ஆப்பை வைக்கும் கருணாவும், ஆப்பிளுக்கும் பிள்ளையானும்

கிழக்கின் ஜனநாயக விடிவெள்ளிகள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுகின்றனர். ஜனநாயகத்தை அள்ளிக்கொடுத்த பேரினவாதம், அதிகாரத்துக்காக கொலை செய்வதை அங்கீகரிக்கின்றது. தமக்கு மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதே, புலிகள் முதல் ஜனநாயக பாராளுமன்றம் வரையான பொதுவான நியதி. இப்படி இலங்கையில் இரண்டு பாசிசம் கொடிகட்டிப் பறக்கின்றது.

 விடுதலைப் புலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்க, அவருக்காக கொலை செய்து கிழக்கின் தலைவரானவர் தான் இந்தக் கருணா. அதை அவர் என்றும் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இன்று அதே கருணா, தான் தலைவராக இருக்க செய்யும் கொலை தான் ரகுவின் கொலை. திடீர் திடீரென பிள்ளையான் முகாமில் நடக்கும் உட்கொலைகள் முதல் செய்தவர்கள் காணாமல் போதல் அனைத்தும் கருணாவின் ஜனநாயக திருவிளையாடல் தான்.

 

இப்படி அரசின் துணையுடன் கிழக்கில் ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. இதை ஆதரித்துக் கும்மியடிக்கும் புலம்பெயர் குஞ்சுகள். பாராளுமன்ற பதவிகள் தான் ஜனநாயகத்தின் மகுடம் என்று புலம்பி நக்கும் வக்கிரங்கள். பாராளுமன்றம் பன்றித் தொழுவமல்ல, ஜனநாயகத்தின் மகுடம் என்று கூறும் அரசியல் வக்கிரம். 

 

பாராளுமன்ற ஜனநாயக கதிரையில் அமர்ந்தபடி கொலைகளை செய்கின்ற ஜனநாயகம். மகிந்தா முதல் கருணா வரை, தத்தம் அரசியல் இருப்புக்கு நடத்துகின்ற கொலைகள் பெருகிச் செல்லுகின்றது. புலிகளுடனான யுத்த முனைக்கு வெளியில், இப்படி எண்ணிக்கையற்ற கொலைகள்.

 

ஆயுதத்தை வைத்திருக்கும் புலிகள் முதல் பாராளுமன்ற ஜனநாயகத்தில் வீற்றிருக்கும் கருணா டக்கிளஸ் வரை நடத்துகின்ற கொலைகள், எம் மக்களின் கருவறையையே அறுத்தெறிகின்றது.

 

அனைத்தும் இனம் தெரியாத கொலைகள், தாம் செய்யவில்லை என்று மறுக்கும் அருவருக்கத்தக்க மறுப்பு, மற்றவன் மேல் குற்றம் சாட்டும் போக்கிலித்தனம், மறுபக்கத்தில் விடுதலை ஜனநாயகம் என்று மார்பு தட்டுகின்ற வக்கிரங்கள்.

 

இவர்களால் தமிழ் மக்கள் தம் குழந்தைகளை இழந்து வருகின்ற சோகம். கணத்துக்குக் கணம் தம் குழந்தைகளின் உயிரை பறித்தெடுக்கும் கயவர் கூட்டம், விடுதலையின் பெயரில் ஜனநாயகத்தின் பெயரால் கொட்டமடிக்கின்றனர்.

 

கருணா தன் தலைமைக்காக நடத்துகின்ற கொலைகள் இவை. அவர் இப்படித்தான், இதை ஒரு உட்கட்சி ஜனநாயகமாகக் கொண்டு ஒரு கட்சியை கட்டமைக்க முடியும்;. இந்த அரச கைக்கூலிக்கு வேறு எந்த மாற்று அரசியலும் கிடையாது. கூலிக் குழுத் தலைவன், தன் தலைமையை இப்படித்தான் கட்டமுடியும்.

