மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சித்ரா எனும் இளம்பெண் காச நோயினால் இறந்து விட்டார். அப்பெண்ணின் பிணத்தைப் பார்த்து அழுதிடக் கூட அவரைப் பெற்ற தந்தை வரவில்லை. உடன்பிறந்த சகோதரர்கள் மூவரும் வரவில்லை.  அவர்கள் மட்டுமல்ல,  பிணத்தைப் புதைக்கக் கூட அங்கு ஆண்களே வர முடியவில்லை.


 போலீசின் தேடுதல் வேட்டைக்குப் பயந்து தாழ்த்தப்பட்ட ஆண்கள் அனைவரும் காடுகளில் ஒளிந்து வாழும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ள நிலையில் பெண்களே பாடைகட்டி எடுத்துச் சென்று சித்ராவை அடக்கம் செய்துள்ளனர்.


 உத்தப்புரத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர், கொடிக்கால் பிள்ளைமார் குடியிருப்பிற்குள் வரக்கூடாதென்பதற்காக, 300 அடி நீளச் சுவர் ஒன்றை எழுப்பி 18 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர், அச்சாதியினர்.  இந்த ஆண்டு  ஏப்ரல்மே மாதங்களில் "மார்க்சிஸ்ட்' கட்சி இச்சுவரை இடிக்கக் கோரிப் போராடியது.  "மார்க்சிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் அங்கு வரப்போவதாய் அறிவித்தார். உடனே, வெறும் 15 அடி நீளச்சுவரை மட்டும்  அவசரமாய்  தமிழக அரசே இடித்துப் பொதுப்பாதை ஒன்றை உருவாக்கியது.


 சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஆதிக்கசாதியினர் மலையில் குடியேறப் போவதாய் நாடகம் ஆடினர். ரேசன் கார்டுகளைத் திருப்பித்தரப் போவதாக அரசை மிரட்டினர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் அவர்களை உள்ளே தள்ளாமல் அரசு அவர்களிடம் சமரசம் காணப் பேச்சுவார்த்தை நடத்தியது. எண்ணிக்கையில் சிறுபான்மையினரான கொடிக்கால் பிள்ளைமாருக்கு தேவர் சாதி உள்ளிட்ட இதர ஆதிக்க சாதிகள் கொம்பு சீவி விடும் வேலையைச்  செய்தன. ஊரைவிட்டு வெளியேறி மலைப் பகுதியில் சென்று தங்கிய அவர்களுக்கு உணவும் மருந்தும் தந்து டாக்டர் சேதுராமன் என்ற தேவர் சாதித் தலைவர் அன்புக்கரம் நீட்டினார்.  பத்திரிக்கைகளோ "மலையில் குடியேறிய மக்கள் வாடிவதங்குவதாக'க் குடம் குடமாய்க் கண்ணீர் வடித்தன. 


 உத்தப்புரத்தில் சுவர் இடிபட்டதும்  தமது சாதியின் ஆதிக்கத்தையும்  எங்கே அசைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அப்பகுதியிலுள்ள குமணன் தொழு என்ற ஊரில் தேவர்சிலையைத் தேவர் சாதி வெறியர்களே அவமரியாதை செய்து விட்டு, தாழ்த்தப்பட்டோர் மீது குற்றம் சாட்டி சாலைமறியல் செய்தனர். சமரசம் பேசவந்த அதிகாரிகளிடம் அவர்கள், ""தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டு விசேசங்களில் வெடிவெடிக்கக்கூடாது'' போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.


 செப்டம்பர் மாதம் உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டோர் வீட்டுத் திருமணம் ஒன்றில் வெடிவெடித்தபோது, உத்தப்புரத்தின் ஆதிக்கசாதியினர் தகராறு செய்துள்ளனர். தகராறு செய்தவர்களைக் கைது செய்திருக்க வேண்டிய போலீசுதுறையோ, ¬தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வைரம், மகாலிங்கம் ஆகியோரைக் கைது செய்தது.


