தேசியத்தை எப்போதோ அழித்துவிட்ட புலிகள் இன்று செய்வது என்ன? தமது சொந்த இனத்தை அழிக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கமே அதை செய்து முடிக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான எனது தனிப்பட்ட முடிவல்ல. நடந்து கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்ட, ஒரு எதார்த்தமான சமூக உண்மை இது.
புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.
புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று கும்மாளமடிக்கின்றது. புலிகளின் பின் இருந்த சில அரசியல் இலட்சியங்கள் எல்லாம் கண்காணாது தொலைந்து போகின்றது. புலித் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள், ஏன் புலித் தலைவர்களின் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர், மேற்கு பல்கலைக்கழகங்களில் வசதிவாய்ப்புடன் கல்விகற்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் அதையொத்த குழந்தைகள் இளைஞர்கள் தமது கல்வியை இழந்து, துப்பாக்கியை ஏந்தி தலைவர்களை பாதுகாக்க மணிக்கணக்காக தூங்கிவழிகின்றனர்.
நம்பிக்கை, விசுவாசம், இலட்சியம், தியாகம் என்ற நம்புகின்றவர்களின் நிலை இதுவென்றால், அவர்களை தலைமை தாங்குவோர் குழந்தைகள் மேற்கில் பல கோடி ரூபா செலவினான ஆடம்பரக் கல்வி. எமது இனத்தின் சமூக பொருளாதாரத்துக்கே உதவாத, அதை அழிக்கின்ற சமூக விரோதக் கல்வியை கற்கின்றனர். யாருடைய பணத்தில்! இது எப்படித்தான் சாத்தியமானது. ஒரு போராட்ட அமைப்பில் இது எப்படித் தான் புகுந்துகொண்டது. மக்களுடைய விடுதலைப் போராட்டம் என்று சொல்லி, அவர்களுக்கே இது வேட்டு வைக்கின்றது. போராட்டம் மக்களின் உயிரை மட்டும் கொல்லவில்லை, அவர்களின் உழைப்பை, அவர்களின் பொருளாதார கட்டுமானத்தையே, சமூக அமைப்பையே கொன்று ஒழிக்கின்றது.
இதற்கு தலைமை தாங்கும் தலைவர்களோ தம்மைச் சுற்றி சொகுசான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொண்டு, அதி நவீன தொழில்நுட்ப மோகத்தில் அவற்றை எல்லாம் பொறிக்கிப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் வாழும் வாழ்வின் சகல அடிப்படையையும், சாதாரணமாக உழைக்கும் தமிழ் மக்களின் அன்றாட உழைப்பே வழங்குகின்றது. இதற்குத் தான் போராட்டம் என்கின்றனர். இது எமது சொந்த மண்ணில் இருந்து புலம்பெயர் மண் வரையிலான புலிகளின் வாழ்க்கை முறைமை, நவீனமான ஆடம்பரத்தாலானது. அரசியல் பொறுக்கித் தனத்தின் உச்சம் இது. இந்த வாழ்க்கைக்கு பணம் பெறுவதே போராட்டமாக காட்டுகின்ற நிலைமையில், சமூகமே இதற்கு இசைவாக மாற்றப்படுகினறது. ஏமாற்றியும், மோசடி செய்தும், மிரட்டியும், ஏன் கப்பமாக கூட, பற்பல வழிகளில் பணம் திரட்டும் முறை, தொழில்முறை மாபியாத்தனத்தையே தேசியவிடுதலைப் போராட்டமாக மாற்றிவிட்டனர். மக்கள் பற்றி துளியளவு கூட ஈவிரக்கமற்ற உணர்வுகள். இதன் பின் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் உணர்வுபூர்வமாக பங்காற்றுவார்கள் என்று நாம் எண்ணியே பார்க்கமுடியாது.
