ஈழத் தமிழ்மக்கள் துயரத்தில் பிழைக்கும், தமிழக அரசியல்வாதிகள்

அன்று முதல் இன்று வரை இதுதான் கதை. இவர்கள் எப்போதெல்லாம் தலையிட்டார்களோ, அப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் துயரம் பெருகியது. இந்தியா தலையிட வேண்டும் என்று இன்று மீண்டும் கூச்சல் போடுபவர்கள், முன்பும் இதுபோல் கூச்சல் இட்டனர். இதன்போது தமிழ் இனத்தையே இந்தியா கொன்று குவித்தது. மறுபடியும் பிழைப்புவாதிகள், ஈழத் துயரத்தை வைத்து தமது சொந்த அரசியலைச் செய்கின்றனர். 

 

பேரினவாதமோ புலியொழிப்பின் பெயரில், ஒரு முழு யுத்தத்தையே தமிழ்மக்கள் மேல் நடத்துகின்றது. ஒருபுறம் புலிப் பாசிட்டுகள் திணறுகின்றனர். மறுபக்கம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்தையும் மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

 

புலிகளால் கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபடுத்தப்படும் பலர் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் இராணுவக் களையெடுப்பில் பலர் (பெருமளவில் புலிகளும், சிறியளவில் அப்பாவிகள்) காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். புலிப் பிரதேசத்தில் இருந்து தப்பமுனைவோருக்கு சித்திரவதை முதல் மரணம் வரையான தண்டனையே, வாழ்வின் விதியாகின்றது. தமிழ் இனத்தின் குழந்தைகள், பல வழியில்  பலரால் அழிக்கப்படுகின்றனர்.

 

யுத்தத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் எந்த சொந்த முடிவையும் சுயமாக எடுக்கமுடியாது,  அவர்கள் மரணத்தின் விளம்பில் நிற்கின்றனர். யுத்த முனையில் இருந்து தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர்கள் மனித கேடயமாக்கப்பட்டுள்ளனர்.

 

மக்களை அங்கிருந்து வெளியேறா வண்ணம், மக்கள் யுத்த முனையில் திணிக்கப்படுகின்றனர். இதில் இருந்து (புலிகளிடமிருந்து) தப்பிச் சென்றவர்கள், பேரினவாதத்தின் கழுகு கண்ணுக்குள் களையெடுக்கப்படுகின்ற மனித அவலம்.

 

தமிழ் இனம் எங்கும் நிம்மதியாக வாழ வழியற்ற வகையில், யுத்தம் அவர்கள் மேல் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. ஒதுங்கி வாழ அனுமதிக்கப்படுதில்லை. இப்படி எங்கும் மனித அவலத்தை திணிக்கின்றனர். ஏன்? எதற்கு? என்று தெரியாது, இதுவே தமிழ் மக்களின் வாழ்வாகின்றது. 

 

மக்கள் யுத்தத்தை வெறுத்து நிற்கின்றனர். யுத்தத்தில் இருந்து விடுபட்டு, சமாதானமாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். இதை மறுத்த புலிகள், கிழக்கில் யுத்தத்தை வலிந்து தொடங்கினர். இப்படி தொடங்கிய யுத்தம் தான், இன்று பேரினவாதத்தின் அழத்தொழிப்பு யுத்தமாக மாறிவிட்டது. புலிகள் மீண்டும் சமாதானத்தைக் கோருகின்றனர்.

 

புலிகளுக்கு மீளமுடியாத தோல்விகள், அடுக்கடுக்காக ஏற்படுகின்றது. இதில் இருந்து மீள, சமாதானம் முதல் இந்தியத் தலையீடு வரை கோரி நியாயப்படுத்துமளவுக்கு பீதிக்குள் புலிகள் சிக்கிவிட்டனர்.

