இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை (123 ஒப்பந்தம்) நிறைவேற்றுவதற்கான இறுதிக் கட்ட பேரங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச அணுசக்திக் கழகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும்; யுரேனியம் உள்ளிட்ட அணு மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக, அணுமூலப் பொருட்கள் வழங்கும் நாடுகள் இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் நிறைவேறியுள்ள நிலையில், 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் சடங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது.

 


 

123 ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறி, நடைமுறைக்கு வரும் நாள் நெருங்க நெருங்க, அதனின் உண்மையான முகமும்; இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட "அரும்பாடுபட்டு வரும்'' மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி எம்.கே நாராயணன் சிவசங்கர் மேனன் அனில் ககோத்கர் என்ற ஐவர் கும்பல் கடைந்தெடுத்த பித்தலாட்டப் பேர்வழிகள் என்பதும் அம்பலமாகி வருகிறது.

 

அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டி 123 ஒப்பந்தம் குறித்து எழுப்பியிருந்த 45 கேள்விகளுக்கு அமெரிக்க அரசு அளித்துள்ள பதில்களும்; இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக, அதிபர் புஷ் கொடுத்துள்ள விளக்கங்களும் குறிப்புகளும், இந்த அணுசக்திக் கூட்டுறவு ஒப்பந்தம் என்பது இந்தியா அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுத்துள்ள அடிமைச் சாசனம் என்பதை அம்பலப்படுத்தி விட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்கள், விமர்சனங்களுக்கு, மன்மோகன் சிங் அளித்து வரும் பதில்களும், வாக்குறுதிகளும் வெறும் வெத்து வேட்டு என்பதும் நிருபணமாகி விட்டது.

 

மன்மோகனின் காலை வாரிய புஷ்

 

"123 ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியாவிற்கு யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும் உரிமை மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தை (அணுகுண்டு தயாரிப்பதற்காக) மறுசுழற்சி செய்து செறிவூட்டும் உரிமையும்; மின்சாரம் உற்பத்தி செய்யவும், அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படும் இரட்டை பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையும் கிடைக்கும்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார், மன்மோகன் சிங்.

 

அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டி இந்த உரிமைகள் அனைத்தும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு நான்கு கேள்விகளை எழுப்பியிருந்தது.

 

அமெரிக்க அரசு இந்த நான்கு கேள்விகளுக்கும் அளித்துள்ள பதிலில், "இந்திய அமெரிக்க ஒப்பந்தம், இரட்டைப் பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிக்க முன் வந்தாலும், அத்தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளித்தேயாக வேண்டும் என இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை நிர்பந்திக்க முடியாது. அமெரிக்க அரசின் கொள்கைப்படியும், இரட்டைப் பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களை அளிக்கப் போவதில்லை.''

 

"அதிநுட்பம் வாய்ந்த அணுத்தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை இயக்கவும் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவாது.''

 

"அதிநுட்பம் வாய்ந்த அணுத் தொழில்நுட்பங்களையோ உதிரி பாகங்களையோ இந்தியாவிற்கு அளிப்பதற்கு வசதியாக, இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது.''

 

"இத்தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அளிப்பதாக இருந்தாலும், ஹைட் சட்டத்திற்கு உட்பட்டுதான், அமெரிக்கா இந்தியாவிற்கு அளிக்கும்'' எனப் பதில் அளித்திருக்கிறது.

 

எரிபொருள் உறுதிமொழி: காத்தோடு போச்சு

 

"இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை, அவற்றின் இறுதிக்காலம் வரை இயக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என 123 ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது; இந்த உறுதிமொழியினை அடிப்படையாகக் கொண்டுதான், இந்தியாவின் சிவில் அணுஉலைகளை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டது.''

 

"இந்தியாவிற்கு யுரேனியம் தருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதனைத் தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும்; அத்தடைகளை சரி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கும் உரிமையும் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தேவைக்கேற்ப யுரேனியத்தை இறக்குமதி செய்து சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இந்தியாவிற்கு உண்டு'' என நாடாளுமன்றத்தில் 123 ஒப்பந்தத்தின் அருமை பெருமைகளை அள்ளி வீசியிருந்தார், மன்மோகன் சிங்.

