"எங்களுடைய பெண்கள் இயக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அது ஒடுக்கு முறை நடைமுறைகளைக் கொண்ட நேபாள பழைமைவாத சமூகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய சமூகத்தில் 300 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது. உண்மையான மாற்றம் போராட்டம் மூலமே சாத்தியமாகும்." இவ்வாறு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் இயக்கத்தின் அரசியல் நிர்ணயசபைக்குத் தெரிவான பெண் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

அண்மையில் நேபாளத்தில் இடம் பெற்ற அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் சிறுபான்மை இனத்தவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின்தங்கிய மக்கள் பிரிவினரின் பிரதிநிதிகள் பலர் வெற்றி பெற்றனர். குறிப்பாகப் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் மேற்படி சபையில் 33.21 வீதமாக உள்ளது. அதாவது 575 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபையில் 191 பேர் பெண் பிரதிநிதிகளாவார். இவர்களில் 30 பேர் நேரடித் தேர்தல் மூலமும் மிகுதி 161 பேர் விகிதாசாரத் தேர்தல் அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர். ஆனால் 1999ம் ஆண்டு பழைய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அதாவது 205 உறுப்பினர்கொண்ட பாராளுமன்றத்தில் 12 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர்.
ஆனால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் மாஓவாத கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களாக 74 பேர் போட்டிக்கு நின்றனர். 39 பெண்கள் நேபாளக் காங்கிரஸிலும் 36 பேர் ஐக்கிய மாக்ஸிஸ லெனினிஸக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 13 பெண்கள் மாதேசிக் கட்சியிலும் வேட்பாளர்களாக இருந்தனர். இத்தகைய பெண் வேட்பாளர்கள் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். இவ்வாறு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மாஓவாதக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் ஒருவர் ஹகாற்றி மாகர் என்பவர். அவரது கணவர் முடியாட்சியை எதிர்த்த மாஓவாதிகள் நடாத்திய போராட்டத்தில் தியாகியானார். தனது கணவனது இறப்பிற்கு பின்பும் கைக் குழந்தையுடன் நேபாளத்தின் பல பிரதேசங்களிலும் சென்று மக்கள் யுத்தப் போராட்டப் பணிபுரிந்த ஒரு போராளியாவார். அவரைப் போன்ற பெண்களின் பிரதிநிதிகள் நேபாளத்தின் 12.5 மில்லியன் பெண்களுடைய உரிமைகளுக்கான பிரதிநிதிகளாக உள்ளனர். அவர் கூறுகையில் 33 வீதத்துடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 வீதமாக உயர வேண்டும் என்றார்.
பெண்கள் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பதவிப் பிரச்சினை அல்ல. நடப்பில் இருக்கும் சமூக அமைப்பில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்கு முறைகள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடும் கொள்கையையும் நடைமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பிரதானமானதாகும்.
மேற்படி பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இலங்கை, இந்திய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாகும். குறிப்பாக இந்தியாவில் இதுவரை பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி என்ற பொம்மைப் பதவிக்கு ஒருவரை நியமித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்கும் பிற்போக்கு நிலைதான் அங்கு காணப்படுகிறது. இங்கும் சிறிமாவோ, சந்திரிகாவைக் காட்டி பெண்களுக்கு அந்தஸ்து கிடைத்ததாகப் பெருமை பேசுவோர் உள்ளனர். ஆனால் நேபாளத்தின் பத்து வருட ஆயுதப் போராட்டமும் கிளர்ந்தெழுந்த ஐந்து பிரதான வெகுஜன எழுச்சிப் போராட்டங்களும் பெண்களின் பங்களிப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டன.
நேபாளத்தில் மாஓவாதக் கட்சியின் பெண்கள் இயக்கம் சகல நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு வந்த பெண்கள் மத்தியில் சமூக மாற்றம் நோக்கிய வெகுஜன அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்ததன் விளைவே அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க காரணமாகும்

 

http://tamilgarden.blogspot.com/2008/10/blog-post_06.html