17.2க்குரிய புகையிரதங்கள் வருவதும் போவதுமாயிருந்தன. அடைபட்டிருந்த பயணிகள் வெளியே சிதற, காத்திருந்தவர்கள் முண்டியடித்து இருக்கை பிடித்தனர். எங்கும் இரைச்சல், ஆரவாரம். ஒலிபெருக்கிகள் வழமையான அறிவிப்புகளை தப்பாமல் ஒப்புவித்துக்கொண்டிருந்தன.

 


 

மார்கழி மாதக் குளிரிலிருந்து தப்புவதற்காய் அநேகமாய் எல்லோரும் தலையிலிருந்து கால்வரை தடிப்பாய் போர்த்தியிருந்தார்கள். மூக்குச் சீறுவதும், இருமுவதும் சிம்பனியாயிருந்தது.

 

புகையிரத நிலையத்தின் பின்பக்க வாசல். இருளைத் தடுத்து ஒளி விளக்குகள் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. கொஞ்சத் தடிப்பாய் மழை தூறிக்கொண்டிருந்தது. வாகனங்கள் மிக எச்சரிக்கையாய் பயணித்தன.

 

மழைக்காய் வாசலில் ஒதுங்கியிருந்தவர்களில் கிளவ்டியாவுடன் நின்றவர்கள் மிக வித்தியாசமாய் இருந்தார்கள். கண்கள் சொருகி, ஒரு சில கைகளில் வைன் போத்தல். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்.. நிறைய அழுக்காயிருந்தார்கள். இரண்டொருவர் தரையில் சரிந்து மடிந்திருந்தனர்.

 

இவர்களிலிருந்து நீண்ட இடைவெளியிட்டு கனவான்கள், கனவாள்கள் தள்ளி நின்றார்கள். தெருவில் கிடக்கும் நாய்ப் பீயைப் பார்ப்பதைப்போல இவர்களையிட்டு அருவருத்துக் கொண்டிருந்தார்கள்.

 

கிளவ்டியா இன்னும் அரைச் சொர்க்கத்தில் இருந்தாள். அதை முழுமையாக்குவதே அவளது அப்போதைய இலட்சியம். ஆனால் கையில் ஒரு 'சென்ற்'றும் இல்லை. காசில்லாமல் யாரும் சொர்க்கம் தரமாட்டார்கள். வியாபாரம் என்றால் கறார்தான். யாரிடம் காசு கேட்பது? சுற்றியிருக்கும் கூட்டாளிகளின் பொருளாதாரமும் கவலைக்கிடம்தான். இப்போது உடனடியாக சொர்க்கம் வேண்டும்.

 

இப்படியான நேரங்களில் தான் தான் தனித்திருக்கும் உணர்வு கிளவ்டியாவைப் பாதிக்கிறது. என்றும் அவளுடன் ஒன்றாயிருந்த அந்திரயாஸ், ஹசிஸை அவளுக்கு அறிமுகப்படுத்தியவன் நான்கு மாதங்களுக்கு முன்புதான் புகையிரத நிலைய மலசலகூடத்திலிருந்து சொர்க்கத்திற்குப் போய் திரும்பி வரவேயில்லை. அவளுக்கிருந்த ஒரே துணை, நண்பன், சுற்றம் எல்லாம்....

 

அன்றிலிருந்து கிளவ்டியாவின் ஹசிஸ் பாவனை அதிகரித்துவிட்டது. தனித்து விட்டோம் என்பதிலிருந்து தப்புவது மட்டுமே அத்தியாவசியத் தேவையாயிருந்தது. அடிக்கடி இந்த உலகத்தை விட்டுப் போய் போய் வந்தாள்.

 

இப்போது மீண்டும் தனிமை பற்றிய கவலை. கூடாது. யாருமே இல்லையா? கூடாது. இந்த யோசனைகள் ஆபத்தானவை. திரும்பவும் மறக்க வேண்டும். பறக்க வேண்டும். சொர்க்கம் வேண்டும். காசு வேண்டும். தயவுசெய்து...

 

ஏதோ ஒரு புகையிரதம் வந்து நிற்க, பலர் இறங்கி, பின் வாசலுக்கு வந்தார்கள். அவர்களிடம் நெருங்கிய கிளவ்டியா 'சில்லறை தருகிறீர்களா?' என்று கை நீட்டிக் கெஞ்சினாள்.