 

இந்தியா குறிப்பிடும் இந்த உரிமைகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அரசு, "இந்தியாவிற்குத் தடையின்றி யுரேனியம் வழங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் அளித்துள்ள உறுதிமொழி, அமெரிக்க அரசின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாகும். யுரேனியம் வழங்குவதில் தடை ஏற்படும் பொழுது, இந்தியாவின் பக்கம் தவறில்லை எனும்பட்சத்தில் தான் அமெரிக்கா உதவும்.''

 

"சந்தை நிலைமையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, அதனால் யுரேனியம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே, அமெரிக்கா உதவும்; மாறாக, இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி அதன் விளைவாக யுரேனியம் வழங்குவதில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும், கோளாறுகளையும், தடைகளையும் நீக்கிக் கொடுக்க அமெரிக்கா உதவும் எனப் பொத்தாம் பொதுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.''

 

"இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், யுரேனியம் வழங்குவது உள்ளிட்டு, அணுசக்தி தொடர்பான அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் உடனடியாக, மேலும் தொடராமல் நிறுத்தி விடும் உரிமையும்; அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெற்றுக் கொண்ட யுரேனியம் உள்ளிட்ட அனைத்து அணுப்பொருட்களையும் திரும்பக் கோரும் உரிமையும்; ஒரு வருட கால அவகாசம் கொடுத்து இந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்து கொள்ளும் உரிமையும் அமெரிக்காவிற்கு உண்டு.''

 

"இந்தியா, தனது எதிர்காலத் தேவையையொட்டி அணு எரிபொருளைச் சேமித்து வைத்துக் கொள்ளும் உரிமை பற்றிய வரையறைகளை எதிர்காலத்தில்தான் வளர்த்தெடுக்க முடியும்; இந்தியாவின் இந்த உரிமை அமெரிக்காவின் ஹைட் சட்டத்திற்குக் கட்டுப்படாது என இப்பொழுதே கூறுவது அவசரக்குடுக்கைத்தனமாகும்; மேலும், அணு உலைகளை இயக்குவதற்கு நியாயமாக எவ்வளவு எரிபொரு தேவைப்படும் என்பதுகூட இன்னும் வரையறுக்கப்படவில்லை; இந்த வரையறை பற்றி இரண்டு அரசுகளும் கலந்தாலோசனை கூட நடத்தவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.

 

நிரந்தரமாகும் கண்காணிப்பு

 

"இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் தடை ஏற்படும் பொழுது, அதனைச் சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கும் உரிமையும்; அப்படித் தடை ஏற்படும் பொழுது, இந்தியா, தனது அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளும் உரிமையும் இந்தியாவிற்கு உண்டா?'' என்ற கேள்விகளுக்கு, "சரி செய்யும் நடவடிக்கைகள் குறித்து, இந்தியா, தனக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை; அது குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தோடுதான் பேசி, இந்தியா முடிவெடுக்க வேண்டும்'' என நழுவிக் கொள்ளும் விதமாகப் பதில் அளித்துள்ளது, அமெரிக்க அரசு. மேலும், "இந்தியா, தனது அணு உலைகளை அவற்றின் ஆயுட்காலம் முழுவதற்கும் கண்காணிப்புக்கு உட்படுத்த ஒப்புக் கொண்டு வாக்குறுதி அளித்துள்ளது'' எனச் சுட்டிக் காட்டியுள்ளது.

 

இந்தியா, சர்வதேச அணுசக்திக் கழகத்தோடு செய்து கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில், சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக எவ்விதமான விரிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை; அந்நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்வது இந்தியாவின் சுயாதிபத்திய உரிமை என்று மட்டுமே பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டாலும் கூட, இந்திய அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்பில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக்கிக் கொள்ள முடியாது என்பதும் அவ்வொப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை செயலர் கண்டலீசா ரைஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, "நிரந்தரமான கண்காணிப்பு என்பது எவ்விதமான நிபந்தனைகளும் அற்ற நிரந்தரமான கண்காணிப்புதான் என்பதை நாங்கள் இந்தியாவிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்'' என அமெரிக்க அரசின் வெளிவிவகார கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார்.

