Sat02292020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

  • PDF

ஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.

 

image

 

சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர். பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?

 

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.

 

அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.

 

இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன? பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில்  அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா? அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?

 

அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார். இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த  நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

 

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது? இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.

 

வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள்,  கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?

 

உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை,  நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை. ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!

 

உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய  பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர். இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல. உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.

 

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

http://vinavu.wordpress.com/2008/11/14/tmstar5/

Last Updated on Friday, 14 November 2008 16:07