11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

சோல்சனிட்சின் : "அவலத்தில்" பிறந்த இலக்கிய அத்வானி

சோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.


"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எட்டியபின், "அறம்' "ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் "சித்தாந்தங்களின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.


"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.


இவையெதுவும் சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகளையும் எழுத்தாளர்களையும் கடுகளவேனும் பாதித்ததாகத் தெரியவில்லை. "நாஜிகளின் அடிமை முகாம்களுக்கு எந்த விதத்திலும் குறையாத முகாம்களை சோவியத் அரசு நடத்தியிருக்கின்றது. சோல்சனிட்சினின் கூற்றுப்படி இவற்றில் 6 கோடி முகாம்வாசிகள் வாட்டி வதைக்கப் பட்டிருக்கிறார்கள்'' என்று தனது அஞ்சலிக் கட்டுரையில் (காலச்சுவடு, செப்2008) அசோகமித்திரன் குறிப்பிடுவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சோல்சனிட்சின் பற்றிய இவர்களது கட்டுரைகள் அனைத்துமே அவரை "ஸ்டாலின் காலக் கொடுங்கோன்மையின் தேவசாட்சியமாகவே' நினைவு கூர்கின்றன.


அமெரிக்க அவதூறுகள் அறிவாளிகளின் ராமர் பாலம்!


"ஸ்டாலின் ஆட்சியின் படுகொலைகள், வதை முகாம்கள் மற்றும் பட்டினிச்சாவுகள் குறித்த கட்டுரைகள் கம்யூனிசத்துக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலகமும் நடத்திய ஆபாசமான பிரச்சாரப் போரின் அங்கமே' என்பது ஏற்கெனவே ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மேற்கூறிய இந்தப் பிரச்சார யுத்தத்தை முன்நின்று நடத்திய ரடால்ஃப் ஹெர்ஸ்ட், 24 செய்தி ஏடுகளையும், 12 வானொலி நிலையங்களையும் கையில் வைத்திருந்த அமெரிக்க ஏகபோக முதலாளி. இவன் நாஜிகளின் நண்பன் என்பதுடன், 1934 இல் ஜெர்மனிக்கு சென்று இட்லரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், ரசியாவுக்கு எதிராக இட்லர் நடத்திய உளவியல் யுத்தத்தின் அங்கமாகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் அவனால் நடத்தப்பட்டது என்பதையும் கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் ஆதாரங்களுடன் மெய்ப்பித்தார். பின்னர், "தி நேஷன்' எனும் அமெரிக்கப் பத்திரிக்கையும் இதனை உறுதி செய்தது.


இரண்டாம் உலகப்போரில் நாஜிகள் வீழ்த்தப்பட்ட பின், கம்யூனிச எதிர்ப்புப் புனிதப்போரை சி.ஐ.ஏ வும் பிரிட்டிஷ் உளவு நிறுவனமும் தொடர்ந்தன. "மாபெரும் பயங்கரம்', "சோகத்தின் அறுவடை' என்ற நூல்களை எழுதிய ராபர்ட் கான்குவெஸ்ட் என்ற அமெரிக்க பேராசிரியன், பிரிட்டனின் கம்யூனிச எதிர்ப்பு உளவுப்பிரிவின் அதிகாரியாக இருந்தவன். பின்னாளில் ரீகனின் தேர்தல் பிரச்சாரகனாக அதிகாரபூர்வமாகவும் நியமிக்கப்பட்டவன். இத்தகைய "எழுத்தாளர்கள்' போட்டுக்காட்டிய கணக்கின்படி, ஸ்டாலின் கால ரசியாவில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் சிறைப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியை எட்டியது. இந்தக் கேலிக்கூத்துகள் எல்லாம் 1980 களில் ஆதாரப்பூர்வமாக அம்பலமாக்கப்பட்டன.


பிறகு, ரசிய கம்யூனிஸ்டு கட்சியின் ஆவணக்காப்பகத்தை கோர்ப்பசேவ் திறந்து விட்டார். படுகொலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊதிப்பெருக்கப்பட்ட பொய்கள் என தரவுகள் நிரூபித்தன. எனினும், இந்த உண்மைகள் எதனையும் அறிந்துகொள்ள சோல்சனிட்சின் ரசிகர்களான அறிவாளிகள் விரும்பவில்லை.


