Language Selection

 அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

 மாலுமிகளைச் சிறைபிடித்து அச்சரக்குக் கப்பலைக் கடத்திச் சென்றனர். கப்பலையும் மாலுமிகளையும் விடுவிக்க வேண்டுமானால், அக்கப்பல் நிறுவனம் 80 லட்சம் டாலர் (ஏறத்தாழ 36 கோடி ரூபாய்) தரவேண்டும் என்றும், இல்லையேல் மாலுமிகளையும் கப்பல் ஊழியர்களையும் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 ""ஐயோ! கடற்கொள்ளையர்கள்!'' என்று அலறியது அக்கப்பல் நிறுவனம். உக்ரைன் நாட்டு சரக்குக் கப்பல் மட்டுமல்ல; கடந்த ஜனவரியிலிருந்து ஏடன் வளைகுடா பகுதியில் 69 சரக்குக் கப்பல்கள் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளன. 27 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டு கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.


 உக்ரேனிய ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் கடத்திச் செல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ""எம்.வி. ஸ்டோல்ட்வலோர்'' என்ற இரசாயன சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் தலைமை மாலுமியான கேப்டர் பிரபாத்குமார் கோயல் இந்தியராவார். அவருடன் சேர்த்து இதர மாலுமிகளும் ஊழியர்களுமாக 21 பேர் அக்கப்பலில் சிறையிடப்பட்டுள்ளனர். டேராடூனைச் சேர்ந்த பிரபாத்குமாரின் மனைவி சீமா, தனது 7 வயது மகனுடன் கடந்த இரு மாதங்களாக அமைச்சர்கள்  அதிகாரிகளிடம் தனது கணவரைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு கோரி கண்ணீருடன் அலைந்து கொண்டிருக்கிறார். அவரைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு கப்பல் ஊழியர்களின் குடும்பத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். மைய அரசோ, சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்துலக நாடுகளின் உதவியைக் கோரியுள்ளதாக அறிவித்துள்ளது.


 ஏடன் வளைகுடாவில் அடுத்தடுத்து நடந்து வரும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டதும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரமாகக் கூடி, போர்க் கப்பல்களை ஏடன் வளைகுடாவுக்கு அனுப்புமாறு உலக நாடுகளிடம் கோரியுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்துலக போர்க் கப்பல்களுடன் ""நேட்டோ'' நாடுகளின் சார்பில் 7 போர்க் கப்பல்கள் ஏடன் வளைகுடாவுக்கு விரைந்துள்ளன. கடற் கொள்ளையர்களை மிரட்டிப் பணியவைக்க இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பிணைக் கைதிகளையும் சரக்குக் கப்பல்களையும் பத்திரமாக மீட்க அக்கடற் கொள்ளையர்களுடன் பேரங்களும் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.


 ஏடன் வளைகுடாவை ஒட்டியுள்ள சோமாலிய நாட்டின் சில இனக்குழு படையினரே இத்தகைய கப்பல் கடத்தல்  சிறைப்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ""நாங்கள் கடற்கொள்ளையர்களோ தீவிரவாதிகளோ அல்ல; எமது நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கொடிய நச்சுக் கழிவுகளை இரகசியமாகக் கொட்டிவிட்டுச் செல்லும் சரக்குக் கப்பல்களையே நாங்கள் சிறைபிடித்துள்ளோம். இந்நச்சுக் கழிவுகளால் சோமாலிய நாடும் மக்களும் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டு புனருருவாக்கவே கோடிக்கணக்கில் பிணைத் தொகை கோருகிறோம்'' என்று இனக்குழு படையினர் நியாயவாதம் பேசுகின்றனர்.


 1990களிலிருந்து சோமாலியாவில் பல்வேறு இனக் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன. பஞ்சமும் பட்டினிச் சாவுகளும் பீடித்துள்ள ஏழை நாடான சோமாலியாவில், தொடரும் உள்நாட்டுப் போரின் காரணமாக அந்நாட்டு அரசே செயலிழந்து பலவீனப்பட்டு நிற்கிறது. நாட்டைப் பல கூறுகளாக்கிக் கொண்டு இனக் குழுக்களின் யுத்தப் பிரபுக்களே நாட்டாமை செலுத்தி வருகின்றனர். இந்நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு ஏகாதிபத்திய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள், தமது நாடுகளின் நச்சுக் கழிவுகளை ""மறுசுழற்சிக் கழிவுகள்'' என்ற பெயரில் சோமõலிய கடற்கரையில் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கொட்டிவிட்டுச் செல்கின்றன. அரசு எந்திரம் பலவீனமான நிலையில் இருப்பதால் அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் இச்சதிச் செயலுக்கு விலை போகின்றனர்.