 

சமாதான காலத்தில் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய இடைவெளி, யுத்தத்தின் தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியமான காரணமாக உள்ளது. இப்படி காரணமிருக்க, இதற்கு வெளியில் புலிகள் சுழியோடுகின்றனர்.

 

புலிகளின் இந்த தோல்வி மூலம், தமிழ் இனத்தை இன அடிப்படையின்றி அழித்தொழிப்பதை உள்ளடக்கிய வகையில் தான், யுத்தம் திட்டமிட்ட வகையில் பேரினவாதிகளால் நடத்தப்படுகின்றது. இதற்கமைய சமாதான நாடகங்கள் முதல் கைக்கூலி தமிழ் அரசியல் வரை அரங்கேறுகின்றது. பேரினவாத இராணுவ ஒழுங்குக்கு உட்பட்ட வகையில், இவை எல்லாம் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது.

  

இந்த திட்டமிட்ட இன அழித்தொழிப்பு, இந்தியாவின் துணையின்றி நடத்தப்படவில்லை.

 

யுத்தத்தை இலங்கை அரசு நடாத்தவில்லை, இந்தியாவே தான் நடத்துகின்றது. இலங்கை அரசு, இங்கு இந்தியாவின் கருவியாக செயற்படுகின்றது. அதாவது இஸ்ரேல் அமெரிக்காவின் கருவியாக, மத்தியகிழக்கில் யுத்தம் நடத்துவது போன்றதுவே இது.

 

இந்தியா ஆலோசனைகள், தகவல்கள், உளவு நடவடிக்கைகள், பிளவு நடவடிக்கைகள், இராணுவ வழங்கல், மீட்பு நடவடிக்கை, இராணுவ வல்லுனர்களின் உதவிகள் என்று, முழு நிறைவான யுத்தத்துக்கு இந்தியாவின் பங்கு என்பது ஐயத்துக்கு இடமற்றது. இந்தியாவின் வழிகாட்டலின்றி, இந்த யுத்தம் இலங்கையில் நடாத்தப்படவில்லை.

 

இது இலங்கை அரசின் யுத்தமல்ல. இந்திய நலனுக்கான இந்தியாவின் யுத்தம்.  உண்மையில் இந்த யுத்தம் மூலம் இந்தியா அடையும் இலாபம், இலங்கை மேலான மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்துவது தான். பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இந்திய நலன்களுக்கு உட்பட்டவை தான் இந்த யுத்தம். இந்த யுத்தத்தைத் தான், தமிழின அழித்தொழிப்பு யுத்தமாக பேரினவாதிகள் நடத்துகின்றனர். 

 

இதற்கேற்ப இந்தியப் பொருளாதார நலன்களே, பேரினவாத அரசால் உறுதிசெய்யப்படுகின்றது. மன்னார் எண்ணை வயல், திருகோணமலை எண்ணைக் குதம், காங்கேசன்துறை சீமெந்து ஆலை, சம்பூர் அனல் மின்நிலையம், இலங்கை பெற்றோலிய வர்த்தகம், சேது கால்வாய் திட்டம் என்று எண்ணுக்கணக்கற்ற ஒப்பந்தங்கள், இந்திய நலனுக்கு அமைய அண்மைக்காலத்தில் உருவானவை. இந்தியாவின் வர்த்தகத்துக்கு அமைய, ஏற்றுமதி இறக்குமதி பெரியளவில் இந்திய நலனுக்கு ஏற்ப திறந்துவிடப்பட்டுள்ளது.

 

இப்படி இந்தியத் தலையீடானது பொருளாதாரத்தில் இலங்கையை அடிமைப்படுத்துகின்றது. இதை எதிர்த்து யாரும் மூச்சுக் கூட விடவில்லை.  இலங்கைப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதார நலனுக்கு உட்பட்டுவிட்டது. இதனடிப்படையிலேயே இந்திய இராணுவ நலன்கள் அமைகின்றது. இதில் புலி ஒழிப்பு, ஒரு அம்சம் மட்டுமே. புலி ஒழிப்பே, முழுமையான அம்சமல்ல. இந்திய நலன்களுக்குள், புலி ஒழிப்பு ஒரு சிறு அம்சம் மட்டுமே. இந்திய நலனும், தலையீடுமோ மிகப்பெரியது.

