இலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை
தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம்.
“எக் காரணம் கொண்டும் தனி நாட்டுக்கு இடமே இல்லை. இலங்கையை தனியாக பிரிப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம்.” என்கிறார் ராஜபக்சே.
ஆனால் தமிழர்களை தன் சொந்த நாட்டு மக்களாக நினைத்துப் பார்க்கிற எண்ணம் துளி கூட ராஜபக்சேவிடம் இல்லை. தமிழர்களுக்கும் உரியதுதான் இலங்கை, என்கிற எண்ணம் ராஜபக்சேவிடம் இருந்தால், தன் சொந்த நாட்டு மக்களையே இப்படிதான் ஒரு அரசு விமானத் தாக்குதல் நடத்தி கொல்லுமா?
தன் நாட்டு மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுபொட்டலம் வழங்குகிற அரசுகளை பார்த்து இருக்கிறோம். ஆனால் ராஜபக்சே அரசு தன் நாட்டு தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் ஏவகணை தாக்குதல்களை வழங்குகிறது.
கேட்டால், “அப்படி எதுவும் தாக்குதல் இல்லை” என்று புளுகுகிறார் ராஜபக்சே.
ஆனால் அவருடைய சமீபத்திய செயற்கையான தமிழ் மற்றும் தமிழர்கள் ஆதரவு வசனம், தமிழர்கள் மீதான கொலைவெறியை மறைப்பதற்கான யுக்தியாகத்தான்வெளிபடுகிறது.
ஐநாவின் யோக்கியதையைதான் ஈராக்கில் காறி உமிழ்ந்ததே. பொதுவாக ஐநாவின் சமாதானம் என்பதே, ‘நீ போனா தகறாறு ஆயிடும். நான் போயி அவனை செருப்பால் அடிச்சிட்டுவற்ரேன்’ என்கிற முறைதான்.
****
மோடியின் கேடித்தனத்துக்கு கண்டனம் தெரிவித்து, தன் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து தன்னை நல்லவன் போல காட்டிக் கொண்டது ஈராக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்த அமெரிக்கா. அந்த மோடியை போன்ற ஒரு கொலைகாரனான ராஜபக்சேவை அழைத்து, ஐநா சபையில் பேசவைக்கிறது அதே ‘டபுள் ஆக்சன்’ அமெரிக்கா. இதுபோன்றுதான் பல விஷயங்களில், அமெரிக்காவின் ‘இரட்டை வேட ஜனநாயகம்’ உலகம் முழுக்க நாறி கொண்டிருக்கிறது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்ததிற்காக, தன் உயிரைக்கூட தர தயாராக இருக்கிற இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் உயிரை பறிக்கிற ராஜபக்சே அரசை வேடிக்கை பார்க்கிறார். தமிழர்களின் குரல் மன்மோகன் சிங்கின் தலைப்பாகையை தாண்டி அவர் காதுகளில் விழ மறுக்கிறது.
ஈழத்தில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதற்காக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்து நாம் இதை மிகைப்படுத்தி சொல்லவில்லை. அங்கே பாதிக்கப்படுகிற எளிய மக்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். எப்போதுமே கலவரங்களிலும், பொது இடங்களில் குண்டு வைப்பதிலும், போர்களிலும் கையாலாகாத பாசிஸ்டுகள் எளிய மக்களைத்தான் கொன்று கூவிப்பார்கள். அதுதான் குஜராத்திலும் நடந்தது. ஈராக்கிலும் நடந்தது. இப்போது ஈழத்திலும் நடக்கிறது.
தமிழர்கள் கொல்லப்படுவதை, சிங்கள இன வெறியர்களைவிடவும், மாஜி போராளிகளான துரோகத் தமிழர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது என்ற ஆசையில்.