இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.
சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன.
இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் முஸ்லீம்களால் கொல்லப்பட்டனர் எனக் கருதிய ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த முஸ்லிம்களை அழித்தொழிக்கக் கிளம்பியது. அவர்கள் வேறுயாரும் அல்ல. இந்து மதவெறிஊட்டப்பட்ட குஜராத் மாநிலப் போலீசார்தான். பிணங்கள் கிடந்த இடத்திற்கு அருகில் உழைக்கும் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்துவரும் முகம்மது நகர் எனும் சேரிப் பகுதியில் போலீஸ் பட்டாளம் புகுந்தது. எந்தவொரு விசாரணையும் இன்றி, அங்கிருந்தவர்களின் மேல் போலீசுப்படை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவனான அசாருதீனின் நெற்றியில் குண்டு பாய்ந்து, கழுத்து வழியாக வெளியேறியது. இரத்தம் பீறிடக் கூக்குரலிட்டவாறே அசாருதீன் கீழே சரிந்தான்.
துப்பாக்கிச் சத்தத்தையும், அதைத் தொடர்ந்து சிறுவனின் அலறலையும் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த அவனது தாய் சகிலா பானுவோ, நெஞ்சில் குண்டு பாய்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார். குடியிருப்பெங்கும் போலீசார் வெறித்தனமாக மக்களைப் பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்த அந்தப் பகல் வேளையில் எதிரி நாட்டுக்குள் படையெடுத்த இராணுவத்தைப் போல கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவர்கள் தாக்கினார்கள். வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த சுலைகா என்ற வயதான பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். பல பெண்களுக்கு கைகளிலும், கால்களிலும் குண்டடிகள் பட்டன.
முகம்மது ரபீக் எனும் இரயில்வே தொழிலாளி ஒருவர் அந்நேரம் பார்த்து தனது சைக்கிளில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி வளைத்துத் தாக்கிய போலீசாரிடம், தான் ஒரு அரசு ஊழியர் என்று கூறித் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் பலனில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தக் குடியிருப்பிலிருந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்த பிறகுதான், போலீசின் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நின்றது. போலீசைத் தொடர்ந்து வந்த துணை இராணுவத்தினர், போலீஸ் நடத்திவிட்டுச் சென்ற தாக்குதலால் அதிர்ச்சியுற்றவர்களாக, அடிபட்டுக் கிடந்த மக்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்கள்தான் அசாருதீனின் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். ஆனால் அவர்களே, அசாருதீன் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே போட்டுவிட்டனர்.
அலுமினிய வார்ப்படத் தொழிலாளியான அசாருதீனின் தந்தை ஷேக் இமாமுதீன் தனது குடியிருப்பில் நடந்த போலீஸ் தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்தார். தனது மகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு துடித்தார். பின்னர் அங்கு வந்த போலீசு உயரதிகாரிகள் மூலம் ஒரு ஆம்புலன்சைக் கெஞ்சிப் பெற்றுக் கொண்டு தனது மகனை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அசாருதீனைப் பரிசோதித்த மருத்துவர்களோ, அவன் இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர். இதனால் பிணவறைக்குப் பக்கத்தில் கிடத்தப் பட்டிருந்த தனது மகனின் உடலுக்கருகில் செய்வதறியாது அழுது கொண்டிருந்தார் இமாமுதீன். திடீரென அசாருதீனின் உடலில் அசைவு தென்பட்டது. உடனே மருத்துவர்களிடம் ஓடி, தனது மகனுக்கு சிகிச்சை தரக் கோரினார். மகனை இழந்த துக்கத்தில் பிதற்றுவதாகக் கருதி அக்கோரிக்கையை மருத்துவர்கள் உதாசீனப்படுத்தினர். இமாமுதீன் அவர்களது காலில் விழுந்து கெஞ்சி தனது மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார்.
இரக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் அசாருதீன் உயிருடனிருப்பதை அறிந்து, அவனுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மதத்தால் இந்துக்களான அவர்கள், மிகுந்த போராட்டத்திற்கிடையே அசாருதீனின் உயிரைக் காப்பாற்றினர். அவனது தாயும் மற்றொரு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு, இருவரும் வீடு திரும்பினார்கள்.