சென்ற நூற்றாண்டில் பிரபல அறிவாளிகளாகக் கொண்டாடப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபென் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர், ரஸ்ஸல் முதலானோர் கம்யூனிச எதிர்ப்பு நூல்களை எழுதுவதற்காகவும், கம்யூனிச ஆதரவாளர்களைப் போலீசுக்குக் காட்டிக் கொடுப்பதற்காகவும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் சம்பளம் வாங்கினர் என்ற உண்மையும் 90 களின் இறுதியில் பிரிட்டிஷ் உளவுத்துறை ஆவணங்களின் வாயிலாகவே வெளிச்சத்துக்கு வந்தது. இதனைக் கேட்ட பிறகும் மேற்படி அறிவாளிகள் அவமானத்தால் கூனிக் குறுகவில்லை. குறைந்தபட்சம் தாங்கள் வழிமொழிந்த ஸ்டாலின் காலப் படுகொலை புள்ளிவிவரங்களில், "கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மூன்று நான்கு சைபர்களை அதிகமாகப் போட்டு விட்டோமா?'' என்ற அளவிற்குக் கூட தங்களது கூற்றுக்களை இவர்கள் மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை. மாறாக கீஸ்லர், ஸ்பென்டர் முதலானோரையே பக்திப் பரவசத்துடன் இன்றும் தமது எழுத்துக்களில் மேற்கோள் காட்டுகின்றார்கள்.


அரை உண்மைகளையும் முழுப்பொய்களையும் பிசைந்து வனையப்பட்ட இலக்கியங்களால் உண்மைகள் தோற்கடிக்கப் படுவதொன்றும் வியப்புக்குரிய நிகழ்வு அல்லவே! புவியியல், வரலாற்று ஆய்வு முடிவுகளையெல்லாம் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, அமெரிக்காவில் குடியேறிய சனாதனியின் மனதை ஆக்கிரமித்திருக்கும் "இராமன் பாலம்' போலவே, அறிவாளிகளின் மனதை ஆட்கொண்டிருக்கின்றது "கம்யூனிசக் கொடுங்கோன்மை' எனும் புனைவு. அந்த வகையில் பார்த்தால் சோல்சனிட்சின் இன்னும் சாகவில்லை. இந்த பக்தர்களின் இதயத்திற்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்.


சோல்சனிட்சின்: சோசலிச எதிர்ப்பு ஆயுதத்தின் "சோக'க் கதை!


இரண்டாம் உலகப்போரில் ஒரு ரசியப் படைப்பிரிவின் கமாண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சோல்சனிட்சின், தனது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டாலினைப் பற்றியும் சோவியத் அரசு போரை வழிநடத்தும் முறையைப் பற்றியும் விமரிசித்து எழுதியதற்காகவும் அவரது நாஜி ஆதரவுப்போக்குக்காகவும் "சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்' என்று குற்றம் சாட்டப்பட்டு, 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 3 ஆண்டுகள் உள்நாட்டிலேயே நாடுகடத்தலும் விதிக்கப்பட்டு 1945 இல் உழைப்புமுகாமுக்கு அனுப்பப்பட்டார். உடலுழைப்புப் பணிகளில் சிறிது காலம் ஈடுபடுத்தப்பட்ட பின், பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூடத்துக்கு மாற்றப்பட்டார். உழைப்புமுகாமில் தண்டனைக்காலம் முடிந்தபின், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாஷ்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு அவரது புற்றுநோய் கட்டுப்படுத்தப்பட்டது.


மேற்கூறிய பத்தாண்டு காலத்தில் அவர் "இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்', "முதல் வட்டம்', "கான்சர் வார்டு' என்ற மூன்று நாவல்களை எழுதினார். 1962 இல் குருச்சேவின் நேரடி ஆணையின் பேரில் "இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற நாவல் வெளியிடப்பட்டது. "முதலாளித்துவ மீட்பு, ஸ்டாலின் மீதான அவதூறு' என்ற தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக குருச்சேவ் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அமெரிக்கா நடத்தி வந்த ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்தன.


