இதை ஒப்புக் கொண்டபடி தான் கொலையை பற்றி புலம்புகின்றனர். ஆயுதம் ஏந்தியுள்ள நாங்கள் செய்யவில்லை என்று சொல்லும் தகுதி, இன்று யாருக்கும் கிடையாது. மற்றவன் செய்தான் என்ற குற்றச்சாட்டுகள், கொலையை நிறுத்துவதற்காக அல்ல.
தாமும் இது போன்ற கொலை செய்வதற்கான நியாயப்பாட்டை கோரித்தான் அலம்புகின்றனர். மனிதம், மனித நேயம் பற்றி எந்தவிதமான அக்கறையும் அற்றவர்கள், எப்படித்தான் மனித கொலைகளை கண்டிக்கும் தார்மீகப் பலம் அவர்களுக்கு கிடைக்கும். எல்லாம் போலித்தனம். நடிப்பின் தலைசிறந்த மேதைகளாகி, மனிதவிரோதிகளின் நாடகம் அரங்கேறுகின்றது. ஒருபுறம் இலங்கை அரசு என்றால் மறுபுறம் புலிகள். அதற்கு ஏட்டிக்கு போட்டியாக கருணா என்ற கொலைகாரக் கும்பல் முதல் டக்கிளஸ் என்ற ஜனநாயக வேஷதாரிகள் வரை. இதைவிட ஜனநாயகம் பேசும் ஒரு கும்பல், ஐயோ கொலை என்ற நடுநிலை வேஷம் போடும் புலி ஆதரவுக் கும்பல். இப்படி மனிதம் ஏறி மிதிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மொத்தமாகவே கொல்லப்படுகின்றனர்.
மரணம் எப்படியும் யாராலும் நிகழ்த்தப்படலாம் என்ற நிலை. ஏனென்று தெரியாத நிலையில் இவை நிகழலாம். இது தான் இன்று தமிழ் மக்களின் அவலநிலை. இதை யார் உருவாக்கினார்கள்?
1. புலிகளாக இருந்தால் அல்லது புலிக்கு ஆதரவாக இருந்தால் கொல்லப்படலாம்.
2. புலி அல்லாத ஒருவர் என்ற காரணத்தினால் கொல்லப்படலாம்.
3. ஒரு பெண்ணாக இருப்பதால், பெண் உறுப்பை வைத்திருப்பதால் கூட கொல்லப்படலாம்.
4. சந்தேகப்படும் யாரையும் யாரும் கொல்லலாம்.
5. இது பற்றி கேள்விகேட்டால், ஆராய்ந்தால், விசாரித்தால் கூட கொல்லப்படலாம்.
தனிநபராக, குடும்பமாக, சமூகமாவே யாரும் எப்படியும் கொல்லலாம். இதை ஒருபக்கம் மட்டும் கண்டிக்கும், பக்கச்சார்புக் கூட்டமே தினவெடுத்து வம்பளந்து நிற்கின்றது. மனிதம் பற்றிய இவர்களின் எல்லைப்பாடு இவ்வளவு தான்.
கொலைகாரர்கள் பலவிதம். பலவிதமான வக்கிர புத்தியுடன் தினவெடுத்து அலைகின்றனர். இதையே இலங்கையின் அரசியல் தலைமைகள் வழிகாட்டுகின்றன. கொலைகள் தொடர்பாகவும், அந்த வக்கிரம் பற்றியும் எழுதிய கட்டுரைகள் பல.
இன்று போலியாக கண்டிப்பது, போலியாக ஒப்பாரிவைப்பது, நடிப்பது, இதையே அரசியலாக்கி அரசியல் செய்வது, இதையே காசு பண்ணுவது, இப்படி கொலைகளின் பின் ஒரு கூட்டமே சூதாட்டம் செய்கின்றது. இது தமிழ் தேசிய வரலாறு முழுக்க தொடருகின்றது.
1. புளாட் நடத்திய சவுக்குத் தோப்புக் கொலைகள்
2 .புலிகளின் பச்சை வள்ளக் கொலைகள்.
3.வல்வெட்டித்துறையில் வாசிகசாலையில் இளைஞர்களை கூட்டமாக வைத்து தகர்த்த பேரினவாதக் கொலைகள்.
4. அனுராதப்புர மக்கள் மேலான புலிகளின் படுகொலைகள்.
5. பள்ளிவாசல் மீதான புலிகளின் கூட்டுக் படுகொலைகள்.
6. ரெலோ நடத்திய யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகள்
7. புலிகள் நடத்திய கந்தன் கருணைப் படுகொலைகள்
8. பேரினவாதிகள் நடத்திய குமுதினிப் படுகொலைகள்
9. இராணுவம் நடத்திய படுவான்கரை படுகொலைகள்
10. பேரினவாதிகள் நடத்திய வெலிக்கடை சிறைப் படுகொலைகள்
11. புலிகள் நடத்திய டொனர் பாம் படுகொலைகள்
12. கனகம்புளியடிப் படுகொலைகள்
13. ஓமடியாமடு படுகொலை
14. அல்லைப்பிட்டி படுகொலைகள்.
15. மன்னார் படுகொலைகள்
இப்படி கூட்டுப் படுகொலைகள் பற்றி நீண்ட பட்டியல் வரலாற்று ஆவணமாக மாறிவிட்டது. இது நீண்டு செல்லுகின்றது. இதை நிறுத்த யார் நேர்மையாக முனைகின்றனர்.? இந்த மாதிரியான மனித விரோத கொலையை நிறுத்த உண்மையில் யார் நேர்மையுடன் அக்கறை கொள்கின்றனர்? சொல்லுங்கள் நேர்மையாக உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்? உங்களிடம் அப்படி நேர்மை உள்ளதா?
