தொழிலாளர்களின் உழைப்பால் திரண்ட 56 ஆண்டுகால சேமநலநிதி (பிராவிடண்ட் ஃபண்ட்)யான ரூ. 2.5 இலட்சம் கோடியை மட்டுமல்ல; அத்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்வையும் சேர்த்து ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு முதலாளிகளின் இலாபவெறிக்கு, இரையாக்கியிருக்கும் மன்மோகன் சிதம்பரம் கும்பலின் உலக வங்கிக் கைக்கூலித்தனத்துக்கு எதிராக ""கொள்ளை போகிறது தொழிலாளர் உழைப்பு! அள்ளிக் கொடுப்பதோ காங்கிரசுக் கும்பல்! சுருட்டப் போவதோ பன்னாட்டுஇந்நாட்டுக் கம்பெனிகள்'' எனும் முழக்கத்தோடு தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து தொடர் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. நடத்தி வருகிறது.
சென்னையில், கிண்டி தொழிற்பேட்டை, அம்பாள் நகர் பேருந்து நிலையம், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் கடைவீதி, பல்லாவரம் என தொடர் தெருமுனைக் கூட்டங்களையும், ஓசூரில், கடந்த 12.09.08 அன்று மாலை 5.00 மணியளவில் மூக்கொண்டபள்ளி பகுதியில் திரளான மக்கள் பங்கேற்புடன், ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பொதுக் கூட்டத்தையும், திருச்சியில், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆ.ஓ.பா.ச., அத.வி.பா.ச மற்றும் பெ.வி.மு. ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, "பெல்' ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பும், அதனை ஒட்டி சிறு தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர் தெருமுனைக் கூட்டங்களையும் பு.ஜ.தொ.மு. நடத்தியது.
உடுமலையில், இதே மறுகாலனியத் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடான, விலையேற்றம், மின்வெட்டுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை உடுமலை தேவனூர் புதூர் மையப் பேருந்து நிலையம் எதிரில் 13.09.08 அன்று மாலை நடத்தியது.
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக புரட்சிகர அமைப்புகள் மாநிலமெங்கும் தொடர்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.