ஓசூர் சிப்காட்ஐஐ தொழிற்பேட்டையிலுள்ள "வி.பி. மெடிகேர் லிமிடெட்'' எனும் நிறுவனம், மருத்துவ இரசாயனத் தொழிற்சாலையாகும். இது, சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு உள்ளிட்டு மூட்டுவலி மருந்து தயாரிப்பு ஆராய்ச்சிக்கூடம் கொண்ட ஆலையாகும். இவ்வாலையில் 160 பேர் ஆராய்ச்சிக்கூட ஊழியர்கள் கண்காணிப்பாளர்களாகவும், 75 பேர் தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாகவும், 130 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
கடந்த நான்காண்டுகளாக இயங்கிவரும் இவ்வாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, மருத்துவ ஈட்டுறுதி, சேமநல நிதி முதலான எந்த உரிமையும் கிடையாது. நான்காண்டுகளாகத் தொடர்ந்து வேலை செய்த போதிலும் இவர்கள் நிரந்தரத் தொழிலாளர் அல்ல என்று கூறும் நிர்வாகம், அவர்களை எந்நேரமும் வேலைநீக்கம் செய்வதற்கேற்ப தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் விதிகளை வகுத்துக் கொண்டு, தொழிலாளர்களை மிரட்டிக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது.
தொடரும் இக்கொடுமைகளைக் கண்டு குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்து உரிமைகளுக்காகப் போராட முற்பட்டனர். இதையறிந்த நிர்வாகம், மூன்று தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டி திடீரென வேலை நீக்கம் செய்தது. இவர்களில் பாதிக்கப்பட்ட பசவராஜ் என்ற தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டத் தொழிலாளர் துறை ஆணையரிடம் தனக்கு நியாயம் கோரி முறையிட்டதோடு, ஓசூரில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிடமும் உதவி கோரினார். அதைத் தொடர்ந்து, ஆலை நிர்வாகத்திடம் பு.ஜ.தொ.மு. இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியும், ஆலை நிர்வாகம் பழிவாங்கப்பட்ட தொழிலாளிகளை வேலையில் சேர்க்க மறுத்து அடாவடித்தனம் செய்தது. ஆலை நிர்வாகத்தின் திமிரையும், ஊழலையும், கொத்தடிமைத்தனத்தையும் உடனடியாக சுவரொட்டிப் பிரச்சாரம் மூலம் பு.ஜ.தொ.மு. அம்பலப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களோடு இதர ஆலைத் தொழிலாளர்களையும் அணிதிரட்டி, வி.பி. மெடிக்கேர் ஆலை வாயிலில் 13.10.08 அன்று வர்க்க உணர்வுமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அரண்டு போன நிர்வாகம், உடனடியாக தொழிலாளர்களுக்கு மருத்துவ ஈட்டுறுதி, சேமநல நிதி முதலான உரிமைகளை வழங்கியுள்ளது. விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள தொழிலாளர்கள், பு.ஜ.தொ.மு.வில் நம்பிக்கையோடு அணிதிரண்டு வருகின்றனர். இவ்வாலையில் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட தொழிற்சங்கத்தைக் கட்டியமைக்கவும், சட்டவிரோதமாகப் பழிவாங்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும், ஓசூர் பகுதியில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கொத்தடிமைத்தனத்தை முறியடிக்கவும் பு.ஜ.தொ.மு. அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.
பு.ஜ. செய்தியாளர்