தமிழ்த்தேசியம் எப்போதோ தோற்றுவிட்டது என்பது எதார்த்த உண்மை. இது இன்றைய புலிகளின் இராணுவத் தோல்வி மூலம் நிகழவில்லை என்பது மற்றொரு உண்மை.
இதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.
புலி முகமூடியை மூடிமறைத்தபடி பல புதிய இணையங்கள் முதல் தமிழ்வுணர்வு என்று கூத்தாடும் இந்தியப் புல்லுருவிகள் வரை இதில் அடங்கும். தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது, அவர்களின் சொந்த செயலுக்கு வழிகாட்ட மறுக்கும், தனிமனித வழிபாடு சார்ந்த குறுகிய பிதற்றல்கள்.
பொதுவாக அரசியல் ரீதியாக சமூகத்தைப் பார்க்கின்றவர்கள் பலர், இன்று புலிகளின் தோல்வி தமிழ் தேசியத்தின் தோல்வி என்று கூறுகின்ற மட்டமான அரசியல் நிலைக்குள் வீழ்ந்து புதுப் புலியாகின்றனர். புலிகளின் வெற்றியில் தான் தமிழ் இனத்துக்கு ஏதாவது கிடைக்கும் என்று கூறுகின்ற அளவுக்கு, இவர்களின் அரசியல் தரம் கெட்டுக்கிடக்கின்றது. பேரினவாதத்தின் வெற்றியால், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது என்ற எதார்த்தம் சார்ந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றனர். இப்படி புலியை நியாயப்படுத்த, பேரினவாதத்தை துணைக்கு அழைக்கும் தர்க்கம். இதை ஆதரி அதை எதிர் என்ற எல்லைக்குள், மக்கள் தேசியத்தை மீண்டும் மீண்டும் தூக்கில் போடுகின்றனர்.
புலிகள் சரி, பேரினவாதம் சரி மக்களை எப்படி கையாளுகின்றது என்பதையிட்டு இவர்களுக்கு அக்கறை கிடையாது. இருசாராருமே தமிழ் மக்களை தமது சொந்த எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்மக்களின் உரிமைகளை, தத்தம் நலனுக்கு எதிரானதாகவே கருதுகின்றனர். இதனால் தமிழ் மக்களை ஒடுக்குகின்றனர்.
பேரினவாதம் தமிழ் இனத்தின் மேல் குண்டுமாரியைப் பொழிகின்றது என்பதாலோ, தமிழர் வாழ் பிரதேசத்தை அது சுடுகாடாக்குகின்றது என்பதாலோ, புலிகளை நாம் நியாயப்படுத்திவிட முடியுமா! எந்த மக்கள் அடிப்படையிலும், நியாயத்தை புலிகள் சார்ந்து முன்வைக்க முடியாது.
கடந்த 30 வருடமாகவே பேரினவாதம் இதைத்தான் செய்கின்றது. இந்த பேரினவாதத்தை புலிகள் தாம் மட்டுமே ஒழிக்கப் போவதாக கூறி, தமிழ் இனத்துக்கு எதிராகவே பாசிசத்தை ஏவினர். பல ஆயிரம் தமிழ்மக்கள் இதனால் அவர்களால் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் மக்களை மண்ணைவிட்டு விரண்டோட வைத்தனர். பலர் எதிரியின் பக்கத்தில் தற்காப்புக்காகவென சேர்ந்து பின்னர் படிப்படியாக துரோகிகளானார்கள். இராணுவப் பகுதி பாதுகாப்பானது என்று கருதிய தமிழ்மக்கள், பெருமளவில் புலம் பெயர்ந்தனர். இந்த புலம்பெயர்வுக்கு எதிரான புலிகளின் வன்முறையினால் தான், புலிகளுடன் கொஞ்ச மக்கள் எஞ்சி உள்ளனர். இப்படி புலித் தேசியம் தமிழ் தேசியத்தை சுடுகாடாக்கியது.
