10182021தி
Last updateச, 09 அக் 2021 9am

இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்

பாகிஸ்தான் தலைநகரில் நடந்த, மரியட் ஹோட்டல் குண்டுவெடிப்பிற்கு இதுவரை அறியப்படாத இயக்கமொன்று உரிமை கோரியுள்ளது. அதேநேரம் அமெரிக்க மரைன் படையை சேர்ந்தவர்கள், தாக்குதலுக்கு முதல்நாள் இரவு அந்த ஐந்து நட்சத்திர தங்குவிடுதியின் 3 ம், 4 ம் மாடிகளில் இரகசிய பெட்டிகளை கொண்டுபோய் வைத்ததாக சில சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள், அவர்களின் பலம், தாக்குதல் இலக்கு குறித்து பல்வேறு ஊகங்கள் உலாவுகின்றன.

 

வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாகிஸ்தானிய அரசியல்தலைவர்கள், மற்றும் தொழிலதிபர்கள் போன்றோரின் மனங்கவர்ந்த மரியட் ஐந்து நட்சத்திர தங்குவிடுதி எப்போதாவது தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக, அங்கே ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தன. எனினும் வெடிமருந்து நிரப்பபட்ட டிரக் வண்டி பாதுகாப்பு வேலிகளை தாண்டி, ஹொட்டேலை அண்மித்து வெடிக்க வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஹோட்டெலில் வேலை செய்த, அல்லது பாதுகாப்பு படையை சேர்ந்த சிலரது உதவி, குறைந்த பட்சம் அமெரிக்க அதிகாரிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உரிமை கோரும் உரையில் 250 அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்தோர் அன்று அந்த ஹோட்டெலில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிய அரசு 50 அமெரிக்கர்கள் தங்கியிருந்ததாக ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் (கல்வியறிவற்ற பழங்குடியின தலைவர்களை கொண்ட) தாலிபானை விட, (பல்கலைக் கழக பட்டதாரிகள் தலைமைதாங்கும்) அல் கைதா இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்க வேண்டும், என்று பாகிஸ்தான் அரச மட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர்.


இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரித்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றிற்கு, ஆளும் PPP கட்சி பிரமுகர் ஒருவர் சொன்ன தகவல், தாக்குதலின் நோக்கம் பற்றிய மர்மங்களை வேறு உருவாக்கியுள்ளது. சம்பவதினத்திற்கு முதல்நாளிரவு தான் அந்த ஹோட்டலுக்கு சென்ற போது, அங்கே அமெரிக்க தூதுவராலய வாகனமொன்று நிறுத்தப்பட்டிருந்தாகவும், சீருடையணிந்த அமெரிக்க மரைன் படையை சேர்ந்த சிலர் அந்த வாகனத்தில் இருந்து, கருநிற உலோகப்பெட்டிகள் பலவற்றை இறக்கி, ஹோட்டேலின் நான்காம் அல்லது ஐந்தாம் மாடிக்கு எடுத்துச்சென்றதாகவும் கூறினார். அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த பெட்டிகளில் என்ன இருந்தன? என்ற விபரங்கள் தனக்கு தெரியாதென்றும், ஹொட்டேல் ஊழியர்களை கூட அவர்கள் கிட்ட நெருங்க விடவில்லை என்றும், அதேநேரம் யாரும் வெளியே போக முடியாதபடியும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வராதபடியும் வாயில்கதவுகள் மூடப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை பிற சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மரியட் ஹோட்டெலில் குண்டு வெடித்த பின்னர் 4 ம், 5 ம் மாடிகள் தீப்பற்றி எரிந்ததை காணக்கூடியதாக இருந்தது. எரிவாயு குழாய்கள் வெடித்ததாக அதற்கு காரணம் கூறப்பட்டது. அதேநேரம் குண்டு வெடித்த அதே தினம், ஹோட்டல் அருகில் இருந்த பிரதமரின் வாசஸ்தலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் விருந்துபசார வைபவம் நடைபெற்றதாகவும், குண்டுதாரியின் இலக்கு அதுவாக இருக்கலாமென்றும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மரியட் ஹோட்டேலை நோக்கி போய் வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகப்படுகின்றனர். ஆனால் அந்த விருந்துபசார வைபவம் வழக்கம் போல ஐந்து நட்சத்திர மரியட் ஹொட்டேலில்

