08192022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு!

கடந்த சில வருடங்களாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயற்பட்டு வந்த நாம், காலத்தின் தேவை கருதி 1983 புரட்டாதியில் எம்மை புரனமைத்து தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்-எல்-எவ்-டி) என்னும் பெயரில் செயற்பட ஆரம்பித்தோம். அன்றைய சூழ்நிலையில் சில நடைமுறைத் தேவையையொட்டி எமது கடந்த காலம் பற்றியோ எமது தோற்றுவாய் பற்றியோ திட்டவட்டமாக மக்கள் முன் முன்வைக்க முடியவில்லை. எமது வரலாறு, கடந்தகால அனுபவங்கள் என்பவை பற்றி மக்கள் முன் வைக்கவேண்டிய அவசியம் எமக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நாம் அலட்சியம் செய்துவிட முடியாது. எம்மைப் பற்றிய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் சில இயக்கங்களின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கவும் வேண்டி மக்கள் முன் எம்மைப் பற்றி தெளிவுபடுத்த விழைகிறோம்.

 

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கும்போது தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் பின் இளைஞர்களால் தமிழீழம் என்னும் கோரிக்கை முன் வைக்கப்பட்டு அது பிரபல்யமானது. இக் கோரிக்கை பிரபல்யமடைவதைக் கண்ணுற்ற தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் என்பவை இணைந்த கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. இதனால் தமிழீழம் என்னும் கருத்து மக்களிடையே மென்மேலும் வலுப்பட்டது. இத்துடன் கூடவே தமிழ்மக்கள் மீதான ஒடுக்கு முறையை மேலும் அதிகப்படுத்தியது. தேசிய இனப்பிரச்சனை கூர்மையடைந்ததை தொடர்ந்து இடதுசாரி இயக்கங்களிலிருந்த, முன்பு சிந்திக்காத பலரும் இவ் வேளையில் தேசிய இனப்பிரச்சனை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டனர். பலரது கவனமும் தேசிய இனப்பிரச்சனையின் பால் ஈர்க்கப்பட்டது. இக்கட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-)யில் இருந்த தோழர்களிடையேயும் தேசிய இனப்பிரச்சனையின் பால் கவனம் திரும்பியது. தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது பற்றிய சர்ச்சைகள் உருவாகின. நாட்டின் யதார்த்த நிலையில் தமிழ் மக்களின் ஒரு தனியான அமைப்பு உருவாகுவதும், அதன் வழிகாட்டலில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவதும் காலத்தின் தவிர்க்கமுடியாத தேவையென்னும் கருத்து மறைந்த தோழர் கார்த்திகேசனால் முன்வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இடதுசாரி இயக்கங்கள் தமிழ்மக்களின் பிரச்சனைக்கான சரியானதொரு தீர்வை முன்வைக்கவில்லை. அது மட்டுமல்ல அவர்களும் கூட பாராளுமன்ற அரசியற் சேற்றில் மூழ்கி இனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் தமிழ்மக்கள் இடதுசாரிகளை நம்பும் நிலையில் இல்லையெனும் கருத்தும், இரு இனங்களுக்கிடையில் குரோதம் தமிழ் சிங்கள முதலாளித்துவ கட்சிகளினால் வளர்க்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையின்மையினால் ஏற்பட்டுள்ளது என்னும் கருத்தும், மற்றும் நாட்டில் பலமான புரட்சிகர இயக்கமின்மை தமிழ்மக்களுக்கான தனியானதொரு இயக்கம் தோன்றுவதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கான தனியானதொரு இயக்கம் தேவையென்னும் கருத்து முன்வைக்கப்பட்டாலும் அவ்வியக்கத்தின் இலக்கு போராட்டவழிமுறை இயக்கப் பண்பு, ஸ்தாபன வடிவம் என்பதைப்பற்றி எவ்விதமான திட்டவட்டமான கருத்தும் முன்வைக்கப்படவில்லை.