 

"அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட அணு எரிபொருளை, அணு உலைகளில் பயன்படுத்திய பிறகு, அதனை மறுசுழற்சி செய்யும் உரிமை இந்தியாவிற்கு உண்டு என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்; மறுசுழற்சி செய்து கொள்வதற்காக, அமெரிக்காவின் நிரந்தரமான சம்மதத்தைப் பெற்றுள்ளோம்'' என ஓராண்டுக்கு முன்பு மன்மோகன் சிங் அடித்துப் பேசினார்.

 

அமெரிக்க அரசோ, "சம்மதத்தை உரிமைபோல எடுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவும் இந்தியாவும் மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகளையும்; வரையறைகளையும் கூடிப் பேசி முடிவெடுத்த பிறகுதான், அமெரிக்காவின் சம்மதம் நடைமுறைக்கு வரும்'' எனப் பதில் அளித்திருக்கிறது. 

 

மேலும், அமெரிக்கா அளிக்கும் எரிபொருளை தற்போதுள்ள அணு உலைகளில் வைத்து மறுசுழற்சி செய்யக் கூடாது. அதற்காகப் புதிதாகத் தனி ஏற்பாடுகள் செய்வதோடு, அது தொடர்பான வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அமெரிக்காவிடம் அளிக்க வேண்டும் என 123 ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

"மறுசுழற்சி தொடர்பான ஏற்பாடுகளும், வரையறைகளும் முடிவெடுக்கப்பட்டாலும், அமெரிக்காவின் சம்மதத்தை நிரந்தரமானதாக எடுத்துக் கொள்ள முடியாது; இந்த ஏற்பாடுகளும், வரையறைகளும் மறுசுழற்சி உரிமையினை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்வதையும் உள்ளடக்கியே இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளது, அமெரிக்க அரசு.

 

மன்மோகன் சிங் உள்ளிட்டு இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவரும், "இந்தியாஅமெரிக்கா இடையேயான அணுசக்தி கூட்டுறவை, ஹைட் சட்டம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது'' என அடித்துப் பேசி வருகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசு, தனது வெளி விவகார கமிட்டிக்கு அளித்துள்ள பதிலில், "இந்த ஒப்பந்தம், ஹைட் சட்டம் மற்றும் அமெரிக்க அணுசக்தி சட்டம் ஆகிய இரண்டு அமெரிக்கச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டதுதான்'' எனப் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டுள்ளது.

 

அணுகுண்டுச் சோதனைக்கு ஆப்பு

 

"நமது தேசிய பாதுகாப்பு கோரினால், நாம் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை, இந்த ஒப்பந்தம் தடுக்கவில்லை என நான் உறுதியளிக்கிறேன்'' என மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் ஜூலை 22, 2008 அன்று தெரிவித்தார்.

 

இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை, இந்த ஒப்பந்தம் வெளிப்படையாகத் தடுக்கவில்லை என்பது உண்மைதான். அதேசமயம், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால் மட்டுமின்றி, இந்தியா அணு ஆயுதப் பரவல் தடைகளை மீறி விட்டதாக அமெரிக்கா கருதினாலும்; அமெரிக்கா அணுசக்தி சட்டத்தில் கூறப்பட்டுள்ள விபரீதமான சூழல்கள் எழுந்தாலும், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அணுப் பொருட்களையும், சாதனங்களையும் இந்தியாவிடமிருந்து திரும்பப் பெறவும் அமெரிக்காவிற்கு இந்த ஒப்பந்தத்தின் 14ஆவது விதியின் கீழ் உரிமை உண்டு என்பதும் மறுக்கவியலாத உண்மையாகும்.

 

இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதை அமெரிக்கா அனுமதிக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். "அணு குண்டு சோதனை நடத்த மாட்டோம்'' என இந்தியா தன்னிச்சையாக சர்வதேச சமூகத்திடம் அளித்திருக்கும் வாக்குறுதிதான் இந்த ஒப்பந்தத்திற்கே அடிப்படையாக அமைந்திருக்கிறது.

 

1998இல் இந்தியா அணுகுண்டு சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்திய அரசு கடைபிடித்து வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு இத்தடைகள் தொல்லையாக இருக்கவே, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, அமெரிக்காவை தாஜா செய்ய இந்த வாக்குறுதியை அளித்தார். பா.ஜ.க. கூட்டணி அரசு அணுஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடக் கூடத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான், பா.ஜ.க. ஆட்சி காலத்திலேயே அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக, அமெரிக்காஇந்தியா இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் மன்மோகன் சிங் புஷ் கூட்டறிக்கையும், அதனைத் தொடர்ந்து அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டன. அணுமூலப் பொருட்களை வழங்கும் நாடுகள், இந்தியாவிற்கு அளித்திருக்கும் விதி விலக்குக்கும் இந்த வாக்குறுதிதான் அடிப்படையாக அமைந்துள்ளது.