மக்கள் என்று அவர்கள் கூறுவது எல்லாம் தமிழ் மக்கள் பற்றி அக்கறையற்றதும், அவர்களின் குழந்தைகளை திருடி தமது கொலைகாரப் படைப்பிரிவுக்கு ஆள் திரட்டவும், தமது சொகுசுக்கு மக்களிடம் பணம் திரட்டுகின்ற இந்த எல்லைக்குள் தான் மோசடி செய்கின்றனர். தமிழ் மக்கள் என்ற வரையறை இதற்குள் சுருங்கிவிட்டது. இதற்கு வெளியில் தமிழ் மக்கள் பற்றி புலிக்கும் சரி, அதை சொல்லி வாழும் பொறுக்கிகளும் சரி, எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. தட்டிப்பறித்து கொள்ளையிட்டு வாழும் லும்பன்களின் வாழ்வுக்கான வாய்ப்பையும் வசதியையும் அரசியலாக்குகின்ற எல்லைக்குள், தமிழ் மக்கள் என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகின்றது. இதன் மொத்த விளைவு தமிழ் மக்கள் உழைப்பு புடுங்கப்பட்டு, அவர்களின் குழந்தைகள் சூறையாடப்படுகின்றன. தமது சொந்தக் குழந்தைகளை மீட்கும் பாதுகாக்கும் போராட்டமாக மாறி, ஒவ்வொரு தமிழ் தாயும் தமது வயிற்றில் அடித்து குமுறி வாழும், அவலம் கொண்ட சமூகமாகவே மாறிவிட்டது. இதை சொல்லியே அழமுடியாத நிலையில் தாய்மை மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. ஒரு இனத்தின் சொந்த அழிவு நோக்கி செல்லும் பாதையில், பேரினவாதத்தின் சூழ்ச்சிகளுடன் புலிகள் கைகோர்த்து நிற்கின்றனர். இதன் முடிவு என்ன? பேரினவாதி தமிழ் இனத்தை அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதே, இவர்களுக்கு இடையில் எழுதப்படாத ஒரு இனவாத ஒப்பந்தமாகும்.
கொலை கொலை எங்கும் எதிலும் கொலை
மூச்சு விட்டாலும் கொலை. ஜயோ கொலை. கொலைகள் எங்கும் எதிலும் தொடருகின்றது. தொடர் கொலைகள் அன்றாடச் செய்தியாகின்றது. யார் ஏன், எதற்கு கொல்லப்படுகின்றனர் என்பது கூட தெரியாத அளவுக்கு கொலை. வெட்டிக் கொலை, குத்திக் கொலை, சுட்டுக் கொலை, என்று கொலைகள் நவீன பாணியில் விதவிதமாக வக்கிரமடைகின்றன. ஒட்டுப்படை, மக்கள் படை என்று குஞ்சரம் கட்டி, கொலைகார கும்பலுக்கு பல வண்ண வேஷங்கள் கட்டியே, ஈவிரக்கமற்ற மனித வெளியாட்டங்கள் நடத்தப்படுகின்றது. இவை எல்லாம் இனம் தெரியாத மர்மக் கொலைகள். அரசும் புலியும் கூட்டடாகவே பரஸ்பரம் குற்றம்சாட்டியபடி, எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த ஒரு தொடர்பு கிடையாது என்று கூறுகின்றனர். எங்களிடம் மட்டும் தான் துப்பாக்கிகள் உண்டு, ஆனால் நாங்கள் கொலைகள் செய்வதில்லை என்கின்றனர். இந்த பொய்யர்களை நம்பி, மக்கள் வாய்பொத்தி மூச்சுக்காட்டாது வாழவேண்டும் என்று கூட கூறுகின்றனர். இதைத்தான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்கின்றனர். இதை மீறினால் தண்டனை உண்டு, ஆனாலும் அதையும் நாங்கள் செய்யவில்லை என்போம். அதையும் நீங்கள் நம்ப வேண்டும். நம்ப மறுத்தால் விளைவு உண்டு என்பர்.
