Language Selection

பார்த்திபன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகிய தூண்டில் இதழ் ஆசிரியர்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலாச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. அந்தளவுக்கு சமூக கண்ணோட்டத்துடன், நுட்பமாக எழுதியவர்.

இந்தக் கதையும் அப்படித்தான். உருவகக் கதையை அடிப்படையாகக் கொண்ட, இந்தக் கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளி நகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையூடாக சொல்ல முனைகின்றார். 

உங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் பார்த்திபன் எதிர்பார்க்கின்றார்.   

 

தமிழரங்கம்
16.03.2009
 

 

 

மூக்குள்ளவரை !

"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே.." எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை... 

 

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

 

இந்த நேரத்திலை ஆர் என்னட்டை வாறாங்கள் எண்ட கேள்வியோடை, டிவிடியை நிப்பாட்டி, கதவைத் திறந்தால்..

 

"வணக்கம்" அழகுசீலனும், பாக்கியராசாவும் !

 

"என்ன இந்தப் பக்கம்! கண்டு கனகாலம் !!" ரண்டு, மூண்டு வருசமிருக்கும்.

 

எல்லாருமாய் செற்றியிலை இருக்க, ரீவியையும் நிப்பாட்டினன்.

 

"உங்களைத்தான் காணுறேலை. ஒரேயடியா ஒளிச்சிட்டியள்" எண்டு அழகுசீலன் சிரிக்க, "என்னத்தை செய்து... அதுதான் ஒதுங்கியிட்டன்"

 

"உங்களுக்கு எத்தினை அழைப்பிதழ் அனுப்பியிருப்பம் ஒண்டுக்குக் கூடி நீங்கள் வரேல" பாக்கியராசா கடிந்தார். செல்லமாய் எண்டுதான் நினைக்கிறன்.

 

"ஓ... என்னத்தை... நான் களைச்சுப் போனன். முந்தின ஸ்ரோங் இப்ப இல்லை. சோலி சுரட்டொண்டும் வேண்டாமெண்டிட்டு வீட்டோடயே கிடக்கிறன்" என்னத்தை வெட்டிப் புடுங்கி நான் களைச்சுப் போனன் எண்டதுக்கு இண்டை வரைக்கும் என்னட்டை மறுபொழியில்லை.

 

"அப்பிடிச் சொல்லக்கூடாது. எழுத்தாளன் உருவாகிறதில்லை, பிறக்கிறான். அதாலை எங்களை நாங்களே மிஸ்யூஸ் பண்ணக் கூடாது" பாக்கியராசா சொல்ல, அழகுசீலன் தொடர்ந்தார்..

 

"நாங்கள் நீங்கள் எல்லாரும் ஒரே பஜ்; ஒரேநேரம் தான் எழுதத் தொடங்கினனாங்கள். ஆனா நீங்க தொடங்கின இடத்திலையே நிக்கிறியள். என்ரை ரண்டு புத்தகம் மணிமேகலைப் பிரசுரமாய் வந்திட்டுது.

அடுத்தது இப்பதான் புறூவ் பாக்க அனுப்பியிருக்கினம்"

 

"என்ன புத்தம்?" ஆர்வமாய் கேட்டன்.

 

"புலம் பெயர்ந்த நாடுகளில் குழாய் திருத்துவது எப்படி?"

 

அழகின்ரையும், பாக்கியத்தின்ரையும் இலக்கிய வளர்ச்சியை நினைக்க எனக்கு பொறாமை கொஞ்சமாய் வந்தது உண்மைதான். எல்லாம் என்ரை கையாலாகாத சோம்பல்.

 

"இண்டைக்குப் பாருங்கோ, எனக்கு தமிழ் மின்னல், தமிழ் வைரம் எண்டெல்லாம் பட்டங்கள் தந்திருக்கினம். வருசத்துக்கொருக்கா எண்டாலும் பொன்னாடை போத்தியினம். வாற மாசமும் தமிழ் நெஞ்சம் எண்ட பட்டம் தாறதுக்கு ஒரு பகுதி ஒழுங்கு செய்யுது" அழகுசீலன் சொல்ல,

 

"கேள்விப்பட்டனான். என்ன, ரீயோ? கோப்பியோ?" எண்டு கேட்டன்.

 

"பொறுங்கோ. இப்பதான வந்தனாங்கள். ஆறுதலாய் குடிப்பம். இப்ப கதைப்பம்" தொடர்ந்த அழகு பாக்கியராசாவைக் காட்டி, "இவருக்கும் இந்த வருசத்துக்கிடையிலை டொக்ரர் பட்டம் குடுக்கிறதுக்காண்டி கனடாவிலையிருந்து கவிச்சக்கரவர்த்தி சிகாமணியை ரிக்கற் குடுத்துக் கூப்பிடிறம்"

 

"வெறும் டொக்ரரோ இல்லை தமிழ் டொக்ரரோ" எண்டு நான் கேக்க, "உந்த நக்கல்தான வேண்டாமெண்டிறது" எண்டார் பாக்கியராசா.

 

பிறகு, தமிழிலை இண்டைக்குவரைக்கும் குடுத்து முடிச்ச பட்டங்களைப் பற்றியும், இன்னும் மிஞ்சியிருக்கிற கொஞ்சப் பட்டங்களாலை வரக்கூடிய பட்ட நெருக்கடி நிலமையளைப் பற்றியும் அலசி

ஆராய்ஞ்சோம். வருங்கால சமுதாயத்துக்கு எந்த ஒரு பட்டத்தையும் விட்டுவைக்காமல் போறோமே எண்ட கவலையும் வராமல் இல்லை. அப்பதான் எனக்கு ஞாபகம் வந்திது.

 

"அது சரி, உங்களோடை எப்பவும் சேந்து திரியிற ராமநாதனைக் காணேலை. எங்கை ஆளும் என்னைப் போல களைச்சுப் போய் ஒதுங்கியிட்டாரோ?"

 

"ஏன் நீங்கள் கேள்விப்படேலையே?" பாக்கியராசா கேள்விக்குறி போட, நான் இல்லையெண்டு சொல்ல, அழகு விளங்கப்படுத்தினார்.

 

"ஆள் எங்களொடைதான் இருந்தவர். பிறகு தெரியாதே, மனுசன் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கடை சங்கக் கொள்கையிலையிருந்து மாறத் தொடங்கியிட்டார். நாங்கள் கதைச்சுப் பாத்தும் ஆள் திருந்தேலை. அதாலை விலத்தியிட்டம். இப்ப ஒண்டுக்குமுதவாததுகளோடை சேந்துகொண்டு அகில உலக புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றிய தமிழ் சங்கம் எண்டொண்டைத் தொடங்கி கூத்தடிச்சுக் கொண்டிருக்கிறார்"

 

"அப்ப உங்கடை சங்கத்துக்குப் பேர்..?"

