Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது

சார்ந்து சிலர் தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். இதை மொழியின் பெயரால், தத்தம் சார்புத் தன்மையாலும், விடையத்தின் மீதான கவனத்தை இது திசை திருப்புவதாகவும், இன்னும் பலவாறாக கூற முனைகின்றனர்.

 

குறிப்பாக அஃறிணையில் இனம்காட்டி அம்பலப்படுத்துவதை பலர் ஆட்சேபிக்கின்றனர். இப்படி எழுதலாமா என்று கேட்கின்றனர். மொழியில் இப்படி எழுதுவதே தவறு என்கின்றனர். இப்படி கூறுபவர்கள் சிலர் எழுத்தாளனுக்கு இப்படித் தான் எழுத வேண்டும் என்று கடிவாளம் போடக் கூடாது என்று கூறும் ஜனநாயகவாதிகள்.

 

முன்பு பலதரம் நான் இது பற்றி விவாதித்துள்ளேன்;. நாயை நாயென்று தான் சொல்ல முடியும்;. நாயைப் போல் வாழ்பவனை எப்படித் தான் நாம் கூறமுடியும். பன்றியை பன்றியென்று தான் சொல்ல முடியும்;. மிருக குணத்தை கொண்டுள்ளதால் ஒரு மிருகத்தை மிருகம் என்று அழைக்க முடியுமென்றால், குறித்த மிருகத்தின் குணத்தை மனிதன் தனது குணமாக கொள்ளும் போது நாம் வேறு எப்படித்தான் அழைக்கமுடியும்.

 

தேசியம் என்றும், ஜனநாயகம் என்றும் மனிதர்களின் கழுத்தையே வெட்டி அனாதரவாக வீதியில் எறிவதை நாம் எப்படி பண்பாகவும் நாகரிகமாகவும் விளித்து எழுதமுடியும். எப்படித்தான் முடியும், நீங்களே கூறுங்கள். இதை ஆதரித்து கொள்கை விளக்கம் வழங்குபவனை எப்படி நாம் பண்பாக விளிக்க முடியும்;. வெட்டும், கொத்தும் மட்டுமல்ல, மனித அவலங்களால் சமூகத்தை நாறடிக்கும் இந்த போக்குடன், நாம் எப்படி எந்த முகத்துடன் அனுசரித்து இணங்கிப் போகமுடியும்;. இதையே விதியென்றும், இதுவே இலட்சியமென்று திணிப்பவனை எப்படி நாம் அங்கீகரித்துப் போகமுடியும்;. மனிதர்கள் குதறப்படுகின்ற நிலையில், இரத்தம் வடியும் வாயில் தொட்டு எழுதும் கரங்களை எப்படி நாம் பண்போடு நாகரீகமாக கைகுலுக்கி அணுகமுடியுமா?. நீங்களே சொல்லுங்கள். சகமனிதனை மனிதனாக மதிக்க மறுத்து, வக்கிரத்துடன் வன்மம் புரியும் ஒருவனை நாம் சக மனிதனாக கருதி பண்பாட்டுடன் அணுகமுடியுமா?

 

தேசியம் என்ற பெயரில் உலகெங்கும் போதைவஸ்துகளை காவித்திரிந்து பணம் பண்ணியவர்களையும், மேற்கில் உள்ள மக்களுக்கு போதைவஸ்து கொடுத்து சீரழித்தவர்களை எப்படி நாம் பண்பாட்டுடன் நெருங்கமுடியும். அவர்கள் இன்று புலித் தேசியத்துக்கு நிதி கொடுக்கும் தேசிய புரவலர்களாகவும், தேசியத்தை தலைமை தாங்கும் தலைவர்களாகவும், புலியின் எதிர்தரப்பில் ஜனநாயகவாதிகளாக மக்களின் முதுகில் ஏறி நிற்பதை நாம் எப்படித் தான் அணுக முடியும்;? மக்களின் விரோதிகள் உலகையே சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு பாய் விரிப்பதை எப்படி அனுமதிக்க முடியும். விபச்சார தரகருக்குரிய, இந்த பண்புகெட்ட மக்கள் விரோதிகளை நாம் எப்படி பண்போடு; அணுகமுடியும். சொல்லுங்கள்.

 

பண்புடன் நாங்கள் இவர்களை அணுக வேண்டுமென்றால், நாம் பண்பு கெட்டவர்களாக முதலில் மாறவேண்டும். புலிகள் மட்டுமல்ல இன்று ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்பு அணியினர் பலருக்கும் இதுவே பொருந்துகின்றது. நாயிலும் கீழாக மக்களின் முதுகில் ஏறிநின்றி வம்பளந்து, சமூகத்தையே அசிங்கப்படுத்தி குரைப்போரை அனுசரித்து நாகரீகமாக அணுக முடியாது. உங்களால் அப்படி முடியும் என்றால் எப்படி முடியும்? அதைச் சொல்லுங்கள்.

 

கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மக்களின் உழைப்பைச் சூறையாடி ஒட்டுண்ணியாக உறுஞ்சி வாழும் ஒருவனை, இவர்கள் யாரும் மக்கள் நலன் சார்ந்து தண்டித்தார்களா எனின் இல்லை. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுக்கு எதிரான ஒருவன் மீதான தண்டனை என்பது, மக்கள் நலனின் அவசியமானது. ஆனால் நடப்பது மக்களை சூறையாடுபவர்கள், சுரண்டித் தின்பவர்கள் தான், இதற்கு எதிரானவர்களை தமது வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். உழைப்பில் ஈடுபடாது மற்றவன் உழைப்பில் வக்கரித்து இரத்தம் குடிக்கும் அட்டைகளை நாம் பண்போடு அழைக்க முடியாது. மக்களின் வாழ்வை உறுஞ்சும் எவரையும் நாம் தோழமையுடன் இணங்கி நின்று தோள்கொடுக்க முடியாது. அவர்களின் மிருக நிலையை, சமூக உயிரியாக இல்லாத அந்த மனிதனின் மிருகத் தன்மையை தோலுரித்து அப்படியே நிர்வாணமாக காட்ட வேண்டியுள்ளது. போலியாக அவர்களுக்கு நாம் மகுடம் சூட்டமுடியாது.

07.03.2006