இதனால் தான் பேரினவாதம் இன்று இலகுவாக வெற்றிபெறுகின்றது. தமிழ் மக்களை ஆயிரமாயிரமாக கொன்ற புலிகள், தமிழ் இனத்தையே தனக்கு எதிராக நிறுத்தியுள்ளது. தமிழ் இனத்தை துப்பாக்கியின்றி, புலிகளால் அடக்கியாள முடியாதது இன்றைய அவலம். தமிழ் மக்களை தம்முடன் வைத்திருப்பதற்கே, துப்பாக்கி முனையை பயன்படுத்துகின்றனர். புலிகளின் துப்பாக்கி எதிரிக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படவில்லை, தமிழ் மக்களுக்கு எதிராகவும் திருப்பப்பட்டுள்ளது. முன்னால் பேரினவாதம், பின்னாலோ தமிழ் மக்கள் என்று, புலிகளின் துப்பாக்கிக்கு இரண்டு எதிரிகள்.
இப்படி துப்பாக்கி முனையில் தமிழ் இனத்தை தன் முன்னால் கவசமாய் நிறுத்தியுள்ள புலிகள் தான், அவர்கள் மேல் குண்டுமாரி போட வைக்கின்றனர். இதிலிருந்து தமிழ்மக்கள் தப்பியோடக் கூட புலிகள் அனுமதிப்பது கிடையாது.
இந்த புலிப்பயங்கரத்தில் இருந்து தப்பி வரும் மக்கள், உயிருக்கஞ்சி வள்ளங்களில் கடல்வழியாக தப்பியோடுகின்றனர். தப்பிச்செல்வதிலும் கூட ஒரு இராணுவத் தாக்குதல் போன்று, தம் உயிரைப் மீண்டும் பணயம் வைக்கின்றனர். தப்பியோடும் போது பிடிபட்டாலோ, புலிகள் வழங்கும் தண்டனைகள் உயிர் பறிப்பு வரை அரங்கேறுகின்றது.
புலிப்பிரதேசத்தில் இருந்து தப்பி செல்வதும், தப்பி ஓடுவதும் கூட துரோகமாக்கப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய கடும் குற்றமாகியுள்ளது. தமிழ் மக்களின் கதி இது. இதை யாரும் பேசுவது கிடையாது.
பேரினவாத வெறித்தனத்தில் இருந்து மக்கள் தப்பிப்போக முடியாதவாறு தடுக்கும் புலிகள், தம்முடன் சேர்ந்து மக்களையும் மரணிக்க கோருகின்றனர். இதை வைத்து கண்ணீர்ப் பிரச்சாரம் செய்கின்றனர். ஒலிநாடாக்களை விடுகின்றனர். உணவை அனுப்பவில்லை என்கின்றனர். உணவுக் கப்பலைத் தாக்குகின்றனர். பிரச்சாரத்துக்கு உருவாக்கப்படும் கோயம்பல்ஸ் பாசிச நடவடிக்கைகள். குறுகிய அரசியல் இலாபம் அடையும் அற்ப சந்தோசத்துக்கான நடவடிக்கைகள், பிரச்சாரங்கள்.
பேரினவாதம் கடந்த 30 வருடமாக நடத்தும் யுத்தமும், யுத்தக் கொடுமைகளும் ஒரு இனத்தின் ஆன்மாவை சிறுகசிறுகக் கொல்கின்றது. ஆனால் புலிகளோ தமிழ்த்தேசியத்தை ஒரேயடியாக கொன்றுவிட்டனர்.
உண்மையில் தமிழ் தேசியத்தை பேரினவாதம் தோற்கடிக்கவில்லை. அவர்கள் புலித் தேசியத்தைத் தான் தோற்கடிக்கின்றனர். அப்படியாயின் யார் தமிழ் தேசியத்தை தோற்கடித்தனர் என்றால், புலிகளும் புலியெதிர்ப்பாளர்களும் தான்.
புலிகள் இதை தம் பாசிசம் மூலம் நிறைவேற்றினர் என்றால், புலியெதிர்ப்பு தம் கைக் கூலித்தனம் மூலம் நிறைவு செய்தனர். இதைச்செய்ய புலிகள் தேசியத்தையும், புலியெதிர்ப்போ ஜனநாயகத்தையும் ஆயுதமாக பயன்படுத்தினர். இவற்றை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தனர். இப்படி தமிழ்மக்களின அடிப்படையான உரிமைகளை மறுத்ததன் மூலம், தமிழத்;தேசியத்தின் அனைத்து சமூக அடிப்படைகளும் அழிக்கப்;பட்டுவிட்டது. இதன் மேல் தான் பேரினவாதம், தன் சொந்த யுத்த வழியில் சுத்திகரிப்பைச் செய்கின்றது. இப்படி இதற்கு பட்டுக்கம்பளம் விரித்தவர்கள், தேசியம் ஜனநாயகம் என்று கூவுகின்றனர்.