 

"நாங்கள் மாத்தேலை. சர்வதேச உலக புலம்பெயர் எழுத்தாளர் சங்க தமிழ் ஒன்றியம் எண்ட பழைய பேரே இன்னும் இருக்கு" அழகு சொல்ல, "எங்கடைதான் ஒறிஜினல் எண்டு சனத்துக்குத் தெரியும்"எண்டார் பாக்கியராசா.

 

வெளித்தொடர்புகளை நான் குறைச்சதிலயிருந்து தமிழ் கூறும் நல்லுலகில் நடக்கிற ஆரோக்கியமான முயற்சிகளையெல்லாம் அறியாமல் போட்டேனே எண்டு எனக்கு கவலை வந்திட்டிது.

 

சங்கப் பிரச்சினையளிலை நான் சரியா பின்தங்கி நிக்கிறேன் எண்டது அவைக்கு வடிவாய் விளங்கியிருக்க வேணும். அகில உலக புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றிய தமிழ் சங்கத்துக்கும், சர்வதேச உலக புலம்பெயர் எழுத்தாளர் சங்க தமிழ் ஒன்றியத்துக்கும் இடையில இருக்கிற வேறுபாடுகள், முரண்பாடுகள், நல்லதுகள், கெட்டதுகள், நோக்கங்கள், பாதையள், துரோகங்கள், தியாகங்கள் எல்லாத்தையும் பொறுமையா, விலாவாரியா ரண்டுபேரும் ரைம் எடுத்து விளக்கினாப்பிறகு, திரும்பியும் கேட்டன்,

 

"ரீயோ? கோப்பியோ?"

 

"ரீ தான். பால் விடாதையுங்கோ. சீனியும் போட வேண்டாம்" எண்டு அழகு சொல்ல, தனக்கும் அப்பிடித்தானெண்டார் பாக்கியம்.

 

மூண்டு பேருக்குமாய் தேத்தண்ணி போட்டெடுத்துக்கொண்டு வந்தன்.

 

"நீங்களேன் இப்ப எழுதுறேல?" அழகு விசாரிச்சதிலை உண்மையான இன்ரஸ்ற் இருந்துதோ தெரியாது.

 

"அதுதான் முதலே சொன்னனே. வயசும் போட்டுது. களைச்சும் போனன். பின்னடிக்கு ஏன் சும்மா சோலி சுரட்டெண்டிட்டு..." எண்டு அவைக்குச் சொன்னாலும், ஷோபாசக்தி மாதிரியோ, சக்கரவர்த்தி மாதிரியோதான் எழுத ஆசை, ஆனா பேப்பயத்திலை அந்த சைற்றிலையே எட்டிப் பாக்காம இருக்கிறன் எண்ட உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். பள்ளிக்கூடத்திலை பிரின்சிப்பல் அடிக்க கை ஓங்கேக்கயே மூத்திரம் போட்டன் எண்டதும் என்னோடை படிச்ச ரண்டு மூண்டு பேருக்கும்ட்டும்தான் தெரியும். உனக்கு சமூகப்பார்வை இல்லை, அதாலை உன்னாலை இனி எழுதேலாது எண்டு மூண்டு மாசத்துக்கொருக்கா என்னை அரசியல் ரீதியா வறுத்தெடுக்குற குரு சொன்னதும் வெளியிலை தெரியாதெண்டு நம்புறன்.

 

"அப்பிடிச் சொல்லக்கூடாது. எழுதுற கை தொடந்து எழுத வேணும். இல்லாட்டி சனம் எங்களை மறந்திடும்."

 

"அழகு சொல்லுறது சரி. பீல்ட்டிலை நிக்கிறவரைக்கும்தான் எங்கடை பேர் நிலைச்சு நிக்கும். விட்டமோ அந்த செக்கனே காணாமப் போடுவம்"

 

"நாங்கள் சொல்லுறமெண்டு நீங்கள் கோவிக்கக் கூடாது. காத்து வளத்திலை பட்டம் ஏத்தினாத்தான் மேலை போகும். சும்மா புரட்சி செய்யிறம், புடுங்குறம் எண்டு எதிர்க்காத்திலை பட்டமேத்திறது புத்திசாலித்தனமில்லை."

 

"சரியாய் சொன்னியள் அழகு. இவ்வளவு பட்டங்கள் எங்களுக்கு கிடைக்குதெண்டால், உலகத்திலை தமிழ்சனம் இருக்கிற இடமெல்லாம் எங்கடை பேர் பேமஸெண்டால் அதுக்கு ஒரு றீஸன்ற்தான் இருக்கு.

அதுதான் எங்கடை தமிழ்சங்கம்.  சங்கம் மாதிரி ஒரு பலமான பின்னணியில்லாம வெறும் காத்திலை கத்தி சுத்தினவை எல்லாரும் இப்ப எங்கை?" எண்டு பாக்கியாராசா போட்ட போடிலை நான நிலைகுலஞ்சு போனன். என்ரை கடைசி அரசியல் சிநேகிதன் திருக்குமரன் கூட இருந்தாப்போல அல்லோலோயாவாகி, உலகம் அழியப்போகுதெண்டு ரண்டாயிரத்திலயிருந்து வெருட்டிக் கொண்டிருக்கிறான்.

 

"நான் ஒரு சங்கத்திலையும் சேருறதாய் இல்லை" எண்டேன்.

 

"சரி, சேர வேண்டாம். ஆனா தேவையில்லாம ஏன் அரசியலிலை கை வைக்கிறியள்? அதை விட்டிட்டு வேறை விசயங்களை எழுதுங்கோவன். எழுதுறதுக்கு எவ்வளவு விசயமிருக்கு. இப்ப அழகையே

எடுங்கோவன். புலம் பெயர்ந்த நாடுகளில் குழாய் திருத்துவது எப்படி? எண்டு அவர் எழுதினதிலை ஒரு சொட்டு அரசியல் கூடி இல்லை. அதேநேரம் சமுதாயத்துக்கு ஒரு மெசேச்சும் குடுத்திருக்கிறார்" எண்டு

பாக்கியராசா சொன்னதை எனக்கு இண்டைவரைக்கும் இருபத்தொரு பேராவது சொல்லியிருப்பினம். "திருப்பித் திருப்பி ஒரே அரசியல். படிக்க எங்களுக்கு அலுப்படிக்குது. ஏதேன் புதுசா எழுதேன்" ஆனா

அரசியல் இல்லாமல் என்னெண்டு எழுதறெதெண்டு இண்டைக்குவரைக்கும் எனக்கு விளங்குதேயில்லை. சாப்பிடுற அரிசியிலையும் அரசியல் இருக்கு எண்டு எனக்கு முந்தி வகுப்பெடுத்த, இப்ப ஏசியன் சொப்

வைச்சிருக்கிற கணேசலிங்கம் சொன்னதும் ஞாபகத்துக்கு வருகுது.

