புதுச்சேரி மாநிலத்தின் வடமங்கலம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம், புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் இந்துஸ்தான் யுனிலீவர் என்ற பெயர் மாற்றத்துடன் சோப்பு, பற்பசை, முகப்பவுடர் முதலான அன்றாடப் பயன்பாட்டுக்கான நுகர்பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது.
நேர்மையே இதன் வாக்குறுதி என்று ஹமாம் சோப்பை விளம்பரப்படுத்தும் இந்நிறுவனம், இந்தியச் சட்டங்களை மயிரளவும் மதிக்காமல், தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடினால், "நேர்மையா? கிலோ என்ன விலை?' என்று கேட்டு அடக்குமுறையை ஏவி வருகிறது.
இந்நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும், அவர்களுக்குப் பணிநிரந்தர ஆணை கொடுக்கப்பட்டுள்ள போதிலும் தினக்கூலி தொழிலாளர்கள் (Daily Rated workman) என்ற பெயரிலேயே பணிபுரிகின்றனர். இப்பெயர் மோசடி மூலம் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மட்டுமல்லாது, மாதச் சம்பளத்திலும் மருத்துவ ஈட்டுறுதித் தொகை பிடித்தம் செய்வதிலும் சட்டவிரோதமாக பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது, நிர்வாகம்.
இவற்றைத் தட்டிக் கேட்கும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பணியிடை நீக்கம் செய்வது, ஊதிய உயர்வை மறுப்பது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அடக்குமுறைகளை ஏவுவது என கேள்விமுறையின்றி கொட்டமடிக்கிறது.
குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து, இந்நிறுவனத்தில் கிளைச் சங்கத்தைக் கட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் தொழிலாளர்களை அணிதிரட்டி அமைப்பாக்கினர். இதைக் கண்டு பீதியடைந்த நிர்வாகம், உணவகத்தில் கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதைத் தட்டிக் கேட்ட முத்துகிருஷ்ணன் என்ற தொழிற்சங்க முன்னணியாளரைப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியது.
கொதித்தெழுந்த தொழிலாளர்கள், யுனிலீவரின் சட்டவிரோதப் பழிவாங்கலை எதிர்த்து கடந்த 15.9.2008 அன்று வடமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொழிலாளர் நிறைந்த இப்பகுதியில் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பகுதிவாழ் உழைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், பணபலமும் அதிகாரபலமும் அடியாள் பலமும் கொண்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் சட்ட விரோத அடாவடித்தனத்தை, கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் நிச்சயம் முறியடிக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. யுனிலீவர் தொழிலாளர்கள் இதர ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
— இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்,
புதுச்சேரி.