 

அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் கூட்டத்தில், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருந்த நேரத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய அரசின் சார்பாக செப்.5 அன்று விடுத்த அறிக்கையில், "அணுகுண்டு சோதனைகள் நடத்துவதற்கு இந்திய அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கும் தடையைக் கடைபிடிப்போம்; அணுஆயுதப் பரவலைத் தடுப்பதற்கு ஆதரவாகச் செயல்படுவோம்; சர்வதேச அணுசக்தி கழகத்தோடு மற்றொரு உடன்பாட்டினை உறுதியாகச் செய்து கொள்வோம்'' என்பவை உள்ளிட்ட சில வாக்குறுதிகளை அளித்தார். அமெரிக்காவின் பெரிய அண்ணன்தனமும், இந்தியா அளித்த இந்த வாக்குறுதிகளும்தான் விலக்கு ஒப்பந்தம் நிறைவேற வழி வகுத்தன. 

 

அணு மூலப்பொருளை மறு சுழற்சி செய்யவும், செறிவூட்டவுமான உரிமையினை இந்தியாவிற்கு வழங்குவதை இந்த விலக்கு ஒப்பந்தம் மறுக்கவில்லை என்றாலும், அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகளின் குழுமம் அத்தொழில்நுட்பத்தை உடனடியாக இந்தியாவிற்குத் தர விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. (தி இந்து, செப்.7, பக்.11)

 

அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகளின் குழுமம், எதிர்காலத்தில் வகுக்கும் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் இந்தியா அக்குழுமத்திடம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

 

இரட்டை பயன்பாடு கொண்ட தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும் இந்தியாவிற்கு வழங்கும்பொழுது, அது பற்றி அணு மூலப்பொருள் வழங்கும் நாடுகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு விதி விலக்கு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுமத்தைச் சேர்ந்த ஒரு நாடு, ஒரு குறிப்பிட்ட சாதனத்தை இந்தியாவிற்கு வழங்குவதை அக்குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு நாடு (குறிப்பாக, அமெரிக்கா) விரும்பவில்லை என்றால், இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் தடுத்துவிட முடியும். அமெரிக்காவின் ஹைட் சட்டத்திற்கு ஏற்பவே இந்த விதி, விலக்கு ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (ஃபிரெண்ட்லைன், அக். 10, பக்: 8)

 

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 123 ஒப்பந்தம் அனுப்பப்பட்டிருக்கும் இந்நேரத்தில், அமெரிக்க அரசின் வெளி விவகார கமிட்டியின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், "இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், அமெரிக்கா, அணு மூலப் பொருள் வழங்கும் நாடுகளையும் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோர வேண்டும்'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இவையனைத்தும், "அணு மூலப் பொருள் வழங்கும் நாடுகள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவிற்கு விலக்கு அளித்திருப்பதாக'' இந்திய அரசு கூறி வருவதற்கு எதிராகவே அமைந்துள்ளன.

 

அமெரிக்காவின் போர்வெறிக்கு வாலாட்டும் இந்தியா

 

123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அளித்துள்ள விளக்கக் குறிப்பில், "123 ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதிமொழிகள், அரசியல் ரீதியானவைதான், அவை அமெரிக்காவைச் சட்டப்படிக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல'' என்ற "இரகசியத்தை''ப் போட்டு உடைத்து விட்டார். மேலும் ஈரானைக் கட்டுப்படுத்தும் விசயத்தில், இந்தியா அமெரிக்காவிற்கு என்னென்ன விதத்தில் ஒத்துழைப்பைத் தந்திருக்கிறது என்பதையும் பட்டியல் போட்டு, மன்மோகன் சிங் கும்பலின் அமெரிக்க அடிவருடித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

 

குறிப்பாக, செப். 5 அன்று இந்திய அரசின் சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்திருக்கும் அறிக்கையில், "அணு மூலப் பொருளை மறுசுழற்சி செய்யும், செறிவூட்டும் தொழில்நுட்பங்களைப் பெறாத நாடுகளுக்கு, அத்தொழில் நுட்பங்கள் கிடைப்பதைத் தடுக்கும் சர்வதேச முயற்சிக்கு இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும்'' என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவைத் திருப்திபடுத்த, ஈரானைக் குறி வைத்துக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி என்றுதான் கூறப்படுகிறது.

