இது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். இந்த நாளில் உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.
வேலைநிறுத்தம் செய்த நாள். மூலதனத்தின் குவிப்பை ஒரு நாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். மூலதனம் இந்த நாட்களை கண்டு அஞ்சி நடுங்கின நாள்.
மூலதனம் தனது அடக்குமுறை இயந்திரத்தையே தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏவிவிட்ட நாள். சுதந்திரம், ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கத்துக்கு மறுத்த நாள்.
எட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது, அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாள். அந்த தொழிலாளிகளின் நினைவாக இந்தக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடத் தொடங்கிய நாள். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள்.
அன்று போராடி மரணித்த தொழிலாளர்களை நினைத்து, அவர்களின் அரசியல் கோரிக்கையை உலகம் தழுவிய வகையில் போராடக் கற்றுக்கொண்ட போது, மூலதனம் அதை சீரழிக்கும் வகையில், இதை தமது மூலதன நோக்கில் மாற்ற முனைந்தனர். இதை வெறும் பொழுது போக்கு விடுமுறை நாளாக, ஒய்வு நாளாக, களியாட்ட நாளாக காட்டி சிதைக்க முனைந்தனர்.
இதன் மூலம் இந்த நாளை இரண்டாக பிளவுபடுத்திய மூலதனம், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வையே காயடிக்க முனைந்தனர், முனைகின்றனர். எட்டு மணி நேரம் உழைப்பு என்ற அரசியல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக கடந்துள்ள இன்றைய நிலையில், இந்தக் கோரிக்கைகள் பல நாடுகளில் இதுவரை அமுல் செய்யப்படவில்லை.
மறுபுறம் எட்டுமணி நேரம் உழைப்பு என்ற கோரிக்கை முன்வைத்து வென்ற நாடுகளில், இன்று தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து இது மீண்டும் பறிக்கப்படுகின்றது. அதிகரித்த வேலை நேரம் புகுத்தப்படுகின்றது.
இதைச் சட்டம் மூலம், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குவதன் மூலம், மேலதிக வேலையை திணிப்பதன் மூலம், எட்டுமணி நேரம் உழைப்பு படிப்படியாக இல்லாது ஒழிக்கின்ற பணியையே, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக உலகமயமாதல் செய்கின்றது.
தொழிலாளி வர்க்கத்தின் மிக மோசமான வாழ்வை மேலும் சீரழித்து, உழைப்பின் திறன் பிழியப்பட்டு, வாழ்வின் சகல அடிப்படையையும் தகர்க்கின்ற வகையில் மூலதனம் மிகவும் கோர முகமெடுத்து நிற்கின்ற தனது உரிமையைத் தான் ஜனநாயகம் என்கின்றது. தனது சுதந்திரம் என்கின்றது. இதைத் தான் மக்கள் ஆட்சி என்கின்றது.
ஆனால் தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கையையும், தான் பெற்றதைப் பாதுகாக்கும் போராட்டத்தையும், இழந்த உரிமைகளை மீளப் பெறவும் மே நாளில் மீண்டும் மீண்டும்; அரசியல் உணர்வுடன் போராடுகின்றது. இந்த நாளில் நாம் எமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம்.
தொழிலாளர் வர்க்கம் தனது உழைப்பை, அது உருவாக்கும் அனைத்து செல்வத்தையும் தானே நுகர, தானே தனக்கு அதிபதியாக இருக்க, தனது சொந்த அதிகாரத்தை நிறுவும் நாளாக முன்னிறுத்தி, அதை நோக்கி நாம் போராடக் கற்றுக்கொள்வோம்;. இந்த அறைகூவலை உங்களுக்கு தோழமையுடன் விடுக்கின்றோம்.
எமது புரட்சிகர மேதின வாழ்த்துகள்.
பி.இரயாகரன்
01.05.2006