ஒரு பாராட்டைக் கொடுத்து அண்டிப் பிழைக்க முயல்கின்றனர். புலிகளோ மேலும் பாசிசத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு, ஈழப்போராட்டத்தை முன்னேற்றுவதாக உண்மைக்கு மாறாக மிரட்டலுடன் கூறுகின்றனர். மறுத்துக் கூறுவோர் மீது கொலைப் பயமுறுத்தல், கடத்தல் மூலம் வாய்களை மூடி வைக்க முயல்கின்றனர்.

மக்களை நேசிக்கும் அனைவருக்கும் எதிர்காலத்தின் வெற்றிக்கு துரோகத்திற்க்கும், பொய்களுக்கும், உருட்டல், மிரட்டல்களுக்கும் எதிராக ஒன்றிணைந்த திரிபுகளையும், பிழைப்பு வாதத்தையும் எதிர்கொள்ள கைகோர்த்திட சமர் அழைக்கிறது.