 

"பாக்கியம் சொன்னதை நீங்க ஒருக்கா வடிவாய் யோச்சுப் பாருங்கோ. அரசியல் எண்டாலே பிரச்சினைதான். அந்தக் கோதாரியை விடுங்கோ. இல்லை உங்களுக்கு கட்டாயம் அரசியல் எழுதினாத்தான் பத்தியப்படும் எண்டால் அற்லீஸ்ற் ஈழம், இயக்கம் எண்டதுகளையாவது விட்டிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றி எழுதிக் குவியுங்கோவன்" அழகும் விடுறதாயில்லை.

 

"கவிதை எழுதிப் பாருங்கோ"

 

"கவிதை எனக்கு வராது"

 

"கட்டுரை எழுதுங்கோ"

 

"அதிலயும் அரசியல் வரும்தானே..."

 

"உது குதர்க்கம். இண்டைக்குப் பாருங்கோ, உலகத்தின்ரை ரெம்பறேச்சரே குழம்பியிட்டுது. வின்ரர் சமறாகுது. சமர் வின்ரறாகுது. நிலம் வெடிக்குது. புயல் அடிக்குது. இதுகளை தமிழ் சமுதாயதுக்குக் கொண்டே சேக்கிற பொறுப்பு உங்களைப் போல ஆக்களிட்டைதான் இருக்கு" அழகு சொல்ல, ஏன் பொறுப்பை நீங்க எடுங்கோவன் எண்டு கேக்க நினச்சதை கேக்கேலை.

 

"அழகு சொல்லுறதும் சரிதான். நாங்களும் எழுதாம விட்டால் நாளையான் சந்ததிக்கு ஒண்டையும் செய்யாமப் போட்டாங்கள் எண்டு கிஸ்ரரி எங்களிலைதான் பழி போடும். இந்தப் பழிச் சொல் உங்களுக்குத் தேவையே?"

 

தேவையில்லைப் போலத்தான் பட்டது. ஆனா... எனக்கு கதை எழுதித்தான் பழக்கம். அதிலயும் இயக்கம், துவக்கு, வெடி எண்டு வராமல் எழுதேலாமக் கிடக்கு. குவான்ரமோவிலை கொண்டே விடுவம் எண்டு வெருட்டினாலும் கவிதை வராது. இதுக்கை கட்டுரை..!

 

"சரி வரப் போறம். வாற மாசம் விழாவுக்கு வந்திடுங்கோ. தமிழ் நெஞ்சம் பட்டம் தருகினம்" அழகு தந்த இன்விரேசனை வாங்க, "கதைச்சதுகளை ஆறுதலா இருந்து யோசியுங்கோ. பீல்ட்டிலை நிக்கிறது முக்கியம்"

 

ஆக்கள் போட்டினம்.

 

திரும்ப வந்து, விட்ட இடத்திலைப் படத்தைப் போட, மனசு அஸினோட ஒட்டேலை. பீல்ட்டிலை நிக்க வேணும்! அரசியல் இல்லாமல் எழுத வேணும்!! இல்லாட்டிக் காணாமல் போடுவன்!!!

 

கவிழுவாங்கள். மினக்கெட்டு, வீடு தேடி வந்து, சும்மா கிடந்த என்னைக் குழப்பிப் போட்டுப் போறாங்கள். காவல்கோபுரம், விழித்தெழுவோடை வீட்டு வாசலிலை நிக்கிற யெகோவாக்காறர் மாதிரி !

 

ஸ்ராட்டிலை எல்லாம் பிரச்சினையில்லாமல் ஒழுங்காய்தானிருந்தது. அஞ்சாறு கதையெழுதி, நாலைஞ்சு பேர் என்னை நக்கலடிச்சாலும், நான் வெருளுற அளவுக்கு ஒண்டும் நடக்கேலை. அந்தத் துணிவிலைதான் புனைபேர் கூடி வைக்காமல் எழுதிக்கொண்டிருந்தனான் தேவராசா வாத்திக்கு அடி விழும் மட்டும்.

 

தனக்குப் படிப்பிச்ச வாத்தியை ஊரிலை போட்டிட்டாங்கள் எண்டு தேவராசா வாத்தி இங்க அந்திரட்டி வைக்க, ஆறெழுபேர் வந்து சாத்து சாத்தெண்டு சாத்திப் போட்டுப் போட்டாங்கள். ஆஸ்பத்திரியிலை வாத்தியைப் போய் பாக்கேக்க எனக்கு குடல் இறங்கிப் போச்சு. இனி எழுதுறதே இல்லையெண்டு சேலைன் போத்தலுக்குப் பக்க்கத்திலை நிண்டு முடிவெடுத்ததுதான், இண்டைக்கு மட்டும் பின்வாங்கவேயில்லை. என்ரை உடம்பு ஒரடிக்கே தாங்காது.

 

இலக்கிய உலகம் ஒண்டும் என்ரை முடிவாலை நட்டப்பட்டதாய் தெரியேலை. அதுபாட்டுக்கு ஒரு சைற்றிலை தன்ரை பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கு. அப்பப்ப என்னட்டை அஞ்சோ பத்தோ கைமாத்து வாங்கிற சுகந்தன் மட்டும் "ஏன்ராப்பா, ஒண்டும் எழுதிறேலயே" எண்டு கேப்பான். அவன் என்ரை பதிலை எதிர்பார்க்கிறயில்லையெண்டு தெரியும்.

 

தொடந்து எழுதாட்டி நான் காணாமல் போடுவன் எண்டு அழகும், பாக்கியமும் சொல்லிப்போட்டுப் போட்டாங்கள். உண்மைபோலதான் கிடக்கு. முந்திப் பழகின கனபேர் இப்ப ஏன் நாயேயெண்டும் திரும்பிப்

பாக்கிறேலை. போன் பண்ணிறேலை. ஒரு ஹலோ சொல்லுறதுக்கு கூடி ஆக்களைக் கலைச்சுப் பிடிக்க வேண்டியிருக்கு. உந்த தமிழ் மண், தமிழ்க் கத்தரிக்காய் பட்டங்கள் ஒண்டும் வேண்டாம். என்ரை

பாட்டிலை ஒரு சைற்றிலை இருந்து எழுதிக் கொண்டிருந்தா கொஞ்சப்பேரோடை ஒரு ரச்சாவது இருக்கும். எழுதலாம் எண்டு நினைக்கேக்கயே தேவராசா வாத்தியும், ஆஸ்பத்திரியும் கலர் கலராய் ஞாபகத்துக்கு வந்து...

