தேவை

உலகெங்கும் நாளாந்தம் நடக்கும் சம்பவங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2ம் உலகயுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியங்களால் தமது சுரண்டல் நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட உலகம் இப்போது மறுபடி ஒழுங்கமைக்கப்படுகிறது. சோவியத் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் வலு, இணைக்கப்பட்ட ஜரோப்பாவின் ஆதிக்கம், அமெரிக்காவின் இழுபறி என்று அதிகார வர்க்கங்கள், மனித குலத்தைப் பந்தாடிக் கொண்டிருக்கின்றன. உலகின் வறிய நாடுகளைப் பங்கு போட்டு கொள்வதற்கு ஏகாதிபத்தியங்களிடையேயான போட்டி உக்கிரமடைந்துள்ளது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மனிதகுலம் போராடிக்கொண்டிருக்கிறது. போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும, பயங்கரவாதத்தையும் விளைவாக்கிக் கொண்டு. திசை அறியாமல் தேசங்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றன. எங்கும் நம்பிக்கை தெரிவதற்கான ஒரு கணப்பொழுதையேனும் காணமுடியவில்லை. இந்த நிலையில் நமது எதிர்காலம்? நாங்கள் என்ன செய்யப்போகிறோம்? சமூகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் விடை கண்டாக வேண்டிய கேள்வி இது!

 

இந்த நிகழ்வுகளுக்காக மனம் நொந்து கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது தானா எமது பணி? ஜரோப்பாவில் இருக்கின்ற சமூக உணர்வுள்ள முற்போக்குச் சக்திகள் தமக்கு முன்னால் உள்ள வரலாற்று பணி கவிதை வடிப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். 1917 ரஷ்யப் புரட்சி முடிந்த பிறகு, சீனாவை வழிநடத்திச் செல்வதற்காக மாவோ சேதுங் ரசிய புரட்சியின் சித்தாந்தத்திலிருந்து மாறுபட்ட அந்த காலகட்டத்துக்குரிய புதிய சிந்தனைகளை முன்வைத்தவர். வர்க்கங்களின் அணி சேர்க்கையில் வேறுபாடுகளை முன்வைத்தார். அதுவே புதிய ஜனநாயகப் புரட்சி என்றார். அன்றைய சமூக நிலைமை அரசியல் நிலை என்பன தொடர்பான தெளிவான ஆய்விலிருந்து, முரண்பாடில்லாத வகையில் முன்வைக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் சீனப் புரட்சி வெற்றி வரை வழிநடத்தப்பட்டது. ஆனால் ஈழத்தில் போராட்டம் பற்றிய சிந்தனைகள் விடுதலை பற்றிய உணர்வுகள் இருந்தும் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலிகொள்ளப்பட்ட பிறகும் கூட ஈழத்தின் அரசியல் நிலைமை தொடர்பாகவோ போராட்டத்தின் தோல்விகள் தொடர்பாகவோ பொதுவாக யாரும் சிந்தித்ததாக தெரியவில்லை. கவிதை கதை மிஞ்சிப்போனால் இயக்கங்கள் பற்றியும் அரசு பற்றியும், கடுமையான கண்டனமும் கவலையும்......! சிலவேளையில் வெடிகுண்டு புரளி போல அவ்வப்போது சில கருத்துக்கள் ஜக்கிய இலங்கைப் புரட்சி, கவிதை என்றால் என்ன? கலை மக்களுக்காகவா, ராஜீவ் காந்தி கொலை மனிதாபிமானமற்றது ...இப்படி வினோதங்கள்.

 

இதை விட ஈழப்போராட்டம் பற்றிச் சிந்திக்கின்ற பெரும்பான்மையானவர்கள் மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களே, இவர்கள் ஒரு கருத்தைப்பற்றி சிந்திப்பதில்லை. முதலில் அந்தக் கருத்துக்குப் பின்னாலுள்ள குழு அல்லது இயக்கம் பற்றிய மேலோட்டமான முடிவுக்கு வருவார்கள். இதையே பொது முடிவாக்கிக்கொண்டு ..... பிறகு கருத்தும் கத்திரிக்காயும்? எமது போராட்டம் சீரழிக்கப்பட்டு விட்டது. மக்கள் துப்பாக்கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் நடுவே சாவுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தெற்காசியா முழுவதிலும் புரட்சியின் வீச்சை வலுவாக்கவல்ல எமது போராட்டம் ஏன் சீரழிந்து போனது?, கவிதையும், சிறு கவிதையும் பற்றாக்குறையாகிப் போனதாலா? இது மட்டும் தானா எமது தேவை? மக்களின் கரங்களில் ஆயுதம் தேவை. சித்தாந்த ஆயுதம்! நிராயுதபாணிகளான இந்த மக்களை இன்றைக்கு பாசிஷம் ஆட்சி செலுத்துகிறது. முதலாவது சமரிலேயே இது பற்றி வரிக்குவரி எழுதியிருந்தோம். ஆனால் தூண்டிலில் பிரஜைகள் தவிர பொதுவாக எவருமே இதுபற்றி பொறுப்புடன் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை.

 

தூண்டில், மனிதம், பனிமலர், சக்தி என்று சமூகம் பற்றி தீவிரமாகப் பேசிக் கொள்கின்ற ஜரோப்பிய சஞ்சிகைகள் சில தத்துவார்த்த பிரச்சனை தொடர்பாகவும் பொறுப்புடன் கருத்தில் கொண்டால், எமது போராட்டத்தில் விடப்பட்டிருக்கிற பெரிய இடைவெளியை கணிசமானளவு நிரப்ப முடியும். நமது தேசத்தில் மறுக்கப்பட்டிருக்கின்ற கருத்துச் சுதந்திரம் இங்கே ஓரளவு கிடைக்கிறது. என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இதனை பயனுள்ள காலமாக்கிக் கொள்ள முடியும்.

 

சமர் ஆசிரியர் குழு