ஸ்டாலின் எதிர்ப்பு என்ற வரம்பைத் தாண்டி சோவியத் கொடுங்கோன்மை எந்திரத்தை வடிவமைத்தவர் லெனின்தான் என்றும், கம்யூனிசம் எனும் கொள்கையே கொடுங்கோன்மைதான் என்றும் சோல்சனிட்சினுடைய எழுத்துக்கள் விரியத் தொடங்கின. எனவே, குருச்சேவைத் தொடர்ந்து வந்த போலிக்கம்யூனிஸ்டுத் தலைமையால் அவரது எழுத்துகளை வெளியிட இயலவில்லை. எனவே, மற்ற இரு நாவல்களும், அவற்றைத் தொடர்ந்து ரசியாவில் இருந்தபடியே சோல்சனிட்சின் எழுதிய "குலக் தீவுக்கூட்டம்' என்ற நாவலும் 60 களில் மேற்குலகில்தான் வெளியிடப்பட்டன.


மென்மேலும் தீவிரமடைந்து கொண்டிருந்த அமெரிக்க ரசிய முரண்பாடுகளின் பின்புலத்தில் 1970 இல் "குலக் தீவுக்கூட்டம்' நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1971 இல் மேற்குலகில் பிரசுரிக்கப்பட்ட "ஆகஸ்டு 1914' என்ற அவரது வரலாற்று நாவலிலும் கட்டுரைகளிலும், புரட்சிக்கு முந்தைய ஜார் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகச் சித்தரித்ததுடன், ரசிய கிறித்தவ திருச்சபைமரபையும் புகழ்ந்து எழுதினார்.


1974இல் ரசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சோல்சனிட்சின் 1994 இல் யெல்ட்சினின் வெற்றிக்குப் பின் ரசியா திரும்பினார். 1974 முதல் 2008 இல் அவர் இறக்கும் வரை அவர் "பூரணமான சுதந்திர மனிதனாக'த்தான் இருந்தார். ஐரோப்பாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் இறுதியாக "சுதந்திர' ரசியாவிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள், அவரது சித்தாந்தக் கண்ணோட்டத்தையும், ஆளுமையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, 1974க்கு முந்தைய அவரது படைப்புகள் மீதும் புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன; அல்லது அவற்றை ஒரு முறையேனும் "மறுவாசிப்பு' செய்யுமாறு அறிவாளிகளைக் கோருகின்றன. செய்வார்களா என்ன? "தீ சுடும்' என்ற அறிவியல் உண்மை வறட்டுத்தனமென்றும், "தீக்குள் விரலை வைத்து இன்பத்தைத் தீண்டும்' அழகியல் உண்மையே அறுதியானது என்றும் சாதிப்பவர்களன்றோ இலக்கியவாதிகள்!


அவலத்திலிருந்து பிறந்த இலக்கிய அத்வானி!


உயிர்மை, செப், 2008 இதழில் சுகுமாரன் எழுதுகிறார்: "இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்' என்ற குறுநாவலுடன் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார் சோல்செனித்சின். டெனிசோவிச் என்ற பாத்திரம் கட்டாய உழைப்பு முகாமில் அனுபவிக்கும் ஒரு நாள் வாழ்க்கையின் வாயிலாகத் தனது எட்டாண்டு காலத் துயர ஜீவிதத்தைச் சித்தரித்துக் காட்டினார். சோசலிச நிர்மாணம் என்ற இரும்புத் திரைக்குப் பின்னால் மனிதர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நாவல் அம்பலப்படுத்தியது. நாவல் உருவாக்கக் காலத்தில் மார்க்சியம் மீதான நம்பிக்கையைத் துறந்தார். அவரது பின்னாள் வாழ்க்கையின் ஆதாரங்களாக மாறிய தத்துவத் தேடலும் கிறித்தவ விசுவாசங்களும் வலுவடைந்தன...''


இதன் பொருள் என்ன? அவர் தன்னுடைய "துயரத்திலிருந்து' சமூகத்தின் துயரை உணர்ந்திருக்கிறார். தன்னுடைய அனுபவத்திலிருந்து, தான் கொண்டிருந்த கொள்கையையும் துறந்திருக்கின்றார்! சோல்சனிட்சினுக்கு வழங்கப்படும் இந்தக் கோட்பாட்டு நியாயத்தை நாம் அத்வானி அண்டு கம்பெனிக்கும் வழங்கலாமே! பிரிவினைக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட "சிந்து மாகாணத்து இந்து' என்ற முறையில் அவரது இந்துத்துவ விசுவாசம் வலுவடைந்தது கூட நியாயம்தானே!