 

அவங்கள் சொன்ன மாதிரி இந்த அரசியலை விட்டிட்டு எழுதலாமோ?!

 

சரிவரும்??

 

மூண்டு கிழமை போயும், இந்த விசயம்தான் மண்டேக்கை பிக்சர் காட்டிக் கொண்டிருக்கு.

 

அழகுசீலனுக்கு தமிழ்நெஞ்சம் பட்டம் குடுக்கிறதுக்கு ஒருநாள் முதல், போன்...

 

"ஆர்?"

 

"ஆரோ? எங்கை கதை??"

 

அவவும் மாசத்துகொருக்கா களைக்காம என்னட்டைக் கதை கேக்கிறா. நானும் கீறுப்பட்ட டிவிடி மாதிரி..

 

"பிளீஸ்.. என்னை விட்டிடுங்கோ. நான் இப்ப எழுதுறேலை. என்னோட கதைச்சு உங்கடை நேரத்தை மினக்கெடுத்துறதை விட்டிட்டு, பேமஸான எத்தினை பேர் இருக்கினம். அவையிட்டை கேளுங்கோவன்"

 

"நான் உங்களிட்டை ஐடியா கேக்கேலை. உங்கடை கதை வராம எங்கடை அடுத்த இசு வராது" எண்டு அழுத்திச் சொல்லேக்கை, சுவிசில ஒரு தொங்கலிலை, மாட்டுக் கொட்டிலுக்கு முன்னாலை நானும்,

பரிஸ்கில்ரன், ஷகிறா, பையொன்ஸ் எல்லாரும் நிக்க, ஸினோ பயங்கரமாய் கொட்டுது. நான் நல்ல லெதர் ஜக்கற், தொப்பி, சப்பாத்து, கைக்கு கிளவ்ஸ் எல்லாம் போட்டிருக்க, மற்றவையெல்லாரும் கைலேஞ்சியிலை தைச்ச உடுப்பையும் போட்டுக்கொண்டு, "வருகில் வாடி, வராட்டிப் போடி" எண்ட குத்துப் பாட்டுக்கு ஆட....

 

"என்ன சத்ததைக் காணேலை? "

 

"நான் என்ன சொல்ல வாறனெண்டால்..."

 

"வரவேண்டாம். எழுதியனுப்பினாக் காணும்"

 

போனை வைச்சாப் பிறகும், என்னாலை டக்கெண்டு ஒரு முடிவெடுக்க முடியேலை. எழுதாட்டி நான் இல்லை. எழுதப் பயமாய் இருக்கு. என்னையும் போன் பண்ணி எழுதச் சொல்ல ஒராளாவது மிஞ்சியிருக்கு.

இந்தச் சான்ஸையும் விட்டால்...

 

கதை வேண்டாம். கவிதை வராது. கட்டுரையெண்டால்... ரெம்பரேச்சரைப் பற்றி எழுத சயன்ஸ் அறிவும் இல்லை. வரவர வெயில் கூடிக்கொண்டு போறதுக்கு காரணம் எண்டு அமெரிக்காவையும், சீனாவையும்

திட்டினாலும் அரசியல்தான். பிறகு போரைப் பற்றி எழுத வேண்டி வரும். வேண்டாம்.

 

அப்ப எதைப் பற்றி..

 

எதைப் பற்றி...

 

ஒரு மசிர் ஐடியா கூடி வருகுதில்லை.

 

வீட்டிலை சீனி, பட்டர் எல்லாம் முடிஞ்சுது. கடைக்குப் போகலாமெண்டால் வெளியில பறக்கிறதைப் பாக்க கலக்குது. சனியன் பிடிச்ச அலேஜி சனி ஞாயிறு வந்துதெண்டால் நாசங்கட்டு. ஆனா வேற வழியில்லை. துணிந்தபின் மனமே துயரம் கொல்லாதே, சோகம் கொல்லாதே...

 

கடைக்குள்ளை போய் சாமான் வாங்கு மட்டும் எல்லாம் சுத்தம். வெளியில வந்த உடனை முதலாவது தும்மல், பிறகு ரண்டு, மூண்டு, நாலெண்டு தொடர... ரண்டு கையிலையும் தூக்கிக் கொண்டு போன பாக்குகளை றோட்டிலை வச்சிட்டு, இடப்பக்க பொக்கற்று கைலேஞ்சியாலை மூக்கையும், வலப்பக்க பொக்கற்று கைலேஞ்சியாலை எரிஞ்சு தண்ணி ஊத்திக் கொண்டிருந்த கண்ணையும் துடைச்சு துடைச்சு நடக்க, வாழ்க்கை வெறுத்துப் போச்சு.

 

எரிச்சலோட நடக்கிறன், குறுக்காலை வந்த சந்திரன் கேக்கிறான் " றோட்டிலை நிண்டு அழுறளவுக்கு என்னடாப்பா நடந்தது?"

 

எனக்கு வந்த கொதிக்கு ஆளை றோட்டிலை விழுத்தி, சாம்பு சாம்பெண்டு சாம்பினால் என்னெண்டு நினைக்கேக்கையே, நான் வன்முறைக்கு எதிரான ஆள் எண்ட இமேஜ் தடுத்துப் போட்டுது.

 

"நக்கல்ஸ் என்ன... சனியன் பிடிச்ச அலேஜியெடாப்பா... மனுசரை வாட்டியெடுக்குது"

 

"நீயும் உன்ரை அலேஜியும்... நீதானே கதையள் எழுதுறனீ.. உன்ரை அலேஜியைப் பற்றி ஒரு சரித்திர நாவல் ஒண்டெழுதேன்"

 

என்னை எப்பிடியும் வன்முறையாளனாக்கிப் போட்டுத்தான் சந்திரன் வெளிக்கிடுவான் போல கிடக்கு. மகனே கூல் டவுண். இனி நிண்டா கொதி கூடியிடும்.

 

"நான் போறன்" எண்டிட்டு, வந்திட்டன்.

 

வீட்டுகு வந்தவுடனை கைவைத்தியமாய் ஒரு கடுங்கோப்பி வைச்சுக் குடிச்சிட்டு, செற்றியில விழேக்கைதான், பொறி தட்டிச்சு. "உன்ரை அலேஜியைப் பற்றி எழுதேன்" சந்திரா... நீ கிறேற் !

