12092022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....

தலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல் ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.

 ‘‘காட்டுமிராண்டிகள்...இவர்களெல்லாம் சட்டம் படித்து என்ன செய்யப் போகிறார்கள்’’

‘‘இவர்களெல்லாம் சட்டம் படித்து நீதிபதிகள் ஆனால் என்ன நடக்கும்’’

‘‘உடனடியாக சென்னை சட்டக் கல்லூரியின் அம்பேத்கர் பெயரை மாற்ற வேண்டும்’’

‘‘கல்லூரி விடுதிகளை மூட வேண்டும்’’

இன்னபிறக் கோரிக்கைகள் தலித்துக்களை குறி வைத்து வீசப்படுகின்ற சூழலில். சிக்கிக் கொண்ட மாணவனை ஏன் இவளவு கோபத்தோடு தலித் மாணவர்கள் தாக்க வேண்டு என்ற கேள்வியை ஆதிக்க சாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள், அரசியல்கட்சிகள், அரசு நிர்வாகம் என எல்லா தரப்பும் தந்திரமாக மறைத்து விடுகிறது.

பணக்கார ஆண்டைகளுக்கும் பண்ணை வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்று மாறிப் போன சூழலில் இன்னும் ஏழைகள் தங்களின் பிள்ளைகளை படிக்க நம்பியிருப்பது பிரதானமாக இரண்டு துறைகளைத்தான் ஒன்று நர்சிங், இன்னொன்று டீச்சர் டிரெயினிங்.(இந்த இரண்டிலும் மோசடிக் கும்பல் புகுந்து விட்டதென்பது தனிக்கதை) மூன்றாவதாக உயர்கல்விப் பிரிவில் வருகிற சட்டம் படிக்க வருபவர்களும் சாதாரண எளிய குடும்பத்து பிள்ளைகள்தான். பப்ளிக் டாயெல்ட்டுகளைப் போல இருக்கும் அரசு விடுதிகளில் தங்கித்தான் பெரும்பாலான தலித் மாணவர்கள் சட்டம் படிக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 60% மாணவர்கள் பள்ளர்,பறையர் வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும் மீதி சாதிகளாக 40% பேரும் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படிக்கிறார்கள். தனியார் முதலாளிகளின் கையில் உயர்கல்வி சென்ற பிறகு இடஒதுக்கீட்டின் உரிமையும் அரசின் சலுகைகளும் கொஞ்சமேனும் மிச்சமிருப்பது சட்டக் கல்லூரிகளில்தான்.ஆனால் முதல் தலைமுறையாக இழிவை சுமக்க மறுத்து சட்டம் படிக்க வந்தக் கூட்டம்.

பொதுவாக எந்தக் கல்லூரி மாணவர்களும் பொதுப் பிரச்சனைகளுக்காக இன்று போராட வருவதில்லை. அரசு ஒரு போராட்டம் நடத்தினால் மீடியாக்களில் கிடைக்கும் பப்ளிசிட்டிகளை விரும்புகிற மத்யதர மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கவனஈர்ப்பை மேற்கொள்வார்கள். இதை கும்பகோணம் பள்ளியில் எரித்துக் கொல்லப்பட்ட குழந்தைகளில் தொடங்கி இதயத்தை தானம் கொடுத்த ஹிதேந்திரன் வரை காணமுடியும். ஆனால் இன்றும் பொதுப் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வருபவர்கள் என்றால் அது சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டும்தான். அதனால் அவர்களுக்கு வன்முறையாளர்கள் என்ற முத்திரையும் இந்த மெழுகுவர்த்தி ஏற்றுகிற மத்யமரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதோடு இணைத்துத்தான் இந்த தாக்குதல்களை ஒட்டி எழுந்திருக்கும் எண்ண ஓட்டங்களை பார்க்க வேண்டும்.

