நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.
செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.
அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்
1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.
அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.
அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.
இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.
பேய் அரசாண்டால்...
இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.
"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary) நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். 1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.
பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார். இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.
வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.
இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.
இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக, நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.
அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்
லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.
உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத் திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.
மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.
இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.
இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.
என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்
இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?
அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.
உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப் பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார். கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!
மார்க்சியமே உரைகல்
"முதலாளித்துவ உற்பத்தி முறையில், ஒரு நெருடிக்கடிக்கான தீர்வு இன்னொரு நெருக்கடிக்குத் தான் இட்டுச் செல்லும்; நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை விழுங்கி, தமது ஏகபோக ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும்; நாடாளுமன்ற என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடி மறைக்கும் திரை'' என மார்க்சியம் முன்னறிந்து கூறிய பல உண்மைகளை இந்த "நெருக்கடி'' உலக மக்களின் முன்னே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற சோசலிசம்தான் தீர்வு; உற்பத்தியின் மீதும் விநியோகத்தின் மீதும் உழைக்கும் மக்களின் கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதுதான் தீர்வு என்கிறது மார்க்சியம்.
ஆனால், முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களில் ஒரு சாரர், பங்குச் சந்தை சூதாட்டத்தைச் சட்டம் போட்டுக் கண்காணிக்க வேண்டும்; கள்ளனை விடக் காப்பாளன் திறமைசாலியாக இருக்க வேண்டும் எனத் தீர்ப்பு சொல்கிறார்கள். காகிதச் சட்டங்களின் மூலம் முதலாளித்துவத்தின் ஊழலையும், மோசடித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என நம்புவது கடவுள் நம்பிக்கையைவிட மூடத்தனமானது. முதலாளித்துவச் சட்டங்கள், சுண்டெலியை வேண்டுமானால் பிடிக்குமேயொழிய, பெருச்சாளிகள் தப்பிப் போவதைக் கண்டு கொள்ளாது.
பங்குச் சந்தை சூதாடிகளும், வங்கிகளும் 1930இல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கண்காணிப்புச் சட்டங்கள் போடப்பட்டன. 1990இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தடுக்க, பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் சட்டங்கள் நீக்கப்பட்டன. இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ""மீண்டும் சட் டம்கண்காணிப்பு'' என்பது கிழடு தட்டிப் போன தீர்வாகும்.
இன்னொரு பிரிவினரோ, "சந்தை தவறு செய்யாது; பேராசையால் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாக''க் கண்டுபிடித்து, "நிதி நிறுவனங்கள் பேராசையைத் துறக்க வேண்டும்'' என உபதேசித்து வருகிறார்கள். இந்த அறிவுரைக்கு முதலாளிகளின் பதில் என்ன தெரியுமா?
அமெரிக்காவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான "ஏ.ஐ.ஜி''க்கு, 8,500 கோடி டாலர்களைக் கொடுத்து, அந்நிறுவனம் திவாலாகிவிடாமல் கை தூக்கி விட்டது, அமெரிக்க அரசு. இந்தப் பணம் கைக்குக் கிடைத்த மறுநிமிடமே, அந்நிறுவனம் முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில், கலிபோர்னியா மாநிலத்தில் மொனார்க் கடற்கரையில் உள்ள ஆடம்பரமான செயிண்ட் ரேகிஸ் உல்லாச விடுதியில் 4,43,000 டாலர் செலவில் களிவெறியாட்டக் கூத்தை நடத்தியது. ஏ.ஐ.ஜி. அதிகாரிகள் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது வெளியே கசிந்தவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால், ஏ.ஐ.ஜி. மற்றொரு களியாட்டக் கூத்தை நடத்த முடியாமல் கைகழுவியது; எனினும், ""நிகழ்ச்சி ரத்தானது தங்களைச் சோர்வடையச் செய்துவிட்டதாக''க் குறைபட்டுக் கொண்டார்கள், அதன் அதிகாரிகள்.
ஊதாரித்தனத்தையும், ஒட்டுண்ணித்தனத்தையும் கைவிட மறுக்கும் இக்கும்பலை, "சீட்டுக் கத்தரித்து வாழும் சுகஜீவிகள்'' என அடையாளம் காட்டினார், லெனின். இச்சமூக விரோதக் கும்பலைப் போதனைகளால் திருத்திவிட முடியாது. இவர்களையும், இவர்களைப் பாதுகாக்கும் ஏகாதிபத்திய சமூகக் கட்டமைப்பையும் தூக்கியெறியும் போராட்டமே தீர்வாகும்!
· செல்வம்