ஒருபுறம் புலிகள் என்றால் மறுபுறம் அரசு. இரண்டு மக்கள் விரோத பாசிட்டுகளும் தாம் அல்ல என்று கூறியபடி, கொலைகளை தமது சொந்த அரசியலாக மாபியாத் தொழிலாகவே நடத்துகின்றனர். அமைதி சமாதானம் என்று பெயரளவுக்கு பெயர் பலகையை தமக்கு மேலே தொங்கவிட்டபடி, இரகசியமான ஒரு யுத்தத்தையே அதைக் கொலைகளாகவே தமிழ் மக்கள் மேல் நடத்துகின்றனர். இருவரும் தமிழ் இனத்தை அழிப்பதில் இடைவிடாது போட்டிபோடுகின்றனர். தாமே தேர்ந்து கையெழுத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தங்களையெல்லாம் தாமே மறுதலித்தபடி, மக்கள் வாழ்வின் எல்லா சமூகக் கூறுகளையும் நஞ்சிடுகின்றர். தமிழ் மக்களுக்கு தேசிய பிரச்சனைகள் உண்டு என்று ஏற்றுக் கொண்ட இரண்டு பகுதியும், இதைப்பற்றி துளியளவுகூட அக்கறைப்படுவதில்லை. அவர்கள் பேச இருந்தாலும் சரி, கொலைகளை செய்தாலும் சரி, சண்டையைப் பிடித்தாலும் சரி தேசிய பிரச்சனைக்குள் அவர்கள் எந்த அக்கறையையும் காட்டுவதில்லை.
புலிகளை எடுத்தால் தனது சொந்த குறுகிய குழுநலன் என்ற எல்லைக்குள், அவர்களின் சொந்த வாழ்வின் நலன்கள் என்ற குறுகிய வட்டத்திலேயே அனைத்தையும் குறுக்கிவிடுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்வை அழித்து, தமது சொகுசுக்கு ஏற்ப எதிரியை வரையறுக்கின்றனர். தம்முடன் முரண்பட்டவர்கள், மாற்றுக் கருத்து கொண்டவர்கள், பணம் தர மறுப்பவர்கள், தம்மை விமர்சிப்பவர்கள், அதிருப்தியை வெளிப்படுத்துபவர்கள் என அனைவரையும் அவர்கள், அவர்கள் மொழியிலேயே போட்டுத் தள்ளுகின்றனர். போட்டுத் தள்ளுதல் மூலம் கொலைகள் பெருக்கெடுக்கின்றது. நாளாந்தம் எதிரிகளை பெருக்கி, போட்டுத்தள்ளும் பட்டியலையே பெரிதாக்கி வருகின்றனர். மக்களுக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடுகள் அன்றாடம் விரிவாகி அகன்று வருகின்றது. இனம்புரியாத அமைதி மட்டும்தான் புலிகளின் இருப்பை தக்கவைக்கின்றது.
மறுபுறம் அமைதி சமாதானம் என்ற பெயரில் இலங்கை அரசு மிக நிதானமாகவே, புலிகளின் தமிழின அழிப்பை அங்கீகரித்தது. புலிகளின் கப்;பங்களை ஆதரித்து அதைக் கடைப்பிடித்ததன் மூலம், புலிகளையே தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தையை கொண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் உத்தியை பேரினவாதம் கையாண்டது. புலிகளை எங்கும் எதிலும் அம்பலப்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றது. புலிகள் நடந்து செல்லும் அனைத்துப் பாதையிலும், அவர்களின் சொந்த காட்டுமிராண்டித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களையே மூக்கறவைத்தனர்.
புலிகளின் சுயநல அரசியலுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை உள்ளடகத்தை அரசு பாதுகாப்பதில் கவனமாகவும் நுட்பமாகவும் செயற்பட்டது. இழுபறியான பேரங்கள், புலிகளின் சுயநல எல்லைக்குள் கூனிக்குறுகி நகர்ந்தது. புலியை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தி ஒரு நிலையில், தொடர்ந்து இந்த சலுகையை அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில், இராணுவம் மீதான இரகசிய தாக்குதலை புலிகள் தொடர்ந்து நடத்துகின்ற ஒரு நிலையில், இராணுவமும் பதிலடியாக புலிகளின் பாணியில் கொலைகளை திடட்மிட்டு நடத்துகின்றது. நன்றாக இனம் காணப்பட்டவர்களை தேடி அழித்தல் என்ற யுத்தி மூலம், புலிகளின் ஆதரவு தளங்கள் படுகொலைகள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றது. புலிகள் கொலைகளை தொடர்ந்து செய்து வந்த நிலையில், கொலைகளை இனம் காணமுடியாத வகையில் அதே பாணியில் இராணுவமும் செய்துவிடுகின்றது. யார் எதை செய்தனர் என்பது தெரியாத வகையில், இனம் தெரியாத கொலைகளாகின்றது. ஒரு கொலைக்களம் உருவாக்கப்பட்டு, மனித பிணங்கள் வீதிகள் தோறும் வீசப்படுகின்றது.
