Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 "கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

 


 குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் — என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.


 இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.


 சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.


 இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.


 மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.


 இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, "பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு  பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்'' என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் ""சோ'', சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத  பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.


 அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். "மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்'' என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக்  கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.


 இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. ""பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு'' என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.


 இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். ""சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்'' என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?

 

 நெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் "ஏசியான்'' (அகுஉஅN) ஐரோப்பிய நாடுகளின் "ஐரோப்பிய ஒன்றியம்'' (உக்) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (குஅஅகீஇ) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார  வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய "அமைதிப்படை' இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.


 இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற "சார்க்' மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


 இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.


 தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத  பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.