தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை.

 அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம்.

பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம்.

தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் முழுநேர விபச்சாரியாக காலம் கழிக்கிறாள். 500 ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டு அவளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களில் எல்லா வகையினரும் இருக்கிறார்கள். கும்பகோணத்தில் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் ஒருபார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமன் படிப்பிற்காக ஐதராபாத் நகருக்கு வருகின்றான். மற்றவரின் துன்பத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் உதவும் தனத்தின் மீது அனுதாபம் பிறந்து காதலாக மாறுகிறது அனந்துவுக்கு.

 

நோட்டைக் கொடுத்துவிட்டு தன்னை நுகருவதோடு உறவு முடிந்தென போய்விடு என்று வாதாடும் தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க வைக்கிறான் அனந்து. இறுதியில் அவனது பெற்றோர் அவள் இன்ன தொழில் செய்கிறாள் என்பதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்குத் தயார் என்கிறாள் தனம். ஆனால் இதை முதலில் அதிர்ச்சியுடன் மறுக்கும் அவன் குடும்பம் பின்னர் ஜோசியரின் வாக்கைக் கேட்டு தாசி வந்தால் எல்லாத் துன்பங்களும் போய்விடும் என்று தனத்தை மருமகளாக ஏற்றுக் கொள்கிறது.

 

அந்த ஜோசியக்காரன் தனத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்துகின்றான். தனமோ அவனை காறி உமிழ்கிறாள். இதற்கு பழிவாங்கும் முகமாக அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையைக் கொன்றால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று அனந்துவின் அப்பாவை அச்சுறுத்துகிறான். பல தயக்கங்களுக்குப் பிறகு அனந்துவின் குடும்பம் ஒரு மருத்துவச்சியை அழைத்துக் கள்ளிப்பால் கொடுத்து அந்தக் குழந்தையைக் கொல்கிறது. இதை அறிந்த தனம் தன் குழந்தையை தாயே தன் வயிற்றில் பிறந்தது போல நேசித்தவள் கோபம் கொண்டு மொத்தக் குடும்பத்திற்கும் சாப்பாட்டில் விசம் கொடுத்துக் கொல்கிறாள்.

 

இதை மறுவிசாரணை செய்ய வரும் போலீசு அதிகாரி தனத்தின் நல்மனதைத் தெரிந்துகொண்டு புலனாய்வை முடித்துக்கொள்கிறார். தனம் மீண்டும் காந்தி நகரில் தொழிலைத் தொடர்கிறாள்.

 

விபச்சாரத்தில் காலத்தைத் தள்ளி வரும் ஒரு தாசியின் வாழ்க்கையில், காதல், குடும்பம், கணவன், குழந்தை என்று நல்லவிசயங்கள் ஏற்பட்டு மூடநம்பிக்கையாலும் அவளைத் துய்க்கத் துடிக்கும் ஆண்களாலும் ஏமாற்றப்பட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்புகிறாள் என்பதே இயக்குநர் சொல்ல விரும்பிய கதை!

 

ஒரு விபச்சாரியின் வாழ்க்கையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை சினிமாவுக்காக வேண்டுமானால் யோசிக்கலாம். உண்மையில் அப்படி நடக்கக் கூடிய சாத்தியமில்லை என்பதோடு ஒரு விபச்சாரியின் அவலமான வாழ்க்கையை பார்க்க மறுப்பதும் இந்த சினிமாக் கற்பனையில் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தனத்தின் நல்ல பண்புகளைப் பற்றி காந்தி நகரில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளிகள் ஆல் இந்தியா ரேடியோ போல வாசிக்கிறார்கள். நாயகி என்பதால் இந்த ஒளிவட்டம் இயக்குநருக்கு தேவைப்படுகிறது என்பதைத் தவிர ஒரு விபச்சாரி அப்படி ஒரு பகுதிக்கு தலைவியாக விளங்க முடியுமா?

