“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்று

அல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.


ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.



தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.

எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.


எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.

எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.

கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.

எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.

கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.

கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.

இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும். ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல. ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.

அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா.

கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும் குழந்தைப் பருவத்திலும், வளரிளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும், முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.

எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.
பாலிலும், ஏனைய பாற் பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது

கல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் டி (Vit D) பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் டி எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.

சூரிய ஒளியும் விட்டமின் டி யைக் கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.

இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் டி யும் சேர்க்கப்பட்டுள்ளது.

“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பலர் என்னிடம் கேட்கும் கேள்வி இது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின் அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.

ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan பரிசோதனையை இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

நன்றி:- தினக்குரல்
http://hainallama.blogspot.com/2008_11_01_archive.html