Language Selection

 ஆப்கானை ஆக்கிரமித்துப் பயங்கரவாத அட்டூழியங்களை நாளும் அரங்கேற்றி வரும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகள், இப்போது பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டனர்.


 கடந்த செப்டம்பர் 3ஆம் நாளன்று பாகிஸ்தானின் மேற்கே, ஆப்கானின் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் எனும் பழங்குடியின மாகாணத்திலுள்ள ஜலால்கேல் கிராமத்தில் அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டரில் வந்திறங்கின. ஹெலிகாப்டர்களின் பேரிரைச்சலால் அச்சத்தோடு கிராம மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். நிராயுதபாணிகளான அக்கிராம மக்கள் மீது அமெரிக்கப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. அதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம். அக்கிராம மக்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் எவ்விதச் சலனமுமின்றி பறந்து சென்றன.


 ஜலால்கேல் கிராமத்தில் நடந்ததைப் போலவே கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியில் அமெரிக்கப் படைகள் நான்குமுறை அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு  குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.


 ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் படைகள்தான் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள்  போர் விமானங்கள் மூலம் வந்திறங்கி தாக்குதலை நடத்தியுள்ளன. ஆப்கானை பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டுப் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அக்கூட்டுப் படைகளின் தலைமையகத்துக் கூடத் தெரியாமல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளன. ஆப்கானைப் போலின்றி, பாகிஸ்தான் ஒரு சுயாதிபத்திய நாடு என்பதைக் கூட அமெரிக்க பயங்கரவாதிகள் ஏற்கவில்லை. ""அந்நாடு தனது சுயாதிபத்திய உரிமையைக் கட்டிக் காக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே அந்நாட்டின் சார்பில் நாங்கள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுத்துள்ளோம்'' என்று திமிராகக் கொக்கரிக்கிறார், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைத் தளபதி.


 வஜீரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய படுகொலைகளுக்கு எதிராக பாக். மக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கியதும், பாக். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவசரமாகக் கூடின. அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதலையும் மிருகத்தனமான படுகொலைகளையும் கண்டித்ததோடு, பாக். படைகளை முழு அளவில் குவித்து எல்லைப்புற பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை முற்றாக வெளியேற்றி ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றின. பாக். அதிபர் சர்தாரியும், ""இது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்; பாக். எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் செயலை ஏற்க முடியாது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதியில் அமெரிக்கா அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன? ""இப்பகுதியில் தாலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள். இப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் மிகவும் வறிய நிலையில் உள்ளனர். இதைச் சாகதமாக்கிக் கொண்டு தாலிபான்கள் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களை நிறுவிச் சிறுவர்களுக்கு உணவும் கல்வியும் அளித்து, தமது நோக்கங்களுக்கு ஏற்பப் பயிற்றுவித்து வளர்க்கிறார்கள். இச்சிறுவர்கள், இளைஞர்களாக வளரும்போது தாலிபான் பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள். இப்பகுதியில் கஞ்சா செடி வளர்த்து, போதை மருந்து வியாபாரம் மூலம் கோடிகோடியாய் குடித்து, அதிநவீன ஆயுதங்களை கள்ளச் சந்தையில் வாங்கி, பயங்கரவாதக் குழுக்களைக் கட்டியமைத்து தாலிபான்கள் தாக்குதல் தொடுக்கின்றனர். இப்பகுதிவாழ் பழங்குடியின மக்கள் தாலிபான்களை ஆதரிப்பதால், இப்பகுதி தாலிபான்களின் பாசறையாகி விட்டது. பயங்கரவாத தாலிபான்களை இப்பகுதியிலிருந்து வெளியேற்றி அழித்தொழிக்கவே அவசியத்தையொட்டி இத்தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று நியாயவாதம் பேசுகிறது அமெரிக்கா.


 இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றாலும், இது பற்றி முடிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பாகிஸ்தான் அரசுதானே தவிர, அமெரிக்க பயங்கரவாதிகள் அல்ல. ஆப்கானின் பொம்மை அரசோ, அல்லது பாக். அரசோ இப்படியொரு காரணத்தை வைத்து அமெரிக்காவிடம் உதவி கோரவுமில்லை. இராணுவ சர்வாதிகாரி முஷாரஃப்பின் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, பாகிஸ்தானில் அரசியல் குழப்பங்களும் நாய்ச்சண்டைகளும் நீடித்து வருவதாலும், அந்நாட்டு அரசும் அரசாங்கமும் பலவீனமான நிலையில் இருப்பதாலும் அமெரிக்கா பேட்டை ரௌடி போலக் கொட்டமடிக்கிறது.


 அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு எதிராக உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியதும், தற்காலிகமாக பாக். எல்லைப் பகுதியில் தனது தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எனினும், தாலிபான்கள் மீது பாக். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி பாக். இராணுவத்தை ஏவித் தாக்குதலைத் தொடர்கிறது, அமெரிக்கா. தாலிபான் பயங்கரவாதிகளை வெளியேற்றுவது என்ற பெயரில் பாக். இராணுவம் இப்பகுதியில் நடத்திவரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.


 இவையெல்லாம் ஏதோ அண்டை நாட்டின் உள் விவகாரங்கள் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முகமூடியுடன் அமெரிக்கப் பயங்கரவாதிகள் எந்த நாட்டிலும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தலாம். இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் இந்தியாவிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா முத்திரை குத்தியுள்ளதால், நாளை ஈழத்தையும் அமெரிக்க பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்கலாம். தெற்காசிய வட்டகையில் தனது இராணுவப் போர்த்தந்திர நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள, இவ்வட்டகையிலுள்ள நாடுகளின் சுயாதிபத்திய உரிமைகளை நசுக்கி, அமெரிக்க பயங்கரவாதிகள் போர்த் தாக்குதல் நடத்தலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முகமூடியுடன் எந்த நாட்டிலும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் தொடுக்கக் கிளம்பிவிட்ட அமெரிக்க மேலாதிக்கப் பயங்கரவாதிகளை முறியடிக்காமல், தெற்காசியாவில் அமைதியையோ, நாடுகளின் சுயாதிபத்திய உரிமைகளையோ பாதுகாக்கவே முடியாது. இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது, பாக். எல்லையில் நடந்த அமெரிக்கத் தாக்குதல்.


· தனபால்