 

அலேஜியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினாப் போச்சு. என்ரை சொந்தப் பிரச்சினை எண்டபடியா அதில ஒரு உயிர் இருக்கும். எதார்த்தமாயும் இருக்கும். சுப்பர் ஐடியா !

 

பத்தாம் வகுப்பை ஒரு மாதிரி தாண்டி, அட்வாண்ட்ஸ் லெவலுக்கு வந்தாச்சு. பள்ளிக்குடத்திலை முதல்நாள் பிரின்சிப்பல் வகுப்புப் பிரிக்கிறார்.

 

"பயோ படிக்கப் போறவை கையை உயத்துங்கோ"

 

நிண்டவையிலை சரி அரைவாசிப்பேர் உயத்தினம். வீட்டை அப்பா, அம்மா, அன்ரி, மாமா, மாமி மற்றும் சித்தப்பா ஆகியோர் வழிக்கு வழி சொல்லிவிட்டவை "நீ டொக்ரராய்தான் வரவேணும்"

 

"மற்ஸ் படிக்கப் போறவை கையை உயத்துங்கோ"

 

மிச்சமிருந்த எல்லாரும் கையை உயத்திச்சினம். ஊர் முழுக்க டொக்ராயும், எஞ்சினியராயும் இருந்தால், வெலைவாய்ப்புப் பிரச்சினையள் வருமே எண்ட கவல வராமலில்லை.

 

"ஆர்ட்ஸ்?" கை உயத்த ஒருதரும் இல்லை.

 

"அக்ரிகல்ச்சர்?" ஒரு கையும் உயரேலை.

 

மசிர விட்டார் பிரின்சிப்பல். "உது சேப்பில்லை. ஒரு வகுப்பிலை 20 பேர்தான் படிக்கலாம். ஆர் ஆட்ஸ்? ஆர் அக்றிகல்ச்சர்?"

 

வருங்கால எஞ்சினியர்மாரும், டொக்ரர்மாரும் விட்டுக் குடுக்கிறாதாயில்லை.

 

"அப்ப சரி, நானே முடிவெடுக்கிறன்" வாத்திமாற்றை பிள்ளையள், கவுண்மேந்து உத்தியோககாறற்றை பிள்ளையள், தனக்குத் தெரிஞ்ச ஆக்களின்ரை பிள்ளையளை பிரின்சிப்பல் மற்சுக்கும், பயோவுக்கும்

பிரிச்சுவிட்டிட்டு, மிச்சப் பேரை ஆட்சுக்கும், அக்றிகல்ச்சருக்கும் அனுப்பி விட்டார். பிரின்சிப்பலின்ரை வீட்டிலையிருந்து அஞ்சு வீடு தல்ளியிருக்கிறபடியாலயும், அப்பப்ப பிலாப்பழம் கொண்டே வீட்டை

குடுக்கிறதாலயும் நான் பயோ !

 

எனக்கும் மெடிக்கலுக்குமான வரலாறு இப்பிடித்தான் ஸ்ராட் பண்ணிச்சு. ஏ எல்லிலை நாலு பாடமும் பெயில் விட்டிருக்காட்டி நான் இண்டைக்கு ஒரு டாக்குத்தர் எண்டதை எந்தக் கொம்பும் மறுக்கேலாது.

 

அலேஜியைப் பற்றி எழுத எனக்கு றைற் இருக்கு.

 

என்ரை அலேஜியைப் பற்றி நான் எழுதாம, ஆர் எழுதுறது.

 

ஓகே. எழுதுவம்.

 

கனகாலத்துக்குப் பிறகு திரும்ப எழுதப் போறன் எண்டதை நினைக்க, புல்லரிச்சு, மண்டைக்கே பட்சி சில்லவுட் மியூஸிக் வாசிக்குது.

 

வலு கவனமாய் எழுத வேணும். தப்பித் தவறிக்கூடி அரசியல் மூச்சுக் காட்டக் கூடாது. இந்தக் கட்டுரை மட்டும் பப்ளிஷாகி பேமஸாகட்டும், மலச்சிக்கல், வாயுவெளியேற்றம் எண்டு தொடந்து எழுதி  எழுத்துலகில என்ரை பேரை நிரந்தரமாக்கிப் போடலாம். அழகு, பாக்கியம்... உங்களை பிறகு வந்து சந்திக்கிறன்.

 

தமிழ் மாணிக்கம், தமிழ் இடி, மழை  பட்டங்களிலையெல்லாம் எனக்கு சொட்டு ஆசையுமில்லை. இலட்சிய எழுத்தாளன் இதெயெல்லாம் தாண்டினவன். சமுதாயதிலை தீர்வு காணப்பட முடியாமல் புரையோடிப் போயிருக்கிற அலேஜி, மலச்சிக்கல், வாயுப் பிரச்சினயளுக்கு என்ரை பங்களிப்பை செய்தன் எண்ட ஒரு ஆத்ம திருப்தியே எனக்குப் போதும்,.

 

கட்டுரைக்கு ஒவ்வாமை எண்டே தலைப்பு வைக்கலாம்.

 

ஏதோ மொட்டையா இருக்கிற மாதிரி இருக்கு. தலைப்பெண்டிறது வலு கிளியறாயும், சிம்பிளாயும் இருக்க வேணும்.

 

ரண்டு நாளைகு பிறகு, "மூக்குள்ளவரை சளி இருக்கும்" எண்ட தலைப்பு பொருத்தம் போல இருந்துது.

 

சாய்.. தலைப்புக்கே ரைம் எடுக்குது. திரும்பி யோசிக்க, ஏதோ தலைப்பில அட்ராக்சன் இல்லாதமாதிரி

கிடக்கு. "இருக்கும்" எண்டதை எடுத்துப் போட்டு "மூக்குள்ளவரை சளி"

 

இதுகும் திருப்தியில்லை. தலைப்பே முழுவிசயத்தையும் சொல்லிப் போடுது. பிறகார் மிச்சக் கட்டுரையைப் படிச்சு மினக்கெடப் போறாங்கள். "சளி"யையும் எடுத்தால் "மூக்குள்ளவரை"

 

இது சுப்பர். மூக்குள்ளவரை என்ன இருக்கும் எண்டு வாசகரைத் தேட வைக்குது. இதுதான் ஒரு ஸ்ராண்ட்டாட் எழுத்தாளனின்ரை ஸ்ராண்டாட். வாசிக்கிறவைக்கு எல்லாத்தையும் தட்டிலை வைச்சு குடுக்கேலாது. அவையும் மூளைக்கு வேலை குடுக்க வேணும்.

 

தலைப்பு ஓகே.

 

இனிக் கட்டுரைக்குத் தேவையான இன்போமேசன்களைச் சேக்க வேணும்.

