06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

போலியான நடிப்பும் எங்கும் பகட்டு வாழ்வாகின்றது

போலியான வாழ்வு உருவாக்கும் உணர்வும் உணர்ச்சியும் எங்கும் எதிலும் இரட்டை வாழ்க்கை முறையை உருவாக்குகின்றது. உலகச் சந்தை தனது பொருளை விற்க எப்படி பகட்டாக நடிக்கின்றதோ, அப்படி மனித வாழ்வே நடிப்பாகிவிடுகின்றது. நம்ப முடியாத வகையில், இதுவே மனித வாழ்வியல் உறவுகளின் அங்கமாகிவிட்டது.

 

 

நடிப்பே வாழ்வாகிவிட முடியாது. ஆனால் முரண்பட்டபடி அப்படித்தான் இருக்க முனைகின்றனர், வாழமுனைகின்றனர். தனது சொந்த மகிழ்ச்சியை இழந்து துன்பத்துடன் வாழ முனைகின்றனர். வெளிவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிப்பதும், குடும்பத்தில் துன்பமாகவும் வாழ்கின்றனர். இது கணவன் மனைவி என்ற எல்லைக்குள்ளானதல்ல. குடும்ப உறுப்புக்குள்ளாக எங்கும் நடக்கின்றது. தனக்குள்ளான இந்த நடிப்பு சார்ந்த முரண்பாடு, மற்றைய மனிதனுடனான முரண்பாடாக கற்பிக்கின்றது.

 

பற்பல வகையில் அநேக குடும்பங்களில் இவை முரண்பாட்டுக்குரிய காரணமாக அமைகின்றது. இவை என்றுமில்லாத வகையில், தீவிரமாக வெளிப்படுகின்றது. கணவன் மனைவிக்கு இடையிலான முரண்பாடுகள், பெற்றோர் குழந்தைகள் முரண்பாடுகள் முதல் பல தளத்தில் இது தீவிரமாகின்றது. இவை தத்தம் போக்கில் பிளவாகின்றது. எங்கும் ஒரு அசாதாரணமான சூழல். இரு துருவங்களாக கற்பிக்கப்பட்டு, அந்த பிளவே வாழ்வாகிவிடுகின்றது. குடும்பத்தின் உள்ளே சதா நச்சரிப்பும் தொணதொணப்பும், புறுபுறுப்பும், சினப்பும், குடிபோதையும், அலட்சியமும், மௌனமும் கொண்ட இருண்ட குடும்பங்களாகின்றது. இதனடிப்படையில் மொழி மற்றும் உடல் சார்ந்த வன்முறைகள். மகிழ்ச்சியை தாமாகவே தொலைத்து விட்டு, துன்பத்தையே வாழ்வாக தேர்ந்தெடுக்கும், அற்பமான குறுகிய சிந்தனைகள். குடும்பத்தில் உள்ள முரண்பாடுகள் இப்படி முன்னிலைக்கு வருகின்றது.

 

மறுபக்கத்தில் வெளியுலகுடன் அற்புதமான நடிப்பு. வெளியுலகுக்கு அன்பும் அழகும் கவர்ச்சியுமாக வெளிப்படுத்தும் போலியான உணர்ச்சியும் உணர்வும். மறுபக்கத்தில் குடும்பத்தில் புறுபுறுப்பு, கோபமும், முறைப்பும் கொண்ட உணர்வும் உணர்ச்சியும் கொண்ட அவலட்சனம். ஒரு மனிதனுக்குள்ளான போலியான இரட்டைத் தன்மை, சுயத்தையே இழக்கவைக்கின்றது. சமூக ஆக்கமற்ற மலட்டுத்தனத்தை உருவாக்கின்றது.

 

புறச்சூழல்களே இதற்கு காரணமாக இருக்கின்றது. இன்றைய சூழலில் தீவிரமாகும் பொருள் சார்ந்த தனிமைவாதம். பொருட்களுடனான உலகத்துடன் தனிமையில் உரையாடுவதால் ஏற்படும் தனிமைவாத அங்கலாய்ப்பு. சந்தை உருவாக்கும் பொருளின் அழகு, அதன் கவர்ச்சி, அதன் ஆபாசம் மனித உறவுகளை குறுக்கி சின்னாபின்னப்படுத்துகின்றது. பொருள் உலகுபோல் தான், மனித உறவு இருக்க வேண்டும் என்பது, அப்படி இருக்க முடியாத முரண்பாடுகள்.

 

இதை உருவாக்கும் இன்றைய உலகமயமாதலின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத சமூகங்கள். சமூக ரீதியான போராட்டங்களின்மையால், அம் முரண்பாடுகள் குடும்பத்தினுள் பிரதிபலிக்கின்றது. முரண்பாட்டை சமூகத்தில் இருந்து காணமுடியாத வகையில், சமூகம் அறிவை இழந்து நிற்கின்றது.