 

தமிழ்மக்களுக்கான தனியானதொரு இயக்கம் தேவையென்னும் கருத்து 1975ம் ஆண்டு கடைசிப்பகுதியிலே முன்வைக்கப் பட்டது. 1975 புரட்டாதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யிலிருந்து தோழர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி தேசிய இனப்பிரச்சனை பற்றி ஆராய்ந்தனர். தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமெனவும் பிரிவினையை எதிர்ப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கை அந்நிய நாடுகள் தலையிட வாய்பளிக்கும் எனவே இக்கோரிக்கை பிற்போக்கானது என்னும் கருத்து பிரிவினையை எதிர்ப்பதற்கு காரணமாக முன்வைக்கப்பட்டது. பிரிவினையா? இல்லையா? என்பதை விட்டு தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுதல் என்னும் கோசத்தை முன்வைத்தால் போதுமானது என்னும் கருத்து ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டாலும் பெரும்பான்மையோரின் முடிவாக தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராகப் போராடுதல் என்னும் கருத்து முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்விதம் கூடி முடிவுகள் எடுக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. பெயருக்கு ஒரு சில கருத்தரங்குகள் மட்டும் நடத்தப்பட்டன. 1977 தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் சில தோழர்கள் தீர்மானித்து தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணி எனும் பெயரில் சில உதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆங்காங்கே சில கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இத்துடன் அதன் முதற்கட்ட வேலை முடிவுற்றது. இக்கட்டத்தில் செய்யப்பட்ட வேலைகள் திட்டவட்டமானதொரு வேலைத்திட்டமின்றி ஏதோ செய்யவேண்டுமென்பதற்காக மனம் போன போக்கில் செய்யப்பட்டன. இதனை சில இடதுசாரிக் கட்சிகள் தொழிற்சங்கம் அமைக்கும் பாணியில் பார்த்தனர். இன்னமும் சில கட்சி நேரடியாக தமிழ்மக்களிடம் சென்றால் ஆட்களைப் பிடிப்பது இலகுவாகவிருக்கும் என சிந்தித்தனர். ஒரு சிலர் மடடுமே இது காலத்தின் தேவை அதாவது வரலாற்று ஒட்டத்தில் தமிழ்மக்கள் தனித்து போராட வேண்டிய நிர்ப்பந்தந்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர். அப்படி உணர்ந்தபோதிலும் சரியானதொரு அரசியல் மார்க்கத்தை இவர்கள் முன்வைக்கவில்லை இதனால் இவர்களாலும் எதுவிதமான ஆக்கப்ப+ர்வமான பங்களிப்பையும் நல்க முடியவில்லை. 1977ம் ஆண்டு ஆவணி இனக்கலவரத்தின் பின் தோழர் கார்த்திகேசன் மறைந்ததுடன் தமிழ்மக்கள் ஜனநாயகமுன்னணியின் செயற்பாடுகள் யாவும் ஓய்வுக்கு வந்தன.

 

இப்படி சில கால ஓய்வுக்கு பின்னர் ஏதோவொரு உந்துதல் மீண்டும் செயற்படவேண்டுமென்று தள்ளியதால், தமிழ்மக்கள் ஜனநாயமுன்னணி அமைப்பைக் கூட்டி வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென 1979 முதல் பகுதியில் ஒர் அமைப்புக் கொமிட்டி உருவாக்கப்பட்டது. அக் கொமிட்டியும் முன்னையதைப் போன்று அமைப்புக்கான வேலைகளில் ஈடுபடாது பெயரை மட்டுமே கொண்ட செயற்பாடற்ற கொமிட்டியாகவிருந்தது. இக் காலகட்டத்தில் ஒரு சில கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும் இவை தொடர்ச்சியாகவோ சீராகவோ திட்டமிடப்பட்டோ செயல்படவில்லை. இவ்வேலைகளில் எல்லாம் அமைப்புப் பாங்கற்ற உதிரித்தன்மையே பெரும்பாலும் வெளிப்பட்டது. இதனை தொடர்ந்து 1979 இல் வடபகுதியில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியை அமைப்பதற்கான அமைப்புக் கொமிட்டி செயலிழந்தது. இந்நிலையில் தொடர்ந்தும் வேலைசெய்ய முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்து 1979 புரட்டாதியில் ஏற்கனவெ தொடர்புள்ள செயற்பட விரும்பிய தோழர்கள் அனைவரையும் கல்முனையில் ஒன்று கூட்டி சில தீர்மானங்களை எடுத்தனர். தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் தனித்துவமும் சுதந்திரமும் கொண்ட ஒர் அமைப்பாக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பெயரில் தொடர்ந்து செயல்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. முன்பே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியெனும் பெயர் பாவிக்கப்பட்டாலும் 1979 புரட்டாதியில் தான் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு மகாநாடு கூட்டப்பட்டு தீர்மானிக்கப்படும் அரசியல் மார்க்கத்தின் அடிப்படை.