 

அடுத்தமுறை டொக்டரிட்டை போகேக்க, அங்க இருந்த அலேஜி பம்ப்லெற்ஸ் எல்லாத்தையும் கோண்டந்திட்டன். இப்பதானே இன்ரநெற் இருகு. விக்கிபீடியாவிலை மேஞ்சு எடுக்க வேண்டின பொயின்ற்ஸ் எல்லாம் சேக்கத் தொடங்கியிட்டன். இங்கிலிஸ் புத்தகங்களிலயிருந்தெல்லாம் வசயம் எடுத்திருக்கிறன் எண்டு அடிக்குறிப்பு போட்டெழுதேக்க, கட்டுரை எங்கயோ போடும்.

 

ஒரு அலுவலுமில்லாமல், நல்ல மூட்டுமிருந்த ஒருநாள் எழுதத் தொடங்கியிட்டன்.

 

"ஒவ்வாமை என்பது நோயல்ல, அது ஒரு பாதுகாப்பே" என்று கட்டுரையின்ரை ஸ்ராட்டே சஸ்பென்ஸாயிருக்கிறதிலை எனக்குப் பேயத் திருப்தி.

 

கட்டுரையிலை வரவேண்டின முகியமான விசயங்களை ஒரு துண்டிலை குறிச்சு வைக்கிறது நல்லது. எனக்கு இப்ப வர வர மறதி கூடிக் கொண்டுவருகுது.

 

1.  .. உடம்புக்குள் பிரவேசிக்கும் கிருமிகளைத் தாக்கியழிக்க உடம்பிலேயே இருக்கின்ற பாதுகாப்புத்தான் பிறபொருள் எதிரி...

2. ... பிறபொருள் எதிரி பலவீனமாக இருந்தால் இலகுவாக நோய் பரவிவிடுகிறது.

 

உடம்பின்ரை செக்யூறிற்றி சிஸ்ரத்தைப் பற்றின இவ்வளவு பில்டப் போதுமெண்டு நினைக்கிறன். ஆக டீப்பாய் போனா வாசிக்க்கிறவைக்குப்போரடிக்கும். எதையும் க்ட் அன்ற் றைற்றாய் குடுக்க வேணும்.

 

எனக்கு எப்ப தொடங்கினது அலேஜி?

 

பேக்கரியில வேலை செய்யேக்க?!

 

"நீ அதிகமாக மாவைச் சுவாசித்தபடியால் அது சுவாசப்பையில் படிய ஆரம்பித்துவிட்டது. இதனை பிறபொருளெதிரி எதிரியாகவே கணித்திவிட்டதால் உனது உடம்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தாறுமாறாகத்

தொடங்கப்பட்டுவிட்டன. அதனால்தான் மூக்கில் சளி சுரந்து மூக்குத்துவாரத்தை அடைக்கிறது. கண்ணில் தொடர்ந்து கண்ணீர் வழிகிறது. உபவிளைவுகளாக தலை இடி வருகிறது. இதன் நீட்சி அஸ்மாவாக்கக்

கூட இருக்கலாம். எனது ஆலோசனை இந்த வேலையை நீ உடனடியாக விட்டுவிடுவது"

 

டொக்ரரின்ரை அட்வைஸ் அடிவயித்ததைக் கலக்கினாலும், நல்லாய்தான் வேலையை விட்டன். ஜேமனியில வேலை விட்டா அவ்வளவுதான். வெறும் பொக்க்ற்றோடை போத்து மூடிக்கொண்டு படுக்கிறது கூடிப் பறவாயில்லை. வீட்டுக்குளை அடைஞ்சு கிடந்து தட்டினாலும் தட்டிப்போடும்.

 

எல்லாம் ஒருநாள் மாச்சாக்கோடை மூச்செடுக்கேலாம விழும் மட்டும்தான்.

 

ஆஸ்பத்திரிக்குப் போய், நான் திரும்பி வாறதுக்குள்ளை வேலை போட்டுது. எல்லாம் போச்சு.

 

டொக்ரர் சொன்ன விசயங்கள், என்ரை சொந்தப் பிரச்சினை எல்லாத்தையும் அப்பிடியே எழுதேலாது. வாசிக்கிறவைக்கு அலுப்புத் தட்டும். அதேநேரம் இம்போட்டன்ற் பொயின்ற்சையும் எழுதாம விடேலாது.

 

பாதுகாப்புக்கெண்டு இருக்கிற பிறபொருளெதிரியின்ரை ஓவ்ர் றியாக்க்சன் முக்கியம்.

 

"மாவில் ஆரம்பித்து, இப்போது சிகரெட் புகை, வாசனைத் திரவியங்கள், வர்ணங்கள், மகரந்தம் என்று எல்லாவற்றையுமே எதிரியாக ச்ந்தேகிப்பதால் உனது ஒவ்வாமையின் பட்டியல் இன்னும் பெரிதாகிக்

கொண்டே போகிறது"

 

ஆக, வாற, போற எல்லாம் எனிமி எண்டு மூளை முடிவுகட்டியிட்டுது. செக்கியூறிற்றி எண்ட பேரிலை இப்ப ஸ்பை பண்ணிறதுதான் நடக்குது. போற போக்கிலை பிறபொருளெதிரி தன்னைத் தவிர ஒண்டையும் விடாது போல!

 

நல்ல சோக்காயிருக்கு. உதுக்கு நானே கிடைச்சன். ஒரு பக்கத்திலை தலையிடி உசிரை எடுக்குது. கண்ணுக்குளை கொள்ளிக்கட்டையைச் செருகினமாதிரி எரியுது. பக்கத்திலை இருக்கிற மவுசைக் கூடப்

பாக்கேலாம கண்ணாலை தண்ணி ஊத்துது.

 

"பிரச்சினை உனக்கு மட்டுமிலை, மனுசராய் பிறந்த எல்லாருக்கும்தான். அதுக்காண்டி எந்த நேரம் பாத்தாலும் சிணுங்கி மாதிரி கண்ணைக் கசக்கிக் கொண்டு நிக்காதை. சகிக்கேலாமக் கிடக்கு" எண்டு

போறவன் வாறவன் எல்லாம் சொல்லிக் கோண்டு போகேக்கை மண்டையால போகுது.

 

கண்டறியாத செக்யூறிற்றி சிஸ்ரம்.

 

ஒரு பாக்குக்குப் போகேலாது. நாப்பது சி வெக்கையெண்டாலும் வீட்டிலை யன்னல் திறக்கேலாது. சென்ற் அடிச்சிருக்கிற பெட்டைக்குப் பக்கத்திலை நிண்டு ரசிக்கேலாது.