 

மேலும், அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கும், போர் விமானங்களுக்கும், இந்தியாவில் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்டு பல்வேறு வசதிகளைச் செய்து கொடுக்கும் இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. அமெரிக்கா, ஈரான் மீது ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்தத் துடிக்கும் இவ்வேளையில், இந்தியாவை அதற்கான தளமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான், இந்த இராணுவ ஒப்பந்தத்தின் பின்னே மறைந்துள்ளது. மேலும், அமெரிக்கா, இந்தியாவிற்கு விற்பனை செய்யும் இராணுவத் தளவாடங்கள் மற்றும் தொலைதொடர்புச் சாதனங்களை நேரடியாக வந்து ஆய்வு செய்யும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கும் இராணுவ ஒப்பந்தங்களும் தயாராகி வருகின்றன.

 

மன்மோகன் சிங் மறுகாலனியாதிக்கத்தின் மீர் ஜாபர்

 

மன்மோகன் சிங், அறிவு நாணயம் உள்ளவராகவும், தன்மானமிக்கவராகவும் இருந்திருந்தால், 123 ஒப்பந்தம் குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் கடிதம் வெளியிடப்பட்டவுடனேயே, "ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விடுவோம்'' என எச்சரிக்கையாவது செய்திருக்க வேண்டும்; ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டிப் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, "அமெரிக்க அரசு இப்படியொரு கடிதத்தை எழுதியிருப்பது தமக்கு முன்பே தெரியும்'' எனக் கூறி, நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தார். ஒப்பந்தம் தொடர்பாக புஷ்ஷைச் சந்திக்கப் பறந்தோடியதன் மூலம், "நான் அமெரிக்கக் கைக்கூலிதான்'' என்பதை வெட்கமின்றி வெளிப்படையாகக் காட்டிக் கொண்டுள்ளார்.

 

123 ஒப்பந்தத்தை ஆதரிக்கும் அனைவரும், இந்தியாவின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக மார் தட்டுகிறார்கள். உண்மைதான். இந்தியாவின் அரைகுறை இறையாண்மையும், சுயாதிபத்தியமும் முற்றிலுமாக அம்மணமாகி, இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைக் கூட அமெரிக்கா தீர்மானிக்கும் நிலை உருவாகியிருப்பதை, மறுகாலனி ஆதிக்கத்தின் புதிய சகாப்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

1991இல் பொருளாதார சீர்திருத்தத்தைத் தொடங்கி வைத்ததன் மூலமும், தற்பொழுது அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமும் மன்மோகன் சிங் இந்தியாவின் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டதாகப் போற்றப்படுகிறார். மன்மோகன் சிங் தொடங்கி வைத்த பொருளாதாரச் சீர்திருத்தம், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் உயிரைக் காவு வாங்கிவிட்டது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் ஆற்றல் பெற்றிருந்த இந்தியாவை, உணவுப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நாடாக மாற்றியிருக்கிறது; இந்தியாவின் சுயசார்புத் தொழில்களை அழித்து, வேலைவாய்ப்பின்மையையும், வறுமையையும், ஏழ்மையையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்படுத்தி வரும் "நன்மை''கள் இவைதான் என்றால், அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவில் இருந்து பாலாறையும், தேனாறையுமா கொண்டு வரும்?

 

இந்தியா, தனது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான துரோகிகளையும், அடிவருடிகளையும் கண்டிருக்கிறது. அந்த அருவெறுக்கத்தக்க பட்டியலில் மன்மோகன் சிங்குக்கும் "அழியாத'' இடமுண்டு! கும்பினியின் ஆட்சியை இந்தியாவில் வேரூன்றச் செய்வதற்கு, வங்க தேசத்து தளபதி மீர் ஜாபரும், ஜெய்சந்தும் ராபர்ட் கிளைவுக்கு உதவியதைப் போல, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை இந்தியா மீது முழுமையாகத் திணிப்பதற்கு, ஜார்ஜ் புஷ்ஷûக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவி வருகிறார்!

· செல்வம்