சமூக நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வகுக்கப்படும் கொள்கை, தனது தனிப்பட்ட நலனுக்கோ அனுபவத்துக்கோ எதிராக இருந்தபோதிலும் அந்தக் கொள்கையைப் பற்றி நிற்பவர்களே மனித சமூகத்தின் முன்மாதிரிகள் ஆக முடியும். ஒரு படைப்பாளி சமூகத்தின் துயரில் தன் துயரைக் காண வேண்டும். மாறாக, தன் சொந்தத் துயரத்தின் முன் உலகை மண்டியிடச் சொல்லும் சோல்சனிட்சினின் இந்த மனோபாவம் ஒரு அற்பவாதம். அரசியல் அரங்கில் இதன் அவதாரத்திற்குப் பெயர்தான் துரோகம்.


சோல்சனிட்சின் உருவான ரசியா உலகின் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சியைச் சாதித்த தேசம். 1917 முதல் பகைவர்களால் சூழப்பட்டு தன்னந்தனியாகப் போரிட்டு உயிர் பிழைத்த தேசம்; தன்னுடைய ஆயிரமாண்டு பின்தங்கிய நிலையைப் பத்தே ஆண்டுகளுக்குள் துடைத்தெறிந்து விட்டு தொழில்மயமாக வேண்டும் அல்லது அழிந்துபட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; உடைமையை இழந்த வர்க்கங்கள் உவப்போடு இட்லருக்கு உதவக் காத்திருந்ததால் நண்பன் யார் பகைவன் யார் என்று இனம் காண முடியாமல் தவித்த தேசம்; முதல் சோசலிசநாட்டின் குரல்வளையை நெறிப்பதற்கு இட்லருக்கு ஆன உதவிகளையெல்லாம் செய்த நேசநாடுகளைச் சகித்துக் கொண்டு தன்னந்தனியாகப் போராடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட தேசம்; இத்தனைக்கும் இடையில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் இதுவரை காணாத உயர்வைக் கொண்டு வந்த தேசம்..! இந்தச் சூழலில், இந்தத் தேசத்தில்தான் சோல்சனிட்சினின் இலக்கியம் பறக்கின்றது. அவரது நுண்ணோக்கி கண்டுபிடித்த மனித அவலத்தின் பின்புலம் இதுதான்.


உண்மை விளம்பியின் உள்மன அழுக்கு!


கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சோல்சனிட்சினைக் கொண்டாடும்போது, தமது கம்யூனிச வெறுப்பையும் இயல்பாக வெளிக்காட்டி விடுவதால் அவர்களது நடுநிலை தானே அம்பலமாகி விடுகின்றது. ஆனால் சோல்சனிட்சினை "மார்க்சிய நோக்கில்' எடைபோட்டு நியாயப்படுத்துகின்றார் எஸ்.வி. ராஜதுரை. (பார்க்க: "ரசியப் புரட்சி: இலக்கியச் சாட்சியம்', "சொல்லில் நனையும் காலம்' என்ற அவரது இரு நூல்கள்).


"சோல்சனிட்சின் சரியான கம்யூனிஸ்டோ இல்லையோ, அவரது கூற்றுகள் பல உண்மையானவை. படப்பிடிப்புகள் பல சரியானவை. தேவையானவையும் கூட. கம்யூனிஸ்டுகளாகத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்பவர்களை விட இவரது எழுத்தில் அதிகமான சமுதாய உண்மை அடங்கியிருக்கிறது'' என்கிறார்.


சமுதாய உண்மை கிடக்கட்டும். முதலில் வெறும் உண்மை இருக்கின்றதா என்று பார்ப்போம். "லெனின் கிராடு முற்றுகையில் பல இலட்சம் மக்கள் நாஜிகளால் கொல்லப்பட்டதற்கு, இட்லர் மட்டுமல்லாமல் ஸ்டாலினும்தான் காரணம்' என்று சோல்சனிட்சின் குற்றம் சாட்டுவதை ராஜதுரையாலேயே சகிக்க முடியவில்லை. "இது அன்றைய வரலாற்று நிலைமைகளையும் பாசிச எதிர்ப்புப் போரில் ஸ்டாலினின் சிறப்பான பாத்திரத்தையும் மறப்பதாகும்'' என்று குறிப்பிடுகின்றார்.


இது "மறப்பது' குறித்த பிரச்சினையா, "மறுப்பது' குறித்த பிரச்சினையா? ஆக்கிரமிப்பு வெறிபிடித்த ஒரு பாசிஸ்டையும், அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய தலைவனையும் சமமாக்கிக் குற்றம் சாட்டுவது "மறதி'யில் சேரக்கூடிய விசயம் போலும்! சோல்சனிட்சினை இவ்வாறு எழுதத் தூண்டியவை இரண்டு காரணிகளாகத்தான் இருக்க முடியும். ஒன்று, "தானும் தன்னை ஒத்தவர்களும் அநியாயமாகச் சிறைப்படுத்தப் பட்டதால்' ஏற்பட்ட வன்ம உணர்ச்சி.