 

சாய்... என்ன சீவியம்!

 

"ஒவ்வாமையை முழுதாக மாற்றமுடியாது. உனக்குத் தொல்லை கூடினால் தலையிடிக்கோ, மூக்கடைப்பிற்கோ அல்லது கண் எரிவுக்கோ மருந்து தரலாம். ஆனால் இது ஒரு தற்காலிகத் தீவுதான். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வாமையுடன் வாழ நீ பழகிக் கொள்ள வேண்டும். உனக்கு ஒவ்வாமையாக இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும். உணவுவகைகளைத் தவிர்க்க வேண்டும்" எண்டு டொக்ரர் சொல்லிக் கொண்டு பேகேக்கை, ஆளைப் போட்டு உழக்கிப் போட்டு எனக்கு உன்னிலைதான்ரா ஒவ்வாமை எண்டு கத்த வேணும் போல இருந்தது.

 

டொக்ரர் என்ன செய்வார்?

 

பிரச்சினை எனக்கு!

 

ஒவ்வாமையை விட்டுத் தப்புறதெண்டா ஒண்டில நல்ல ஆழத்திலை பங்கறுக்குள்ளை சீவிக்க வேணும். இல்லாட்டி நாஸாவிலை செவ்வாய்க்கு அடுத்த பிளைற்றுக்கு ரிக்கற் புக் பண்ண வேணும்,

 

இதெல்லாம் நடக்கிற அலுவலே.

 

மிஞ்சியிருக்கிறது டொக்ரர் சொன்ன மாதிரி அலேஜியோட அஜஸ் பண்ணி வாழ வேணும்.

 

கிழிஞ்சுது போ.

 

பத்து வருசத்துக் மேலாய் குளிசையாயும், ஊசியாயும் கோட்டிசன் ரத்தத்துகுள்ளை போய்க் கொண்டிருக்கு. வெளியிலை நல்ல காத்தை சுவாசிச்சுக் கொண்டு உலாத்துறதையும், பூவை ரசிக்கிறதையும், வாசனை மெழுகுதிரி கொளுத்துறதையும் விட்டு வருசக்கணக்காச்சு. பஸ்ஸிலை, ட்ரெயினிலை ஆளைச் சுண்டுற வடிவிலை யங் கேள்ஸ் பக்கத்திலை வந்திருதாலும், சென்ற் அடிச்சிருப்பினமோ எண்ட பயத்திலை வேறை சீற் மாறியிருக்க வேண்டியிருக்கு.

 

வாழ்க்கை வெறுத்துப் போச்சு.

 

இதை அப்படியே எழுதினனெண்டா,

 

".... இவரது எழுத்துகள் வாசிப்பவரின் மனதில் நம்பிக்கையீனத்தைத் துண்டுகின்றன.  எழுத்தாளரின் சமூகப் பொறுப்பாக இதைக் கருத முடியாது. இதுதான் யதார்த்தம் என்று எழுத்தாளர் சப்பைக்கட்டுக் கட்டலாம். அப்படியானால் எந்தவகை யதார்த்தத்தை இவர் தெரிவுசெய்கிறார்? இந்தத் தேர்வின் பின்னாலுள்ள இவரது சமூகப் பார்வை என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன..." எண்டொரு வாசகர் கடிதம் வந்தாலும் வரும்.

 

நானென்ன செய்ய! நிலமி அப்பிடி. அலேஜியை ஒரேயடியா ஒழிக்ச்சுக்கட்டுறது உங்கள் ஒவ்வொருத்தற்றை கையிலயும்தான் இருக்கெண்டு பேய்க்காட்டேலாது. வேணுமெண்டா,

 

"... ஒவ்வாமையினால் எவ்வளவு துன்ப்பட்டாலும் வாழ்வு இதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு ஆரம்பமும், ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் முடிவும் இருப்பதுதான் வரலாறு. எத்தனை பிரச்சினகள் வந்தாலும் சூரியன் கிழக்கில் உதிக்காமல் விடுவதில்லை...... " எண்டு கட்டுரையை முடிக்கலாம்.

 

"நீ வருசக் கணக்காய் உந்த இங்கிலீசு மருந்துகளைப் பாவிச்சு இப்ப அதுகளுக்கே அடிமையாயிட்டாய். இதாலை உனக்கு வேறை வருத்தம் வந்தாலும் வரும். இங்கிலீசு மருந்துகளின்ரை பேஸிக்கே உதுதான்"

எண்டு ஒருநாள் யோகராசா சொன்னார்.

 

உண்மைபோலதான் கிடக்கு. கக்கா போகேலையெண்டு தந்த குளிசைப் பெட்டியிலை, இதைப் பாவிக்கேக்கை மூத்திரம் போறதிலை பிரச்சினை வரும் எண்டு எழுதியிருக்கு. இவ்வளவு வருசமாய் மருந்தெடுக்கிறன். அப்பப்ப அடைச்ச மூக்கு திறபடிதேயொழிய, அலேஜி மாறுதேயில்லை.

 

"உதுக்கு எங்கை நாட்டு மருந்துகள்தான் சரி. ஹோமியோபதி ட்ரை பண்ணிப் பார். இந்தியா இதுக்கு பேமஸ். எனக்குத் தெரிஞ்ச ஒரு பமிலி அங்கை போய் செய்த் ரீட்மண்ட்டிலை பிள்ளையே பிறந்திட்டுது" யோகராசா ஐடியா தந்தார்.

 

முயற்சி செய்து பாக்கலாம்தான். இந்தியா போறதெண்டால் கொஞ்சக் காசு சேக்க வேணும். இப்ப போய்க் கொண்டிருக்கிற வேலைக்குப் புதிசு. லீவு தருவங்களோ தெரியாது. அலேஜி இருக்கெண்டு சொல்லாமத்தான் வேலையை எடுத்திருக்கிறன்.

 

தற்செயலாய் ஹோமியோ செய்தாக்களைச் சந்திச்சன். ஒருதர் தான் பூரண சுகமெண்டிறார். மற்றவர் அலேஜி அப்பிடியே இருக்கிண்டிறார்.

 

எனக்கு குழப்பமாக் கிடக்கு.

 

வெள்ளைக்காறற்றை மருந்து அடிமையாக்குது.

 

இந்தியாவின்ரை மருந்துக்கு கறண்டி இல்லை.

 

ஆனா திறமான சொலூசன் ஒண்டிமில்லை.

 

இனி ஆரையும், எதையும் நம்பிப் பிரயோசனமில்லை. சொலூசனை இம்ப்போட் பண்ணெலாதெண்டது கிளியர். நாந்தான் அக்சனிலை இறங்க வேணும்.

