Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.

 

 

புலிகளின் தோல்வி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதவர்கள் கூட, இது நடந்துவிடும் என்று இன்று நம்பத் தொடங்கியுள்ளனர். புலிப் பினாமிகளான கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட, புலிகளை தோற்கடித்தாலும் விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்று பேசுமளவுக்கு நிலைமை வேகமாக மாறிச்செல்கின்றது.

 

தொடர்ந்தும் தொடரும் போராட்டம் பற்றி வேடிக்கை காட்டுகின்றனர். புலிகளின் இந்த பொம்;மைகள், வாய்வீச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய லாயக்கற்ற பினாமிகளின் உளறல்கள் இவை. சுயநிர்ணயம் என்றால் என்ன என்ற தெரியாத மலட்டுச்சமூகத்தை உருவாக்கியுள்ள புலிகள், அனைத்தையும் அழித்து விட்டு கதை சொல்கின்றனர். புலிகள் அழிந்தவுடன், பேரினவாதத்தின் கோமணத்தை எடுத்துக் கட்டும் முதல்தரமான பொறுக்கிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

 

புலிகளை தோற்கடிக்கும் புறநிலையான நெருக்கடிகள் எவை

 

அனைத்தையும் இராணுவ வடிவில் கட்டமைத்த புலிகள், சமூகத்தை தம் பாசிச கட்டமைக்குள் அடக்கியொடுக்கினர். இதன் விளைவால் இந்தப் பாசிச இராணுவ கட்டமைப்பே இன்று  மரணித்துக் கொண்டு இருக்கின்றது.

 

இந்த மரணம் அவர்கள் நம்பமுடியாத வழியில், தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாத வகையில், அவை அரங்கேறுகின்றது. கனவில் கூட அவர்கள் எண்ணிப் பார்க்க  முடியாதவையாக இவை உள்ளது. 

 

புலிகளிள் இராணுவ வழி பாசிச கட்டமைப்புகள் எப்படி சிதறுகின்றது என்று பாhப்போம்.

 

1. கடுமையான யுத்தம் நடக்கும், மையமான பல யுத்த முனைகள். இங்கு புலிகள் ஈடுகொடுக்க முடியாது தோற்கடிக்கப்படுகின்றனர். 

 

2. குவிந்த இராணுவ தாக்குதலுக்கு பதில் பரவிய இராணுவத் தாக்குதல்கள்;. இராணுவத்தை ஒரு இடத்தில் குவிக்காது பரப்பி வைத்துள்ள யுத்ததந்திரம். இது எந்த ஒரு பாரிய எதிர் தாக்குதலையும் செயலற்றதாக்குகின்றது. சிறிய இழப்புடன் இராணுவம் மீள முன்னேறுகின்றது.


 
3. யுத்தப் பிரதேசங்கள் நம்ப முடியாத அடர் காடுகளில் கூட நடக்கின்றது. பிரதான வீதிகளை அண்டியல்ல, அடர்காடுகள் ஊடாகவும் இராணுவம் பல முனையில் முன்னேறுகின்றது.

 

4. புலிகளின் கட்டுப்பாட்டு அல்லாத பிரதேசங்களில், புலிகளின் இருப்பையே புலிகளின் அழித்தொழிப்பு பாணியில் அதை ஒழித்துக் கட்டியுள்ளது. புலிகள் தாம் அல்லாதவர்களை எப்படி தேடி அழித்தனரோ, அதே பாணியில் புலிகளை பேரினவாதம் தேடி அழிக்கின்றது. நாடு முழுக்க கடந்து ஒரிரு வருடங்களில் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மை, புலிகள் அல்லது புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இப்படி புலிகளின் செயற்பாட்டை முடமாக்கியுள்ளனர்.

 

5. நடுநிலை வேசம் போட்டுக்கொண்டு புலிக்குள் தலையையும், வாலை அரசுக்கும் காட்டிக் கொண்டிருந்த பத்திரிகைத்துறை, அறிவுத்துறையின், புலிக்கு சார்பாக இயங்கிய தன்மை முடக்கப்பட்டுள்ளது. கைது, கடத்தல் தொடங்கி, இறுதியில் அவர்களில் பலரை புலம் பெயர வைத்துள்ளது. இப்படி புலம்பெயர்ந்த பலர், தம் வேஷத்தை கலைத்தும் மறைத்தும்  புலிக்காக இங்கு மீளவும் முக்குவதன் மூலம் அம்பலமாகின்றனர். இவர்களால் தமிழ் மக்களுக்காக நேர்மையாக நிற்க முடியவில்லை. இப்படி பினாமித்தனம், எல்லாவற்றையும் அடித்துச் செல்லுகின்றது.

 

6. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் எங்கும் ஊடுருவித் தாக்கும் திறனை இன்று இராணுவம் பெற்றுள்ளது. இதன் மூலம் புலிகளின் தலைமை சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையும், யுத்தத்தை வழி நடத்த முடியாத நிலைமையும் உருவாகியுள்ளது.

