Language Selection

புதிய ஜனநாயகம் 2008

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல்  நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது.  ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான். 

தி.க. மகளிரணியோ "காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது.  கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது .  இந்தக் கொடூர மிருகத்திடம் "எடுப்பையும்' "கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் "எடுப்பாக' இருக்கிறது என்று  ரசிக்கத்தான் முடியுமா?

 

பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள "தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை "இந்து' என்று குறிப்பட்டுள்ளார். "இந்து என்றால் திருடன்' என விளக்கவுரை கொடுத்துவந்த பெரியார் இயக்கத்திற்கு குழைத்து நாமம் சாத்திய வீரமணியின் விடுதலையோ ""பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத் துறையில் பலமாக உள்ளதால் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்''; "காஷ்மீர் எல்லையிலே மைனஸ் டிகிரி இருக்கிற இடத்திலே எதிரி வந்தால் சுடுகிறானே. நம்மவன் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறான்? இந்த தேசத்திற்காக!'' என்றெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளது. 

 

ஜம்முகாஷ்மீரை மூன்றாகப் பிரிக்க அத்வானி சொன்ன யோசனைக்கு பக்கமேளம் வாசிக்கும் வகையில் "இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் தனிமாநிலமாவது, மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்" என்று  எச்சரித்துள்ளது. இந்து தேசியவெறியுடன் கை கோர்க்கும் தி.க.வின் பித்தலாட்டம் மேலும் ஒருபடி போய் "பாரதமாதா'வையும் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தி.க. மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் "2020இல் இந்தியா'' எனும் தலைப்பில் பாரதமாதாவை ஒளிரவைத்து அழகு பார்த்துள்ளனர். பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எங்கெல்லாம் பங்காளிகள் முளைத்து வருகிறார்கள், பாருங்கள்!!

· முத்து