 

முதல் என்ரை உடம்பை வடிவாய் ஸ்ரடி பண்ண வேணும். பிறபொருள் எதிரியைக் கட்டுப்பாட்டுக்கை கொண்டு வரவேணும். எதிரி ஆர்? பிரண்ட் ஆர்? எண்டதை மூளையிலை திருப்பி அழிச்சுப் பதிய வேணும்.

 

ஐ வில் ட்ரை..

 

கட்டுரையை ஒரு மாதிரி எழுதி முடிச்ச்சு, ஈமெயிலிலை அனுப்பியும் போட்டன்.

 

ஒரு கிழமை போட்டுது. இப்ப அநேகமாய் மகசீன் என்ரை கட்டிரையோட கனடாவிலை இசுவாகியிருக்கும். முதல் முதல் நான் எழுதின மூக்குள்ளவரை கட்டுரையாலை கனபேர் மூக்கிலை கை வைக்கப் போகினம். முட்டையிலை மசிர் புடுங்கிற எந்தக் கொம்பனும் என்ரை கட்டுரையிலை மருந்துக்கும் அரசியல் இல்லாததைக் காணப் போறாங்கள். நான் குசு விட்டாக்கூடி அது தங்களுக்கெதிரான துரோகிகளின்ரை சதிச்செயல் எண்டு இடுப்புக்கை கையைக் கொண்டுபோறவை மண்டையைச் சொறியப் போகினம்... எண்டு பலதும் பத்துமாய் நான் திருப்திப்படேக்கை, வீட்டு பெல் அடிக்க, மணியைப் பாத்தால், இரவு பத்து.

 

இந்த நேரம் ஆர் வாறாங்கள்? அழகுசீலனும், பாக்கியராசாவும் கேள்விப்பட்டு வருகினமோ. உவங்களுக்கு கட்டாயம் தாங்கஸ் பண்ண வேணும். உவங்கள் உசுப்பேத்தி விட்டிருக்காட்டி நான் எழுதறதயே மறந்திருப்பன்.

 

கதவைத் திறந்து, ஆரெண்டு பாக்கக்கிடையிலை, என்னைத் தள்ளிக்கொண்டு அவங்கள் உள்ளுக்கை வந்திட்டாங்கள். அஞ்சாறு பேரோ? இல்லாட்டி பத்துப் பதினொருபேரோ?? ஆக்களின்ரை சேப்பைப் பாத்து,

எனக்கு வேர்க்கத் தொடங்கியிட்டுது.

 

ஸ்ம்திங் றோங்!

 

"உனக்கெல்லேடா கடைசியாய் சொன்னனாங்கள் எங்களுக்கு ஒண்டும் புடுங்காட்டிலும் உன்ரையைப் பொத்திக்கொண்டு சும்மா கிடவெண்டு. சொறியாம இருக்க மாட்டாய் போல"

 

ஆபத்து! ரெலிபோன் எங்கை? அதேன் அவ்வளவு தூரத்திலை இருக்கு. ஐய்யோ... என்ன செய்ய.. மண்டை வேலை செய்யுதில்லையே.. அவங்கள் என்னைச் சுத்த வர நிக்கிறாங்கள்.

 

"நான் ஒண்டும் செய்யேலையே... பேசாம என்ரை பாட்டிலதான் இருக்கிறன்" நடுங்கிக் கொண்டு நான் சொன்னது எனக்கே வடிவாய் கேக்கேலை.

 

"பொத்தடா வாயைப் புண்டையாண்டி. எங்களுக்கு மண்டேக்கை ஒண்டுமில்லையேண்டு நினைச்சியே நாயே. நீங்கள் கொஞ்சப் பேர் உப்பிடி தமிழிலை பூந்து விளையாடுவள் எண்டு தெரிஞ்சுதான் தீர்க்கதரிசனமா தமிழ்மொழி தொக்குபொருள் நுண்னியல் புலனாய்வுப் பிரிவை உருவாக்கி எல்லாத்தையும் ஆய்ஞ்சு கொண்டிருக்கிறம்"

 

அடிவயித்தைக் கலக்குது. "அம்மாவாணை நானொண்டுமே எழுதேலை. என்ரை அலேஜியைப் பத்தித்தான்..."

 

"எங்களுக்கு நீ வாய்க்கை வைக்காதை. நாங்கள் உனக்கு பிறபொருள் எதிரியோ? எங்கடை செக்யூறிற்றி சிஸ்ரத்தை நீ கேள்வி கேக்கிறீயோ" எண்டபடி அவன் கையுயத்த-

 

எங்கை பிழைவிட்டனான் எண்டு நான் குழம்ப-

 

அவன்ரை கையிலிய இருந்த இரும்பு என்ரை தலைக்கு வர......

 

 

******

 

"இப்ப என்ன மாதிரி?"

 

"ஆள் இன்னும் கோமாவிலதான். அநேகமாய் ஆள் தப்பாதெண்டுதான் சனம் கதைக்குது. தலையிலை எக்கச்சக்கமாய் இழை போட்டிருக்கு. உங்கை கனடாவிலை சனம் என்ன கதைகுது?"

 

"இப்ப இன்ரெநெற்தானே எங்களுக்கிருக்கிற ஒருயொரு மீடியா. ஒரு பகுதி எழுதியிருக்கு இனம்தெரியாத நபர்கள் அடிச்சவையெண்டு. இன்னொரு பகுதி எழுதியிருக்கு அடிச்சவங்கள் பாசிஸ்ற்றுகளெண்டு. எக்கச்சக்கமாய் இங்கிலீசு கலந்து எழுதி தமிழைக் கொச்சைப்படுத்தினபடியா தமிழ்ச்சனம்தான் பொங்கியெழும்பி அட்டிச்சதெண்டு மூண்டாவது பார்ட்டி எழுதியிருக்கு. எனக்கெண்டா உதொண்டிலையும்

நம்பிக்கையில்லை"

 

"அப்ப... நீ என்ன நினக்க்கிறாய்?"

 

"ஆளின்ரை தலையிலை தவறிப் போய் இரும்பேதேன் விழுந்திருக்கும். அதை ஒவ்வொருத்தரும் தங்கடை சொந்த பொலிற்றிக்சுக்கேத்தமாதிரி திரிக்கிறாங்கள்"

 

"நான் உன்ரை கருத்தோடை முரண்படுறன்"

 

"நீ என்ன நினைக்கிறாய் எண்டதை சொல்லேன்"

 

"ஆள் தன்ரை தலையிலை தானே கம்பியாலை அடிச்சு மண்டையை உடைச்சு வைச்சிருக்கு"

 

  

- பார்த்திபன்

18.05.2007