மனிதத்தையே விலை பேசுகின்றனர். கொல்படுவதை வைத்துத்தான் அரசியல் செய்கின்றனர். அவலமான மனிதத்தின் இழப்பை இட்டு யாருக்கு என்னதான் அக்கறை? என்னதான் கவலை? ஒருபுறம் பேரினவாதம். மறுபுறம் புலிகள். கொலைகளைச் செய்துவிடடு இருதரப்பும் ப+தக்கண்ணாடி கொண்டு புகுந்து தேடுகின்றனர். சாமத்திய சடங்கு செய்யும் ஆணாதிக்கவாதிகள், பெண்ணின் உறுப்பில் ஏதாவது புதிதாக வடிகின்றதா என்று சதா சட்டையைத் தூக்கிப் பார்த்து (நாகரிக) பண்பாடு காப்பது போல், கொலைகளை அதே வக்கிரத்துடன் அணுகி புகுந்து விளையாடுகின்றனர். என்ன பண்பாடு! என்ன நாகரீகம். இதுவே இன்றைய அரசியலாகிவிட்டது.
யார் செய்தது என்று வினாக் கொத்து நடத்துகின்றனர்? நாங்கள் இது போன்றவற்றை செய்வதில்லை என்று மார்புதட்டி சொல்ல முடியாத அவர்களின் சொந்த அவலம். இதற்குள் ஜனநாயகத்துக்கு திரும்பி, புலிப் பாசிசத்தை ஒழிக்க வெளிக்கிட்ட கட்சிகள் ஜனநாயக வேஷதாரிகள் எல்லாம் நாய் வேஷம் போடுகின்றனர்.
கொலை நிறுத்தவதற்காக அல்ல, தம்பங்குக்கு தொடர்வதற்காக குலைக்கின்றனர். இங்கு இவர்களுக்கு இடையில் பேதம் இருப்பதில்லை. உதாரணமாக தேனீயை எடுத்தால், நெருப்பு இணையத்துக்கு இணைப்புக் கொடுத்துள்ளனர். அதே போல் ரி.பி.சிக்கும். அந்த கொலைகார நெருப்பு வடமுனையில் தாக்குதலில் கொன்ற மக்களை, புலிகளின் தளபதியின் செத்தவீட்டுக்கு சென்று திரும்பியவர்கள் என்று கொலையையே நியாயப்படுத்தியது. இப்படி ஜனநாயகத்தை கூட்டாகவே விபச்சாரம் செய்கின்றனர். இப்படி கூட்டாக வேஷம் தாங்கி ஒன்றையொன்று பாதுகாக்கின்றனர்.
இப்படிக் கொல்வதிலும் அதை நியாயப்படுத்துவதிலும் விதம் விதமான வக்கிரமான ஆசைகள் ரசனைகள். கொலையை மற்றவன் மீது சுமத்தும் அவசரம். தம்மீது வந்துவிடக் கூடாது என்ற அங்கலாய்ப்பு. ஆதாரங்களை தேடுதல். ஆதாரங்களை கொலைச் செய்தி வந்தவுடன், அவர்களே தமது சொந்தக் கற்பனையில் போட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றவே போலியாக மூக்கால் சிணுங்கி அழுது நடிக்கின்றனர். தாங்கள் கொலையைச் செய்யாதது போல், அதை நியாயப்படுத்தாதது போல் வேஷம் போட்டு ஆடுகின்றனர். புனை பெயர்களில், அனாமதேயமாக வருவோர் கொல்வோம் என்று மிரட்டுகின்றனர்.
பரஸ்பரம் குற்றம் சாட்டுவதும், அரசியல் பிரச்சாரத்துக்கு கொலையைப் பயன்படுத்துவர்கள் நாயிலும் கீழானவர்கள். கொல்லப்பட்டவனின் ரத்தத்தை நக்கி திரிபவர்கள் இவர்கள். அதை சுவைத்து கொலை செய்வதற்காகவே குலைப்பவர்கள் தான் இவர்கள். இன்று சமாதானம் அமைதி பற்றி போலியான மூகமுடியணிந்து உலகம் முழுக்க ஏகாதிபத்திய கால் தூசை நக்கித் திரிகின்றனர். இது யாருக்கும் எந்த வித்திலும் விதிவிலக்கு கிடையாது. மனிதத்தை இவர்கள் யாரும் சிறிதளவு கூட மதித்ததே கிடையாது. புலிகளாக இருந்தாலும் சரி, சிங்கள பேரினவாதிகளாக இருந்தாலும் சரி, மற்றய தமிழ் குழுக்களாக இருந்தாலும் சரி, இதற்கான முழுப் பொறுப்பும் இவர்களையே சாரும். குற்றம் ஒருவர் மீதானதல்ல. இவர்கள் இது போன்ற மனித குற்றங்களை தாம் நடத்தியதில்லை என்று கூறக் கூடிய, எந்த சமூக தகுதியும் இவர்களிடம் இருப்பதில்லை என்ற உண்மை இவர்கள் ஒப்புக் கொண்டு, தொடர் கொலைக்காகவே ஒப்புக்கு புலம்புகின்றனர். இதுவே எதார்த்தம்.
பி.இரயாகரன்
10.06.2006