புலிகள் தொடங்கி வைக்கும் ஒவ்வொரு வகையான யுத்த நிறுத்த மீறலைத் தொடர்ந்தும், அரசும் அதே பாணியில் செய்துவிட்டுப் புலிகளைப் போல் பதிலளிக்கின்றனர். புலிகளின் எல்லாவகையான சாமபேதமற்ற உத்தியையும், இராணுவமும் கற்று அதையே எதிர்மறையில் கையாளுகின்றது.
இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை உண்டா?
இந்த நிலையில் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை புலிகள் மறந்து விட்டார்கள், அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புலிப்பிரச்சனையாக உலகுக்கு இதைக் காட்டத் தொடங்கிவிட்டது. இதை ஒரு பயங்கரவாத குழுவின் தனிப்பட்ட பிரச்சனையாக, புலிகளைக் கொண்டே அரசு வெற்றிகரமாக நிறுவிவருகின்றனர். அரசின் அறிக்கைகள் முடிவுகள் வரமுன்னமே, ஏகாதிபத்தியங்களின் அறிக்கைகள் புலிக்கு எதிராக வெளிவருகின்றன.
இந்த நிலமையை உருவாக்கிய அரசியல் அடிப்படை என்பது, கடந்த 4 வருடங்களாக நிலவும் அமைதி ஒப்பந்தம் இனப்பிரச்சனையைப் பற்றி பேசமுனையாமையால் ஏற்பட்டது. மாறாக புலிகள் என்ற குறுங்குழுவின் சொந்த நலன்கள் என்ற குறுகிய அரசியல் வட்டத்தில், இழுபறியான பேரங்களையே வலிந்து புலிகள் நடத்தினர். புலிகளுக்கு பண வரவை நல்கக் கூடியதும், புலிகள் தாம் எதிரிகளாக கருதக் கூடியவர்களை கொல்லக் கூடிய, ஒரு இயல்பான அமைதியான சூழலை உருவாக்கவே புலிகள் பேச்சுவார்த்தையில் போராடினர். இந்த எல்லைக்குள் தான் புலிகள் சுற்றிச் சுற்றி பேச்சு வார்த்தையை நடத்தினர். இதற்கு வெளியில் தமிழ் மக்கள் நலன்கள், அவர்களின் பிரச்சனைகள் என எதையும் அவர்கள் அரசியல் ரீதியாக பேசியதில்லை, கோரியதில்லை.
உண்மையில் இதை பயன்படுத்தி அரசு என்ன செய்ய முனைந்தது. தனக்கு மேல் தாக்குதலை நடத்தாதவகையில், தமிழர்களை தமிழர்களே கொன்று குவிக்கும் வகையில் புலிகளுக்கு இணங்கிச் சென்றனர். புலிகளின் குறுகிய நலன்களுக்கு இணங்கிப் போவதன் மூலம், சலுகைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சனையை கிடப்பில் போடவைத்தனர். தமிழ் மக்களுக்கு ஒரு அடிப்படையான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது அவசியம் என்ற எந்த நெருக்கடியுமின்றி, புலிகளின் குறுந்தேசியத்துக்கு முன்னால் இலகுவாக இனவாத அரசியலை வெற்றிகரமாக்கி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். புலிகள் என்ற குழு அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதக் சதிக்குழு தான் என்பதை, அவர்கள் வெற்றிகரமாக சர்வதேசமாக்கியுள்ளனர். உலகமே இந்த முடிவுக்குள் தாமாகவே முடிவு எடுக்க வைத்துள்ளனர்.
புலிகளின் மேல் மிகக் கடுமையான அரசியல் நெருக்கடிக்குள் இது இயல்பாகவே இட்டுச் சென்று விடுகின்றது. இராணுவ வாதங்களி;லும், கொலைக்கலாச்சாரத்தாலும், வன்முறையாலும் புலிகள் சாதிக்க நினைத்ததெல்லாம் சொந்த நலன்கள் தான். இது தான் புலியின் அரசியல் என்பதை, பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியிலும் உலகளாவிலும் வெற்றிகரமாக அம்பலப்படுத்தி புலியை தனிமைப்படுத்தியுள்ளனர்.