அல்லது கம்யூனிசத்தால் தான் எந்த வகையிலும் நேரடித் துன்பத்தை அனுபவிக்காத போதிலும், அதன்மீது கான்குவெஸ்ட் போன்றோர் கொண்டிருந்த "இயல்பான' சித்தாந்தத் துவேசம்.
சோல்சனிட்சினின் மூளையில் இரண்டு காரணிகளுமே செயல்பட்டிருக்கின்றன. இந்த மூளைதான், சித்தாந்தக் கறைபடியாத தூய இலக்கியப் பெருவெளியில் மிதந்தபடி சமுதாய உண்மையை உமிழ்கின்றதாம்.


"அறம்' அறிவாளெடுத்த கதை!


சிறைப்பட்டிருந்த காலத்தில் "அன்பு, அறம், அவலம்' என்பன போன்ற சூக்குமமான சொற்களின் வழியே அறிஞர் பெருமக்களின் மனதை உருக்கிய சோல்சனிட்சின், விடுதலை செய்யப்பட்ட பின், அதாவது "உணர்ச்சித்தளை'யிலிருந்து விடுபட்டு, அவரது அறிவு "சுதந்திரமாக' இயங்கும் சூழல் வாய்க்கப்பெற்ற பின், "குண்டு, ரத்தம், கொலை' என்று பருண்மையான சொற்களில் நெருப்பைக் கக்குகின்றார். சோல்சனிட்சினைப் பற்றிப் புரிந்துகொள்ள வியத்நாம் போர் குறித்த அவரது கருத்தே போதுமானது.


வியத்நாம் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பை, உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளைக் காட்டிலும் அதிகமான குண்டுகளை வீசியும், ரசாயன ஆயுதங்களை அம்மக்கள் மீது பரிசோதித்தும் மனிதகுலம் அதுவரை கண்டறியாத கொடிய யுத்தமொன்றை அமெரிக்கா நடத்தியது. கம்யூனிஸ்டுகள் தலைமையில் அந்நாட்டு மக்கள் நடத்திய தேசவிடுதலைப் போரை உலகமே ஒருமித்த குரலில் ஆதரித்தது. போருக்கு எதிராக அமெரிக்க மக்களின் கலகமும் வெடித்தது.


வெறிகொண்ட அமெரிக்க பாசிஸ்டுகள் சிலரைத் தவிர வேறுயாரும் இந்த ஆக்கிரமிப்புப் போரை ஆதரிக்கவில்லை. சோல்சனிட்சினோ "அமெரிக்கா ஆண்மையை இழந்து விட்டது'' என்று கூறி வியத்நாமிலிருந்து பின்வாங்கியதற்காக அமெரிக்காவைக் கண்டித்தார். வியத்நாமில் சிக்கிய அமெரிக்கப் போர்க்கைதிகளுக்கு "கம்யூனிஸ்டுகள் இழைக்கும் கொடுமை'யை அமெரிக்கர்களுக்கே விளக்கி, "ராம்போ சினிமா'க்களுக்கான திரைக்கதையை வழங்கினார்.


அமெரிக்க ரசிய பனிப்போர் காலத்தில் போருக்கு எதி ராகச் சமாதானத்தைப் பிரச்சாரம் செய்த அறிவுஜீவிகளைத் "துரோகிகள்' என்று சாடுகின்றார் சோல்சனிட்சின். ரசியாவைக் காட்டி அச்சுறுத்தி அமெரிக்கா அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டுமென வெறியூட்டுகின்றார். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டதையும், கிரீஸின் பாசிச ஆட்சியையும் ஆதரிக்கின்றார். சோல்செனிட்சினின் பிற்போக்கு வெறியைப் பட்டியலிட்டு மாளாது.


முன்னர் சோசலிசத்தின் கதை! பின்னர் சூழ்நிலையின் கைதி!!