 

இதில் புலியை அழிப்பது, இந்தியப் பொருளாதார விஸ்தரிப்புக்குரிய முக்கிய நிபந்தனையாகிவிட்டது. தமிழ் பகுதியில் உள்ள இந்திய நலன்களை கொள்ளையிட, இலங்கையின் இராணுவ வெற்றி இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது.

 

இந்த வகையில் பேரினவாதத்தின் யுத்தம் என்பது, இந்தியாவின் மறைமுகமான யுத்தமாகும். இந்த இந்திய விஸ்தரிப்பை, அதன் நடத்தைகளை ஒரு புள்ளியின் வைத்து எதிர்ப்பது என்பது, குறுகிய பிழைப்புவாதமாகும். இது இந்தியாவின் தலையீட்டுக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிரானதல்ல.

 

தமிழ்நாட்டு புறம்போக்குகளின் அரசியல் 

 

ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை வைத்து, சொந்த அரசியலை வியாபாரமாக்குகின்றனர் இவர்கள். இதற்கமைய ஈழத் தமிழ் இனம் என்று, நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஈழத்து மக்களின் கண்ணீரை வைத்து, எப்படி அரசியல் செய்வது என்பதில் போட்டி போடுகின்றனர். இப்படி ஈழத்தமிழனின் கண்ணீரை தம் சொந்த அரசியலாக்குகின்றனர்.


இந்தப் பிழைப்புவாத புறம்போக்குகள், தமிழகத் தமிழ் மக்களையிட்டுக் கூட அக்கறையற்றவர்கள். தமிழகத்து தமிழ் இனத்தை விற்று பிழைக்கும் இந்தக் கூட்டம், தமிழ் மொழியை அழிப்பதில் கூட கூடியே நிற்கின்ற பொறுக்கிகள். ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, அதில் சினிமா ஆபாசம் முதல் தமிழைக் கொச்சை ஆங்கிலமாக்கி கொலை செய்யும் கயவாளிகள். இவர்கள்   தான் தமிழ் மக்களின் முதல்தரமான எதிரிகள். இவர்களின் ஈழமக்கள் பற்றிய அக்கறை என்பது, தமிழ் இனத்தை மொட்டை அடிக்கும் அரசியலை அரங்கேற்றத் தான். இது அவர்களின் சொந்த நலன்களை அடிப்படையாக கொண்டதே தான். ஈழத்து தமிழ் மக்களின் அவலத்தில், ஓட்டுப்பொறுக்கி பிழைக்க முனைகின்றனர்.

 

ஈழத்து தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கு ஆதரவு என்ற கோசம் போட்டும் இந்த ஓட்டுப்பொறுக்கிக் கும்பல், தமிழ்நாட்டு மக்களின் சுயநிர்ணயத்தை என்றும் நிலைநாட்டியது கிடையாது. இந்தியாவை தலையிடக் கோரும் போது, இந்தியா தனது நாட்டில் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை வழங்கியது கிடையாது. சுயநிர்ணயம் பற்றி ஓப்புப் பாடுபவர்களோ, நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு ஏலம் போட்டு விற்கின்ற தேசத் துரோகிகள். போலிக் கம்யூனிஸ்ட்டுகள் முதல் துக்ளக் சோ வரை செய்கின்ற இந்த அரசியல், ஈழத் தமிழ் மக்களின் கண்ணீரை, தமது பிழைப்பு அரசியலாககுவது தான். இந்த அடிப்படையிலேயே, இதை வீங்கவைக்க முனைகின்றனர். இதற்காக போட்டி போடுகின்றனர்.

