Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள்’ என்று திரும்ப, திரும்ப ஒரு செய்தி இந்தியா முழுக்கச் சொல்லப்படுகிறது. ஆனால் அது கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்ல. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள்.

இந்தத் தாக்குதல்கள் மதக் கலவரம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, ஜாதி இந்துக்கள் நடத்தும் வன்கொடுமை. இந்தியா முழுக்க கிறிஸ்த்துவர்கள் மீதான வன்முறை, இந்து அமைப்புகளால் பெரும்பாலும் உயர்ஜாதி கிறிஸ்துவர்கள் மீதோ, இடைநிலை ஜாதி கிறிஸ்தவர் மீதோ நடத்தப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதுதான் தொடர்ந்து நடத்தப்படுகிறது.


 

மலைவாழ் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கிறிஸ்த்துவராக மாறுகிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை. கிறிஸ்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் முன்னேறி,‘தங்களின் அடிமைகள் கை மீறி செல்கிறார்கள்’ என்கிற காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும்தான் - நிலப்பிரபுக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்டவர்கள் போன்ற சமூகத்தில் உள்ள சில ஜாதி வெறியர்களால் மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் 

மீது வன்முறைகள் நடத்தப்படுகிறது.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத கிறிஸ்த்துவர்கள் கொலை செய்யப்பட்டது கூட, அவர்கள் மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வேலை செய்தார்கள் என்பதினால்தான். அதுபோல்தான் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வழிபடும் ‘சர்ச்சு’கள்தான் தாக்கப்படுகின்றன.

அதே காரணத்திற்காகத்தான் சில நேரங்களில் கிறிஸ்த்துவப் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்த்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் கூட விழுப்புரத்தில் வன்னியக் கிறிஸ்த்துவர்கள் தாழ்த்தப்பட்ட கிறிஸ்த்துவர்கள் மீது கொடூராமான முறையில், ஒரிசாவில் இந்து ஜாதி வெறி கிறிஸ்துவர்களை தாக்கியது போன்று கிறிஸ்துவர்களே கிறிஸ்துவர்களை தாக்கினார்கள்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் யூனியன் அமைப்பதினால், ‘கம்யூனிஸ்டுகளுக்கு நேர் எதிரானவர்கள் இந்து அமைப்புகள்’ என்ற காரணத்தினால், பல கிறிஸ்த்துவ முதலாளிகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்புகளுக்கு பணம் கொடுத்து, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இந்து வெறியர்களை அடியாட்களாக பயன்படுத்துகிறார்கள்.


ரப்பர் தோட்ட முதலாளிகளாக இருக்கிற சிரியன் சர்ச் கிறிஸ்த்துவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக, இந்து அமைப்புகளுக்கு பணம் கொடுக்கிறார்கள். கிறிஸ்த்துவ நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புடைய கிறிஸ்த்துவரான ஜேப்பியார் போன்ற ‘கல்வி வள்ளல்கள்’ இதுபோன்ற ‘வள்ளல்’ தனங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

***

பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளாக இருப்பவர்கள் மிகப்பெரும்பாலும், பழங்குடி மற்றும் தாழ்த்தப்படட மக்களே. இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நேர் விரோதிகளாக இருக்கிற ஆதிக்க ஜாதி நிலப்பிரபுக்களை கொன்று, நிலங்களை பிடுங்கி நிலமற்றவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக மவோயிஸ்டுகளை ஒன்றும் செய்ய முடியாத நிலப்பிரபுக்கள், அவர்கள் மீது உள்ள கோபத்தை, அவர்கள் சார்ந்த சமூக மக்கள் மீது திருப்புகிறார்கள். கூலி படையை ஏவி பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை கொல்கிறார்கள்.

இதுபோக, இயல்பாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உயர்ஜாதிக்காரர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்கள் மீது உள்ள காழ்ப்புண்ர்ச்சியை, வெறுப்பை இந்து அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது இந்து அமைப்பை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு கொண்ட உயர்ஜாதிக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்.

1991 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு அரசியல் விழுப்புணர்ச்சி எழுந்தது. ஜாதி இந்துக்கள் துணையில்லாமல், அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்தார்கள். தமிழகம் முழுக்க ‘அம்பேத்கர் மன்றம்’ என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறைய பொதுக்கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார்கள். இது ஜாதி இந்துக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த எரிச்சல் பாஜக ஆதரவாக அவதாரம் எடுத்தது.