 

சமூகத்தின் சமூக அறிவியல் மட்டம் தாழ்ந்து வருகின்றது. பொருள் பற்றிய தொழில் நுட்ப அறிவே, மனித அறிவாக சிறுத்து குறுகிவிடுகின்றது. இவை முரண்பாடுகளை இயந்திரத்தன்மை கொண்ட பொருள் முரண்பாடாகவே மாற்றிவிடுகின்றது. உயிர்தன்மை வாய்ந்த இயங்கியல் முரண்பாட்டை மறுத்து, பொருள் சார்ந்த இயக்கமற்ற முரண்பாடாக்குகின்றது.

 

இதை கற்பித்து திணிப்பதில் ஊடகவியலின் பங்கு மிக முக்கியமானது. பெரும் ஊடகவியலே சமூகத்தின் கருத்தை தீர்மானிக்கும் வகையில் இயங்குகின்றது. அதாவது மனித வாழ்வல்ல என்று சொல்லும் அளவுக்கு இது வீங்கி வெம்புகின்றது. அதன் மொழியும், அதன் உடலும், கவர்ச்சி சார்ந்து ஆபாசமாகிவிட்டது. இதை கொண்டு தனிமனிதர்கள், தாம் மட்டும் கற்பனையில் தனித்து வாழ்வதே, உலகம் என்றாகிவிட்டது. மற்றவனுடன் இணங்கிப் போக முடியாத முரண்பாடுகளை, சதா தன்னைச் சுற்றி கற்பிக்கின்றது.

 

வெளியுலகு பகட்டுத்தனமாக, மற்றவனுக்கு பகட்டாக காட்டி வாழ்வதே மனிதனின் பொது பண்பாகிவிட்டது. அதாவது மற்றவனுக்காக போலியாக வாழ்தலே, சொந்த வாழ்வாகிவிட்டது. இதற்குள் தான் அழகு கவர்ச்சி ஆபாசம் என அனைத்தும் இயங்குகின்றது. சொந்த வாழ்வே பொது நடிப்பாகின்றது. வெளி உலகுக்கு சதா நடிப்பது என்பது வாழ்வாகிவிட்டது. தன்னுள்ளும், நெருங்கி சொந்த வாழ்வியலில் உறவுகளிலும் இதுவே பாரிய முரண்பாடாகின்றது. எங்கும் எதிலும் நடிப்பு. அதுவே உணர்வும் உணர்ச்சியுமாகின்றது.

 

உதாரணமாக ஒரு விளம்பர நடிகை (மொடலிஸ்ற்) வெளிப்படுத்தும் அழகு, கவர்ச்சி, ஆபாசமும் இணைந்து உருவாக்கும் வெளியுலக அற்ப மகிழ்ச்சி, வெளியுலகின் வாயைப் பிளக்கவைக்கின்றது. அவளின் நடிப்பு உலகு சார்ந்து அப்படிப்பட்டது. ஆனால் அவளின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை அப்படி இருப்பதில்லை. அது உண்மையில் நேர்மாறானதாக, தாறுமாறானதாக, கோணல் புத்திகொண்டதாகவே இருக்கின்றது. அதுவே குசுகுசுப்பாக அலங்கோலமாக அம்பலமாகின்றது. அதையும் கூட ரசிக்க வைக்கப்படுகின்றது. ரசனையின் தன்மை, மகிழ்ச்சியின் தன்மை அப்படிப்பட்டதாகவே சீரழிக்கப்பட்டுள்ளது. ஊடகவியல் சார்ந்து உருவாக்கப்படும் இந்தக் உலக கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொருவரும் தனக்குள் சொந்த முரண்பாட்டுடன் இப்படி இதுவாக வாழ முனைகின்றனர்.

 

மனித உள்மனமானது வெளி உலகத்துடன் பகட்டுத்தனமாக இருப்பதுடன், மற்றவனுக்காக சதா வாழ்க்கையை நடிக்க முனைகின்றது. இதை தனக்குள், தனது நெருங்கிய உறவுகளில் சதா நடிக்க முடிவதில்லை. அது வேறு ஒன்றாக வெளிப்படுகின்றது. இதற்கு பின்னால் நம்ப முடியாத வகையில், அலங்கோலமான வடிவில் மனநோயை உருவாகின்றது. வெளி உலகத்துடன் கொண்டுள்ள வாழ்வுக்கு நேர்மாறாகவே, குடும்பத்தினுள் வாழ்வது என்ற இரட்டை வாழ்க்கை சார்ந்த உணர்வும் உணர்ச்சியும் உருவாகின்றது. இந்த நடிப்பு உருவாக்கும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற திருத்தியற்ற வாழ்க்கை, ஏன் எதற்கு இப்படி வாழ்கின்றோம் என்பதற்கு அவர்களுக்கே பொருள் தெரிவதில்லை.