 

இந்தக் கும்பல் இந்திய அரசின் இராணுவ வழங்கலை நிறுத்தக் கோருகின்றனர். அதே நேரம் இந்தியாவின் பொருளாதார தலையீட்டை நடத்தக் கோருகின்றனர். இந்தியா ஈழத்தை சூறையாட செய்து கொண்ட பல பொருளாதார ஒப்பந்தத்தை, ரத்துச் செய்யக் கோரவில்லை. இதற்கு அப்பால் இராணுவ தலையீட்டை மட்டும் எதிர்க்கின்ற விஸ்தரிப்புவாத அரசியலே, தேர்தல் கூத்தாகின்றது. 

 

இப்படிக் கோசம் போடும் சிலர், புலியின் பல்வேறு வலைக்குள் சிக்கிக் கிடப்பவர்கள். பணம் முதல் மிரட்டல் வரை, அவர்களை ஈழத்தமிழர் என்று கோசம் போடவைக்கின்றது. 

 

ஈழத்தமிழரின் அவலத்தை அரசியலாக்கி பொறுக்கித்தின்னும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், காலத்துக்கு காலம் ஈழத்தமிழர்கள் மேல் குதிரை ஓட்டியவர்கள். உண்மையில் ஈழத்து தமிழ் மக்கள் மேல் எந்த அக்கறையையும், என்றும் கொண்டிருக்கவில்லை.

 

ஈழத்து தமிழ் மக்களின் அவலம், கடந்த 30 வருடத்தில் மலையளவானது. பேரினவாதம் முதல் புலிகள் வரை, தமிழ் மக்களை துன்புறுத்திய போதெல்லாம், இந்த தமிழ் இன ஓட்டுப்பொறுக்கிகள் அதற்கு துணைநின்றனர். பாசிசக் குழுக்களின் பின் நின்று, தமிழ் மக்களை தூக்கில் போட கயிறு திரித்தவர்கள். 

 

கடந்த 30 வருடத்தில் இந்த தமிழ் இன உணர்வு பெற்ற பொறுக்கிகளால், ஈழத் தமிழ் இனம் பெற்;றது என்ன? மனித அவலத்தை தவிர, வேறு எதையும் ஈழ மக்கள் பெறவில்லை. ஆயுதம் ஏந்திய பாசிசக் குழுக்கள் முதல் தேர்தலுக்கு கோசம் போடும் தமிழ்நாட்டு தமிழ் இன உணர்வாளர்கள் வரை, ஈழத்து தமிழ் மக்களின் அவலத்தை விதைத்து அதை அறுவடை செய்து பிழைத்தவர்கள் தான்.

 

சந்தர்ப்பவாத அரசியல் கொண்டு ஊதிப்பெருக்கி ஓட்டுப் பொறுக்கும் அரசியலைத் தான், ஈழத் தமிழினத்துக்கு எதிராக செய்தனர், செய்கின்றனர். இதுதான் அவர்களின் கடந்தகாலம் முதல் இன்றைய அரசியல் வரையும் அரங்கேறுகின்றது.

 

இவர்கள் இந்தியா தலையிடக் கோருகின்றனர். எப்படி? எந்தவகையில்? எந்த நோக்கில்? சரி இராணுவ ரீதியாகவா? எப்படி?

 

நீங்கள் 1987 இலும் அதற்கு முன்னரும் இப்படித்தான் ஒப்பாரி வைத்தீர்கள். 1987 இல் இந்தியத் தலையீடு நடத்தபோது, தமிழ் இனம் சந்தித்த துயரங்கள் அவலங்கள் இன்னமும் தொடருகின்றது. மீண்டும் தலையீடு என்று, அதே புல்லுருவிகள் கூச்சலிடுகின்றனர். ஈழத்தமிழ் இனத்துக்கு எதிராக, அதே ஆக்கிரமிப்புக் கோசம்.