 இடிக்கப்பட்ட சுவரை ஒட்டிய பகுதியில் நிலத்தகராறு உருவாகி, செப்டம்பர் இறுதியில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இருதரப்பிலும் 15 பேர்கள் வீதம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.


 அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் பிள்ளைமார்கள் முத்தாலம்மன் கோவிலுக்கு ரூ.12 இலட்சம் செலவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்து, கோவில் சுற்றுச் சுவருக்கு வெள்ளை அடிக்கத் தொடங்கினர். முத்தாலம்மன் கோவில் பிள்ளைமார்களுக்குச் சொந்தமானது என்றாலும், அக்கோவிலுக்கு அருகில் இருக்கும் அரசமரம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமானது. அம்மரத்தை வழிபட அவர்கள் கோவிலுக்கு அருகில் வரக்கூடாது என்று பிள்ளைமார் கட்டுப்பாடு விதித்ததால் ஏற்பட்ட தகராறு இன்னும் தீராமல் இருந்து வருகிறது.


 இந்நிலையில் பொதுச்சுவர் என்று கூறப்படும் கோவில் சுவருக்கு வெள்ளை அடிப்பதனை தாழ்த்தப்பட்டோர் எதிர்க்கவே, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் கற்களாலும் நாட்டுவெடிகுண்டுகளாலும் தாக்கிக் கொண்டனர். போலீசார் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். 


 கிராம நிர்வாக அதிகாரி சீனியப்பன், தெற்குத்தெருவில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மீது மட்டும் குறிப்பாகப் புகார் கொடுத்தார். இதனை அடுத்து,தெற்குத்தெருவில் இருக்கும் ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்தனர்.  போலீசாரோ சாதிவெறியுடன் தாழ்த்தப்பட்டோர் வீடுகளை அடித்து நொறுக்கினர். சுமார் 76 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்விசிறிகள், குழல் விளக்குகள், ஜன்னல் கதவுகள் அனைத்தும் சிதைக்கப்பட்டன. சுவிட்சுகளையும் பம்புசெட்டுகளையும் கூட போலீசார்  விட்டுவைக்கவில்லை.


 ஓடிஒளிந்து கொண்ட ஆண்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெற்குத்தெருப் பெண்கள் யாருக்குமே தெரியாது. சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் வரை மாவட்ட ஆட்சியர் அங்கு வரவில்லை. போலீசாரின் தாக்குதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ வசதிகளைக்கூட அரசு செய்து தரவில்லை. "மார்க்சிஸ்ட்' கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மோகன், மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தார். அரசு கொடுத்த அழுத்தத்தால் அதுவும் மறுநாளே நிறுத்தப்பட்டு விட்டது.


 இந்நிலையில்தான் சித்ரா இறந்துபோனார். அவரின் இறுதிச் சடங்குக்குக் கூட ஆண்களை வரவிடாமல் போலீசு குவிக்கப்பட்டது. வேறுவழியின்றிப் பெண்களே சவ ஊர்வலமும், இறுதிச்சடங்கும் செய்தனர்.

 கோவில் தகராறில் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், பெண்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர் மீது மட்டுமே வழக்குகள் போட்டு சாதிக்கறை படிந்த போலீசு  அவர்களைப் பழிவாங்கியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் உட்பட தலைமறைவாய் இருந்த சுமார் 116 பேர்கள் மீது 520 வழக்குகளைப் போட்டுள்ளது.


 இத்தனை துயரங்களையும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்துக் கொண்டிருக்கையில், பிள்ளைமார்களோ கும்பாபிசேகம் நடத்தியே தீர்வது என்று அடம் பிடித்தனர்.