நடக்க இருந்ததாகவும், பத்து தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் இல்லத்திற்கு மாற்றப்பட்டதாகவும், விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கூறினர். பாகிஸ்தான் தலைவர்கள் தம்மை நன்றாக பாதுகாத்துக் கொண்டு, அப்பாவி மக்களை(குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் ஹோட்டல் ஊழியர்கள் அதிகம்) பலி கொடுப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

 

குண்டுவெடிப்பு நடந்து ஓரிரு தினங்களுக்கு பின்னர், "அல் அராபியா" தொலைக்காட்சிக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்று, "ஃபெதாயீன் இஸ்லாம்" (இஸ்லாமிய போராளிகள்) என்ற புதிய அமைப்பொன்றின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோரியது. பாகிஸ்தான்-அமெரிக்க அரசுகளுக்கிடையிலான உறவை முறித்துக்கொள்ளும் வரை தாம் இதுபோன்ற தாக்குதல்களை தொடர இருப்பதாக அந்த அனாமதேய குரல் தெரிவித்தது. விசாரணைகளை திசைதிருப்பும் நோக்குடன் இவ்வாறான போலி அமைப்பின் பேரில் உரிமை கோரப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.


ஒரு தீவிரவாதக் குழுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது கௌரவக்குறைவு என்று நடக்கும் எல்லா அரசாங்கங்களையும் போல, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதே தனது முதல் கடமை என்று கூறியுள்ளார். இருப்பினும் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மகாநாட்டில் சந்தித்த அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவம் ஊடுருவும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னரும் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப்படை தலைமை அதிகாரி கூட இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக கூறினார். ஆனால் அவர் அப்படி சொல்லி சில மணித்தியாலங்களில், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானம் பாகிஸ்தானுக்குள் வந்து குண்டு போட்டது. இன்று கடைசியாக கிடைத்த தகவல் ஒன்று, அப்படி வந்த வேவு விமானமொன்றை, பாகிஸ்தான் பழங்குடியின ஆயுததாரிகள் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கின்றது. ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.

 

 

கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் எல்லையோரமுள்ள பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் மாகாணத்தில் வாழும் பஷ்டூன் பழங்குடியின உறுப்பினர்களை கொண்ட, பைதுல்லா மசூத் தலைமை தாங்கும், தாலிபான் அமைப்பு தான் இந்த தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகின்றது. பாகிஸ்தான் அரசு மட்டுமல்ல, ஆங்கிலேய காலனிய அரசால் கூட பூரணமாக அடிபணிய வைக்க முடியாத வாசிரிஸ்தான் பழங்குடியினத்தவர்கள் மத்தியில் பத்துக்கும் குறையாத தாலிபான் குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றை "ஷூரா" என்ற நாற்பது பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை சபை தலைமை தாங்குகிறது. அதன் தலைவராக பைதுல்லா மசூத் தெரிவான பின்னர் தான் தாலிபான் போராட்டம் சூடுபிடித்தது.

  

ஆப்கான் தாலிபான் தலைவர் முல்லா ஒமாரின் நம்பிக்கைக்குரிய தோழனான மசூத்தின் போராளிகள், பாகிஸ்தான் அரசபடைகளுடனான போரின் போது, 2oo இராணுவ வீரர்களை உயிருடன் பிடித்து, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். போரில் வெல்லமுடியாமல், தாலிபானுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு, மசூத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக நினைத்துக் கொண்டது. ஒப்பந்தம் செய்வதற்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதாக வந்த வதந்தியும் அந்தக்கருத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் பைதுல்லா மசூத்தும், தாலிபான் இயக்கமும் யுத்தநிறுத்த காலத்திற்குள் தம்மை பலப்படுத்திக் கொண்டு, மீண்டும் மூர்க்கமாக தாக்க ஆரம்பித்திருப்பதை, தற்போது நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன

http://kalaiy.blogspot.com/2008/09/blog-post_24.html