 

மற்றவனுக்காக வெளி உலகத்துடன் நடிக்கின்ற உறவும், அது சார்ந்த போலி உணர்ச்சியும், உணர்வும், தன்னை மீறி அதை உண்மையானதாக நம்பிவிடுகின்ற சொந்த மனம். அதை மற்றவர் தன் மீது உண்மையாக செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தான் போலியாக நடிப்பது தெரியாது, மற்றவர் உண்மையாக இருக்கவேண்டும் என்பது இதன் முரண்பாடு. உணர்விலும் உணர்ச்சியிலும் கூட, எங்கும் ஒரு பொருள் சார்ந்த பண்பு சார்ந்த திருப்தியற்ற கொடுக்கல் வாங்கல். இப்படி பொருள் சார்ந்த உணர்ச்சியும், உணர்வு சார்ந்த பண்பாடுகளும்.

 

உதாரணமாக பொதுவான கொண்டாட்டங்கள் என்பது, பொருளை கொடுக்கவும் வாங்கவும் நடத்தப்படுகின்றது. இந்த எல்லைக்குள் அந்த உணர்ச்சியும், உணர்வும் எப்படி சீரழிக்கப்பட்டதோ, அதே எல்லைக்குள் வாழ்க்கை முறைகள். இதில் உள்ள அற்பமான போலித்தனமான கவுரவங்கள். மற்றவனுக்காக செய்யும் போலி பாசாங்குத்தனமே. எங்கும் எதிலும் அற்பமான உணர்வுகளையே உருவாக்குகின்றது.

 

மனித வாழ்வு சார்ந்த அவசியமான உழைப்பு, முதலாளித்துவ உறவுக்கு உட்பட்டது. இந்த உறவு எப்படிப்பட்ட போலித்தனமானது என்பதை, ஒரு முதலாளி தொழிலாளி உறவில் காணமுடியும். ஒரு முதலாளி எப்படி அதிகமாக சுரண்ட முடியும் என்ற உணர்வும் உறவும், தொழிலாளி எப்படி தனது உழைப்பின் பயனை அடைய முடியும் என்ற அடிப்படையில் உணர்வும் உறவும் உள்ளது. இந்த முரண்பாடும் எல்லா நேரமும் வெளித்தெரிவது கிடையாது. உள்மனத்தில், அதாவது ஆழ் மனதில் அது சதா புகைந்து கொண்டும், அதுவே இவர்களுக்கு இடையில் உண்மையான உறவாக இருக்கின்றது. ஆனால் வெளிப்பார்வையில் ஒரு பகட்டான நட்பான உறவே, நடிப்பாக மேலோங்கி நிற்கின்றது. இது மிக நுட்பமானது, ஆனால் வாழ்வில் இந்த இரட்டை உறவுமுறையே, சதா அன்றாட உழைப்பில் உறவாக இயங்குகின்றது.

 

இந்த உறவு முறை தான் தனிப்பட்ட மனிதனின் முழுமையான வாழ்வு முறையாகின்ற போது, குடும்ப உறுப்பில் கூட இப்படி வாழ்வது என்பது என்றுமில்லாத வகையில் தீவிரமாகின்றது. ஆனால் அப்படியே நடித்தபடி போலியாக சிரிப்புடன் மகிழ்ச்சியாக வாழ முடிவதில்லை. இது குடும்ப முரண்பாடாக வெடிக்கின்றது.

 

வாழ்வாக கற்பித்த பகட்டுத்தனத்தை வெளியுலகுக்கு தொடர்ச்சியாக நடிக்கலாம். ஆனால் அதை தனது வாழ்வின் முழு அங்கத்துக்கும் திணிக்க முடியாது. அது பொருளாலான உலகமல்ல, உயிர்வுள்ள உலகம். இதன் விளைவு படிப்படியாக தனக்கு நெருங்கிய உயிருள்ள உலகத்தை எதிரியாக பார்ப்பது, அப்படி கற்பித்து வாழ்வதும் உருவாகின்றது. பொருட்கள் மட்டுமே தனது நடிப்புக்கு ஏற்ப இருப்பதை மனம் காண்கின்றது. இத உயிர் உள்ளதை வெறுப்பதும், சடப்பொருளை நேசிக்கின்ற எதிர்நிலை உறவும் முரண்பாடும் உருவாகின்றது.