 பெற்ற தந்தையைக்கூட  சித்ரா இறந்தபோது வரவிட முடியாமல் தடுத்த போலீசும் அரசும், கொடிக்கால்பிள்ளைமார்களுடன் சமமாக உட்கார்ந்து கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தன. பேச்சுவார்த்தை பலனளிக்காமல் போகவே  அரசு, உத்தப்புரத்தில் 144 தடையுத்தரவு போட்டுள்ளது. இதனால் குடமுழுக்கு தடைபட்டுப் போகும் எனக் கூறி, இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆதிக்கசாதி வெறியர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.


 உத்தப்புரத்தில் பிள்ளைமார்களை உசுப்பேற்றி விட்டு அவர்களுடன் கூட்டணி கட்டி தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவது என்னும் நோக்கில் அவ்வட்டாரத்தில் இருக்கும் அனைத்து இடைநிலை ஆதிக்க சாதியினரும் ஒன்றாய் அணிதிரண்டுள்ளனர். அரசும் அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறது. போலீசோ, சாதிக்கூட்டணியின் ஏவல்நாயாகச் செயல்பட்டு, இன்னொரு கொடியங்குளத்தை நடத்தி இருக்கிறது.


 சி.பி.எம். கட்சி, தாழ்த்தப்பட்டோர் மீதான போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு நீதிவிசாரணை கோரியும் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடு கோரியும் போராடியது. அரசோ இவ்விரண்டையும் செய்யாமல் இருதரப்பையும் சேர்த்து "அமைதிக் குழு' வை மட்டும் அமைத்துள்ளது.


 கடந்த 5 மாதங்களில், எங்கெல்லாம் சம உரிமைக் கோரிக்கைகளை தாழ்த்தப்பட்டோர் எழுப்புகிறார்களோ, அங்கெல்லாம் உத்தப்புரம் பிள்ளைமாரின் மிரட்டல் நாடகத்தை அப்படியே பின்பற்றி ஆதிக்கசாதியினர் மலைக்குக் குடியேறுதல், குடும்ப அட்டையை ஒப்படைத்தல் என அரசை மிரட்டிப் பணிய வைக்கின்றனர். தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த காக்கிவாடன்பட்டி, பெருமாள்பட்டி (சின்னாளபட்டி) முதலான ஊர்களில் இதே பாணியைப் பின்பற்றுகின்றனர்.


 இந்நிலையில், உத்தப்புரத்தில் சி.பி.எம்.மின்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடவடிக்கைகள்  என்ன?  மே மாதம் சுவரினை இடித்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? திறக்கப்பட்ட பாதையில் தாழ்த்தப்பட்டோர் சென்றுவர இன்னமும்  பயந்து கொண்டுதானே உள்ளார்கள்? இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமனம் வரை வேரோடிக்கிடக்கும் சாதிவெறியை ஒரு கடப்பாரை தகர்த்துவிடுமா?


 சுவரினை இடித்ததும் வெற்றிக்களிப்பில் மிதந்த சி.பி.எம். கட்சி, அடுத்தகட்டமாக ஆதிக்க சாதியினர் மத்தியில் இருக்கும் நடுநிலை சக்திகளை வென்றெடுத்து, சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளும் அரசையோ, சாதிவெறியர்களுடன் கள்ளக் கூட்டுச் சேர்ந்துள்ள ஓட்டுக் கட்சிகளையோ அம்பலப்படுத்தவும் முன்வரவில்லை.


 இவற்றில் எதையுமே செய்யாமல் சாதி ஆதிக்க அடையாளச் சின்னத்தை இடிப்பதால் மட்டும் சாதி ஆதிக்கத்தை முறியடித்துவிட முடியாது. சாதி ஆதிக்க வெறியர்களுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கூட்டணி கட்டியுள்ள பிழைப்புவாத ஓட்டுக் கட்சிகளையும் அரசையும் அம்பலப்படுத்தி வீழ்த்தாமல், தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தியிருக்கிறது, உத்தரப்புரம்.


· சம்புகன்