தலித் மாணவர்கள் தேவரின மாணவர்கள் முரண்பாடு என்பது பல ஆண்டுகளாக சென்னை சட்டக் கல்லூரிக்குள் இருந்திருக்கிறது. அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த இந்து சாதியமைப்பின் ஒரு அங்கம்தானே? சமூகத்தின் உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகள் சட்டக் கல்லூரிக்குள் மட்டும் இருக்காது என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.தவிறவும் மாணவச் சமுதாயம் சாதி பேதம் பார்க்காது என்பதை நம்புகிறவர்கள். தென் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளில் போய் பார்க்கட்டும் தலித் மாணவர்கள் ஆதிக்க சாதி மாணவர்களால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று. சாதி எல்லாவனுக்குள்ளும் இருக்கிறது. அது மாணவர்கள் மனதில் யூனிபார்ம் போட்டு சம்மணமிட்டிருக்கிறது.தனது பள்ளிப் பாடப்புத்தகத்தில் அம்பேத்கரின் படம் இருப்பதை இழிவாக நினைக்கும் அளவுக்கு ஆதிக்க சாதி மாணவர்களின் மனதில் விஷம் ஏற்றப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒரு சூழலில்தான் சென்னை சட்டக் கல்லூரியில் தேவர் குருபூஜை அன்று அடிக்கப்பட்ட போஸ்டரில் தந்திரமாக அம்பேத்கர் பெயரை தவிர்த்திருக்கிறார்கள் தேவரின மாணவர்கள். அது தொடர்பான கொதிப்புதான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தவிறவும் வெறுமனே இதை ஒரு போஸ்டர் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. மோதிக் கொண்ட இரண்டு தரப்பினருமே வெளியூர் மாணவர்கள்.
சென்னைக்கு வெளியே என்ன நடக்கிறது.

மேலவளவில் ஒரு ஆளை கும்பலாக கூடி வெட்டியது யார்?

திண்ணியத்தில் ஒரு தலித்தை குடும்பமாக சேர்ந்து பீயைத் தின்ன வைத்தது யார்?

குழந்தை என்றும் பார்க்காமல் தனத்தின் கண்ணைக் குத்தியது யார்?

உத்தபுரத்தில் சுவர் கட்டி பிரித்துவைத்தது யார்? அதில் 16 செங்கற்களை உடைத்ததற்காக இன்னும் கொதித்துக் கொண்டிருப்பது யார்?

சுண்டூரில்,காயர்லாஞ்சியில், கொடியன்குளத்தில்,தாமிரபரணியில் கொத்துக் கொத்தாக அடித்து துவைக்கப்பட்டது யார்?

விடை சொல்ல முடியாத? விடை சொல்வதை தவிர்க்கிற நமது ஆதிக்க சாதி மனோபாவாம்தான் சென்னை சட்டக் கல்லூரி தாக்குதலையும் ஒரு தாக்குதலாக மட்டுமே பார்க்காமல் தலித்துக்களின் கோடூரமாகப் பார்க்கிறது.

வடமாவட்டங்களில் வன்னியர்கள் தலித்துக்கள் என்றும் தென் மாவட்டங்களில் தேவர் தலித்துக்கள் என்றும் நாடார் தலித்துக்கள் என்றும் இன்னபிற ஆதிக்கசாதிகள் தலித்துக்கள் என்றும் சாதி தலித்துக்களை எதிர் எதிராக நிறுத்தியதோடு, பள்ளர் பறையர் அருந்தயர் என தலித்துக்களையும் மூன்று கோண்த்தில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஊரில் அடிபடுகிற, ஆண்டைகளின் வயலில் நக்கிப் பிழைக்கிற தங்களின் அப்பன்மார் பட்ட அவஸ்தைகளை அவமானங்களை இன்றைய தலித் தலைமுறை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை அவர்கள் நிமிர்ந்து நடக்க ஆசைப்படுகிறார்கள். சாதீய ஒடுக்குறையின் கோபம் ஒரு தலைமுறைக் கோபமாக தலித் மாணவர்களுக்குள் இருக்கிறது.இந்த சமூக வரலாற்றுப் பின்னணியோடுதான் சட்டக் கல்லூரி மோதலை அணுக வேண்டுமே தவிற சட்ட ரீதியாக அல்ல.

