பாலஸ்தீன பிரச்சினை பற்றி அண்மைக்காலமாக ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லை. செய்தியே இல்லையென்றால், எப்போதும் அது நல்ல செய்தி தானென்று அர்த்தமாகி விடாது. இஸ்ரேலில் தற்கொலைக் குண்டு வெடித்து சில மனித உயிர்கள் (அல்லது பெறுமதி மிக்க இஸ்ரேலிய உயிர்கள்) பலியானால் மட்டுமே, எமது ஊடகங்கள் இரத்தம் கண்டு சிலிர்த்தெழுந்து "அங்கே பார் பயங்கரவாதம்!" என்று அலறுவது வழமை.

 

பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களை கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்களின் கண்ணையும், கையையும் கட்டிவிட்டு, ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்தல், பாலஸ்தீன குடியிருப்புகள் மீது கல்லெறியும் அல்லது தொழிலாளிகளை ஒலிவ் தோட்டங்களுக்கு போகவிட்டது தடுக்கும் யூத இன வெறியர்கள்... இவ்வாறு பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவ, யூத இனவெறியர்களின் தாக்குதல்கள் நாள்தோறும் நிகழும் தொடர்கதைகள்.

 இவையெல்லாம் செய்திகளாக வெளியுலகை எட்டாதது மட்டுமல்ல, அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் கூட வெற்றிபெறுவதில்லை. பாலஸ்தீனியரை அத்துமீறி கைது செய்து மனித உரிமை மீறும் இஸ்ரேலிய படையினரை நீதிமன்றத்திற்கு அழைத்தால், "ஆதாரம் வைத்திருக்கிறாயா, கண்ணா?" என்று கேட்டு, தமிழ் சினிமா வில்லன் போல தண்டனையில் இருந்து தப்பிவிடுவார்கள்.

 

தமக்குத் தெரிந்த வன்முறைப்போராட்டம் எல்லாம் நடத்தி களைத்துப்போன பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் தற்போது புதுவகை ஆயுதம் ஒன்று முளைத்துள்ளது. அது தான் வீடியோ கமெரா! குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள் இந்த புதிய ஆயுதத்திற்கு அஞ்சுகின்றன. இஸ்ரேலியரின் மனித உரிமை மீறல்களை ஒளிப்பதிவு செய்து கொள்வதற்காக பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைகிறார்கள். இஸ்ரேலில் சமாதானத்திற்காக பாடுபடும், நெதர்லாந்தை சேர்ந்த இடதுசாரி யூதர்களின் மனித உரிமை அமைப்பான "பெத் சலேம்" (B'T Selem) இந்த புதிய போராட்டத்தை நெறிப்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்திற்கு நெதர்லாந்து அரசாங்கமும் தாராளமான நிதியுதவி வழங்கி வருகின்றது. இதற்கென ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்கள் பாலஸ்தீன பகுதியெங்கும் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த படப்பிடிப்பு போராட்டம் காரணமாக, மனித உரிமை வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஒளிப்படத்தில் கையும்மெய்யுமாக பிடிபட்ட குற்றவாளிகள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதைவிட சில சலனப்படங்கள் ஐரோப்பிய தொலைக்காட்சிகளின் கவனத்தையும் பெற்றுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை பாலஸ்தீனிய இளைஞர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

 

கடந்த ஜுலை மாதம் 7 ம் திகதி, நிராயுதபாணியான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை கைது செய்த இஸ்ரேலிய படையினர், அவருடைய கைகளையும், கண்ணையும் கட்டி விட்டு, அருகாமையில் வைத்து ரப்பர் தோட்டாவால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் ஒன்றை, ஒரு சிறுமி தனது வீட்டில் இருந்த படியே வீடியோ கமெராவினால் பதிவு செய்தாள். நெதர்லாந்து தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்ட அந்த சலனப்படத்தை இங்கே பார்வையிடலாம்.

 

 Soldiers fires “rubber” bullet at handcuffed, blindfolded Palestinian, July 2008

 

 

நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு: PALESTIJNEN SCHIETEN TERUG MET VIDEOCAMERA'S

ஹெப்ரோன் நகரில், பாலஸ்தீனிய தொழிலாளரை தாக்கி, அவர்களது ஒலிவ் தோட்டங்களை அழித்து நாசப்படுத்தும் யூத இனவெறியர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இஸ்ரேலிய இராணுவம். இந்த ஒளிப்பதிவு இஸ்ரேலிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.