பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை
செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள்.
ஐஸன்ஸைடனின் ‘பொட்டம்கின்`
ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரை குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்;
“பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவினை (பசு மாட்டை) அச்சாதியர் கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்.
இங்ஙனம் மிகக் கொடியதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடையலாயிற்று.”
என்று எழுதியிருந்தார்.
இதைக் கடுமையாக கண்டித்தது பெரியார் இயக்கம். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞரான சுயமரியாதைச் சுடர் ‘கருவூர் ஈழத்து அடிகள்’ மறைமலையடிகளை கண்டித்து இப்படி எழுதியிருந்தார்;
“இதில் பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போலல்லாமல், தேவர்கள் எல்லாரும் ஒருங்கே குடியிருக்கும் இடம் பசுவின் உடம்பு என்பதை, ……….. எண்ணிப் பாராது அதனைக் கொன்று தின்னுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அடிகளார் பறையர் மீது ஏற்றுகின்றார்.
தேவர் எனப்படுவார் யாவர் என்று அடிகளார் எடுத்துக் காட்டவில்லையாயினும், ஆரியர் வேதங்களிற் பேசப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களையே அடிகளார் குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்னறால், தமிழ்நாட்டில் தேவர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பதாகக் கொள்வதற்குக் கருவியாதுமில்லை.
தமிழ்நாட்டிலுள்ள கள்ளர்-மறவர்-அகம்படியார் என்ற பிரிவிருட் சிலர் தங்களை ‘தேவர்’ என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள எவரும் பசு மாட்டைத் தங்கள் குடியிருக்கும் வீடாகப் பயன்படுத்தாமல், மற்றை மக்களைப் போலவே அவர்களும் நிலத்தின மீது வீடுகள் அமைத்து அவற்றிலேயே குடியிருக்கிறார்கள். ஆதலால், அடிகளார் கூறும் தேவர்கள் ஆரியர் நூல்களிற் காணப்படும் தேவர்களையே என்பது பெறப்படும்.
முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாரும் ஒரு பசுவின் உடம்பில் இடம்பெற்றுள்ளனரா? அல்லது பகுதி பகுதியாகப் பிரிந்து ஆசியா-அய்ரோப்பா-அமெரிக்கா முதல் இந்நிலவுலகிலுள்ள பசுக்கள் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளனாரா?
அன்றித் தனித்தனி ஒவ்வொரு பசுவிலும் இத்தனை இத்தனை தேவர் விழுக்காடு இடம்பெற்றுள்ளனர், என்று கணக்ககிடப்பட்டுள்ளதா? இங்ஙனம் பசுவின் உடம்பில் குடியிருக்குந் தேவர்கள், எந்த முறையில் அதன் கண் வாழ்கின்றனர்? அவர்களுக்கு உணவு எப்படி கிடைக்கிறது? அவர்களின் படுக்கையறை முதலியன எந்த முறையில் பசுக்களின் உடம்பில் அமைந்துள்ளன? என்பன போன்ற அய்யப்பாடுகள் எம்மால் தெளிந்து அறியுமாறில்லை.
இவற்றை அக்கதையை நம்பும் அடிகளார் போன்றோர் விளக்குதல் நலம்.
“பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் அய்ந்துஞ் சிவனுக்குப் பயன்டுவதாக ஆராய்ச்சி அறிவு நிரம்பிய அடிகளாரே ஒப்புக் கொள்கிறார் என்றால், அதைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. கோயில்களிற் காணப்படும் சிவ வடிவம், கல் செம்பு முதலியவற்றால் அமைக்கப்பெற்ற வடிவங்களேயாதலால், அவை, அவற்றை சாப்பிடுகின்றன எனறு சொல்லுதற்கில்லை.
ஒரு வேளை சிவனை வழிபடும் அடியவர்களின் அன்பு வலையிற் சிக்கிப் பால் முதலான பொருட்களைச் சாப்பிடும் வடிவத்தை உடையவராகி, அவற்றைச் சாப்பிட்டு அடியவர்களை மகிழ்விக்கிறார் சிவன் என்று வைத்துக் கொண்டாலும், பால், தயிர், நெய் என்னும் மூன்றையுஞ் சாப்படுவரேயன்றி சிறிநீரையுஞ் சாணியையும், அடியவர்கள் எவ்வளவு அன்பு காட்டிக் கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடுவாரா? சாப்பிடத்தான் முடியுமா?”
“தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டுச் சேரிப்புறங்களிலும் மலைப்புறங்களிலும் வாழ்ந்துவரும் ஏழைத் தமிழ்மக்கள் எல்லாரும், இந்து மதக் கோட்பாட்டுக்கு மாறாகக் கல்வி கற்க முயன்றவர்களும்-வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் முயன்றவர்களும்-பார்ப்பனர்களை மதியாது நடந்தவர்களும்- இந்துமதக் கடவுளரை வழிபட மறுத்தவர்களும ஆன வீரத் தமிழ்ப் பெருமக்களே”
என்று பதில் எழுதினார் கரூவூர் ஈழத்து அடிகள்.
சைவசமயத்தை நோக்கி பெரியாரும், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்று வெறும் அவதூறுகளையும் சவடால்களையுமே அள்ளி வீசினார்கள் சைவப் பழங்கள்.