 

நூறுக்கும், இருநூறுக்கும் தனது உடலை விற்கும் தெருவோர தாசி ஒருத்தி போலீஸ், தரகன், ரவுடி, விபச்சாரிதானே என்று எந்த அக்கறையோ, நாகரிகமோ இன்றி மிருக்கங்களைப்போல வரும் வாடிக்கையாளர்கள்…. இவர்களை மல்லுக்கட்டுவதற்கே தனது நேரத்தையும், சக்தியையும், வருமானத்தையும் செலவிடும் போது தானம் தருமம் செய்வதற்கெல்லாம் வழியேது? ஊரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப் படுவதற்கு முகாந்திரமேது? யதார்த்தத்தில் ஒரு விபச்சாரி விபச்சாரத்தில் உழலும் ஒரு பரிதாபமான ஜீவனாகத்தான் இருக்க முடியுமே தவிர நல்ல பண்புகளைக் கொண்ட சமூக சேவகியாகவெல்லாம் வாழ முடியாது.

 

இயக்குநரின் இந்தச் சித்தரிப்பே தாசிகளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியைத் தட்டிக் கேட்பதற்குப் பதில் அதை ஒரு ரசனையாக உணர்த்துகிறது. ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்த்த் விரும்பினால் அதை சாந்தினி பார் போன்று எடுத்திருக்கலாம். அந்தப் படத்தில் விபச்சாரம் இனிமையான ஒரு தொழில்ல என்பதோடு துயரத்தில் குவிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வலி நிறைந்த வாழ்வை கனத்த மனதுடன் உணர்கிறோம்.

 

ஆனால் தனம் ஒரு தமிழ் சினிமாவின் நாயக நாயகி லாஜிக் படி எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே நாம் ஒரு அடிமட்டத்து விபச்சாரியை சந்திக்கவில்லை, ஒரு கதாநாயகியைத்தான் காண்கிறோம். மேலும் எல்லாத் தொழலைப் போன்று விபச்சாரமும் ஒரு தொழில் என்று எந்த உறுத்தலுமில்லாமல்  சகஜமாக காட்ட முனைந்திருப்பது ஒரு சராசரி ஆணின் மனதில் ஆசையைத் தூண்டுவதற்குத்தான் உதவுமே ஒழிய அவனுக்கு உடலை எந்திரம் போல விற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய பெண்ணின் வேதனையை புரியவைக்காது.

 

படத்தில் தனத்தின் வாடிக்கையாளராக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட அவளது நல்ல மனதுக்காக அவளது நியாயமான கொலைகளை மூடிமறைக்கிறாராம். யதார்த்தத்தில் தெருவோர விபச்சாரிகளை போலீஸ் துரத்துவதும், மாமூல் வாங்குவதும், தேவைப்படும் போது இலவசமாக அனுபவிப்பதும், கைது செய்து வழக்குப் போடுவதும்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். படத்தில் இந்த யதார்த்தத்தை இயக்குநர் மீறியிருப்பது நாயகியின் நல்ல உள்ளத்தைக் காட்டுவதற்குத்தான். துயரமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விபச்சாரியின் உலகில் இத்தகைய நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் எங்கே இடமிருக்கிறது?

 

தாம்பத்திய உறவில் ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் ஆண்களுக்கு தனம் ஒரு வடிகாலாக இருக்கிறாள் என்பதுதான் இயக்குநர் சொல்லவரும் சேதி. ஆணாதிக்கம் தன்னை நியாயப்படுத்த முடியாத இடங்களில் இப்படித்தான் பேசும். இங்கே அதே தாம்பத்திய உறவில் அதே ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் பெண்களுக்கு என்ன பதில்? அதற்குப் பதில் சொல்ல முனைந்திருந்தால் அது தனத்தின் கதையாக இருக்காது.

ஒரு தாசியை ஒரு ஆச்சாரப் பார்ப்பன இளைஞன் திருமணம் புரிவதும், ஜோசியக்காரனுக்காக அதை பெற்றோர் ஏற்பதும், பின் குழந்தையைக் கொல்வதும் பார்பனர்களை அம்பலப்படுத்துவதாக சிலர் மகிழ்ச்சியடைகின்றனர்.ஆனால் நமக்கு அப்படித் தோன்றவில்லை. ஜெயந்திரன் என்ற காஞ்சி சங்கராச்சாரியின் வண்டவாளங்கள் கிரைம் தில்லராக எல்லாப் பத்திரிகைகளிலும் அம்பலமேறினாலும் அவாள்கள் மட்டும் அதை ஏற்காமல் இன்னமும் அவரை மரியாதை செய்கிறார்கள். இத்தகைய உடும்புப்பிடி பார்ப்பனர்களைக் கொண்ட சமூகத்தில் காலத்திற்கேற்ற முறையில் தன்னை தகவமைக்கும் சாதியை இந்தப் படம் மிகவும் வறட்டுத்தனமாக சித்தரிக்கின்றது.