தமிழ்மக்கள் தம் தேசியத்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் கூட போராடமுடியாது. தேசியத்தை கோரும்போது அதை புலி என்றும், ஜனநாயகத்தை கோரும் போது அரச கைக்கூலிகள் என்றும் முத்திரை குத்தி பரஸ்;பரம் ஒடுக்குகின்றனர். இப்படி தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் இவர்கள், அதை தம் கையில் எடுத்து ஒன்றுக்கொன்று எதிராகவே நிறுத்தியுள்ளனர்.
தேசியத்தை புலித்தேசியமாக, ஜனநாயகத்தை அரச கைக்கூலித்தனமாக குறுக்கியதன் மூலம், தமிழ் இனத்தை இதற்குள் அடிமைப்படுத்தி அடக்கியாளுகின்றனர். தமிழ் மக்கள் இந்த கொடுமையால் சிந்திச் சிதறியும், வாழ்விழந்தும், பிரமைபிடித்தும், நடைப்பிணமாகியும், வாய்பொத்தி மவுனமாகிக் கிடக்கின்றனர். தமிழ் இனம் வாய் திறந்து பேசமுடியாது, மனநோயாளியாகியுள்ளது. இலங்கை எங்கும், இது தான் தமிழனின் இன்றைய நிலை. மீட்சிக்கு எந்த வழியும் கிடையாது. அதை ஆதரி, இதை ஆதரி என்று காரணங்களை கூறுகின்றவர்கள், மக்களின் சொந்த மீட்சிக்கான வழியைக் கூறுவது கிடையாது. அதை இதற்குள் அல்லது அதற்குள் ஒத்திப்போடுகின்றனர். இப்படி இவர்கள் பேசுவது மக்களுக்கல்ல. மாறாக தம் நிலைக்கு ஏற்ப, இதில் எதுவோ ஒன்றை ஆதரிப்பதை பற்றிய அரசியலாகின்றது.
இவர்களால் தான், தமிழ் இனம் தன் தனிப்பட்ட சுயத்தைக் கூட பறிகொடுத்து நிற்கின்றது. மற்றவனை எதிர்பார்க்கின்ற, கையாலாகாத்தனத்தை சமூகத் தீர்வாக வைக்கின்றனர். இவர்கள் அல்லது அவர்கள் இதைத் தீர்ப்பார்கள் என்று நம்பி, அதை ஏங்கி வாழக் கோருகின்றனர். இதைத்தான் அனைத்து தரப்பும் முன்வைக்கின்றனர். புலியை நம்பு அல்லது அரசை நம்பு என்கின்றனர். இவர்களின் மக்கள் விரோத செயலுக்கு, மக்களை கைக்கூலியாக இருக்கக் கோருகின்றனர்.
இப்படி தமிழ் இனத்தின் குரல்வளையை நெரித்தபடி சதிராடுகின்றனர். அரசியலை சூதாட்டமாக்குகின்றனர். தமிழ் இனத்தின் உரிமையை, தம் சொந்த நலனுக்கு ஏற்ப தூக்கில் போடுகின்றனர். இதைத்தான் தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் கூறுகின்றனர். இதில் இருந்து மீள்வது மட்டும்தான், மக்கள் தம் சொந்த அரசியல் நடவடிக்கை ஊடாக மட்டும்தான், அவர்கள் தம் சொந்த விடுதலையை அடையமுடியும். இந்த அரசியல் செயற்பாட்டை முன்னிறுத்தி போராடுவது மட்டும் தான், உண்மையானதும் நேர்மையானதுமான மக்கள் அரசியலாகும். இதை முன்னிறுத்தி போராட அறைகூவுகின்றோம்.
பி.இரயாகரன்
24.10.2008