எனக்கு தெரிந்து 17 ஆண்டுகளுக்கு முன்னால் - சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வந்தவாசியில் பாஜகவில் பெருமளவில் பங்கெடுத்து, அதை வழி நடத்தியவர்கள் முதலியார் ஜாதியை சேர்ந்தவர்கள்தான். முதலியார்கள் வழிநடத்திய பாஜக இஸ்லாமியார்களோடு இணக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுதான் விரோதம் காட்டியது. இஸ்லாமியர்களின் பொதுக்கூட்டத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. அம்பேத்கர் கூட்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நிறைய தடைகளை உருவாக்கினார்கள். வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை எல்லாம் அழைத்து வந்து வந்தவாசியல் மாநாடும் நடத்தியிருக்கிறார்கள்.

(அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், வர்த்தகப் போட்டிக்காகவும் இந்து அரசியல்வாதிகளும் - இந்து முதலாளிகளும் ‘இந்து’ அடையாளத்தோடு தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் இறக்குவார்கள் என்பது வேறு.)

அதுபோக இந்தியா முழுக்கவே பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் இஸ்லாத்திற்கு எதிராக இந்து மதவெறியை நிறுவுவது போல், கிறிஸ்த்துவத்திற்கு எதிராக செய்வதில்லை. அதற்குக் காரணம், ஜாதி மற்றும் வழிபாட்டு முறைகளில், பழக்க வழக்கங்களில், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றில் இந்துக்களுக்கு அனுக்கமாகவே நடந்து கொள்கிறார்கள் கிறிஸ்த்துவர்கள். ஒரே ஜாதியில் இன்னும் நெருக்கமாக சொன்னால், ஒரே குடும்பத்தில் இந்துக்களும் கிறிஸ்த்துவர்களும் பின்னி பிணைந்து இருக்கிறார்கள்.

தமிழகத்து தென் மாவட்டங்களில், நாடார் சமுதாயத்தில் இப்படி ஒரே குடுபத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்த்துவர்களாகவும், இந்துக்களாகவும் பெருமளவில் இருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் மகன் ஒரு கிறிஸ்தவர் என்று நினைக்கிறேன். தேவர் ஜாதியிலும் இப்படி இருக்கிறார்கள். எல்லா ஜாதியிலும் இப்படி கிறிஸ்த்துவர்களும், இந்துக்களும் கலந்து புழங்கத்தான் செய்கிறார்கள். ஒரே சமூகத்தில் 100 சதவீதம் கிறிஸ்த்துவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மட்டும்தான். அதனால்தான் மண்டைக்காடு கலவரம் நாடார்களுக்கும், மீனவர்களுக்கும்தான் நடந்தது. அது கிறிஸ்த்துவர்களுக்கும் இந்துக்களுக்குமான கலவரம் என்றால், இந்து நாடார்கள் கிறிஸ்த்துவ நாடார்களுக்கு எதிராக ஏன் இல்லை? கிறிஸ்த்துவ நாடார்கள், கிறிஸ்த்து மீனவர்களுக்கு ஆதரவாக ஏன் இல்லை?

இதுபோக கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும் - உலகளவில் இஸ்லாம் பற்றியும் உலக அரசியலில் பாலஸ்தீன விவகாரத்திலும் ஒத்தக் கருத்து நிலவுகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற கிறிஸ்த்துவ நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக, பாலஸ்தீனத்திற்கு எதிராக இருக்கிறது. அதுவே இந்து அமைப்புகள், கிறிஸ்த்துவ நிறுவனங்களின் நிலையுமாக இருக்கிறது. (கிறிஸ்த்துவர்களுக்கல்ல)

இவை எல்லாவற்றையும் விட கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கும், எழுப்புதல் கூட்டங்களுக்கும் எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறதோ அதே நாட்டில் இருந்துதான் இந்து அமைப்புகளுக்கும், ஆன்மீக பேரொளியாய் அறிவுரை சொல்லுகிற ‘ஹைடெக்’ இந்து சாமியார்களுக்கும் பணம் வருகிறது. இந்த பிராடு இந்து சாமியார்களுக்கு கிறிஸ்துவ நாடுகளிலும் பல ஆசிரமங்கள் இருக்கிறது. (வெளிநாட்டில் இருந்து, சுனாமி நீதியை வாங்கி சூறையாடியதில் இரண்டு பேருக்கும் சம பங்கு இருக்கிறது.) அதனால் இந்த இரு நிறுவனங்களுக்குள்ளும் ஒரு டெலிபதி, ஒற்றுமை தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

ஆகவே பாதிக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்த்துவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக தாக்கப்படுவதில்லை. அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதினால்தான் தாக்கப்படுகிறார்க