Wed02262020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் வரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்

வரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்

  • PDF

வங்கி நிர்வாகிகள் தான், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்ற கூற்று நிரூபணமாகி வருகின்றது. Fortis என்ற பெல்ஜிய வங்கி சில நாட்களுக்கு முன்னர் தான் திவாலாகியது. தம்மிடம் பணம் இல்லை என்று சொல்லி அரசிடம் கையேந்தியதால், பெல்ஜிய அரசும் "பெருந்தன்மையுடன்" மக்களின் வரிப்பணத்தை கொடுத்து தேசியமயமாக்கியது.

 

வங்கி அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட பின்னர், அந்த வங்கி நிர்வாகிகள் செய்த முதல் வேலை: "ஆடம்பர கொண்டாட்டம்." Fortis (காப்புறுதி) நிறுவனம், தனது 50 க்கும் மேற்பட்ட முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்து, மொனோகோவில் இருக்கும் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்தது.

 

இதற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் யூரோக்கள் செலவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த விருந்தின் போது பரிமாறப்பட்ட உணவின் பெறுமதி, ஒரு ஆளுக்கு 300 யூரோக்கள். அழைப்பு விடுத்த விடுதியில் ஓரிரவு வாடகை ஒரு அறைக்கு ஆயிரம் யூரோக்கள். 

 

வங்கி நிர்வாகிகள் தமது கொண்டாத்ததிற்கு மொனோக்கொவை தெரிவு செய்தது தற்செயல் நிகழ்வல்ல. நீண்ட காலமாகவே பிரான்சின் தெற்கில் இருக்கும் மிகச்சிறிய சுதந்திர நாடான மொனோக்கோ, உலகெங்கும் இருந்து வரும் பணக்காரரின் புகலிடமாக திகழ்கின்றது. கடுமையான "வங்கி இரகசியம்"(கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விபரம் வெளியிடப்பட மாட்டாது) பேணப்படுவதாலும், வருமான வரி இல்லாத படியாலும், பல ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புபணத்தை மொனோக்கோ வங்கிகளில் வைப்பில் இட்டு வருவது இரகசியமல்ல. அமெரிக்க-ஐரோப்பிய சினிமா நட்சத்திரங்கள், மற்றைய பிரபலங்கள் யாவரும் மொனோக்கோவில் வீடு வாங்கி, அயலவராக வாழ்ந்து வருகின்றனர். இனம் இனத்தோடு தானே சேரும்? 

 

ஐரோப்பாவின் பெரிய வங்கிகள்(Fortis உட்பட) எல்லாம், மொனோக்கொவில் கிளைகளை வைத்திருக்கின்றன. இதனால் பல பணக்காரருக்கு தமது கறுப்புபணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது இலகுவாகின்றது. லாபம் என்ற பெயரில் தமது செல்வத்தை பெருக்கும் முதலாளிகள் மட்டுமல்ல, கொள்ளைக்காரர்கள், கிரிமனல்கள் யாவரும் மொனோக்கோ போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். 7800 மொனோக்கோ பிரசைகள், 25000 உலகப் பணக்காரருடன் தமது வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டதன் காரணமாக, அந்நாட்டு மொத்த உள்ளூர் உற்பத்தி வருடத்திற்கு 900 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது போன்ற நாடுகளில், வருமான வரி அறவிடப்படா விட்டாலும், ஒரு நிறுவனம் ஸ்தாபிப்பதற்கான பதிவுப்பணம், உள்ளூர் சட்ட ஆலோசகரை நியமித்தல், மற்றும் அந்த நிறுவன முகாமையாளர்கள் உள்நாட்டில் செலவிடும் தொகை என்பனவற்றால் அதிக வருமானம் ஈட்டுகின்றன. ஐரோப்பிய முதலாளிகளும், செல்வந்தர்களும் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய வரிப்பணத்தை கட்டாது, இவ்வாறான வரியில்லா சொர்க்கபுரிகளில் புகலிடம் பெற்று ஏமாற்றுவதால், மொனோக்கோ வங்கிகள் தமது வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று, ஐரோப்பிய அரசுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

 

சமீபத்திய நிதி நெருக்கடி, அல்லது பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக, வங்கி நிர்வாகிகள் உலகெங்கும் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர். வங்கிகளை நடத்தும் நிர்வாகிகள் தாம், உலகின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையர்கள் என்பது தற்போது உலகறிந்த இரகசியம். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மக் கைன், நெருக்கடிக்கு காரணம் வங்கி நிர்வாகிகளின் பேராசை என்று கூறி வருகிறார். ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் இதனை "சூதாட்டவிடுதி முதலாளித்துவம்" என்று வரையறுக்கின்றனர். 

[vangi_kollaiyar.jpg]

ஐஸ்லாந்து கூட பணக்காரர் தமது கறுப்புபணத்தை பதுக்கும் சொர்க்கபுரியாக இருந்து, அண்மையில் அந்த தேசமே திவாலானது தெரிந்த விடயம். அங்கிருந்து பொதுமக்களின் பணத்தை எடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு வேறு வழியின்றி ஐஸ்லாந்தை "பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தது. இதே சட்டம் மொனோக்கோ மீதும் பயன்படுத்தப்பட்டு, "கருப்புபணமாக" ஒதுங்கியிருக்கும் மக்களின் பணம் மீட்கப் படுமாகில், அதுவே ஐரோப்பிய பொதுமக்களின் கொண்டாட்டமாக இருக்கும். 

 

Last Updated on Monday, 13 October 2008 18:28