புலிகள் யுத்த நிறுத்தத்தில் இருந்து வலிந்து விலக, வலிந்து திணிக்கும் தொடர் வன்முறைகள் சர்வதேச ரீதியாக புலிகள் மீதான பாரிய தடைகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கி வருகின்றது. அமெரிக்காவில் இருந்து ஜரோப்பா வரை புலிகள் தடை செய்யப்படுகின்ற ஒரு சர்வதேச நிலைமை உருவாகிவிட்டது. புலிகளை ஒரு மரணப் பொறியில் சிக்க வைக்கின்ற அரசியல் நகர்வை, புலிகளின் சொந்த நடத்தையைக் கொண்டே புலிகள் தாமே முடுக்கிவிட்டுள்ளனர். அதேநேரம் தனது கோட்பாட்டையே கொண்ட பலமான வலதுசாரி எதிரியைக் கூட, புலிகள் சர்வதேச ரீதியாக வலிந்து உற்பத்தி செய்துள்ளனர். சர்வதேச நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுள்ள இந்த வலதுசாரிய புலியெதிர்ப்புக்கும்பல், எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக விளங்குவர். மக்களின் எதிரிகளே எங்கும் எதிலும் பலம் பெற்றுவருகின்றனர்.
அரசியல் மீட்சியற்ற புதைகுழியில் இது போய் முடிந்துள்ளது. தமிழ்பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை பேசுவதற்கு பதில், சொந்த நலன்களை பற்றி மட்டும் பேசியதன் மொத்த விளைவு இது. இது முட்டுச் சந்தியில் இன்று தலைகீழாகவே தொங்குகின்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை பற்றி, பத்தாண்டுக்கு யாரும் இனிப் பேசப் போவதில்லை. அழிவின் விளிம்பில் தமிழ் இனம் தனது சொந்த இன அடையாளத்தை அன்றாடம் இழக்கின்றது. தமிழ் இனத்தின் அரைப்பகுதி நாட்டை விட்டே நிரந்தரமாக வெளியேறிவிட்டது. மிகுதியில் அரைப்பகுதி சிங்கள பகுதியில் நிரந்தரமாக குடியேறி, தனது சொந்த இன அடையாளத்தையே இழந்து இழிந்து வருகின்றது. மிகுதி மக்கள் பிரதேசவாதத்தாலும், சமூக பிளவுகளாலும் கூனிக்கூறுகி முரண்பட்டபடி முரண்பாட்டுடன் ஏனோ தானோ என்று வாழ்கின்றனர். இவர்களின் பொது வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ள ஒரு நிலையில், கொலைக்கலாச்சாரத்தாலும் சின்னாபின்னமாகி அழிவதுடன், அந்த மண்ணைவிட்டே ஒடமுனைகின்றனர். சிறுபான்மை தேசிய இனமான முஸ்லீம் மக்களை, எதிரி முகாமில் வலிந்து தள்ளிவிட்ட பெருமை தமிழராகிய எமக்கே பெருமை சேர்க்கும். மீண்டும் ஒரு இனவாத யுத்தம், எஞ்சிய எச்சசொச்சத்தையும் துடைத்தெறியும். ஒரு இனம் வாழ்ந்த அடையாளமே இல்லாமல் போய்விடுகின்றது. கொலைகாரர்களை மட்டும் தாங்கி பாதுகாப்பாக வாழும் ஒரு மயான பூமியாகவும், அடிமைகளைக் கொண்ட ஒரு துர்ப்பாக்கியமான ஒரு வலுவிழந்த சமூகம் மட்டுமே தமிழ் இனமாக எஞ்சி வாழ்கின்ற ஒரு துயரமே நடந்த வண்ணம் உள்ளது.
மீட்சியற்ற வழியில் புலிகள் உறுமுகின்றனர்.