 

பலர் காதிலும், கண்ணிலும் விழுத்தவில்லை. ஒன்றிரண்டு ஆண்கள் அவளைக் காமமாய்ப் பார்த்துப் போனார்கள்.

 

கிளவ்டியாவுக்குப் பதினேழு வயதுதான். முகத்தில் குழந்தைத்தனம் நிறைய இருந்தது. உடம்பு வாளிப்பானது. தொலைக்காட்சித் தொடர்களில் வந்து போகக்கூடிய அழகு.

 

இருபது நிமிடமாய் கை நீட்டியதில் பத்து சென்ற் தான் விழுந்திருந்தது. இதற்கு ஒரு துணிக்கை கூட வாங்க முடியாது. கிளவ்டியா கவலையானாள்.

 

இப்போது பசித்தது. தலையிடித்தது. சோர்வு. உடம்பு இயற்கையாயிருந்ததில் எல்லாவிதமான உபாதைகளும் உயிர்பெற்றன.

 

இல்லை. தாங்கமுடியாது. தாங்கவே முடியாது. அது வேண்டும்..

 

கிளவ்டியா மகவும் பிரயத்தனம் செய்து தன்னை நிதானப்படுத்தலானாள். அவசர தேவை ஹசிஸ். எவ்வளவு விரைவிலோ அவ்வளவுக்கு. காலம் கடப்பதற்கு முன்.

 

மறுபடியும் குறுக்கே நின்று வருவோர் போவோரிடம் "தயவு செய்து சில்லறை தருகிறீர்களா?'

 

"அசிங்கங்கள்"

 

"ஜேர்மனிக்கே அவமானம்"

 

"வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுத் தள்ள வேண்டும்"

 

காசுக்குப் பதிலால் கண்ணியமான சொற்கள்தான் தாராளமாய் விழுந்தன.

 

பொலிஸ் வான் ஒன்று சத்தமில்லாமல் வாசலில் நின்றது. கசங்காத உடைகளுடன் ஆயுதபாணிகளாய் மூன்று பொலிஸ்காரர் இறங்க நேரே சொர்க்கவாசிகளிடம் வந்தார்கள். எந்தவித அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல், விளக்கமும் கொடுக்காமல், அரை மயக்கத்திலிருந்த அவர்களைத் தாறுமாறாய் இழுத்துச் சோதனை செய்தார்கள். தங்கள் சடங்குகள் முடிந்ததும் அவர்கள் அனைவரையும் அந்த இடத்தை விட்டு தொலைந்து போகும்படியும், அவர்கள் அங்கிருப்பது ஏனையோருக்கு இடைஞ்சலாயிருப்பதாகவும் விரட்டினார்கள்.

 

ஒரு பொலிஸ் கிளவ்டியாவிடம் வந்தது.

 

"'உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன்"

 

"நான் ஒன்றும் செய்யவில்லையே"

 

"பார்க்கத் தெரிகிறது"

 

கிளவ்டியா நீட்டிக்கொண்டிருந்த கையை மடக்கி, கொஞ்சம் தள்ளிப் போனாள். பொலிஸ்காரனும் விடாமல் வந்தான். "நீ இப்போதும் புகையிரத நிலையக் கட்டிடத்திற்குள்தான் நிற்கிறாய்"

 

"நான் ஒன்றுமே செய்யவில்லையே"

 

"நான் உன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவேயில்லையே. இந்த இடத்தை விட்டு முதலில் வெளியே போ"

 

"வெளியே மழை தூறுகிறது"

 

"அது என்னுடைய பிரச்சனையல்ல. வெளியே போ"

 

கிளவ்டியா பரிதாபமாய் கெஞ்சினாள். பொலிஸ்காரன் இதெல்லாம் புளித்துப் போய் அசைவற்றிருந்தான். "போ"

 

கிளவ்டியாவுக்கும் இது பழக்கமானதுதான். ஒருநாளிலேயே பலமுறை விரட்டப்பட்டிருக்கிறாள். தானாகப் போகாவிட்டால் எப்படியும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவான் என நன்கு தெரிந்ததால் தள்ளாடியபடியே வெளியே போனாள். அவளுடைய கிழிந்த ஜக்கற்றையும் சில நாட்களுக்கு முன் யாரோ திருடியிருந்தார்கள். நடுங்கினாள். மழை இப்போது இன்னும் தடித்திருந்தது. குளிர் விறைத்திருந்தது.