 

7. புலிகளின் தலைமையை தேடியழிக்கும் வகையில், உடனுக்குடன் வான்வழித் தாக்குதலையும் இலக்குத் தவறாத தாக்குதலையும் நடத்துகின்றது. தலைமையின் நடமாட்டங்கள், புலிகள் கூடுமிடங்கள் பற்றிய தகவல்களை உள்ளிருந்து துல்லியமாக இராணுவம் பெறுகின்றது.

 

8. கடல் வழி தாக்குதல் படிப்படியாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியக் கடலோரம் முற்றாக புலிகளின் நடமாட்டமற்ற ஒரு பிரதேசமாக மிக விரைவில் மாறவுள்ளது. இதன் மூலம் தமிழக மீனவர் ஊடான இந்திய நெருக்கடி இல்லாது போக உள்ளது. இந்தியா நோக்கிச் சென்ற அகதிகள் வெளியேற்றம் நின்று போகும். இந்திய அழுத்தம் சிதைந்து போகவுள்ளது. 

 

9. இந்திய - இலங்கை – ஏகாதிபத்திய கூட்டு முயற்சியால், கடல் வழியாக இராணுவ உபகரணங்கள் கடத்தல் என்பது முடக்கப்பட்டுள்ளது.

 

10. புலிகள் மக்களை தம்முடன் வைத்திருக்க நடத்தும் கட்டாய வெளியேற்றம், இராணுவத்துக்கு சாதகமானது. யுத்த பிரதேசத்தையும், யுத்தத்தில் புலிகள் இழந்த பிரதேசத்தையும் மக்களற்ற சூனிய பிரதேசமாகின்றது. இது இராணுவத்துக்கு புலிகளற்ற பாதுகாப்பு பிரதேசமாகின்றது. இதன் மூலம் ஆக்கிரமித்த பிரதேசத்தை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, யுத்தத்தை இலகுவாக தொடர்ந்து நடத்தமுடிகின்றது. பின்னணி பிரதேசத்தை பாதுகாக்காக வேண்டிய அவசியமற்றதாகியுள்ளது.

 

11. புலிகளின் பாசிச நடத்தைகள், பல எதிரிகளை உற்பத்தி செய்தது. அவர்களை வலிந்து பேரினவாதத்துடன் சேர்ந்து நிற்க வைத்ததன் மூலம், தம் கண்ணையே தாம் குத்திக் கொண்டனர். தாம் அல்லாதவர்களை அரவணைக்கத் தவறிய புலிப் போராட்டம், எதிரி அவர்களை அரவணைத்துக் கொள்ள உதவியது. இப்படி எதிரி, புலிகள் மூலமும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். 

   

12. புலிப் பாசிசம் தமிழ் நாட்டு மக்களை அரவணைக்கத் தவறி, அந்த நாட்டில் தாக்குதலை நடத்தியன் மூலம், தம்மைத் தாம் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

 

13. சர்வதேச ரீதியாக தம் பாசிச நடத்தைகள் மூலம், தனிமைப்பட்டுப் போனார்கள். 

 

14. தம் மீதான யுத்த நெருக்கடியில் இருந்து தப்ப, மக்களை தம்முடன் வலுக்கட்டாயமாக வைத்துள்ள புலிகள், மக்களை தம் எதிரியாகவே அணுகுகின்றனர். தம் பாசிச வழிமுறைகளில் மக்களை தம்முடன் வைத்திருக்க முனையும் போராட்டம், மக்களுக்கு எதிரான ஒரு யுத்த முனையை உருவாக்கியுள்ளது.  
 
இப்படி பல முனையில் சந்திக்கின்ற நெருக்கடிகளில் இருந்து மீளமுடியாத வகையில், புலிகளின் பாசிசமே அவர்களை அழிக்கின்றது.

 

தமிழ்மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை மறுத்த புலிகள், புலிப் பாசிசத்தையே தேசியமாக்கியதன் விளைவு இது. மக்களை தோற்கடித்த புலிகள், இன்று மக்களால் தோற்கடிக்கப்படுகின்றனர். எதிரி எந்த தடையுமின்றி சுதந்திரமாக முன்னேறுகின்றான்.

 

இன்று பல திடீர் திருப்பங்கள் நிகழும் வாய்ப்புகள் உண்டு.

 

1.  புலிகள் பெரும்பகுதி திடீரென முற்றாக செயலிழக்கும் வாய்ப்பு.


2.  புலிகளி;ன் ஒருபகுதி இராணுவத்துக்கு சார்பாக மாறும் வாய்ப்பு
3. இராணுவம் மக்களுக்குள் படையை இறக்கி, புலியிடமிருந்து மக்களை மீட்கும் திடீர்  சம்பவங்கள்


4.  புலிக்குள் ஒரு உள் மோதல்

 

பாசிச அமைப்பின் அழிவில் இவை எதுவும் நடக்கலாம். எதுவும் நடக்காது என்று சொல்ல, அதனிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது.

 

இது இன்றைய நிலைமை. இன்று புலியை நாம் ஆதரிப்பதனால், எதுவும் மாறிவிடாது. இந்த நிலமையை அரசியல் ரீதியாக புரிந்து எதிர்வினையாற்றுவது தான், எதிர்கால சந்ததிக்கு குறைந்தபட்சம் வழிகாட்ட உதவும்.

 

பி.இரயாகரன்
15.11.2008