"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

 


 

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது அமெரிக்காவின் 6வது பெரிய வங்கியான வாஷிங்டன் மியூட்சுவல் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாஸ் ஆகிய நிதிக் கழகங்களும் திவாலாகி மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளன. ஆக, அனைத்துலக முதலாளித்துவக் கும்பல்களின் வர்த்தக மையமான வால் தெருவிலேயே தனியார் நிதி முதலீட்டு வங்கித் தொழிலின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.

 

அமெரிக்காவை உலுக்கிய இப்பொருளாதார பூகம்பத்தால், அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் பங்குச் சந்தைகள் சடசடவென சரிந்தன. வங்கி, காப்பீடு, தகவல்தொழில்நுட்பத் துறை, வீட்டுமனைத் தொழில்களில் பல்லாயிரம் பேருக்கு வேலை பறிபோகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் இன்னும் பல தனியார் வங்கிகளும் காப்பீடு கழகங்களும் திவாலாகும் என்று அபாயச் சங்கு ஊதுகிறது, ஐ.எம்.எஃப். இந்தியாவிலோ "அவுட் சோர்சிங்'' செய்யும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. டாலர் மதிப்புச் சரிவினால் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கைக்கூலி காங்கிரசு அரசு ரூபாயின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்துள்ளது.

 

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடுகளோ இல்லாவிட்டால், தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால் தனியார் முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதனைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற அத்தாராளமயம், பொருளாதாரத்தை வரலாறு காணாத பெரும் பாதாளத்தில் தள்ளி விட்டுள்ளது. கடைசியில், அமெரிக்க அரசு தலையிட்டுத்தான் முட்டுக் கொடுத்துள்ளது. அமெரிக்க வால்தெரு நிதியாதிக்கக் கும்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவையும் திவால் நிலையையும் ஈடுகட்டி, பொருளுதாரத்தை நகர்த்திச் செல்ல 70,000 கோடி டாலருக்கு மேல் நிதிச் சந்தையில் கொட்ட அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், "இத்தகைய தற்காலிக ஏற்பாடுகளால் நெருடிக்கடியைத் தீர்க்கவே முடியாது; 1930களில் நிகழ்ந்த உலக முதலாளித்துவ பெரும் சரிவை விஞ்சும் வகையில் நெருக்கடி முற்றிவிட்டது'' என்று முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர். தனியார் ஏகபோகங்களின் கட்டுப்பாடற்ற தாராளமயத்துக்கு காவடி தூக்கிய அவர்கள், இப்போது அரசின் தலையீடும் கட்டுப்பாடும்தான் அராஜகத்தைத் தடுக்கும் என்று அருள்வந்து இறங்கியவர் போல சாமியாடுகின்றனர்.

 

முதலாளித்துவத்தின் சாபக்கேடாகிவிட்ட இத்தகைய அராஜகங்கள்முறைகுலைவுகள் ஏதுமின்றி, 1930களில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்து அனைத்துலக முதலாளித்துவம் அதலபாதாளத்தில் விழுந்த காலத்திலேயே, அரசின் கட்டுப்பாட்டில் சுயசார்புடன் மாபெரும் பாய்ச்சலுடன் முன்னேறி உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது சோவியத் சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பு. அத்தகைய திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதார அமைப்பு முறை மட்டும்தான், அழுகிநாறும் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைவுக்கு ஒரே மாற்றாகவும் ஒரே தீர்வாகவும் இருக்க முடியும்.