 

"இந்தக் குப்பைகளை அகற்றுவதே எமது தொழிலாய் போயிற்று" திட்டியபடி பொலிஸ்காரர்கள் வானில் ஏறி மறைந்தார்கள்.

 

கிளவ்டியா ஈரமாகி, உடை உடம்புடன் ஒட்டிக் கொண்டிருந்ததால் அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் அவளை அக்கறையுடன் பார்த்தார்கள். அந்த மங்கல் வெளிச்சத்திலும் அளவெடுத்தார்கள். இலவசக்காட்சி.

 

கிளவ்டியா தளர்ந்து கொண்டிருந்தாள். இனித் தாக்குப் பிடிக்க முடியாதெனத் திட்டவட்டமாய் தெரிந்தது. எந்த நேரத்திலும் மயக்கம் போட்டு விழலாம். அந்த நிலை வரக்கூடாது. கொஞ்சத் தூள் கிடைத்தாலே போதும். தப்பிவிடலாம். சொர்க்கம் போய்விடலாம். ஹசிஸ்.... ஹசிஸ்.

 

நீண்ட காலத்தின்பின் வீட்டுக்காரர்கள் ஞாபகத்தில் வந்தார்கள்.

 

அம்மா திடீரென அறிமுகப்படுத்திய புதுச் சிநேகிதன். அம்மா இல்லாத நேரங்களில் அவன் தன்னுடன் படுக்க கிளவ்டியாவை வற்புறுத்தியது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் உடம்பில் அவன் தொட்டு விளையாடியது. துன்பம் தாங்க முடியாமல் ஒருநாள் அம்மாவிடம் சொல்லியழுதது. தங்களைப் பிரிக்கவே இந்தச் சதி என்று சிநேகிதன் சொன்னதையே அம்மாவும் நம்பியது.

 

அவர்களிடமிருந்து தப்புவதற்கு வீட்டை விட்டு தெருவுக்கு வந்தது. அந்திரியாசுடன் சந்தோசமாயிருந்தது. அவனும் போன பின் முற்றாய் தனித்தது. இன்று வரை தன்னை அம்மா தேடி வராதது...

 

மங்கலான நனைவுகளை உடைத்துக் கொண்டு ஒரு கார் வந்து அவள் முன்னால் திடுமென நின்றது. வாட்டசாட்டமாய் ஒரு இளைஞன் சாரதிப் பக்கமிருந்து கதவைத் திறந்து கொண்டு வந்தான்.

 

இப்போது அந்த இடத்தில் சனநாட்டமில்லை. கிளவ்டியாவின் தோழமைகள் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள்....

 

அவன் கிளவ்டியாவுக்கு அண்மையாக வந்தான். "அம்பது மாக்" என்று காதில் கிசுகிசுத்தான.

 

கிளவ்டியாவுக்கு புரிந்தது. அவனைக் கவனித்துப் பார்த்தாள். ஓரளவு பரிச்சயமான முகம். கை நீட்டிச் சில்லறை கேட்டுக் கொண்டிருக்கையில் அடிக்கடி தாண்டிச் சென்ற முகம். அஞ்சு பெனிக் கூடப் போட்டதால் ஞாபகமில்லை. வெளிச்சத்தில் இரக்கம் கொள்ளாதவன் இப்போது இருளில் பேரம் பேசுகிறான்.

 

கிளவ்டியாவுக்கு ஆத்திரம் வந்தது. வெறுப்பு வந்தது. அசிங்கமாயிருந்தது. ஆனால் வென்றதென்னவோ தூள்தான்.

 

மௌனமாய் போய் காரின் பின் இருக்கையில் அமர்ந்தாள்.

 

கார் போய்க்கொண்டிருக்கையில் அவன் எதுவும் கதைக்கவில்லை. இடையில் கிளவ்டியாவுக்குச் சந்தேகம் வந்து "குறைக்க மாட்டாய் தானே?" என்று கேட்டாள். அவன் "இல்லை" என்று மட்டும் சொன்னான்.

