Language Selection

புதிய ஜனநாயகம் 2008

கும்மிடிப்பூண்டியிலுள்ள எஸ்.ஆர்.எஃப். ஆலைத் தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக "எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்'' என்ற பெயரில் அணி திரண்னர்.

 


 

சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் சங்கத்தை உடைக்கப் பல்வேறுவிதமான சதிகளை நிர்வாகம் கைக் கொண்டு வருகிறது. சங்கம் தொடங்கியதற்காக 11 பேரை மத்தியப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்வது; சங்க நிர்வாகிகளை "தொடர்பணி'' என்ற பெயரில் இராஜஸ்தான், கேரளா, கோயமுத்தூர் என ஆலையின் இதர கிளைகளுக்கு விரட்டி, மாதக்கணக்கில் ஊருக்கு வர முடியாதபடி செய்வது, பொய்க் குற்றம் சுமத்தி பணியிடை நீக்கம் செய்வது, பணிநீக்கம் செய்வது என நீளும் நிர்வாகத்தின் சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது.

 

இந்நிலையில் சங்க நிர்வாகிகளை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கக் கோரி, தொழிலாளர் நல ஆணையரிடத்தில் தொழிற் தாவா தாக்கல் செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்ததுதான் தாமதம் உடனே செப்டம்பர் 2ந் தேதியன்று சங்க நிர்வாகிகள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது, நிர்வாகம்.

 

சங்க நிர்வாகிகளைப் பதம் பார்த்த இதே ஆயுதம் நாளை நம்மையும் நோக்கிப் பாயும் அபாயத்தை உணர்ந்து, ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி செப். 4 அன்று ஆலைக்குள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவதைக் கண்டு அரண்ட நிர்வாகிகளும் கைக்கூலிகளும் கழிவறைக்குள் தஞ்சம் புகுந்தனர். 

 

உள்ளிருப்புப் போராட்டத்தை முறியடிக்க உள்ளூர் போலீசை வரவழைக்க நிர்வாகம் முயன்றது. இதனை அறிந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத் தலைமை, உள்ளூர் மக்களை அணி திரட்டி வந்து, ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனையடுத்து, ஆலை நிர்வாகம் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரின் ஆதரவோடு, கலவரத் தடுப்பு போலீசுப் படையை இறக்கியது. அப்படை ஆலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மக்களையும், தொழிலாளர்களையும் மட்டுமின்றி, ஆலைக்கு உள்ளேயும் புகுந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது. இப்போராட்டம் தொடர்பாக, 125 தொழிலாளர்களைக் கைது செய்த போலீசு அவர்களுள் 13 முன்னணி தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்தது.

 

13 தொழிலாளர் மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெறு, தொழிற்சங்கம் துவங்கியதிலிருந்து பணியிடை நீக்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட 30 தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்து, செப். 30க்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.

 

கடந்த 06.09.08 அன்று மாலை கும்மிடிப்பூண்டியில் கண்டனக் கூட்டமும்; அதனைத் தொடர்ந்து 08.09.08 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே 500 பேருக்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

 

தொழிலாளிகளின் உறுதியான போர் குணத்தை கண்டு திகைத்துப் போன மாவட்ட அரசு நிர்வாகம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளி ஆர்.டி.ஓ. நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

13 தொழிலாளிகளை நிபந்தனை பிணையில் விடுவிக்க ஆலை முதலாளியே சம்மதித்துவிட்ட போதிலும், "12,000 ரூபாய் சம்பளம் வாங்குற நீ எதுக்கு ஸ்டிரைக் பண்ற?'' என கேள்வியெழுப்பி பிணை தர கும்மிடிப்பூண்டி மாவட்ட அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் மறுத்துவிட்டன.

 

எஸ்.ஆர்.எஃப். நிர்வாகம், தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமையை நசுக்குவது ஒரு தனிப்பட்ட ஆலையின் பிரச்சினை அல்ல; இது ஒட்டு மொத்த தொழிலாளிகளின் உரிமைப் போராட்டங்களை நசுக்கும் முதலாளிகளின் வர்க்க நெறியின் ஒரு பகுதி என்பதை விளக்கி, கும்மிடிப் பூண்டி சிப்காட் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆலைத் தொழிலாளிகளிடமும் தெருமுனைக் கூட்டங்கள், ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் ஆதரவை திரட்டி அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது, எஸ்.ஆர்.எஃப். புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம்.

 

தகவல்:

எஸ்.ஆர்.எஃப் புதிய ஜனநாயகத் 

தொழிலாளர் சங்கம், கும்மிடிப்பூண்டி.