 

இயக்குநர் சொல்வது போல ஒரு ஜோசியக்காரனுக்காகவெல்லாம் ஒரு தெருவோர விபச்சாரியை மருமகளாக ஒரு பார்ப்பனக் குடும்பம் ஏற்றுக் கொள்வது நம்பும்படியாகவும் இல்லை; அது உண்மையும் இல்லை. ஒரு வேளை அவள் கோடிசுவரியாக இருந்திருந்தால் சாத்திரத்திற்கு புதிய விளக்கத்தை சொல்லிவிட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். பார்ப்பனர்களின் விழுமியங்களை பொருள் என்ற செல்வத்தின் மகிமைதான் மாற்றுகிறதே ஒழிய வெறுமனே சாத்திரங்கள் அல்ல. அதனால்தான் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் சங்கரமடத்தை பார்பனர்கள் இன்றும் ஆதரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த மடம் அன்றாடங்காய்ச்சியாக இருந்திருந்தால் எந்தப் பார்ப்பான் அதை மதிப்பான்?

 

மற்றவர்களைக் காட்டிலும் பார்ப்பனர்கள் பிற்போக்கானவர்கள் என்பதன் பொருள் அவர்கள் மூடநம்பிக்கைகளைக் கறாராக பின்பற்றுகிறார்கள் என்பதல்ல. அந்தப் பிற்போக்கின் சாரம் அவர்கள் மற்ற சாதிகளைக் காட்டிலும் தங்களை உயர்வாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதுதான். அதுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், நைச்சியமாகவும், தந்திரமாகவும் இன்னும் பல விதங்களில் வடிவெடுக்கிறது. ஆனால் படம் பார்ப்பனர்களை ஏதோ அசட்டுத்தனமாக சில மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும் முட்டாள்களாகச் சித்தரிக்கிறது. இது பார்ப்பனர்களின் சமூக இருப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்பதுதான் நமது விமரிசனம்.

 

அதுவும் பார்ப்பனியத்தில் ஊறிப்போன கும்பகோணத்துப் பார்ப்பனர்களை இத்தகைய அசடுகளாகக் காட்டியிருப்பதில் சிறிதும் நியாயமில்லை. படத்தில் வேலை வெட்டியில்லாத அக்ரஹாரத்துப் பார்ப்பனர்கள் தனம் வந்த்திலிருந்து அவளை சைட் அடிப்பதையே தொழிலாக செய்கிறார்கள். வாழ்ந்து கெட்ட பல அக்கிரகாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும் இன்று பார்ப்பனர்கள் கிராமங்களைக் காலி செய்துவிட்டு மாநகரம், டெல்லி, அமெரிக்கா என்று பறந்து விட்டார்களே! வயோதிகப் பார்ப்பனர்கள் முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்க பையனோ, பெண்ணோ அமெரிக்காவில் செட்டிலாகியிருப்பதுதானே இன்றைய யதார்த்தம்?

 

ஒரு விபச்சாரியைச் சித்திரிப்பதிலும், ஒரு பார்ப்பனக் குடும்பத்தை படம் பிடிப்பதிலும் இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. மேலோட்டமான நீதி, அநீதிகளுக்கிடையில் பயணிக்கும் இத்திரைப்படம் முற்போக்குச் சாயலில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையை உரசிப்பார்க்கும் நெருப்பின் பொறி படத்தில் இல்லை. ஒரு மாறுபட்ட களத்தில் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் தனம் மற்றத் திரைப்படங்களை விட்டு விலகி தனி ஆவர்த்தனம் ஏதும்  செய்யவில்லை. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கும் கலையில் தமிழ் சினிமா என்றைக்கும் வெற்றிபெற்றதில்லை என்பதை தனமும் நீருபிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

 

http://vinavu.wordpress.com/2008/11/01/dhanam/