 கடந்த 2004ஆம் ஆண்டில் சோமாலியாவை சுனாமி தாக்கியபோது, ஏற்கெனவே பல ஆண்டுகளாக கடலில் கொட்டப்பட்டிருந்த நச்சுக் கழிவுகள் மலைபோல கரை ஒதுங்கின. கடல் நீரால் அரிக்கப்பட்டு சிதிலமடைந்த மிகப் பெரிய இரும்புப் பெட்டகங்களோடு நச்சுக் கழிவுகளும் சோமாலியாவின் வடக்கிலுள்ள புன்த்லாந்து கடற்கரையெங்கும் குவிந்தன. அதன் பின்னரே, நச்சுக் கழிவுகள் ஏடன் வளைகுடாவில் கொட்டப்பட்ட உண்மைகள் அம்பலமாகி உலகமே அதிர்ச்சியடைந்தது.


 யுரேனிய கதிர்வீச்சுக் கழிவுகள், காரீயம், காட்மியம், பாதரசம் முதலான நச்சுக் கழிவுகள், ஆலைகள்  மருத்துவமனைகளின் கழிவுகள், இரசாயனக் கழிவுகள் என பல்வேறு கொடிய கழிவுகள் கடற்கரைப் பகுதியில் குவிந்து, சோமாலிய மக்கள் தீராத நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக யுரேனிய கதிர்வீச்சுக் கழிவுகளால், சோமாலிய மக்கள் அடுத்தடுத்து மாண்டு வருவதோடு, இக்கடற்கரைப் பகுதியே நஞ்சாகிப் போயுள்ளது.


 சோமாலியாவுக்கான ஐ.நா. தூதராகச் செயல்பட்டு வரும் அகமதோ அப்துல்லா, ""பல ஆசியஐரோப்பிய தனியார் நிறுவனங்கள் அணுக் கழிவுகள் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இரகசியமாக ஏடன் வளைகுடாவில் கொட்டியுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். ஐ.நா. சுற்றுச் சூழல் திட்டத்தின் (க்Nஉக) பிரமுகரான நிக் நுட்டல் என்பவர், ""நச்சுக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி எங்களால் முழுமையாக மதிப்பீடு செய்ய முடியவில்லை. சோமாலிய கடற்கரைப் பகுதியில் அரசு ரீதியாகப் பாதுகாப்பு இல்லை. உள்நாட்டுப் போர் காரணமாக சுற்றுச் சூழல் இயக்கங்களும் இப்பிரச்சினையில் தலையிட முடியவில்லை'' என்கிறார்.


 தற்போது சோமாலிய யுத்தப் பிரபுக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மற்றும் உக்ரேனிய சரக்குக் கப்பல்கள் மட்டுமல்ல; சுவிஸ் நாட்டின் ""அக்யர்'', இத்தாலிய நாட்டின் ""புரோகிரசோ'' ஆகிய கப்பல்களும், இன்னும் சுவீடன், போர்ச்சுகல், பின்லாந்து நாடுகளின் கப்பல்களும் யுத்தப் பிரபுக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகள் 1992இல் பேசல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ்வொந்தப்படி, நச்சுக் கழிவுகளை இந்நாடுகள் எந்த வழியிலும் வர்த்தகம் செய்வதோ, மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்வதோ கூடாது; போர் மற்றும் பதற்ற நிலை நீடிக்கும் உலகின் எந்தப் பகுதிக்கும் அனுப்பக் கூடாது. ஆனால், ஒப்பந்த மை உலருவதற்குள்ளாகவே இந்நாடுகள் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நச்சுக் கழிவுகளைக் கொட்டியுள்ளன. எந்த நாட்டின் கப்பல் என்பதற்கான ஆதாரம் இல்லாமல், சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் இந்நாடுகள் நச்சுக் கழிவுகளை ஏடன் வளைகுடாவில் கொட்டியுள்ளன.


 சோமாலியாவில் 2004ஆம் ஆண்டில் நடந்த சுனாமி தாக்குதலும், அதைத் தொடர்ந்து இனக்குழு யுத்தப் பிரபுக்கள் நச்சுக் கழிவு கப்பல்களைச் சிறைபிடித்து பிணைத் தொகை கேட்பதும் நடந்திராவிட்டால், இந்தக் கொடுமைகள் பற்றிய உண்மைகள் உலகுக்கே தெரிந்திருக்காது. யுத்தப் பிரபுக்கள், நச்சுக் கழிவுக் கப்பல்களைச் சிறைபிடித்த பிறகுதான், ஐ.நா. மன்றமும் ஏடன் வளைகுடாவில் நச்சுக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஒப்புக் கொள்கிறது. ஆனால், குற்றவாளிகளான ஏகாதிபத்திய நிறுவனங்கள் மீது போர் தொடுப்பதை விட்டு, யுத்தப் பிரபுக்கள் மீது போர் தொடுக்க உலக நாடுகளைக் கோருகிறது.