புத்திசாலித்தனத்தால், நேர்மையால், உண்மையால், மக்களை சார்ந்து நிற்பதால் மக்களின் எதிரியை இலகுவாக வெல்லமுடியும். அதாவது மக்கள் தாம் தமது சொந்தப் போராட்டத்தில் வெல்வார்கள். ஆனால் நடப்பது என்ன? மக்களை நாயிலும் கீழாக அடிமையாக நடத்தி, நேர்மையற்ற சூழ்ச்சியால், பொய்களால், புத்திசாலித்தனமற்ற முட்டாள் தனத்தால், கொலைகள் மூலம் அரசியல் விபச்சாரம் செய்யும் போது, அதுவே தோல்வியில் முடிகின்றது. தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்தப் புதைகுழியில் நின்ற படி, புலிகள் உறுமுகின்றனர். அழகாக தம்மைத்தாம் அழகுபடுத்தியுள்ளதாக நம்பி அசிங்கப்படுத்திக் கொண்டு, தம்மைத் தாமே பொய்களாலும் புரட்டுகளாலும் புகழ்ந்து கொண்டு, அரசியல் கனவுகள் காண்கின்றது. உலகத்தின் பொதுத்தளத்தில் இருந்து தன்னை தாமே வலிந்து தனிமைப்படுத்திக் கொண்டு, மக்களை அவர்களின் முகத்திலேயே எட்டி உதைத்தபடி, தன்னைச் சுற்றி ஆழமான புதைகுழியை வெட்டியபடியே உறுமிக் காட்டுகின்றனர். அரசியல் மீட்சியற்ற பாதையில் தொடரவும், கொலை கொள்ளை என்ற அரசியல் பதாகையை தூக்கிக் கொண்டு ஊர்வலம் போகமுனைகின்றனர்.
இலங்கை அரசுடன் பேச வேண்டியது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்பதை மறந்தும், மறுத்தும் நிற்கின்ற வரை, தமிழ் மக்களின் வாழ்வுக்கான நரகம் தெளிவாக வழிகாட்டுகின்றது. காலம் கடக்க முன் தமது சொந்த புதைகுழிக்கு மாற்றான மக்கள் பாதையை செப்பனிடாத வரை, புலிகளின் அழிவு நெருங்கி வருகின்றது. இராணுவ நோக்கில் வென்றுவிட முடியும் என்ற குழந்தைத்தனமான அரசியல், தமிழ் மக்களுக்கு ஒரு தேசத்தின் அடிப்படைக் கூறுகளையே இல்லாது ஒழிப்பதையே துரிதமாக்குகின்றது. இராணுவம் என்பது கூட அரசியலானது என்பதை புரிந்து, அதை எதிர்கொள்ளும் ஆற்றல் வக்கற்றுப் போனால், முட்டாள்களின் முடிவுகளில் தமிழினமே அழிந்துபோவது வரலாற்றின் முடிவாகிவிடும். இன்று நடக்கும் தொடர் நிகழ்ச்சிகள், உண்மையில் தமிழ் இனம் சிதைந்து சின்னாபின்னமாகி வருவதையே உறுதிசெய்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் இராணுவ நோக்கில் எதைத்தான் வென்று விடப்போகின்றார்கள். மக்களுக்கு எதைத்தான் வென்று கொடுத்துவிடுவார்கள்.
தமிழ் மக்கள் நாட்டைவிட்டு ஒடுவதும் அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவதும், புலிக்கு எதிராக மக்கள் அன்றாடம் மாறுவது அல்லது எதிரியின் பக்கத்தில் சென்று விடுவது அன்றாட நிகழ்வாகவே உள்ளது. புலியின் அன்றாட நடத்தைகள், இதை அன்றாட நிகழ்ச்சி நிரலாகவே உற்பத்தி செய்கின்றது. புலிகளின் அன்றாட அரசியல், மக்களை எதிரியின் முகாமுக்கு வலிந்து தள்ளுவதுதான். இதில் இருந்து மீட்சியற்ற புதைகுழியில், மக்களை பலாத்காரமாக புதைப்பதுதான் நிகழ்கின்றது. தொடர்ந்து ஒரு குறுகிய குழுவாக தப்பிப் பிழைக்க வேறு வழியின்றி, கட்டாய ஆள் சேர்ப்புக்களை புலிகள் முடுக்கிவிட்டுள்ளனர். நிர்ப்பந்திக்கப்பட்ட குறுகிய ஒரு வட்டத்தில் மக்களை நிறுத்தி வைத்து, மக்களை கழுத்தை நெரித்தபடி தமக்கு விசுவாசமாகவே ஆடாமால் அசையாமல் இருக்க கோருகின்றனர்.