 

கிழக்கின் விடிவெள்ளி என்று சொன்ன ராஜேஸ்வரி முதல் எக்சில் உயிர்நிழல் ஞானம் வரை இதைத்தான் தலையில் வைத்து ஆடுகின்றனர். கிழக்கு என்ற குறுகிய அளவுகோல் தான், இதை ஆதரிக்கும் அடிப்படை. 

           

இவர்கள் உச்சிமோந்த சதிகாரன் பிள்ளையான் பாவம். ரவுடிக்கு கோட்டும் ரையும் கட்டி, அதை ஜனநாயமாக பேச வெளிக்கிட்ட பின், மீளவும் முன் போல் வெளிப்படையாக ரவுடியாக மாற முடியாது திண்டாடுகின்றார். எப்படி கொலைகளைச்; செய்வது என்பதில் ஊறி, புலியின் முன்னணி தலைவனாக மாறிய கருணா போன்று, பிள்ளையான் கருணா தரப்பை பழிவாங்க முடியாது திண்டாடுகின்றது. ஆனால் பழிக்குபழி, ஒருவரின் அழிவுவரை தொடரும்.

   

பல்லுப் போயிருந்த கருணாவுக்கு இந்த வசதியை வழியையும் மீளச் செய்து கொடுத்தது யார்? மற்றொரு ஜனநாயக தலைவன் டக்கிளஸ் தான். டக்கிளஸ் அடியெடுத்து கொடுக்க, கருணாவோ நாலு காலில் பாய்கின்றனர். இலகுவாக கொலை செய்தபடி ஜனநாயகம் பேச பாராளுமன்ற உறுப்பினர் பதவி. தம்மை மூடி மறைக்க இந்த ஜனநாயக வேஷம். இந்த கொலைகார வேஷத்தை பாதுகாக்க, பேரினவாதத்தை நக்கு நக்கென்று நக்கும் கருணா.

 

சொந்த தனிப்பட்ட முரண்பாட்டால் ஜனநாயகமற்ற புலியை உடைத்து தப்பிய கருணா, தனக்கான ஒரு கூலிப்பட்டாளத்தையே அதே வழியில் உருவாக்கினான். பேரினவாதத்தை நக்குவதைத் தவிர, அந்தக் கும்பலிடம் எந்த மாற்றும் இருந்தது கிடையாது.

        

பேரினவாத்தின் கூலிப்படையாக மாறிய கருணா, தனிப்பட்ட பாதுகாப்பின் அடிப்படையில் தலைமறைவானான். இதை பிள்ளையான் பயன்படுத்திக்கொண்டு, பதவி வெறியர்களின் துணையுடன் கருணாவின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கினான். கருணாவை ஓரம் கட்ட பேரினவாதத்தின் தேவையை வேகமாக பூர்த்தி செய்து, கருணாவையே ஓரம் கட்டினான். இதற்காக பேரினவாத அரசியல் தேவைகளையும் துப்பாக்கி கொண்டு பூர்த்தி செய்தான். அரசின் செல்லப்பிள்ளையாகிய பிள்ளையான், கருணாவின் பாதுகாப்பை முன்னிறுத்தி இலண்டன் வரை அனுப்பிய இந்தக் கும்பல், அங்கேயும் வைத்து காட்டிக் கொடுத்தது.

 

இப்படித் தன் தலைமையை இழந்தும், காட்டிக் கொடுக்கப்பட்ட கருணா, இன்று தன் பழிவாங்கலை தொடங்கியுள்ளான். கிழக்குத் தாய்மார் தம் குழந்தைகளை இந்த பதவி வெறி கூலிப் பொறுக்கிகளுக்காக, பலியிடுவது தான் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயகம். புலம்பெயர் பொறுக்கிகளுடன் சேர்ந்து, இதைத் தான் இந்த கும்பல் அரங்கேற்றுகின்றது. கிழக்கு மக்கள் இவர்களால், இப்படி மீளவும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

 

பி.இரயாகரன்
16.11.2008