இவற்றையெல்லாம் தனது நூலில் பட்டியலிட்டுக் கூறிவிட்டு, "சோல்சனிட்சினின் உலகக் கண்ணோட்டம் குழம்பிப்போன ஒன்று. ஆனால் அது அவரது கசப்பான அனுபவங்களின் விளைவாகப் பிறந்த ஒரு கண்ணோட்டம்'' என்று இதற்கெல்லாம் நியாயம் சொல்கின்றார் ராஜதுரை. ஒரு படைப்பாளியைக் "கசப்பான' அனுபவத்துக்கு ஆளாக்கினால் உலகத்துக்கு என்ன நேரிடும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் போலும்!


"ஜார் ஆட்சியில் தணிக்கை இல்லை, உளவுத் துறைக் கொடுமை அவ்வளவாக இல்லை, நாடு கடத்தல் இல்லை, உழைப்பு முகாம் இல்லை, ரசிய தேசிய இனம் பிற இனங்களை ஒடுக்கவில்லை; 1905, 1917 புரட்சிகளின் முன்னணியாளர்களில் யூத இனத்தவர் அளவுக்கு அதிகமாக இருந்தனர்'' என்பன போன்ற சோல்சனிட்சின் பொய்களை முதலாளித்துவ ஆய்வாளர்களே சங்கடத்துடன் பட்டியலிட்டுள்ளனர். ரசிய தேசவெறியும், யூத எதிர்ப்பு நாஜிஆதரவுக் கண்ணோட்டமும் அவரிடம் நிலவியதையும் பலர் ஒப்புக்கொள்கின்றனர். இவையும் கூட அவரது கசப்பான அனுபவங்கள் தோற்றுவித்த கண்ணோட்டங்களோ?


ரசிய உளவுத்துறையை எதிர்த்து இலக்கியத்தில் சண்டமாருதம் செய்துவிட்டு 2007இல் புடின் கையால் தேசியவிருது வாங்கிய சோல்சனிட்சினிடம், "ஒரு முன்னாள் கே.ஜி.பி அதிகாரியான புடின்,'' ரசிய அதிபர் ஆகியிருப்பது பற்றிக் கருத்துக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். "புடின் கே.ஜி.பி.யில் உளவு பார்க்கும் அதிகாரியாகத்தான் இருந்தாரே தவிர, விசாரணை அதிகாரியாக இல்லை. முன்னாள் சி.ஐ.ஏ தலைவர் சீனியர் புஷ் அமெரிக்க ஜனாதிபதி ஆகவில்லையா?'' என்று கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் நியாயப்படுத்தினார் சோல்சனிட்சின்.


"சோசலிசக் கொடுங்கோன்மையை எதிர்த்து நின்ற சுதந்திரத்தின் ஒளிவிளக்கு', சுதந்திரம் கிடைத்தவுடன் ஏன் பாசிசத் தீவட்டியாக உருமாறியது? ஏனெனில், இது உருமாற்றமல்ல; தீவட்டிதான் ஒளிவிளக்காகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது என்பதே உண்மை.


கொலைக் கண்ணாடியும் நிலைக் கண்ணாடியும்!


எனினும் இலக்கியவாதிகள் இதனை ஒப்பமாட்டார்கள். ஒரு படைப்பாளியின் ஆளுமையை அவரது படைப்பின் வழியாகத்தான் மதிப்பீடு செய்ய வேண்டுமேயன்றி அவர் கொண்டிருக்கும் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்ல என்பது அவர்களது கருத்து. ஒரு படைப்பாளியின் சமூக ஆளுமையும் படைப்பு ஆளுமையும் இருவேறு காற்றுப்புகாத பெட்டிகள் போலும்!


ஒரு கலைஞன் தன்னுடைய சித்தாந்தத் தற்சாய்வுகளுக்கு அப்பாற்பட்டு, கலையில் தோய்ந்து நிலைக்கண்ணாடி போல சமூக உண்மையைப் பிரதிபலிக்க முடியும் என்பதற்கு, டால்ஸ்டாயை உதாரணம் காட்டுகின்றார்கள் இலக்கியவாதிகள். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் கீழும் முதலாளித்துவச் சுரண்டலின் கீழும் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த ரசிய சமூகத்தையும், அதன் விவசாய வர்க்கத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் பிரதிபலித்தார் டால்ஸ்டாய். கிறித்தவ சோசலிசம் எனும் சித்தாந்தம் டால்ஸ்டாயின் படைப்பூக்கத்திற்கு உந்துவிசையாக இருக்கவில்லை.