கல்லூரி மோதலை விசாரித்த வரையில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் (தேவரின மாணவர்கள்) என்ற இருமாணவர்களும் கடந்த எட்டாம் தேதி பாலநாதன்,ஜெகதீசன் என்கிற இரண்டு தலித் மாணவர்களை தாக்கியதாகவும் இது குறித்த முறைப்பாடு கல்லூரி முதல்வரிடம் இருப்பதாகவும். பாரதி கண்ணன் மீதும் சில தலித் மாணவர்கள் மீதும் பூக்கடை போலீசில் சில வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த 12&ஆம் தேதி பாரதி கண்ணன்,ஆறுமுகம் இருவரும் இதில் பாரதி கண்ணன் திட்டமிட்டே கத்தியோடு போய் சித்திரைச் செல்வன் என்ற மாணவன் காதை அருத்தாராம். உண்மையில் சித்திரைச் செல்வன்,பாரதி கண்ணன், ஆறுமுகம் இந்த மூவருக்குமே அங்கு அன்று செமஸ்டர் தேர்வு கிடையாது என்று சொல்லப்படுகிறது. பாரதி கண்ணன் தகுந்த திட்டமிடலோடு போய் மாணவர்களை தேர்வெழுத விடாமல் தடுத்ததாகவும் அந்த மோதலே தேர்வு முடிந்த பிறகு பழிவாங்கும் தாக்குதலாகவும் மாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் தொடர்ந்து தலித் மாணவர்களை கோபப்படுத்தும் படியான தேவரின மாணவர்களின் நடத்தை.இன்னொரு பக்கம் இழிவுகளைச் சுமந்த கோபம் இழிவின் மீதான் கோபம் என்று பார்க்கும் போது ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த மூர்க்கம் காண்டுமிராண்டித்தனம் இவைகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது தாக்கிய இருபது மாணவர்களைத் தேட 22 படைகளை அமைத்திருக்கிறது தமிழக அரசு.காது அறுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சித்திரைச் செல்வன் உடபட தலித் மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் தாக்குதலுக்கு காரணமான பாரதிகண்ணன் இது வரை கைது செய்யப்பட வில்லை. தனிப்படை அமைப்பது என்பதே தலித் மாணவர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் செயல்தான். நடந்துவரும் பாரபட்சமான காவல்துறை செயல்பாடுகளை தட்டிக் கேட்க வேண்டிய தலித் தலைவர்களோ, தேர்தல் அமைப்பில் பங்குபெறும் கம்யூனிஸ்டுகளோ இதை வெறும் கல்லூரி கலவரம் என்ற வகையில் கோஷமிடுகிறார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டவன் கைது செய்யப்படும் போது தாக்குதலுக்கு காரணமானவனும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒன்று இப்படி நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்த வேகத்தில் தலித் மாணவன் இரண்டு பேரின் குடலை உருவிச் சாய்த்த்திருந்தால் இந்த ஊடகங்களும் மத்யமரின் சாதிமனமும் இதை இவளவு துல்லியமாக பிரித்துப் பேசியிருக்காது. சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் என்கிற அளவில் பேசிவிட்டுப் போயிருக்கும்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களைக் கூட போலிஸ் துரத்திக் கொண்டிருக்கிறது. பாரதிகண்ணன் என்கிற மாணவரால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வன் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் காதை அறுத்த பாரதிகண்ணனோ மாவீரராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மிக மோசமான சாதி தீவீரவாதம் தமிழகத்தில் வேர் விட்டிருக்கிறது தலித்துக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என நினைக்கிறது சாதி வெறி ஊடகங்களும் அரசு நிர்வாகமும். இதை தட்டிக் கேட்க வேண்டிய தங்களை தலித் தலைவர்கள் என்று சொல்லக் கூடிய தலைவர்களோ தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து மௌனம் காத்து ஆதிக்க சாதி அரசியலுக்கு தூபம் போடுகிறார்கள்.

இப்போது அவர்கள் எங்கு வந்து சேர வேண்டும் என நினைத்தார்களோ அங்கு வந்து விட்டார்கள்.சொல்ல வேண்டிய ஸ்லோகன் தெளிவாகவே சொல்லப்படுகிறது.

ஒன்று ஹாஸ்டலை மூட வேண்டும்
இரண்டு அம்பேத்கர் பெயரை நீக்க வேண்டும்.

