Language Selection

புதிய ஜனநாயகம் 2008

அடுத்த தேர்தலில் யாருடன் இலட்சியக் கூட்டணி கட்டுவது என்ற பெரும்பிரச்சினையை சி.பி.எம் கட்சி ஒருவழியாகத் தீர்த்துவிட்டது.  அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான என்.வரதராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக "அப்பாயின்ட்மெண்ட்'' வாங்கி, இரவு 9 மணிவரை காத்திருந்து "புரட்சிக்கலைஞர்' விஜயகாந்தை சந்தித்துக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். விஜயகாந்தும் "முதலிலேயே சொல்லி இருந்தால் விருந்து வைத்திருப்பேனே' எனச் சொல்லி தோழர் மனதைக் குளிரவைத்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் "அரசியலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு செயல்படுபவர்கள்' என்று இவர்களுக்குச் சான்றிதழும் கொடுத்து விட்டார்.

 


 

இனி  தேர்தலில் "புரட்சிக்கலைஞரின் ஆசிபெற்ற' சின்னம் என்று அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கு முன்னால் அவர்கள் ஒரு அடைமொழியைப் போட்டுக்கொள்ளலாம்.

 

தமிழகத்தில் விஜயகாந்த் என்றால், ஆந்திரத்திலோ நடிகர் சிரஞ்சீவியின் கட்சியுடன் போர்த்தந்திரக் கூட்டணி அமைக்க  சி.பி.எம். பேரம் பேசுகிறது.

 

இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம் இப்படி என்றால், வலதுகளான சி.பி.ஐ. கட்சியோ "புரட்சித்தலைவி'யுடன் பேச இருப்பதாகச்  சொல்லிவிட்டது. ஆனால், புரட்சித்தலைவியோ தனது துணைப்பிரதமர் கனவுக்கு சி.பி.ஐ.யின் தயவெல்லாம் தேவைப்படாது என்பதனால், பாஜகவுடன் பேச்சு நடத்திவருகிறார். அ.தி.மு.க.–பா.ஜ.க. பேரம் கைகூடாவிட்டால், புரட்சித் தலைவியுடன் கூட்டணி, அல்லது புரட்சிக் கலைஞருடன் கூட்டணி எனப் புரட்சிகரத் தேர்தல் வியூகம் அமைத்துள்ளது சி.பி.ஐ.

 

வழக்கமாக சி.பி.எம். கட்சி மதவாததுக்கு எதிராக ஊழல் பெருச்சாளிகளையும், ஊழலுக்கு எதிராக மதவாதிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி அமைக்கும். ஆனால், தற்போது ஆதரிக்கும் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சிக்கோ கொள்கையே கிடையாது. விஜயகாந்தின் கொள்கையை அவரது சினிமாவில்தான் தேட வேண்டும். அவரது தேசபக்தி சினிமாக்கள் அனைத்தும் இந்து மதவெறியைப் பரப்புபவைதான். இப்படிப்பட்டவருடன் இணைந்து மதவாதத்துக்கு எதிரான கூட்டணியைக் கட்ட முடியுமா? ஊழல் பெருச்சாளிகளான பண்ருட்டியையும், கு.ப.கிருஷ்ணனையும் வைத்துக் கட்சி நடத்துபவருடன் இணைந்து ஊழல் எதிர்ப்புக் கூட்டணிதான் கட்ட முடியுமா?

ஆனால், கருணாநிதியுடனோ, ஜெயாவுடனோ போனால் 2 சீட்டுக்கு மேல் தரமாட்டார்களே. புதுக்கட்சியாகத் தேடிப்போனால் தானே நிறைய சீட்டுகள் பேரம் பேசலாம் என்பது சி.பி.எம்.மின் கணக்கு. இதே கணக்கில்தான் 1996 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம்., "கருஞ்சால்வை கண்ட காஸ்ட்ரோ' வை.கோ.வின் ஆசியோடு 40 சீட்டுகளைப் பெற்று, அத்தனைக்கும் வேட்பாளர்களை நிறுத்தவே திணறிப்போனது. 35 இடங்களில் டெபாசிட் இழந்து ஒரேயொரு  தொகுதியை மட்டும் கைப்பற்றியது.

 

தேர்தலுக்குத் தேர்தல் அணிகளை மாற்றிக் கொண்டு, தோழமைக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதும், தேர்தல் முடிந்த ஓரிரு ஆண்டுகளிலேயே அதே கட்சியை "மக்கள் விரோதக் கட்சி' என்று முத்திரை குத்துவதுமான சடங்கை இரண்டு போலிகளும் நாற்பது வருடங்களாகச் செய்துவருகின்றன. 

 

இதில் சி.பி.ஐ. தன் பங்குக்கு பாசிசக் கோமாளி எம்.ஜி.ஆருக்கு "புரட்சித்தலைவர்' பட்டம் சூட்டியது.  சி.பி.எம்.. கட்சியோ 1977, 1980 தேர்தல்களில் புரட்சித் தலைவரையும், 2001இல் புரட்சித் தலைவியையும், 1996இல் புரட்சிப் புயலையும் (வை.கோ) ஆதரித்தது.  இப்போது புரட்சிக் கலைஞரை ஆதரிக்கப் போகிறது. இனி அடுத்து புரட்சித் தளபதி ஜெ.கே. ரித்தீஸை ஆதரிப்பதுதான் பாக்கி. ஓகோ. இதனால்தான் சி.பி.எம். தன்னை "புரட்சி' செய்யும் கட்சி என்கிறதோ?  

· கதிர்