‘தாங்கள் உயர்ஜாதிக்காரர்கள்’ என்று அவர்கள் எவ்வளவு முக்கினாலும், ‘பார்ப்பனர்களுக்கு இவர்கள் சூத்திரர்கள்தான்’ என்கிற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியவர் பெரியார்.
வயித்து வலி தாங்காமல் மதம் மாறுன, வயதுல மூத்த திருநாவுக்கரசரை விட சின்னப் பையன் ஞானசம்பந்தனை, ‘பெரிய கில்லாடி’ என்று அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளதே, அவர்களின் சூத்திர மனோபாவத்துக்கு சாட்சி, என்று நிறுவயது பெரியார் இயக்கம்.
காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.
என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று”
இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.
நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை. அதனால்தான், சிதம்பரம் கோயிலில் பெரியவர் ஆறுமுகசாமி தேவாரம் பாட போன போது, அவருக்கு ஆதரவு தராமல் அமைதிகாத்தார்கள் தேவாரம், திருவாசக்தை தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஆதினங்கள்.
ஆதினங்களின் இந்த பேரமைதிக்கு பின் இருக்கிறது, பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். பகிரங்கமாக தெரிகிற அந்த ரகசிய அரசியல் இதுதான், ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை.
ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு,
“அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞரான ‘கருவூர் ஈழத்து அடிகள்’ 1941 ல் ‘பெரிய புராண ஆராய்ச்சி’ என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.
‘தேவாரம், திருவாசகம் பாடிய நால்வர் காலத்தில் ஒழிக்கப்பட்ட சமண சமயம், அநபாய சோழன் காலத்தில் மீண்டும் தலைதூக்கியது.
சமண சமயத்தின் தாக்கத்தால் கவரப்பட்ட அநபாய சோழன், ‘சீவக சிந்தாமணி’ என்ற சமண மத நூலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கண்டு அஞ்சிய பார்ப்பனர்கள், சேக்கிழர் முதலியாரை தங்கள் கைகூலியாக பயன்படுத்தி, பெரியபுராணத்தை எழுத வைத்து பார்ப்பனியத்தையும் சைவசமயத்தையும் மீட்டுக் கொண்டார்கள் என்று நிறுவி இருக்கிறார், அந்த நூலில் கருவூர் ஈழத்து அடிகள்.
பெரியபுராணம் எப்படி பொய்யும், பார்ப்பனத் தன்மையுமாய் நிரம்பி இருக்கிறது என்பதை அதன் முரண்டுபாடுகளில் இருந்தே அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அவரின் கேள்விகளுக்கு இன்றுவரை எந்த சமய தமிழறிஞனும் பதில் சொல்லவில்லை.
சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த தமிழறிஞர்களை ஒருபுறமும்,
தமிழை அதன் வராலாற்று போக்கில் புரிந்து கொண்ட பெரியார் இயக்த்தைச் சேர்ந்த, தமிழறிஞர் கருவூர் ஈழத்து அடிகளை மறுபுறமும் நிறுத்தினால், அவரின் கால்தூசுக்குக் கூட பெறமாட்டார்கள் சமய சார்பு கொண்ட தமிழறிஞர்கள். பெரியாரின் இந்த மேடையில் இருந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழறிஞர்களை பார்த்து சவாலாகக் கேட்கிறேன், குறிப்பாக தன்னைத் தானே தமிழ்க்கடல் என்று சொல்லிக் கொள்கிற நெல்லை கண்ணனை பார்த்துக் கேட்கிறேன்,
பெரியபுராணம் குறித்த ஈழத்துக் அடிகளின் கேள்விகளுக்கு எதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு உன் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்.
மதவாதிகள்,வெறுமனே இலக்கியவாதிகள், முதலாளித்துவ கலைஞர்கள் - முற்போக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர்கள் போய் ஒளிந்து கொள்கிற இடம் - கலை வடிவம், அழகியல்.
இந்த அழகியல் மதவாதிகளின் அல்லது முதலாளிகளின் கலைவடிவத்தை விட முற்போக்காளர்களின் கலைவடிவத்தில்தான் அதிகம் இருக்கு.
உலகளவில், சோவியத் இயக்குனர் ஐஸன்ஸைடனிடம் இருந்து களவாடியதுதான் ஹாலிவுட் படங்களுக்கான இன்றைய நவீன வடிவம். 80 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சியை விளக்கி அவர் எடுத்த, ‘பொட்டம்கின், அக்டோபர்‘ போன்ற படங்கள் போட்ட பிச்சைதான் இன்று வரை ஹாலிவுட் படங்களுக்கான வடிவம்.
முற்போக்காளர்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவத்தை தீர்மானிக்கிறர்கள். பிற்போக்காளர்கள் மிக மட்டமான விஷயத்தைக் கூட நேர்த்தியான வடிவத்தில் தருகிறார்கள்.
தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?
‘தின்ன முடியும்’ என்கிறார்கள், கம்பராமாயண அபிமானிகள்.
பெரியார் கம்பராமாயணத்தை எதிர்த்தற்குக் காரணம், ‘மலத்தை தின்னாதீர்கள்’ என்பதற்காகத்தான்.