சோல்சனிட்சின் அத்தகையதொரு நிலைக்கண்ணாடி என்று ராஜதுரையாலேயே சொல்ல இயலவில்லை. "அவர் நிலைக்கண்ணாடி அல்ல, முப்பட்டைக் கண்ணாடி. அதில் ஊடுருவிச் சிதையும் ஒளிக்கற்றைகளைக் கொண்டு அவ்வொளியின் (அதாவது ஸ்டாலின் கால ரசியாவின்) தன்மையை அறிய முயல்கிறோம்'' என்கிறார் ராஜதுரை. ஆயின், கண்ணாடியின் பரிமாணத்தை எடை போடாமல், ஒளியின் தன்மையை எப்படி மதிப்பிட முடியும்? தனது சித்தாந்தக் கனபரிமாணம் பற்றி அந்த முப்பட்டைக் கண்ணாடியே வாக்குமூலம் கொடுத்தாலும் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதன் நோக்கம் என்ன?


"ஆத்திரத்தில் அவன் தன்னை மீறிச் சென்றுவிட்டான்' என்று சோல்சனிட்சினின் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, அது சோல்சனிட்சினுக்கும் பொருந்தும் என்கிறார் ராஜதுரை. இவ்வாறு சோல்சனிட்சின் தன் வாயால் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை என்பது மிகவும் முக்கியமானது. "தன்னை மீறிச் செல்லுதல்'! அடேயப்பா, அறம் வழுவித் தப்புவதற்குத் தோதான பொந்துகளை வார்த்தைகளால் உருவாக்கும் வல்லமையில் வழக்குரைஞர்களை விஞ்சுகிறார்களே இலக்கியவாதிகள்!


என்ன செய்வது! கோபமும் துயரமும் கொப்பளிக்கும் தருணங்கள்தான் ஒரு மனிதனின் தணிக்கை செய்யப்படாத ஆளுமையை அறியத்தருகின்றன என்று நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்.


தூக்குத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக வைஸ்ராய்க்கு கருணை மனு எழுதிய தந்தையைக் கண்டித்த பகத்சிங்கின் நடவடிக்கையும், பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு வைஸ்ராயிடம் தந்திரமாக ஒப்புதல் அளித்த காந்தியின் நடவடிக்கையும், அவர்கள் "தன்னை மீறிச் சென்ற' நடவடிக்கைகளா, அல்லது அவர்களது ஆளுமையின் செறிவான வெளிப்பாடுகளா?


அவ்வாறு மீறிச் செல்லாத "தான்' (சோல்சனிட்சினின் அகம்) யார் என்பதை எதை வைத்துக் கண்டுபிடிப்பது? ஒரு மனிதன் தன்னைப்பற்றித் தானே கூறிக்கொள்ளும் கருத்துக்களிலிருந்து அல்லாமல், அவனுடைய செயல்களிலிருந்தும், சமூகம் அவனைப்பற்றிக் கூறும் கருத்துக்களிலிருந்தும் அவனை மதிப்பிடுவதா, அல்லது சம்பந்தப்பட்ட மனிதர்கள் தம்மைப் பற்றி எழுதி வைத்திருக்கும் தன்வரலாற்று நூலிலிருந்தோ, தன்னையும் பாத்திரமாக்கி அவர்கள் உருவாக்கும் புனைவுகளிலிருந்தோ அவர்களின் ஆளுமையை மதிப்பிடுவதா? காந்தியை மதிப்பிட வேண்டுமானால், அவருடைய செயல்பாடுகளையும், அவரைப்பற்றி அம்பேத்கரும், பகத்சிங்கும், இன்ன பிறரும் கூறிய கருத்துக்களைத் தூர வீசிவிட்டு "சத்திய சோதனை'யில் மூழ்க வேண்டும் போலும்!


இருப்பினும் உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசத் தெரியாத அரிச்சந்திரர்கள் (அல்லது சோல்சனிட்சின்கள்) கூட, தம்முடைய சொந்த முகத்தை நிலைக்கண்ணாடி மூலம் "அறிய' விரும்பும்போது, லேசாகப் பவுடர் பூசி, தலையைச் சீவிக்கொள்வதில்லையா? இந்த அழகியல் "உண்மை'யையாவது இலக்கியவாதிகள் ஒப்புக் கொள்வார்களா?


இராமாயணத்தைப் புறக்கணித்துவிட்டு ராமர் பாலத்தை ஆய்வு செய்தது ஏன்?


