Language Selection

புதிய ஜனநாயகம் 2008

"கேரளத்தைப் பார்! வங்கத்தைப் பார்! நிலச்சீர்திருத்தம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது'' எனக் கிளிப்பிள்ளையைப் போல சி.பி.எம். கட்சி ஒவ்வொரு சந்துமுனையிலும் தனது கூட்டங்களில் பெருமை பொங்கப் பேசுவது வழக்கம். இதையெல்லாம் பார்த்து சி.பி.எம். ஆளும் மாநிலங்களில் நிலமற்றவர்களே கிடையாதோ என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால், சி.பி.எம். ஆளும் கேரளத்தில் நிலமற்ற மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டங்கள், இந்தப் போலிப் பெருமையை அம்மணமாக்கிவிட்டன.

 


 

கேரளாவைச் சேர்ந்த நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் அரசு பதவி ஏற்றபோது, "சாது ஜன விமோச்சன சம்யுக்த வேதி'' எனும் அமைப்பின் கீழ் திரண்டு தாங்கள் மானத்தோடு வாழ நிலம் கேட்டுப் போராடினர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் அரசு தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சந்தனப்பள்ளி இரப்பர் எஸ்டேட்டில், 500 குடும்பங்கள் கூடாரங்கள் போட்டு போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தை "பொதுத்துறை நிறுவனத்தை சிதைக்கும் செயல்' என ஏ.ஐ.டி.யூ.சி. முதல் பி.எம்.எஸ். வரை அனைத்து ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் 5 ஏக்கர் நிலம், ரூ.50ஆயிரம் வரை இழப்பீடு என அரசு உறுதி தந்ததன் பேரில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஓராண்டுக்குள் நிலமில்லாத மக்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்படும் என்று அரசு உறுதிமொழி கொடுத்தது.

 

அரசு கொடுத்திருந்த ஓராண்டுக் காலக் கெடு முடிந்தும் நிலம் ஏதும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்நிலையில் 2007 ஆகஸ்டில் பத்தனம்திட்டா மாவட்டம், செங்கராவில் இருக்கும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த "ஹாரிசன் மலையாளம்'' எனும் நிறுவனத்தின் குரும்பட்டி இரப்பர் எஸ்டேட்டில் சம்யுக்த வேதி அமைப்பைச் சேர்ந்த 2000 பேர் நிலம் கேட்டு எஸ்டேட்டின் உள்ளே கூடாரம் அடித்துத் தங்கிப் போராடத் தொடங்கினர். ஹாரிசன் நிறுவனம், சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் இருந்த திருவாங்கூர் அரசிடம் இருந்து 35 ஆயிரம் ஹெக்டேர் எஸ்டேட் நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில் எஸ்டேட்டைக் காலி செய்ய நோட்டீசும் அனுப்பப்பட்டு இருந்தது. 

 

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத சி.பி.எம். மற்றும் பிற கட்சிகள், போராட்டம் நடத்திய மக்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டு கொடூரத் தாக்குதல் நடத்தின. 10 பேர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலம் வழங்கப்படும் எனும் வாக்குறுதி தந்த அரசு, போராடுபவர்களுக்கு நிலத்தைத் தராமல் இழுத்தடித்தது. ஆனால், குத்தகைக்காலம் முடிந்தும் வெளியேறாமல் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தையோ ஒன்றும் செய்யவில்லை.

 

கேரளாவில், காலனிய கால தோட்டப்பயிர் பண்ணை முறையே இன்னமும் தொடர்கிறது. 1970களில் கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்தச்சட்டம், தோட்டப்பயிர் பெரும்பண்ணைகளை இச்சட்டத்திலிருந்து விலக்கி வைத்தது. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோட்டப்பயிர் பெரும்பண்ணைகள் நிலச்சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்படவில்லை. உள்நாட்டுவெளிநாட்டு பெரு முதலாளிகளுக்குச் சொந்தமான இப்பண்ணைகளில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும், அவர்களது குடியிருப்பை ஒட்டி 10 சென்ட் நிலம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

 

போலி இடதுசாரி அரசாங்கம் பீற்றிக் கொள்ளும் நிலச்சீர்திருத்தங்கள், எப்போதுமே தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் கருணை காட்டியதே இல்லை. கேரளாவில் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களில் 56% பேருக்கு கையளவு கூட சொந்தநிலம் கிடையாது. செங்கராவில் மட்டும் ஏறத்தாழ 7000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் இன்னமும் நிலமற்ற கூலிகளாகப் பரிதவிக்கின்றனர். குத்தகைக்காலம் முடிந்த பிறகும் ஆக்கிரமிப்பை செய்திருக்கும் ஹாரிசனின் சட்டவிரோதச் செயலைக் குறிப்பிடாமல் இருக்கும் "தேசிய' பத்திரிக்கைகள், போராடும் மக்களை "சட்டவிரோதமாய்க் குடியிருந்து' போராட்டம் நடத்துபவர்களாகச் சித்தரித்தன.