இதுதான் இன்று ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுக்கருத்து.

தென்கிழக்கின் தத்துவமரபில் மிகப் பெரும் புரட்சியை நிகழ்த்திய அம்பேத்கரும் முதுகுளத்தூர் புகழ் முத்துராமலிங்கத் தேவரையும் ஒன்றாக்கி கதைப்பதன் அபத்தம் கூட அறியாத அளவுக்கு சாதி மண்டிய மூளைகள் இந்த கோஷங்களை முன்வைக்கிறன.

பெருவாரியான உழைக்கும் மக்களைக் கொண்ட இந்த இரண்டு இனங்களும் இன்று எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு உண்மை தெரியாமல்...

கள்ளரோ,மறவரோ,பள்ளர்களோ,பறையர்களோ யாராக இருந்தாலும் இன்னும் பத்து வருடம் கழித்து சென்னை சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியுமா என்று தெரியவில்லை. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை பட்டா போட்டு அமெரிக்க கோக் கம்பெனிக்கு விற்றாலும் விற்று விடுவார்கள், இப்போ வெட்டிக் கொண்டு சாகிற இவர்கள் நினைத்தால் கூட சட்டக் கல்லூரிக்குள் நுழைய முடியாது. அங்கு மட்டுமல்ல எங்குமே சட்டம் படிக்க முடியாது காரணம் எப்படி உயர் கல்வி தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டதோ அது போல சட்டப் படிப்பும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டாகிவிட்டது. பெரும் பண முதலைகள் மட்டுமே படித்து வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வர முடியும் சூழல் வந்து விட்டது.வட இந்திய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தின் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போய் படித்து பட்டம் பெற்று வருகிற சூழலில். உங்களின் எதிரிகள் யாரென்றே தெரிந்து கொள்ளாமல் மோதிக் கொள்வதை என்னவென்று சொல்வது. அது மட்டுமல்லாமல் ஒரு பணக்கார தேவர் பெரும் முதலீட்டில் சட்டக் கல்லூரி ஒன்று துவங்கிவிட்டால் ஏழைகளாக இருக்கும் எல்லா தேவர்களும் எனது சட்டக் கல்லூரியில் இடம் தருவேன் என்று சொல்லி விடுவாரா? இல்லை தலித் முதலாளிதான் அப்படி சொல்லி விடுவாரா? பணக்காரன் தன் சொத்தைப் பேணவும் குறைந்த கூலிக்கு ஆள் பிடிக்கவும் சொந்த சமூகத்தை சுரண்டிப் பிழைக்கவுமே சாதி வெறியை வளர்த்தெடுக்கிறான்.உழைப்புக்கும் நிலத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதா பார்ப்பான் இந்த தாசி மக்களுக்கெல்லாம் தத்துவம் வகுத்துக் கொடுத்திருக்கிறான். அந்த பார்பன தத்துவங்களை எல்லாம் உடைத்து நொறுக்கிய அம்பேத்கரையும் பெரியாரையும் மறுக்கும் அடியாட்களாக உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருப்பதும் அவன்தான்.

தனக்கும் கீழாக ஒரு அடிமையை வைத்திருந்து ஆதிக்கம் செய்வதில் சந்தோசமடையும் ஆதிக்க சாதிக்காரன் பார்ப்பானுக்கு அடிமையாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறான் என்பதோடு. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஒரு குடியரசு தின விழாவில் குறிப்பிட்டதைச் சொல்லி முடிக்கிறேன்.‘‘இந்திய சமூகத்தில் ஒரு விதமான எதிர்ப்புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நமது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற குறைந்த பட்ச உரிமைகளைக் கூட சலுகைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைப்படுகிற போக்கு இந்திய சமூகங்களிடம் வளர்ந்திருக்கிறது’’என்று வேதனைப் பட்டார். ஆமாம் நம்மை விட கீழான மக்களுக்கு மிக மிக குறைவாக கிடைக்கும் சலுகைகளைப் பார்த்து நாம் ஏன் பொறாமைப் பட வேண்டும்.

 

http://athirai.blogspot.com/2008/11/blog-post.html


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்