சோல்சனிட்சின் குறித்த இந்தக் கட்டுரையில் ஸ்டாலினின் தவறுகள் பற்றிப் பரிசீலிக்கப்படவில்லை என்பதாலும் சோல்சனிட்சினை அவரது நாவல்கள் வழியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதாலும், "நிச்சயமாக இது நடுநிலை தவறிய ஆய்வுதான்' என்று சோல்சனிட்சின் அபிமானிகள் அமைதி கொள்ளலாம். சோல்சனிட்சினை மதிப்பீடு செய்வது போன்ற பாவனையில் ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் மதிப்பீடு (அவதூறு) செய்வது என்ற அழுகுணி ஆட்ட விதியை வேண்டுமென்றேதான் நிராகரித்திருக்கின்றோம்.


தோழர் ஸ்டாலினின் தவறுகள் எனப்படுபவை, "சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்' என்கின்ற, மனிதகுலம் இதுவரை கண்டிராத புதியதொரு வரலாற்றுச் சூழலில் நிகழ்ந்த தவறுகள். அவற்றை மீளாய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமை. அது முற்றிலும் வேறொரு தளத்தில் நடத்தப்பட வேண்டிய ஆய்வு. சமூக மாற்றத்துக்காக மக்களைத் திரட்டும் பணியில் யார் ஈடுபட்டிருக்கின்றார்களோ, அவர்களால் மட்டுமே அகச்சாய்வுகள் இன்றி இந்த ஆய்வில் ஈடுபட முடியும்.


கட்டின வீட்டுக்குப் பழுது சொல்லும் "உரிமை' கொத்தனாருக்கு மட்டுமே உரித்தானது என்று நாம் கூறவில்லை. சீர் செய்யும் நோக்கில் பழுதை ஆய்வு செய்யும் "அறிவு' பழுது சொல்லும் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றோம். இது அறிவுக்கும் நடைமுறைக்கும் இடையிலான மார்க்சிய உறவு.


"கம்யூனிஸ்டு கட்சி ஜனநாயகமில்லாத சிறை, அதன் தலைவர்கள் அதிகார போதை கொண்ட மூடர்கள், உறுப்பினர்கள் சொரணையற்ற மந்தைகள்' என்பதே அநேகமாக அறிவாளிகள் மற்றும் இலக்கியவாதிகள் கொண்டிருக்கும் கருத்து. சோசலிசத்தை ஒரு உன்னதமான அறம் என்று இவர்கள் கொண்டாடினாலும், அறம் வழுவாத ஒரு கட்சியை அவர்களே உருவாக்கிக் கொள்ளலாமென்றாலும், தங்களது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் தன்னடக்கத்துடன் அந்தப் பொறுப்பை நிராகரித்து விடுகிறார்கள். தங்களது மன உணர்வை வீரியப்படுத்தி தங்களுக்கே வழங்கிய காரணத்தால் அவர்கள் சோல்சனிட்சினை மோகிக்கிறார்கள். அவ்வளவுதான்.


ஆயின், சோல்சனிட்சின் யார்? அவரது சொல்லும் செயலும் ரசியாவில் பிறக்க நேர்ந்த ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதையே காட்டுகின்றன. அவரது ரசிய தேசவெறி, பழமை குறித்த ஏக்கம், அழிந்து விட்ட ஜாராட்சி குறித்த அனுதாபம், நாஜி ஆதரவு, கம்யூனிச எதிர்ப்பு வெறி, ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனம், கிறித்தவப் பிற்போக்கும் போலி அறவுணர்வும் கலந்த ஒழுக்கவாத ஆன்மீகம் அனைத்தும் அவரை அந்தமானில் சிறை வைக்கப்பட்ட சாவர்க்கராகவே அடையாளம் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ் இதயங்களுக்கு அவலமே நேராது, அதிலிருந்து இலக்கியமும் பிறக்காது என்று நாம் கருதவில்லை.


···


குறிப்பு: 21 ம் நூற்றாண்டிலும் இவான் டெனிசோவிச் ஜீவித்திருந்தார். எனினும் அபுகிரைப், குவான்டனமோ சிறைகளில் அவர் அடைக்கப்படாததால், 21 ம் நூற்றாண்டின் மானுடச் சிக்கல் குறித்து தனது குரலைப் பதிவுசெய்யும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டு விட்டது. ஆகவே, அவரைப் பின்தொடர்ந்து எதிரொலித்திருக்கக் கூடிய குரல்களும் நெறிக்கப்பட்டுவிட்டன.