 

போராடிய மக்களில் முதியோரும், பெண்களுமே பெரும்பாலானவர்கள் . போதிய மருத்துவ வசதிகள் இன்றி அவர்களில் பலரும் சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சல் நோய்களால் அவதிப்பட்டனர். போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டியூ. முதல் காங்கிரசின் ஐ.என்.டி.யூ.சி. வரை அனைத்துத் தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தை சீர்குலைப்பதில் ஓரணியில் நின்றன. போராட்டக்காரர்கள் நக்சலைட்டுகளுடனும், தேசவிரோத சக்திகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தொழிற்சங்க குண்டர்கள் தினமும் மாலை வேளைகளில் போராடும் மக்கள் மீது கல்வீசுவதும், பெண்களைக் கேவலமாகத் திட்டுவதும், பாலியல் அத்துமீறலைக் கட்டவிழ்த்து விடுவதுமாய் ரவுடித்தனத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து போராடிய சம்யுக்த வேதியின் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான 10 சென்ட் இடத்தையும், வீட்டையும் சி.பி.எம். கட்சி குண்டர்கள் கைப்பற்றி எதிர்போராட்டம் நடத்தினர். இதே சி.பி.எம்., ஆந்திரத்தில் கம்மம் மாவட்டத்தில் நிலம் கேட்டுப் போராடுகிறது. ஆனால், கேரளத்திலோ குண்டர்களை வைத்துப் போராடுபவர்களைத் தாக்குகிறது.

 

கேரள நீதிமன்றமோ போராடிய மக்களை ஒரு மாதத்துக்குள் எஸ்டேட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. அதற்கும் அடிபணியாத மக்களைப் பட்டினி போட்டுத் துரத்தும் நோக்கில் போராடும் இடம் நோக்கிச் செல்லும் சாலைகளை மூடியது போலீசு. இதன்மூலம் போராடும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருந்து, உணவுப்பொருட்கள், குடிநீர் ஆகியவை அடியோடு தடைப்பட்டன.

 

மார்ச் 2008இல் முதல்வர் அச்சுதானந்தன், உடனடியாக எஸ்டேட்டை விட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேறினால் மூன்று மாதத்துக்குள் தீர்வென்றார். கோழிக்கோட்டில் 500 ஏக்கர் வரை ஆக்கிரமித்திருக்கும் சி.பி.எம். தொழிற்சங்கத்துக்கு நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக்கித் தருவதாக உறுதி தந்திருக்கும் அரசு, ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு அவர்களை வெளியேறச் சொல்லவில்லை. ஆனால் சம்யுக்தவேதிக்கு மட்டும் எஸ்டேட்டை விட்டு வெளியேறும் நிபந்தனை விதிக்கப்பட்டது. எனவே மக்கள், முதல்வர் அச்சுதானந்தனின் வார்த்தையை நம்பத் தயாராயில்லை.

 

நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் வலுவடைந்து ஓராண்டைத் தாண்டியுள்ள நிலையில், போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நிலமற்றவர்களின் குடும்பங்கள் 4000த்தைத் தாண்டியுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் இப்போராட்டத்தை முறியடிக்க காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் கைகோர்த்துக் கொண்டு எஸ்டேட்டைச் சுற்றிலும் முற்றுகைப்போராட்டம் நடத்தி மக்களைப் பட்டினி போட்டனர். போராடிய பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கினர். 

 

ஆனால் மக்களோ, தங்களது போராட்டத்தின் தொடர்ச்சியாக ஓணம் பண்டிகை அன்று பட்டினிப்போராட்டம் நடத்தியுள்ளனர். அனைவருக்கும் 5 ஏக்கர் நிலமும், ரூ.50 ஆயிரம் இழப்பீடும் கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்பதில் மிகவும் உறுதியுடன் உள்ளனர்.

 

அடக்குமுறைக்கு அஞ்சாமல் 2 ஆண்டுகளாக வீரப்போர் புரிந்துவரும் செங்கரா மக்கள், சொந்த நாட்டு மக்களுக்கு வாழும் உரிமையை மறுத்து பன்னாட்டு ஏகபோகத்தை வாழ வைக்கும் சி.பி.எம். முகத்தில் நிச்சயம் கரிபூசுவார்கள் என்பது மட்டும் உறுதி!

· கதிர்