அசாருதீன் உயிர் பிழைத்த போதிலும், அவனால் பல ஆண்டுகள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவோ, தானே உணவருந்தவோ கழிவறைக்குச் செல்லவோ முடியாது. தீராத தலைவலியும், கண்பார்வைக் குறைவும், ஞாபக மறதியும் அச்சிறுவனை வாட்டின. மருந்துமாத்திரைகள், சிறப்பான சத்துணவுகள், சிகிச்சைக்கான செலவுகள் பெரும் சுமையாகி அவனது பெற்றோரை வதைத்தன. மகன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தால், இமாமுதீன் தனது ஆலையில் "ஓவர்டைம்'' வேலை செய்தும், ஓய்வின்றி இதர சில்லறை வேலைகளைச் செய்தும் இச்செலவுகளை ஈடேற்றினார். தங்களது உணவுச் செலவுகளை பெரிதும் குறைத்துக் கொண்டு, அசாரின் பெற்றோர்கள் கடுமையாக உழைத்து அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் பலனாகவும், பெற்றோரின் பாச அரவணைப்பாலும் அசார் மெதுவாக எழுந்து நின்று நடக்கத் தொடங்கினான்.
படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளியான இமாம், தனது மகனை சிறப்பாகப் படிக்க வைக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். குண்டடிபட்டு அதிசயமாக உயிர் பிழைத்து, ஐந்தாண்டுகளாக நடைபிணமாகக் கிடந்து, இன்று மெதுவாக நடக்கத் தொடங்கியுள்ள அசாரை கைத்தாங்கலாக அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி நிர்வாகிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அசாருக்கு தற்போது 17 வயது. பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் அவன் மிகவும் சிரமப்படுகிறான். நடக்கும்போது சில நேரங்களில் தடுமாறி விழுந்து விடுகிறான். இருப்பினும், அவன் மற்ற சிறுவர்களோடு பள்ளிக்குச் செல்வதைக் காணும் போது அசாரின் பெற்றோர்களது துயரமும் வேதனையும் மறைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
தனது மகனையும், மனைவியையும் காரணம் ஏதுமின்றிச் சுட்ட போலீசாரின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் இமாம். ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ஆனால், போலீஸ் தரப்பில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அசாருதீனும் அவனது தாயாரும், இன்னும் கொல்லப்பட்ட, காயமடைந்த எல்லோரும் கூட்டமாக அருகிலிருந்த இந்துக் கோவில் ஒன்றைக் குண்டுவீசித் தகர்க்க வந்ததாகவும், அதனால்தான் அவர்களைச் சுட்டதாகவும் குற்றஞ்சுமத்துகிறது, அவ்வழக்கு.
தனது மகன் சுடப்பட்டபோது, அவனுக்கு இந்து, முஸ்லீம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது எனக் கூறும் இமாமிற்கு, அவனைச் சுட்ட போலீசார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது.
குஜராத் மண்ணில் முஸ்லிம் மதத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக வதைபடும் இலட்சக்கணக்கானவர்களின் துயரத்தில் ஒருதுளிதான், அசாருதீனின் அவலம்.
அசாருதீனைப் பெற்ற இமாமுதீன் குடும்பத்தைப் போலவே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முகம்மது நகர் சேரிப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை முஸ்லிம் குடும்பங்கள் ஏராளம். முகம்மது நகரில் கைது செய்யப்பட்ட 9 அப்பாவி முஸ்லிம்கள், ஐந்தாண்டுகளுக்கு எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் வதைபட்டனர். போலீசு தனது குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் எதையும் காட்டாததால், ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, பொய்க்குற்றம் சாட்டி சிறையிலடைத்த கொடுஞ்செயலுக்காக எந்தவொரு போலீசுக்காரனும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
இதோ, அசாருதீன் தனது வேதனைகளை மறைத்துக் கொண்டு புன்முறுவல் பூக்கிறான். அவனுக்கு நேர்ந்துள்ள துயரத்துக்கும் வேதனைக்கும் காரணம் யார் என்பதை உணர்ந்து போராடுவதுதான், அசாருதீன் மீது நாம் காட்டும் பரிவுக்கு உண்மையான பொருளாக இருக்க முடியும்.
("தி ஹிந்து'' நாளேட்டில் (செப்.7,2008)
ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள "அசாரின் கதை''யின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்).