06242021வி
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது

சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும் -சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.

 

தமிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் தமிழக மக்களை எங்ஙனம் பிரித்தாளுகின்றன என்று.மிகவும் வருந்தத்தக்க இந்தச் சாதியக் கலவரத்துக்குப் பின்னே நடந்தேறும் அரசியல் சதியானது முழுமொத்தத் தமிழக மக்களுக்குமே எதிரானது.

 

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்தேறியதான சாதியக்கலவரம் வெறும் சாதிய முரண்பாட்டின் “உணர்ச்சிவசமான”தாக்குதலைக் கொண்டியங்கவில்லை.அது,தமிழ்ச் சமூகத்தின் முழுமொத்த அணித்திரட்சியையும் ஆணிவேறு அக்குவேறாக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட உந்தித்தள்ளப்பட்ட தூண்டுதல்களால் அப்பாவித் தலித்து இளைஞர்கள்-மாணவர்கள் மீண்டும் குருதி சிந்த வழிகோலியுள்ளது தமிழ ஆளும் வர்க்கம்.

 

இந்தப் பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான பார்ப்பனியப் பண்பாடு நாள்தோறும் தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் ஆத்மீக(மதம்) ஊடக மற்றும் கேளிக்கை(சினிமா-சின்னத்திரை) நிகழ்வினூடாகச் செய்துவரும் மானுட அவமானமானது மிகவும் தந்திரமாக உழைப்பவர்களை வேட்டையாடி ஒடுக்கி வருவதில் மிகச் சாதுரியமாகத் தமிழ் தேசியவுணர்வைச் சிதைத்து வருகிறது.இது,ஒவ்வொரு அரசியற் சூழலிலும் ஏதோவொரு வடிவத்தினூடாகச் சாதியக் கலவரமாக மேலே உந்தித் தள்ளப்படுகிறது.இந்தச் சதி சாதியக் கலவரத்துக்கு இந்திய மத்திய அரசியல் கட்சிகள்வரை லிங்குகள் இருக்கின்றன.இது குறித்துக் கிஞ்சித்தும் கவலையின்றிச்”சாதியக் கலவரம்”எனும் போர்வையில் கருத்தாட முடியாது.இது சாரம்சத்தில் தவறானது.

 
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது தந்திரம் மிக்கது, இனிவரும் நாட்களில் தமிழக மக்களின் இயல்பான அரசியல் வாழ்வில் வேறொரு பிரக்ஜையைக் கிளறி விடுவதற்கானவொரு சூழலை மிகவும் தந்திரத்தோடு தடுக்கும் நரித்தனமான அரசியலோடு இஃது சம்பந்தமுடையது.


அடுத்துவரும் தேர்தல், அதன் வழியாகத் தமிழகத்தில் மேலெழும் தமிழ்மொழிசார்ந்த பிரக்ஜையை, அன்றாடம் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படும் ஈழத்து மக்களின்மீதான இலங்கைச் சிங்கள அரசுக்கெதிரான தமிழகத்து மக்களின் உணர்வுரீதியான அனைத்து எழிச்சிகளும், தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கி வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்துக்குச் சகிக்க முடியாத அச்சத்தையிட்டு வந்தது.இந்த அச்சத்தை ஜெயலலிதாவின் ஈழ மக்களுக்கான ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் அரசியல் சூதாட்டத்தில் மிக இலகுவாக இனங்காண முடியும்.கூடவே,தமிழுணர்வுமிக்க கலைஞர்கள் சீமான் மற்றும் அமிர் கைதுகளின் பின்னே தன்னைப் பார்ப்பனியத்துக்கு ஒப்புக்கொடுத்த தி.முக. ஆட்சியையும் கவனிக்க.


தமிழகம்(தமிழ் மக்கள்) ஒரு குடையில் திரண்டு நின்று ஈழ மக்களின் துயருக்கான தார்மீக எழிச்சியுறும்போது அதுவே தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினது இருப்புக்கு எதிராக மாறும் என்பது மிக இலகுவாகப் புரியத்தக்க அரசியல்தாம்.இதைக் குறித்தான அரசியல் சூழ்ச்சிகளை மிக இலகுவாகச் செய்து வந்தது பார்ப்பனியத் தந்திரமானது, தமிழகத்தின் தமிழணுர்வுக் கட்சிகளினது ஈழத்துக்கான போராட்டங்களால் தமிழ்த் தேசியவுணர்வு மேலும் விரிந்த தளத்துக்கு வளர்ந்து செல்லுமென்பதைக் குறித்து மிகவேகமாக எடைபோட்ட பார்ப்பனிய ஆளும் வர்க்கமானது, ஓட்டுக்கட்சிரக அரசியலிலிருந்து விலத்திய ஆதிக்கப் பிற சாதிகள்சார்ந்த ஆளும் வர்க்கத்தோடான அரசியல் வியூகத்தோடு, தனக்கான இருப்பைக் குறித்து மிகக் கவலையோடு காத்திருந்து இந்தச் சதிச் சாதியக் கலவரத்துக்குக் காரணிகளை உருவாக்கியுள்ளது.