 

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கொன்ற இந்திய இராணுவம், மீண்டும் எம் மண்ணில் ஈழத் தமிழ் மக்களை நரவேட்டையாட, ஈழத் தமிழனின் அவலத்தின் பெயரில் கூச்சலிடுகின்றனர். தமது சொந்த கட்சி அரசியலுக்காகவும், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி தேர்தலில் வெல்லவும், ஈழத்தமிழரின் அவலம் தேர்தல் பொறுக்கிகளின் கையில் சிக்கி வியாபாரமாகின்றது. 

   

இதை கொண்டு பிழைக்க முனையும் புலிகளும், புலிப் பினாமிகளும்

 

இதற்குள் வேறுபாடு கிடையாது. எல்லாம் புலி என்றவர்கள், இறுதியாக தஞ்சமடைந்த இடமோ இந்திய தேர்தல் கூத்தாடிகள். இவர்களுடன் சேர்ந்து, புலிகள் கூத்தாடுகின்றனர்.

   

தமிழ் இனத்தை பாதுகாப்பது புலிகள் தான் என்று கூச்சல் இட்டபடி, பாசிச வெறியாட்டத்தை தமிழ் இனத்தின் மேல் நடத்தியவர்கள் இவர்கள். இப்படி புலிகளே எல்லாம் என்று கூச்சலிட்ட புலிக் கும்பல், இன்று இந்திய தலையீட்டுக்கு ஏங்கி நிற்கின்றது. இந்தியாவுடன் மோதிய போது ஆக்கிரமிப்பாளர்கள் என்றவர்கள், இன்று மீண்டும் அந்த ஆக்கிரமிப்பைக் கோருகின்ற அரசியல்  அவலமும் கூத்தும் வெட்கக்கேடு. 

 

தேர்தல் பிழைப்புவாத தமிழக அரசியல் கூத்தைக் காட்டி, ஓரணியில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றனர். இதனடிப்படையில் விமர்சிக்கின்றனர். தூற்றுகின்றனர். இந்த அடிப்படையில் சொந்த புலித்தலைமையை விமர்சிக்க இந்தக் கும்பலுக்கு வக்கு கிடையாது. தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு பதில் வேற்றுமையை விதைத்த, எதிரியை பலப்படுத்திய புலியை திருத்த வக்கில்லை, மற்றவனை திருத்த முனையும் பாசிசம்.

 

இன்றுவரை தமிழினத்தை, தமிழ் தேசியத்தின் எதிரியாக்கும் புலிப் பாசிசத்தைத் தான் தேசியமாக காட்டி ஆணையில் வைக்கின்றனர். இப்படியிருக்க தமிழ்நாட்டு பிழைப்புவாதக் கும்பல்களின், ஒற்றுமை பற்றி உபதேசம். 'ஊருக்கு உபதேசம் தனக்கில்லை" என்பது பாசிசத்தின் அறமாகி அறிவாகின்றது.  

 

இவர்கள் எல்லாம் சேர்ந்து, எப்படித் தான் தமிழ் இனத்தைக் காப்பாற்றமுடியும்;. பேரினவாதிகளுக்கு இணையாக, தமிழ் இனத்தின் அழிவைத் தான் இவர்கள் தொடர்ந்தும் ஏற்;படுத்துகின்றனர். தமிழ் நாட்டு பிழைப்புவாதிகள் முதல் புலிகள் வரை, ஈழத் தமிழ் இனத்தை வைத்து பிழைப்பதைத் தவிர, வேறு எந்த சமூக நோக்கமுமற்றவர்கள். ஈழ மக்களின் வாழ்வில் சுபீட்சத்துக்கு பதில், மனித அவலத்தையும் துயரத்தையுமே  விதைக்கின்றனர். இதைத்தான் முடிவாக மொத்த ஈழத்தமிழ் இனம் சந்திக்கவுள்ளது.  

 

பி.இரயாகரன்
13.10.2008