கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்காகக் காத்திருந்த இரு இளம்பெண்களை, இரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காமவெறி பிடித்த போலீசுக்காரன் சரவணன், விசாரணை என்ற பெயரில் தனது வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்முறையை ஏவியுள்ளான். இக்கொடுஞ்செயலை அறிந்து திருச்சி நகரமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பொறுக்கியின் பொழுதுபோக்கே இப்படி இளம்பெண்களைத் தனது போலீசு அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி கடத்திச் சென்று நாசமாக்குவதுதான் என்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரிய வந்துள்ளது. ஆனாலும், இவனோடு கூட்டுச் சேர்ந்து காமவெறியாட்டங்களை நடத்தி வரும் இதர போலீசு கும்பலைப் பற்றிய உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன.

 

திருச்சி நகரில் அடுத்தடுத்து இத்தகைய வெறியாட்டங்கள் தொடரும் நிலையில், நாகரிக சமுதாயத்துக்கே பேரபாயமாகி விட்ட, சீருடை அணிந்த இச்சட்டவிரோத  சமூக விரோத பொறுக்கிக் கும்பலைத் தண்டிக்கக் கோரி, திருச்சியில் செயல்படும் பெண்கள் விடுதலை முன்னணி உடனடியாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, இக்காமவெறி கும்பலைத் தூக்கிலிடக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நட்டஈடு வழங்கக் கோரியும், நகரெங்கும் விரிவாக சுவரொட்டிகளை ஒட்டியது. இவ்வமைப்பைச் சேர்ந்த பெண்களே பசை வாளியுடன் சென்று நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு ஆச்சரியத்தோடு மக்கள் திரண்டு வரவேற்று ஆதரித்தனர். இன்னும் பலர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இச்செயலைப் பாராட்டி வரவேற்றனர். நகரை அதிர வைத்த இச்சுவரொட்டி பிரச்சாரத்தால், குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் பொதுமக்களின் கருத்து வலுப்பெற்று வருகிறது.

 பு.ஜ. செய்தியாளர்கள், திருச்சி.