மக்களின் எதிரிகள் எப்பவும் பற்பல இரூபங்களில் இருந்து கொள்வார்கள்.தமிழக மக்களின் தார்மீக ஆதரவுப் பெருந் தீயில் தன்னையும் பிணைத்தக்கொண்ட பார்பனியக் கட்சிகள்,குழுக்கள்,மடாலயங்கள்,கலைத்துறைப் பிரமுகர்கள்,சினிமாத் தயாரிப்புப் பெருச்சாளி நிறுவனங்கள் யாவும் தமிழக மக்களின் எந்த அணிதிரட்சியையும் சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.எனவே,உள் நுழைந்து கருவறுத்தல் அவர்களுக்குக் கைவந்த கலை.இப்போது அதைக் கட்டவிழ்த்துக் காட்டியுள்ளார்கள்!இத்தகைய ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளை அரசியல்ரீதியாக முறியடிக்க முடியாதளவுக்குத் தமிழகத்தை ஆளும் கட்சி பாப்பனியத்தோடு கைகோர்த்துக் கட்சியாதிக்கத்தையும் மூலதனத்தையையும் காக்க வேண்டிய நிலையில், கருணாநிதியின் குடும்ப அரசியல் பெரும் மூலதனத்தோடு சீரழிந்து ஒடுக்குமுறை வர்க்கமாகத் தமிழகத்தில் நிலவுகிறது.இதையே தமது மூலதனமாகக் கருதும் தமிழகத்துக்கு எதிரான பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கங்கள் முழுமொத்தத் தமிழக மக்களையும் எந்த அரசியல் பிரக்ஜையுமற்ற வெறும் மந்தைகளாக்கும் சினிமாவைக் கருத்தியல் யுத்தமாகவும் பயன்படுத்தியபடி, மறுபுறத்தில் பார்ப்பனிய வர்ண அதர்மத்துக்குச் சார்பான சாதிய வேறுபாட்டைத் தூண்டிச் சாதியக் கலவரத்தூடாக வன்முறைவடிவிலும் தமிழக மக்களை ஒடுக்கி, அவர்களின் குருதியை உறுஞ்சிக் குடிக்கின்றன.

 

இன்றைய தமிழகமானது வெறுமனவே ஓட்டுக் கட்சிகளின் வாய்ச் சவடால்களின்வழி புரியத் தக்க அரசியல் சமூக வாழ்வைக் கொண்டிருக்கவில்லை.அது மிகவும் கொடிய பார்ப்பனியச் சூழ்ச்சியின் அதர்மத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறை ஜந்திரத்தால் தகவமைக்கப்பட்ட சூழ்ச்சிமிகு வாழ்நிலைகளைக் கொண்டியங்குகிறது.இங்கே,தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்குவதை மிகத் துல்லியமாகக் கவனப்படுத்தி அதற்கெதிரான பார்ப்பனியச் சதி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.அதன் முக்கியகூறாக இருக்கும் இந்தச் சாதியக் கலவரங்கங்கள் யாவும் ஆட்சியதிகாரத்தையும்,பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைப்படுத்த முனையும் பார்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் சம்பந்தப்பட்டது.எனவே,சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியுள் நடந்தேறிய சாதிக்கலவரம் என்பது மிகவும் சதி நிரம்பிய அரசியலோடு சம்பந்தப்பட்டது.

 

தமிழகத்தைத் தொடர்ந்து சாதிய வேறுபாட்டால் பிரித்துத் தமிழர்களை ஒடுக்கி, அவர்களின் தேசத்தைத் தொடர்ந்து திருடும் பார்ப்பனியச் சதியின் இன்றைய தொடர் நிகழ்வுகள் யாவும் தமிழகத்து மக்களுக்குள் அரசியல் செய்ய முனையும் தமிழ்த் தேசியவுணர்வுடைய கட்சிகளால் மிகவும் கவனமாக ஆராயப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டி, இந்தக் கேடான சதிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.இதைக் கடந்தவொரு எந்தத் தேர்வும் தமிழ்மக்கள் மத்தியில் இருப்பதற்கான சாத்தியக்கூறை இந்தப் பார்ப்பனியச் சதிவிட்டுவைக்கவில்லை.