 

கிளவ்டியாவுக்குச் சந்தோசம் வந்தது. அம்பது மார்க்கில் ஹசிஸ் வாங்கியது போக மிகுதிக்கு நல்ல சாப்பாடு வாங்கலாம். ஆசையாய் சாப்பிட்டு நீண்ட நாளாயிற்று. கோலா குடிக்கலாம். இனிப்பு வாங்கலாம்.

 

கட்டிடங்கள் எதுவுமேயில்லாத சுற்றியும் மரங்களடர்ந்த பகுதியில் கார் வந்து நின்றது.

 

அவன் இறங்கி பின் இருக்கைக்கு வந்து கதவைச் சாத்தினான். கிளவ்டியாவை இருக்கையில் கிடத்தி, உடைகளைக் களைந்தான். தன்னையும் திறந்தான்.

 

கிளவ்டியா திணற , திமிற, கத்தக் கத்த... மிகவும் வக்கிரமாய் அனுபவித்தான்.

 

பசி, சோர்வு, வலி, ஆத்திரம்.. எல்லாமாய் சேர்ந்து கிளவ்டியா துடித்து... துவண்டு..

 

முடிந்து போய் அவன் திரும்ப உடையணிந்தான். அவளையும் அவசரப்படுத்தினான். கிளவ்டியா நோவைச் சகித்துப் பல்லைக் கடித்தாள்.

 

அவன் வெளியே இறங்கி கார் கதவைத் திறந்துகொண்டு "சீக்கிரம் இறங்கு" என்றான்.

 

கிளவ்டியா இறங்காமல் "பணம்" என்று கை நீட்டினாள். நீட்டிய கையைப் பிடித்து முழுப் பலத்துடன் இழுத்து வெளியே தள்ளினான் அவன்.

 

தடுமாறியபடியே மழையில் சேறாகிப்போன தரையில் முகம் குப்புற விழுந்தாள் கிளவ்டியா. கண்ணீர் சேறுடன் கலந்தது.

 

அவன் நிதானமாய் தனது தலைமயிரைச் சரி செய்தபடி சாரதி ஆசனத்தில் அமர்ந்து காரைத் தயார்படுத்தினான்.

 

கிளவ்டியா எழும்ப முயற்சித்தவாறே "பொலிஸில் பிடித்துக் கொடுப்பேன்" என்றாள். ஏமாற்றப்பட்ட ஆத்திரம் ஏகமாய் பொங்கியது. பலியாக்கப்பட்டதில் உடம்பெல்லாம் கூசியது.

 

அவன் சிரித்தான். "சட்டப்படி பதிவு செய்யாமல் விபச்சாரம் செய்தது. உனது குற்றம். நீ புகையிரத நிலையத்தில் நின்று பிச்சையெடுப்பது பொலிசுக்குத் தெரியும். நீ ஹசிஸ் புகைப்பதும் அவர்களுக்குத் தெரியும். நீண்ட நாட்களாக எல்லாம் அவதானித்திருக்கிறேன். சட்டம் பொலிஸ் எல்லாவற்றிற்கும் நாங்கள்தான் வரி கட்டுகிறோம். அவர்கள் எங்களுக்கேதான். உன்னைப்போலத் தெருப் பொறுக்கிகளுக்கல்ல" அவன் கார் கண்ணாடிகளை மேலே ஏற்றினான்.

 

"தயவு செய்து இருபது மார்க்காதல் தரமாட்டாயா?"

 

கார் போய்விட்டது.

 

கிளவ்டியா அழுதபடி சேற்றில் கிடந்தாள். கோபத்தையெல்லாம் சேற்றில் காட்டினாள்.

 

நான்கு நாள் கழித்து புகையிரத நிலையப் பின் வாசலில் கை நீட்டிச் சில்லறை கேட்டுக்கொண்டிருந்தவர்களை கையுறை அணிந்திருந்த பொலிஸ் இழுத்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தது.

 

கொட்டும் பனியில், பாதையில் கிடந்த கழிவுகளின் மீது தள்ளி விழுத்தப்பட்டவர்களில் கிளவ்டியும் கிடந்தாள். அவளைக் கடந்து பென்சும், பி.எம். வேக்களும் போய்க்கொண்டிருந்தன.

 

("சரிநிகர்", இலங்கை, 1995)