 மறுபுறம், நச்சுக் கழிவுக் கப்பல்களைச் சிறைபிடித்து, அபராதம் விதித்து, அத்தொகையைக் கொண்டு சோமாலியா நாட்டையும், மக்களையும் மீட்டு புனருருவாக்கப் போவதாகக் கூறும் யுத்தப் பிரபுக்கள், நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளல்ல. உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்து, பட்டினிச் சாவுக்குத் தள்ளப்பட்ட சோமாலிய மக்களுக்கு ஐ.நா. மன்றம் அனுப்பும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையே சூறையாடி ஆதாயமடையும் கும்பல்கள்தான் அவை. தமது ஆதிக்கத்துக்கு இடையூறாக உள்ள பன்னாட்டு "அமைதிப் படைகள்' மீது இக்கும்பல்கள் தாக்குதல் தொடுக்கின்றனவே தவிர, ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கு எதிராக சோமாலிய மக்களைத் திரட்டி விடுதலைப் போரைத் தொடுப்பதற்கான திட்டம் எதுவும் இக்கும்பல்களிடம் இல்லை. நச்சுக் கழிவுக் கப்பல்களைச் சிறைபிடித்து பிணைத் தொகை கோருவதன் மூலம் கோடிகோடியாய் ஆதாயமடைந்து தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும், தமது கிரிமினல் குற்றங்களை மறைத்துக் கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளாகக் காட்டிக் கொள்ளவும் இம்மாஃபியா கும்பல்கள் அண்மைக் காலமாக சூரத்தனம் காட்டி வருகின்றன.


 சோமாலியா மட்டுமல்ல; நைஜீரியா, கினியா  பிசாவ், ஜிபொடி, செனகல் முதலான பல நாடுகளிலும் அணு உலைக் கழிவுகள் உள்ளிட்டு கொடிய நச்சுக் கழிவுகளை ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொட்டி வருகின்றன. இந்நச்சுக் கழிவுகளை செயலிழக்க வைத்து நீர்த்துப் போகச் செய்வதற்கு ஏகாதிபத்திய நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட வேண்டியிருப்பதால், அதைவிட மலிவான முறையில் இரகசியமாக ஏழை நாடுகளில் கொட்டும் நோக்கில் இந்நிறுவனங்கள் நச்சுக் கழிவு ஏற்றுமதியைச் செய்து வருகின்றன. தனியார்மயம்  தாராளமயத்தால் ஏழை நாடுகளின் அரசுகளது கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் நீக்கப்பட்டுள்ளதால், இந்நச்சுக் கழிவு ஏற்றுமதி வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. எந்தவொரு தனிநபரும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்ள தாராள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, பல ஆப்பிரிக்க ஏழை நாடுகளின் விவசாயிகளை விலைபேசி, அவர்களது நிலத்தில் ஆலைக் கழிவுகள் என்ற பெயரில் கொடிய நச்சுக் கழிவுகளைக் கொட்டும் கொடுமையும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. ஆயுத வியாபாரம், போதை மருந்து வியாபாரம் ஆகியவற்றைவிட கொழுத்த லாபம் தரும் தொழிலாக நச்சுக் கழிவு வியாபாரம் வளர்ந்து விட்டது.


 பல்வேறு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக உள்ள இந்தியாவில், காகிதக் கழிவுகள் என்ற பெயரில் கொடிய நச்சுக் கழிவுகள் ஏகாதிபத்திய நிறுவனங்களால் கொட்டப்பட்டு வரும் கொடுமைகள் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில்தான் நச்சுக் கழிவுக் கப்பல்கள் அதிகமாக மிதப்பதாக பசுமை அமைதி இயக்கம் அறுதியிட்டுக் கூறுகிறது. இவைதவிர இந்திய அணுசக்தித் துறை ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து எவற்றை இறக்குமதி செய்கிறது, அவை பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள இந்தியக் குடிமகனுக்கு உரிமையில்லை. வரம்பற்ற அதிகாரத்தைக் குவித்துக் கொண்டு தேசப் பாதுகாப்புக்கான ரகசியம் என்ற பெயரில் அணுசக்தித் துறை அதிகாரிகள் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்தாலும் அதைத் தடுக்க பிரதமருக்கும் "குடியரசு'த் தலைவருக்கும் கூட அதிகாரமில்லை. ஒருபுறம் தனியார்மயம்  தாராளமயத்தாலும், மறுபுறம் அணுசக்தித் துறையின் இரகசிய செயல்பாடுகளாலும் இந்திய நாடு, ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.


 பூவுலகை ஒரு பேரபாயம் கவ்வியுள்ளது. அணுஆயுத யுத்தம், இரசாயன யுத்தம் முதலானவற்றைப் போலவே நச்சுக் கழிவு யுத்தமும் கொடியது. இனம் புரியாத நோய்களும் நிலமும் நீரும் நஞ்சாகிப் போவதும் அதன் உடனடி விளைவுகள். அனைத்துலக மக்கள் விழித்தெழுந்து மனிதகுலத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போர் தொடுக்காவிட்டால், பேரழிவுகளையும் ஏழை நாடுகள் சுடுகாடாகிப் போவதையும் தடுக்கவே முடியாது.


· குமார்