06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

முஸ்லீம் மக்கள் மேல் விடப்பட்டுள்ள மிரட்டலின் விளைவு தான் என்ன?

(மயூரன் எழுதிய இணைய கட்டுரை மற்றும் செய்திகளின் எதிர்வினையில் இருந்து இது எழுதப்பட்டது.)

 

உங்கள் அச்சம் நேர்மையானது. புலிகளின் பதிலளித்த முறைமை எல்லாம் மேலும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று பி.பி.சி தமிழ் சேவை நேரடியாக புலிகள் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒரு கருத்து பரிமாற்றத்திலும் இதுவே பிரதிபலிக்கின்றது.

 

 

பேரினவாதம் புலிகள் பிரதேசம் மீது நடத்திய தாக்குதலையும், பொதுவான தாக்குதலையும் முஸ்லீங்கள் கண்டிக்கவில்லை என்று புலிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது எந்த வகையில் சரியானது? இதில் தர்க்கம் செய்யும் புலிகளின் நிலைப்பாடு, முட்டாள் தனமானது. இதையே சில நாட்களுக்கு முன்பு பி.பி.சி தமிழ்சேவையில் புலிகள் தர்க்கித்தனர்.

 

முஸ்லீங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் கண்டிக்கவும் முடியாத கொலைகார சமூகத்தில், அச்சம் கலந்த மௌனத்தை பீதியுடன் சாதிக்கின்றனர் அல்லது காலம் தாழ்த்திய மென்மையான கண்டனத்தை செய்கின்றனர்.

 

அப்படித் தான் சமூகத்தையும், மக்களையும் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆக்கி வைத்துள்ளனர். கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவது, பின் எதிhவினையாற்றுவது மிக மோசமான இழிந்த கூறாகும்.

 

அவர்கள் அரசுடன் சேராது மௌனமாக இருப்பதைக் கூட சாதகமாக எடுக்கத் தெரியாத நிலையில் முட்டாளாக புலம்வது அபத்தம். அந்த மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படுத்தியது எதிரியா? நாங்களா?

 

புனை பெயரில் துண்டுபிரசுரம் விடப்படுகின்றது. முன்பு மக்கள் படை முதல் வேறு பல பெயரில் புலிகள் பல துண்டுபிரசுரங்களை விட்டதுடன், கடந்த காலத்தில் தொடரான பல நடிவடிக்கைகளையும் எடுத்தவர்கள். இதை பேரினவாதம் பயன்படுத்தி ஒன்றைச் செய்யுமென்றால், அதற்கான முழுப் பொறுப்பும் புலிகளையே சாரும். ஒரு போராட்டம் எப்படி இருக்கக் கூடாது என்ற உதாரணத்தில் இருந்து, இது போன்ற அரசியல் விளைவுகள் சிக்கல்கள் உருவாகின்றன.

 

கடந்தகாலம் முதல் இன்று வரை புலிகளின் நடத்தைகள் இதற்கு எதிரானதாக இருக்கவில்லை. இது போன்றவற்றை செய்யாதவர்கள் அல்ல. அதை எந்தவிதத்திலும் சுயவிமர்சனம் செய்தவர்கள் அல்ல. இன்று நிகழ்ச்சிகளை சூக்குமமாக்கி உண்மையை பொய்யாகவும், பொய்களை உண்மையாகவும் திரித்துப் போடுகின்ற நிலையில், விளைவுகள் புலிகளை மேலும் ஆழமாகவே தனிமைப்படுத்தும். ஓட்டு மொத்த தமிழ் மக்களும் இதனால் கடுமையாகவே பாதிக்கப்படுவர்.

 

திருகோணமலையில் தமிழர்கள் படிப்படியாக சனத் தொகை அடிப்படையில் சிதைந்து, அந்த இனத்தின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி வருகின்றது. இதற்குள் அகதிகள் என்ற பெயரில் இந்தியா நோக்கி ஒட்டிச் செல்லப்படுவதை வேறு குதூகலமாக புலித் தேசியம் வரவேற்கின்றது. மறுபுறம் தமிழ் மொழி பேசக் கூடிய முஸ்லீம் மக்கள் மேலான இது போன்ற நடத்தைகள், அவர்களையும் புலம்பெயர வைத்தால் யார் லாபம் அடைவார்கள்? மொத்த தமிழ் மொழி பேசும் மக்களிடையே ஏற்படும் முரண்பாடும், அவர்களிடையேயான புலம்பெயர்வும் பேரினவாதத்துக்கே இலாபம். சிங்கள குடியேற்றங்கள் இயல்பில் திருகோணமலையில் தமிழரை இல்லாதாக்கிவிடும். இதை நோக்கி புலிகளின் அணுகுமுறைகள், பதில்கள், கருத்துக்கள் தொடர்ச்சியாக அமைகின்றன. ஆம் நீங்கள் ஆயுதங்களுடன் சொந்த பாதுகாப்பில் உள்ளதாக எண்ணியபடி, அதற்கு வெளியில் உள்ள மக்களை பந்தாடுவது அல்லது பந்தாட உதவுவது, உங்களின் மொத்த அழிவில் முடிவுறும். அதுமட்டுமல்ல மொத்த தமிழ் மக்களையும் சிதைத்து சினனர்பின்னமாக்கிவிடும்.

பி.இரயாகரன்
30.05.06


பி.இரயாகரன் - சமர்