தொடரும் அமைதி சமாதானம் என்ற பதாகை மீதான அரசியல் நெருக்கடி
அறிவிக்கப்படாத ஒரு இரகசிய யுத்தம் தொடங்கியுள்ள ஒரு நிலையில், கொல்லுதல் என்பது அதன் கோசமாகின்றது. நீ ஊடுருவி தாக்கினால் நானும் தாக்க முடியும் என்பதை பேரினவாதிகளும் நிறுவி வருகின்றனர். நீ எம்மைக் கொன்றால், நான் உன்னைக் கொல்ல முடியும் என்பதை இலங்கையில் இரண்டு மக்கள் விரோத இராணுவம் தமது லலதுசாரிய எதிரெதிர் முகாமில் நின்றபடி நிறுவி வருகின்றனர்.
தடுத்து நிறுத்த முடியாத வகையில் கொலைகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. இதற்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நோக்கி நகரும் முயற்சிகள், விக்கிரமாதித்தனின் வேதாளம் கதைகள் நடக்கின்றன. ஆனால் யாரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி பேசப் போவதில்லை. கொல்லுதல் மீண்டும் கொல்லுதல், வரி மீண்டும் வரி இதை பற்றி மட்டுமே இவர்கள் பேசப்போகின்றார்கள்.
இவர்கள் பேசினால் கொலைகள் பற்றி மட்டும் தான் பேசப் போகின்றார்கள். கொலை செய்வதற்கான இயல்பான சூழலைப்பற்றி மட்டும் தான் பேசப்போகின்றார்கள். ஆனால் இனிப் பேசினால், என்றுமில்லாத வகையில் முதன்முதலாக புலிகள் பேரினவாதிகளிடம் இருந்து கடுமையான பதிலளிக்க முடியாத ஒரு பேச்சுவார்த்தையை சந்திப்பார்கள். பேரினவாதம் புலிகளின் அரசியல் நரித்தனத்தை, அவர்களின் சொந்த மொழியில் கற்கின்றது. அதே பாணியில் செயற்பட்டு அடிபணிய வைக்கின்றது. நீ ஒரு இரகசிய யுத்தம் என்றால், நானும் தான் என்கின்றது. நீ கொலை என்றால் நானும் கொலை தான் என்கின்றது. இதேபோல் பேச்சுவார்த்தை மேசையில் முதன்முதலாக கொலைகள் பற்றி விவாதம் நடக்கும். பேரினவாதம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அடிப்படையான தரவுகளுடன், முன்வைக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இது புலிக்கு எதிராக மாறுவது தவிர்க்கமுடியாது. ஏனெனின் அன்றாடம் கொலைகள் மூலம், மனித உரிமை மீறல்கள் மூலம் உயிர்வாழ்பவர்கள் புலிகள். தமக்கு எதிரான ஆதாரங்களை புலிகளே அன்றாடம் உற்பத்தி செய்பவர்கள். இதன் மூலம் சர்வதேச ரீதியாக புலிகளை மேலும் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தவும், புலிகள் மீதான சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்வதை துரிதப்படுத்தும். பேரினவாதிகள் புலிகளுடன் எழுந்தமானமாக பேசிவந்த நிலைமை முடிவுக்கு வந்துள்ளது. மாறாக கடுமையான முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை எதிர்கொள்வர். இதை புலிகளே அரசின் மீது வலிந்து திணித்துவிட்டனர். இங்கும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் அரசு பேசும், ஆனால் புலிகள் மீளமுடியாத அரசியல் சகதிக்குள் புதைவார்கள். புலிகள் பேச முனைகின்ற விடையத்தில், புலிகளே பாரிய மக்கள் விரோத குற்றங்களை இழைத்துள்ளனர். இது அவர்களின் சொந்தப் புதைகுழியை அவர்களே தோண்டுவதற்கு இட்டுச் செல்லும்.
பேரினவாதிகளை எதிர் கொள்வது எப்படி?