 

சமீபகாலமாக நடந்தேறும் தமிழகத்தின் சாதியக் கலவரங்களுக்கு எங்ஙனம் அரசியல் கட்சியாதிக்கத்தின் தொடர்புகள்-சூழ்ச்சிகள் இருக்கின்றதோ அதைவிட இந்தக் கலவரத்துக்கு(அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக்கலவரம்) இந்திய மத்திய அரசியல் கட்சிகளின்வரையான சதி அரசியல் சூழ்ச்சிகள் பிற்காரணமாக-உந்துதலாக இருக்கிறது.இது,தமிழக மக்களின் சகோதரங்கள் ஈழத்தில் பலியெடுக்கப்படும் இந்திய மத்திய அரசின் சூழ்சிக்கு மிக அண்மையாக இருக்கிறது.இதைக் கவனப்படுத்துவதுதாம் இக் கட்டுரையின் மிக முக்கியமானசாரம்.

 

நாம்,ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிறவேற்றுமை மற்றும் அந்நிய எதிர்ப்பையிட்டு மிகவும் வேதனையோடு இந்த மக்கள் சமுதாயத்தைக் குறித்துக் காறி உமிழ்கிறோம்.அன்றாடம் இந்தக் கேடுகெட்ட இனவாத அரசியலை எதிர்த்துக் கருத்தாடுகிறோம்.ஆனால்,நமது தேசத்தில் ஒரே மொழியைப்பேசுபவர்கள் பார்ப்பனியச் சாதிய அதர்மத்துக்குப் பலியாவதையும்,தமது தேசத்தைத் தமது குருதியால் சிவக்க வைப்பதையும் தடுத்து நிறுத்தும் அரசியலை முன்வைக்க முடியாது திண்டாடுகிறோம்.

 

எம்மை வேட்டையாடும் இந்தப் பாசிசப் பார்ப்பனியத்தை எங்ஙனம் வீழ்த்துவதென்ற வியூகம் குறித்த அரசியலைப் புரட்சிகரச் சக்திகள்மட்டுமே தீர்மானிக்க முடியும்.இதைக் கருணாநிதி தலைமையிலான-பாணியிலான எந்த ஓட்டுக்கட்சியும் செய்துமுடிக்கும் தகமையற்றுக் கிடக்கின்றன.இத்தகையவொரு சூழலை விரும்பும் பார்பனியச் சதி அரசியல், புரட்சிகரச் சக்திகளைக் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளெனும் போர்வையில் பொலிஸ் நாய்கள் மூலம் என்கவுன்டர் செய்து கொன்றழித்ததையும் தமிழக மக்களும்,புரட்சிகரச் சக்திகளும் மறக்க முடியாது.இதன் தொடர்ச்சியாக இன்று களமிறங்கியுள்ள பார்ப்பனிய அரசியல் தனது வர்க்க-சாதிய நலனுக்காகத் தமிழகத்தை மீளவும் சாதியக் குழறுபடிகளுக்குள் தள்ளி, அந்த மக்களின் தேசிய-மற்றும் தமிழ்த் தன்னடையாளங்களுக்கெதிரானவொரு பாதையில் அவர்களை வீழ்த்தித் தமிழ் தேசியவுணர்வுக்கெதிரான ஆட்சியை மெல்லத் தகவமைக்கும் தந்திரத்தோடு அடுத்த நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தயாராகிறது.இதற்குத் தக்க பதிலடியைப் புரட்சிகர அமைப்புகள் செய்தாகவேண்டும்.

 

சாதிய வெறிக்குள் தலையைப் புகுத்தித் தனது சொந்தச் சகோதரர்களைப் பலியெடுப்பதைத் தமிழ்பேசும் எவரும் அனுமதிக்க முடியாது!இது,முழுமொத்த மனிகுலத்துக்கே எதிரானது.இதைச் சாத்திர சம்பிரதாயத்தோடு கண்ணியமான கலவரமாகக் கோவில்களில்,சமூகமட்டத்தில் சாதியத்தைக் கௌரவமாகப் பார்ப்பனர்கள் செய்வதும்,அதையே கலவரமாக்கித் தமிழர்களை அழிப்பதும் இனியும் பொறுக்கத் தக்க செயலல்ல.இத்தகைய கலவரத்துக்குப் பின்னே மொத்த இந்தியப் பாப்பன-பனியா ஆளும் வர்க்கமுமே உடந்தையாக இருக்கிறது.இவர்கள்,தமிழக மக்களின் இன்றைய தமிழுணுர்வு எழிச்சிகளை விரும்பவில்லை.அதன் பயனாக இன்னுஞ் செய்யப்போவது பல.இதன் வெள்ளோட்டமே சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2008.