 

எங்கும் எதிலும், ஒரு இடைவெளியில் இரண்டு விதமான இரட்டை வாழ்க்கையாகின்றது. உதாரணமாக ஒரு வீட்டில் பெண்களின் தொலைபேசி உரையாடலை எடுங்கள். வெளி உலகுடன் பகட்டாக கவர்ச்சியாக அழகாக அன்பாக உரையாடும் அதே பெண், அதே உரையாடலின் இடையில் அல்லது மறுகணத்தில் குடும்ப உறுப்புடன், கோபமாக தாறுமாறாக கீழ்நிலை உரையாடலாக இருப்பதை அன்றாடம் பார்க்க முடியும். உணர்வையும் உணர்ச்சியையும் மாற்றுவதில் உள்ள வேகம், நடிப்புக்கும் வாழ்வுக்கும் உள்ள சொந்த முரண்பாட்டைக் காட்டுகின்றது.

 

இதை வாழ்வின் பலதளத்தில் நாம் காணமுடியும். இதுதான் வாழ்க்கை என்று, சுத்தம் சுகாதாரத்துக்கு வெளியில் பலர் வாழ முனைகின்றனர். வெளியுலகுக்கு காட்டவே கவர்ச்சியாக அழகாக உடையணிபவர்கள் உலகமிது. அந்த உடை விடையத்தில் கணவன் மனைவிக்கு இடையில், அலங்கோலமாக வாழ்கின்ற அழகுணர்ச்சியற்ற இரட்டை வாழ்க்கை. இப்படி வெளியுலக்கு வாழ்தலை இலட்சியமாக கொண்டே போலியாக நடிக்கின்றனர். ஏன் எதற்கு இவை, என்பதைக் கூட சிந்திப்பது கிடையாது. அதற்கு சமூக அறிவு கிடையாது.

 

நடிப்புக்கேற்ற சொந்த போலி வாழ்க்கையை, ஒரு வாழ்வாக யாராலும் எட்டமுடியாது. இது திருப்தியற்ற வாழ்வுக்குரிய சொந்த மனதை கற்பிக்கின்றது. திருப்தியற்ற வாழ்வுக்கு, தன்னை சுற்றி நெருங்கி இருப்பவர்களே காரணம் என்று கற்பிக்கின்றது. அவர்களை எதிரியாக காண்பது, சித்தரிப்பது, கற்பிப்பதுமாக சிரழிகின்றது. வாழ்வின் இரண்டாவது நடிப்பு உருவாகிவிடுகின்றது. இப்படி இரட்டை வாழ்க்கை முறை, குடும்ப உறவுகளையே நம்பமுடியாத வகையில் சிதைக்கின்றது.

 

உதாரணமாக இதை அடிப்படையாக கொண்ட ஊடகவியல் சார்ந்த நாடகங்கள். குடும்பத்தின் உள் வன்முறையை தூண்டுபனவாகி சதா எதிரியைக் கற்பிக்கின்றது. எதிரியற்ற தகவலை ஊடகவியலால் தரமுடிவதில்லை. ஒரு சினிமா, ஒரு நாடகம், ஒரு செய்தி, ஒரு கருத்து எதிலும் எதிரியின்றி கருத்தைத் தரமுடிவதில்லை. எதிரியற்ற வாழ்வா, இதை மனிதனால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. தனிமனிதன் சதா தனது எதிரியைத் தேடி அலைகின்றான். இப்படி எதிரிகள் கொண்ட உலகம், சில கதாநாயகர்கள் பற்றி விம்பங்களை கட்டமைக்கின்றது. இது சமூகத்திலும் குடும்பதிலும் கூட உருவாகின்றது.

 

எதார்த்தத்தில் யாரை ஊடகவியல் கதாநாயக(கியா)னாக காட்டுகிறதோ, அவர்கள் தான் மனிதனின் பொது எதிரியாக இருப்பதும், மனித வாழ்வை அழிப்பவர்களாகவும் உள்ளனர். மனித வாழ்வை அழிப்பதால், அவர்கள் கதாநாயக(கிய)னாகின்றான்(ள்). ஊடகவியல் என்ன செய்கின்றது. மனித உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த போலியான கதாநாயக(கி) உலகைச் சுற்றி, போலியாக அவர்களையும் வாழத் தூண்டுகின்றது. இப்படி மனிதன் போலியாக நடித்தபடி மற்றவனுக்காக வாழ்கின்ற பகட்டு வாழ்க்கை, சொந்த முரண்பாட்டுடன் குடும்ப அலகையே மொழி மற்றும் உடல் வன்முறைக்குள் சீரழிக்கின்றது.

பி.இரயாகரன்
17.06.2007


பி.இரயாகரன் - சமர்