பேச்சுவார்த்தை மேசையில் பேரினவாதிகளை தனிமைப்படுத்துவ எப்படி? தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து பேசுவதால் மட்டும்தான் அது முடியும். அரசியல் தீர்வை நோக்கி பேச முனைவதன் மூலம், பேரினவாதிகளை தனிமைப்படுத்தி, உலகுக்கே அதை அம்பலப்படுத்த முடியும். பேரினவாதமே இதற்குள் தான் அடங்கியிருக்கின்றதே ஒழிய, இதற்கு வெளியில் அல்ல. புலிகள் வலிந்து பேசுகின்ற எந்த விடையத்திலும், பேரினவாதத்தின் அடிக்கட்டுமானம் இருப்பதில்லை. பேரினவாதிகளை எதிர்கொண்டு அவர்களை அம்பலப்படுத்த வேண்டுமெனின், அரசியல் தீர்வு மீதே பேசவேண்டும்.
அரசிடம் கோர வேண்டியது என்ன? தமிழ் மக்களுக்கு அரசு வைக்கும் தீர்வுத்திட்டம் என்ன என்பதை முன்கூட்டியே முன்வைக்க கோருவது தான். இதை பேச்சுவார்த்தை மேசையில் அல்ல, மக்களுக்கு பகிரங்கமாக முன்வைக்கும்படி கோரவேண்டும். அதைத் தான், பின்னால் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து பேசவேண்டும். பேசியதை மக்கள் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். இதைச் செய்யாத வரை பேரினவாதம், தனது சொந்த பேரினவாத மூகமுடியை கழற்றி எறியாது. மாறாக புலிகளை தனிமைப்படுத்தி, தமிழ் மக்களின் உரிமைக் கோரிகையையே இல்லாதாக்கிவிடும்.
புலிகள் கண்ணை மூடிக் கொண்டே பால் குடிக்கமுனைகின்றனர்.
எதுவும் அறியாது போல் நடித்தபடி, சுற்றிச்சுற்றி புலிகள் செய்வது முட்டாள்தனமாக தமக்குத் தாமே புதைகுழியை வெட்டுவது தான். அன்றாடம் கொலைகள் செய்ய 'துரோகி" ஒழிப்பு செய்வதாக கூறிக் கொண்டு, புதிதாக அன்றாடம் பலமடங்கு 'துரோகிகளை" உற்பத்தி செய்கின்றனர். கொலை செய்வது, செய்வதை காட்டுவது, அதை நியாயப்படுத்துவதே புலியின் அன்றாட அரசியலாகிவிட்டது. இதற்காகவே கொலை செய்ய வேண்டியதாகின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி அவர்கள் பேரினவாதிகளுடனும் பேசுவதில்லை, ஏன், அவர்கள் அதைப்பற்றி தமக்குள் கூட பேசுவதில்லை. இதன் விளைவு தமிழ்மக்களுக்கு என்ன பிரச்சனை என்பது புலிக்கும் தெரியாது போய்விட்டது, ஏன் சமூகத்திடமே அதற்கான அடிப்படை இல்லாது போய்விட்டது. மாறாக புலிக் கும்பலின் பிரச்சனையே தமிழ் மக்கள் பிரச்சனையாக காண்பது, கூறுவது, நம்புவது என்று ஒரு குறுகிய வட்டத்தில் அனைத்தும் மூழ்கடிக்கப்படுகின்றது. சுற்றிச்சுற்றி இதற்குள் தான் சேடமிழுக்கின்றது.
பேரினவாதிகளை பார்த்து உறுமுவதன் மூலம், அவர்களை கொன்று காட்டுவதன் மூலம், எதையும் சாதிக்கமுடியும் என்ற இராணுவ அரசியல் முடிவை நோக்கி நகருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி சூனியமாகி, ஒரு இனத்தின் அழிவு நிரந்தரமானதாகவே மாறிவிட்டது. தமிழினத்தின் அடிப்படையை பேரினவாதம் அழித்து சின்னாபின்னப்படுத்தியதை விட, தமிழ் மக்களாகிய நாமே அதை செய்து முடிப்பதற்கு ஏற்ற ஒரு அரசியல் தலைமையே கொண்டுள்ளோம் என்ற வரலாற்று உண்மையை மெய்ப்பிப்பதே நடந்தவண்ணம் உள்ளது.
பி.இரயாகரன்
27.04.2006