காஷ்மீரின் "ஹுர்ரியட்" என அழைக்கப்படும் அனைத்துக் கட்சிகளின் மகாநாட்டு தலைவர்கள், அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் பராக் ஒபாமாவின் வெற்றியை, தமது வெற்றியாக கருதி கொண்டாடியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே "காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்" என்று ஒபாமா கூறியுள்ளார்.

காஷ்மீர் பற்றி தனது நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பழைய உறவுகளை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கென முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் விசேட தூதுவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வந்துள்ளன. பிரச்சினை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போது ஒபாமா கூறியுள்ளதாக கருதப்பட்டாலும், இனிவருங்காலங்களில் பிரச்சினை எவ்வாறு மாற்றமடையும் என்பதைக் கூறமுடியாது.



நிச்சயமாக இந்தியா இத்தனை விரும்பப்போவதில்லை. அது எப்போதும் காஷ்மீர் பிரச்சினையில் அந்நிய நாடுகள்(அமெரிக்கா ஆனாலும்) தலையிடுவதை, கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய,பாகிஸ்தானிய பிரதிநிதிகள் வாதப்பிரதிவாதங்களில் இறங்கினர். "காஷ்மீர் இந்தியாவின் பகுதி" என்ற இந்தியப் பிரதிநிதியின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தானிய பிரதிநிதி "இந்திய மைய அரசு காஷ்மீரில் மக்கள் போராட்டங்களை அடக்கி, மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக" குற்றம் சாட்டினார். ஒபாமாவின் கூற்றுப்படி, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுமா? என்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை கேட்டபோது, "இதெல்லாம் தேர்தல் கால பிரச்சாரம்" என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க ஒபாமா பதவிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும் ஆபத்து நிறைய உள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் வாங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள ஒபாமா, அதே நேரம் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ளா அல் கைதா தளங்கள் கலைக்கப்பட வேண்டும் என்றும், தாலிபான் முற்றாக அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசின் ஒப்புதல் இல்லாமலும், அங்கே அமெரிக்கா நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்துளார்.

பாகிஸ்தானுக்குள் இப்போதும் அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்கள் அல் கைதா-தலிபான் இலக்குகள் என்று கூறுமிடங்களில் தினசரி குண்டுவீசி வருகின்றன. விமானக் குண்டு வீச்சில் இறப்பவர்கள் எல்லோருமே அல் கைதா அல்லது தலிபான் போராளிகள் என்று அமெரிக்க அரசு கூறினாலும், நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளுமாக பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானிய மக்களின் கோபாவேசம் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியிருக்கையில், அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து தமது கண்டனங்களை தெரிவித்ததுடன், இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி பலமுறை கேட்டுக் கொண்டும் இதுவரை எந்தப்பலனும் இல்லை.

 

 

 

 

 

http://kalaiy.blogspot.com/


பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்க கொள்கையை வைத்து தான் காஷ்மீர் பற்றியும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒபாமா ஏதோ இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை வாங்கித்தரப் போவது போல பல காஷ்மீரிகள் கருதிக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை முன்னிட்டுத்தான் பிறநாடுகளின் பிரச்சினையில் தலையிடும், என்று சில ஹுர்ரியட் தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேற்குலகம் காஷ்மீர் தீவிரவாதம் குறித்து மென்மையான போக்கையே பின்பற்றிவருகின்றது. லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த காஷ்மீரிகள் விடுதலை இயக்கங்களுக்கு பெருமளவில் உதவுவதற்கு எந்த தடையும் இருந்ததில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, காஷ்மீர் தேசியவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு சி.ஐ.ஏ. ஆதரவளிப்பது ஒன்றும் இரகசியமல்ல. இருப்பினும் தற்போது வந்திருக்கும் ஒபாமாவின் கருத்துகளை வைத்துக் கொண்டு, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து எதுவும் சொல்ல முடியாதுள்ளது. "காஷ்மீர் பிரச்சினையை முடித்து விட்டால், பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு, உள்நாட்டில் வளர்ந்து வரும் (அல் கைதா, தலிபான்) தீவிரவாதத்தை அடக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள்." - இது மட்டுமே ஒபாமா தெரிவித்திருக்கும் விளக்கம்.

பராக் ஒபாமா வெளிநாட்டுக் கொள்கை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது, பாகிஸ்தான் ஒரு முழுமையான யுத்தத்தினுள் இழுத்துவிடப்படும் போலத்தெரிகின்றது. தேர்தலுக்கு முன்பு நடந்த இரகசிய மந்திராலோசனை ஒன்றில் புஷ், அப்போது வேட்பாளர்களாக இருந்த மக் கெயினதும், ஒபாமாவினதும் ஆலோசகர்களை அழைத்து மோசமடையும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து கதைத்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே அடுத்த வருடமும் (ஒபாமா ஆட்சியில்) ஆப்கானிஸ்தான் போர் தொடரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

தேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். "ஒபாமாவா இப்படி?" என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது "மென்மையான ஏகாதிபத்தியம்" தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.

உசாத்துணை தொடுப்புகள் :

 

Kashmiris see hope in Obama
Kashmir role on cards for Clinton
McCain and Obama Advisers Briefed on Deteriorating Afghan War